தினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை
அனந்தபுரத்தில் அரும்பிய தாமரை
தமிழ்நாட்டு மக்களால் இன்றைக்குப் பெரிதும் நேசிக்கப்படும், ‘தினமலர்’ நாளிதழ், செப்.,6, 1951 காலை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய திருவனந்தபுரத்தில் மலர்ந்தது. டி.வி.இராம சுப்பையர் இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர்.
நாஞ்சில் நாட்டில் தமது திறமையால் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டவர் டி.வி.ஆர்., உடனடியாக லாபம் தரும் பல்வேறு தொழில்களை விட்டு விட்டுக் கொஞ்சமும் அனுபவம் இல்லாத, நெருக்கடிகள் மிகுந்த இந்த நச்சுப் பிடித்த தொழிலுக்கு ஏன் வந்தார்? இந்த ஆசை அவரை எப்போது ஒட்டிக் கொண்டது? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள, 1951க்கு முன் கொஞ்ச காலம் பின்னோக்கிச் சென்று வர வேண்டியுள்ளது. இதுபற்றி டி.வி.ஆரே கூறியும் உள்ளார். அவை தக்க இடங்களில் இணைக்கப் பட்டும் உள்ளன. இப்போதும் பத்திரிகை சம்பந்தமாக அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களிடம் நாம் மீண்டும் செல்ல வேண்டியுள்ளது.
வெ.நாராயணன்
பத்திரிகை தோன்றுவதற்குப் பல வருஷங்களுக்கு முன்பே அவரது உள்ளத்தில் அதற்குரிய ஆழமான விதை இருந்தது. அது வெளிக் கொள்ள காலமும் சூழ்நிலையும் பின்னரே ஏற்பட்டது. அவர் நிறையப் படிப்பார். புதிய நுபல்கள் வந்தால் உடனே வாங்கிப்படித்துவிட்டு எங்கள் கிராமத்தில் உள்ள நூல் நிலையத்திற்கு தருவார். ‘கலைமகள்’ என்ற சிறந்த பத்திரிகை ஆரம்பித்திருப்பதை நான் அவரிடம் சொன்னேன். உடனே 6 ரூபாய் தந்து, அதற்குச் சந்தா கட்டச் சொன்னார். டி.வி.ஆர்., பதினோராவது சந்தாதாரர் என்று நினைக்கிறேன். எங்கள் கிராம நூல் நிலையம் மிகச் சிறந்தது. மாதவய்யா, வ.வெ.சு. ஐயர், இராஜம் ஐயர் இன்னும் பல ஆசிரியர்கள் எழுதிய நுபல்களெல்லாம் அதில் இருந்தன. அதற்கெல்லாம் அஸ்தி வாரம் டி.வி.ஆர்., தான்.
ஒரு வேகத்திலோ, வேறு காரணங்களாலோ திடீரென்று, ‘தினமலர்’ தோன்றியதல்ல. நாஞ்சில் மண்ணை தமிழகத்துடன் சேர்க்க, பலமான ஆயுதம் வேண்டும்; அந்த ஆயுதம், பத்திரிகைதான் என்பதை உணர்ந்தார். அவரது பூர்வீகச் சொத்துக்கள், அவரது வருமானங்கள் அனைத்தையுமே பத்திரிகை என்ற ஆழ்கடலில் நாஞ்சில் மக்களுக்காக கொட்டினார். கொட்டுவது கண்ட மற்றவர்கள் எல்லாம் இரங்கல் கருத்துத் தெரிவித்தனரே தவிர, அவருக்கு மிக நெருக்கமானவர் கூட, செயலளவில் ஒத்துழைப்பு தராததால் அவர் தன்னந்தனியாக நின்று போராட வேண்டியது வந்தது.
அதே நேரத்தில் பெரிய பெரிய பத்திரிகைகளின் பலவகை எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியதும் வந்தது. ‘தினமலர்’ இதழைத் தனித்தன்மை கொண்ட தின இதழாக, மக்கள் இதழாக வெளியிட்டு நான்கு திசைகளிலும் சூழ்ந்திருந்த மாபெரும் எதிர்ப்புச் சக்திகளை முறியடித்தார். அவரது வெற்றி, அதிர்ஷ்டத்தினாலோ, சந்தர்ப்பச் சூழ்நிலையினாலோ ஏற்பட்டதல்ல . . . வளர்ச்சியின் ஒவ்வொரு அடியும் அவரது சொந்த முயற்சியின் விளைவுகளே.
மகாலிங்க முதலியார்
‘தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது பெயரை, ‘தேவி’ என்று சுருக்கி எழுதுவர். அவர் மீது உள்ள அன்பின் காரணமாக நான், ‘தேவி’ என்ற பெயரில் 1942 ஆகஸ்ட்டில் ஒரு வாரப் பத்திரிகை தொடங்கினேன்’ என்று கூறிவிட்டு, அதன் ஆசிரியர் மகாலிங்க முதலியார் தொடர்ந்தார் . . . இந்தப் பத்திரிகையை (தேவி) நான் தொடங்க அதிக ஊக்கம் கொடுத்ததும், பலவழிகளில் இதை நான் சிறப்பாக நடத்த உதவியது இராமசுப்பையர்தான். பத்திரிகை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று வாரம் ஒருமுறை அவர் என்னிடம் யோசனை கூறுவதுண்டு. அந்தக் காலத்திலேயே நாஞ்சில் நாட்டுத் தமிழரின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க, ஒரு நாளிதழ் நடத்த டி.வி.ஆருக்கு ஆசை இருந்தது. என்னை வைத்து ஒரு தினசரிப் பத்திரிகை நடத்த முடியாதென்றும் அவர் தெரிந்திருந்தார். அதற்கான காலமும், ஆட்களும் கிடைக்கும் வரை அவர் தமது ஆசையை மனத்திற்குள் ஒத்திப் போட்டு வந்தார். 1940ம் ஆண்டு கடைசிகளில் அவர் தீர்மானமாக ஒரு தமிழ் நாளிதழ் ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு வந்தார் என்கிறார்.
|
எம்.டி.அனந்தராமன்
வெறும் வியாபார நோக்கத்தில் ‘தினமலர்’ப் பத்திரிகை தொடங்கப் பட்டதல்ல. அன்றைக்கு இன்றைய குமரி மாவட்டம் மலையாள இராஜ்யத்தில் இருந்தது. இங்கும், திருவிதாங்கூர் கொச்சிப் பகுதி களிலும் ஏராளமான தமிழர்கள் இருந்தனர். அவர்களுக்கு ஏகப் பட்ட பிரச்னைகள். மலையாளத் தில் செல்வாக்கான நாளிதழ்கள் வெளிவந்த நேரம் அது. அவை எதிலும் தமிழர்களின் பிரச்னைகள் வெளிவரவே வராது. தமிழ் நாட் டுப் பத்திரிகைகளும், நாஞ்சில் நாட்டைப் பற்றிக் கவலைப்பட் டதே இல்லை. இந்த உறுத்தல் டி.வி.ஆர்., உள்ளத்தைப் பெரிதும் வருத்திக் கொண்டிருந்தது. ‘நம் மக்களுக்காக நாமே ஏன் ஒரு நாளிதழைத் தொடங்கக் கூடாது?’ என்ற கருத்து அவரிடம் எழும்பியது. அதன் முடிவுதான், ‘தினமலர்’ என்றார்.
தாணுப்பிள்ளை
திருவனந்தபுரம் அரசுத் தலைமை அலுவலக உதவிச் செயலாளர் தாணுப்பிள்ளை கூறுகிறார் . . . திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்தில் மிக முக்கியமாக இருந்த ஆர்.கே.இராமும் நானும் நண்பர்கள். தமிழர்களின் பிரச்னைக் காக ஒரு பத்திரிகை அவசியம் என்று ஆர்.கே.இராம் தீவிரமாகச் சிந்தித்து வந்தார். எப்படி யார் இதைச் செய்வது என்பதுதான் அவரது கவலையாக இருந்தது. அந்தக் காலத்தில், ‘ஸ்ரீவாஸ் லாட்ஜில்’ (இன்று அருளகம்) டி.வி.இராமசுப்பையர் வந்து தங்குவது வழக்கம். இராம் மற்றும் நண்பர்கள் அவரிடம் மிக நெருக்கமாக இருந்தனர். ஏனெனில், பொதுப் பணிகளில் டி.வி.ஆர்., மிக அதிகமாக ஈடுபாட்டுடன் இருந்ததுதான். நாஞ்சில் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க பத்திரிகையை நடத்த வேண்டுமென்று டி.வி.ஆருக்கும் மனத்தில் ஒரு வேகம் இருந்தது. அதை வலியுறுத்தி வந்தார் இராம். இதன் விளைவே திருவனந்தபுரத்தில், ‘தினமலர்’ தொடங்குவதற்கு அடிப்படை என்கிறார்.
சி.குழந்தைசாமி
சி.குழந்தைசாமி பி.ஏ., பி.டி., ஆசாரிப்பள்ளத்தில் பிறந்தவர். சிறந்த பத்திரிக்கையாளர். 1950க்கு முன்னதாக "தினசரி'யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் குமரி மாவட்டம் வந்து தமிழர் இயக்க வெற்றிக்காகச் சிறு சிறு வெளியீடுகள் கொண்டு வந்தார். "தினமலர்' தொடங்க தூண்டுகோலாக இருந்த குழந்தைசாமி, திருவனந்தபுரம் "தினமலர்' தொடக்க காலச் செய்தி ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். |
கம்யூனிஸ்ட் இயக்கவாதி, சிறந்த மேடைப் பேச்சாளர். நல்ல தமிழ் ஆர்வமுடைய எழுத்தாளர். 1942ல் தேச விடுதலைப் போராட்டதில் கலந்து கொண்டு சிறை சென்ற தேசபக்தர். ஆசாரிப்பள்ளம் உயர்நிலைப் பள்ளியில் பின்னர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
|
சி.குழந்தை சாமி
தினமலர்’ பத்திரிகையின் முதல் செய்தி ஆசிரியர் குழந்தைசாமி கொஞ்சம் அதிகமாகவே தகவல்கள் கூறினார்...
அப்போது நான் சென்னையில் டி.எஸ். சொக்கலிங்கத்தின் கீழ், ‘தினசரி’யில் உதவி ஆசிரியராக இருந்தேன். டி.எஸ்.எஸ்., குடும்பத்தில் உள்ளவர்கள் தலையீடு காரணமாக நான் அதிலிருந்து விலகி, நாஞ்சில் நாடு திரும்பி வந்து, ‘குமரி எல்லை’ என்ற சிறு வெளியீடு ஒன்றைக் கொண்டு வந்தேன்.
பிறகு, குஞ்சன் நாடார் முயற்சியில், ‘தென்குரல்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை கொண்டுவரப்பட்டது. அதன் ஆசிரியர் பொறுப்பில் நான் இருந்தேன். இந்த வாரப் பத்திரிகையால் மக்களுடன் தினசரி தொடர்பு கொள்ள முடியாத நிலை. இயக்கம் வளர அதுமட்டும் போதாதென்று நாங்கள் நினைத்தோம். அப்போது, நந்தானியல், ஆர்.கே.இராம்., காந்திராமன், நான் இவர்கள் மட்டும்தான், தி.த.நா.கா., இயக்கத்தில் இருந்து வந்தோம். காந்திராமன் நல்ல தேசபக்தர். காந்திஜி வந்தபோது தனது மனைவியின் நகை முழுவதையும் தேசத்திற் காகத் தந்தவர்.
இந்தச் சமயத்தில், நாஞ்சில் மக்களின் உரிமைக்காகப் போராட ஒரு நாளிதழ் ஆரம்பிக்க வேண்டு மென்ற வேகம் டி.வி.ஆருக்கு இருந் தது எங்களுக்குத் தெரியும். நாங் கள் நாலு பேரும் டி.வி.ஆரைச் சந்தித்துப் பேசினோம். (மேலே கூறியவர் யாரும், ‘நாங்கள் கூறிய யோசனைப்படியே டி.வி.ஆர்., பத்திரிகையைத் தொடங்கினார்’ என்று கூறவில்லை. ‘நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைக்குப் பாடுபட ஒரு நாளிதழ் வேண்டும் என்ற வேகம், ஏற்கனவே அவ ருக்கே இருந்தது. இதைப் புரிந்து கொண்டிருந்த நாங்கள், அவரைப் பார்த்துப் பேசினோம்’ என்றுதான் கூறி உள்ளனர். இதன்மூலம் நாஞ் சில் நாட்டு மக்களின் உரிமைக் காக பத்திரிகை ஆரம்பிப்பது டி.வி.ஆரின் நெடுங்கால கனவாக இருந்தது தெளிவாகிறது.)
ஒரு பத்திரிகை ஆரம்பிக்க டி.வி.ஆரிடம் நாங்கள் கேட்டுக் கொண்டபோது, அவர் கேட்ட முதல் கேள்வி: ‘பத்திரிகை ஆரம்பிக்க நல்ல அச்சகம் மற்றும் தளவாடங்கள் வேண்டுமே?’ என்பதுதான். அதற்கும் நாங்கள் பதில் தயாராக வைத்திருந்தோம். அப்போது, நாகராஜன் என்பவர் சென்னையில் நடத்திய, ‘தினச் செய்தி’ என்ற பத்திரிகை நடத்த முடியாமல் கடனாகி, இந்தியன் வங்கி அச்சகத்தை வைத்திருந்தது என்ற விவரத்தைக் கூறினோம். அது ஒரு முழுமையான அச்சகம். எல்லாச் சாமான்களும் அதில் உண்டு என்பது எனக்குத் தெரியும். அதன் கடன் 18 ஆயிரத்து 500 ரூபாய் அல்லது கொஞ்சம் அதிகம் இருக்கலாம் என எனக்கு நினைவு. இதைக் கேட்டதும் ஏற்கனவே பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆவல் உள்ள டி.வி.ஆர்., உடனே அதற்குத் தயாரானார்.
அச்சகத்தை வங்கியிலிருந்து வாங்குவதற்காக நானும், டி.வி.ஆரும் சென்னை சென்றோம். அங்கு டி.எஸ். சொக்கலிங்கத்திடம் விஷயத்தை எடுத்துக் கூறினோம். அவர் கொஞ்சம்கூடத் தயங்காமல் வங்கி நிர்வாகிக்கு, ‘மிக உயர்ந்த ஒரு பணிக்காக இவர்கள் பத்திரிகை நடத்தப் போகிறார்கள். உங்களிடம் உள்ள, ‘தினச்செய்தி’ அச்சகத்தை வட்டி எதுவும் வாங்காமல் கொடுத்து உதவவும்’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இதுபோலவே, காமராஜரும் ஒரு கடிதம் கொடுத்தார். இந்தக் கடிதங்களை நாங்கள் மதுரைக்கு கொண்டு சென்று வங்கி நிர்வாகியிடம் கொடுத்தோம். அவரும் எந்த தொந்தரவும் தராமல் அச்சகத்தைக் கொடுத்தார்.
இனி இது பற்றி டி.வி.ஆர்., கூறுவதைக் கேட்கலாம்...
என் இளமைப் பருவ முதல் பொதுவாழ்வில் சிறிதும், ஓரளவு பெரிதுமான பல பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறேன். பொதுக் காரியங்களைத் தீவிரமாகவே செயலாக்கத் தனி மனிதர் களுக்குத் துணிவும், முன் யோசனையும், திட்டமிடும் தன்மையும், செயலாற்றும் வல்லமையும் மட்டும் இருந்துவிட்டால் போதாது. அவரிடம் ஏதாவது ஒரு பதவி இருக்க வேண்டும் அல்லது பத்திரிகைப் பலம் இருக்க வேண்டும். சுதந்திரம் வந்த பின் இவை இரண்டையும் ஒதுக்கிவிட முடியவில்லை.
நானும் இரண்டு தேர்தல்களில் பங்கு கொண்டவன். அதைப் பற்றிச் சுருக்கமாகக் கூறி விடுகிறேன். நாகர்கோவில் நகரசபையில் நேசமணி 1944 - 46ம் ஆண்டுகளில் நகரசபைத் தலைவராக இருந்தார். பின் பி.சிதம்பரம் பிள்ளை தலைவர் பதவிக்கு வந்தார். அவர் இடையில் ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 1946 - 47 வரை. அடுத்து வந்த தேர்தலில் நான் போட்டியிட்டேன். அதில் என் நண்பராய் இருந்த ஒரு வழக்கறிஞர் நகரசபை உறுப்பினராக இருந்தார். அவர் உடனிருந்து செய்த சதியினால் நான் தோல்வி அடைந்தேன். இந்தத் தேர்தலில் அனந்தராமன் தேர்ந்தெடுக்கப் பட்டார். (தேர்தலில் அனந்தராமன், டி.வி.ஆர்., மற்றும் ஒருவர் போட்டியிட்டனர். முதல் ரவுண்டிலேயே டி.வி.ஆர்.,விலக்கப்பட்டார். பின்னர் தனக்காகச் சேர்ந்து வைத்துள்ள வாக்குகளை அனந்தராமனுக்குத் தந்து அவரை வெற்றியடையச் செய்தார். இத்தகவலை மிகப் பெருமையுடன் அனந்தராமன் கூறினார்.)
தேர்தலில் ஒவ்வொருவரும் நிற்க வேண்டுமென்பது என் விருப்பம். அப்பொழுது தான் அவர்களுக்கு மனிதர்களில் எத்தனை எத்தனை விதம் உண்டு, எப்படியெல்லாம் நம்பிக்கைத் துரோகம் செய்வர், ஒவ்வொருவரின் வெளித் தோற்றத்திற்கும், உள் மனத்திற்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது என்றெல்லாம் அறிய முடியும். ஆனால், இவற்றைத் தெரிந்துகொள்வதற்காகப் பொருளை ஏராளமாகச் செலவு செய்து தெருவில் நிற்கக் கூடாது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும். நான் நகரசபைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டது பெருமைக் காக அல்ல. நகரத் தந்தையென்றால் கவுரவம், செல்வாக்கு எல்லாம் உண்டு; அதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவையெல்லாம் எனக்கு ஏற்கனவே ஒரு நகரத் தந்தையை விடக் கூடுதலாகவே இருந்தது. ஆனால், என்னுடைய உள்நோக்கம், அந்தப் பதவியை வைத்து மூன்று முக்கிய காரியங்கள் செய்ய வேண்டும் என்பதுதான். அது இல்லாமலே செய்ய முடியாதா என்பது ஒரு கேள்வி . . . தலைவர் என்ற பதவி இருந்தால் வெகு விரைவில் இக்காரியங்களை முடிக்கலாமே என்று கருதினேன்.
அதில் முக்கியமானது, நெல்லை - குமரி இரயில் பாதை. இந்த மூன்று காரியங்களையும் மிக விரைவில் செய்ய, நகரசபைத் தலைவர் பதவி இருந்தால் தேவலாம் எனக் கருதினேன். அடுத்தபடியாக, திருவிதாங்கூர் சட்டசபை உறுப்பினர் பதவிக்கு நிற்க முயற்சி செய்தேன். (இது பற்றி பி.எஸ்.மணி கூறுகையில்: உறுப்பினர்களுக்கான தேர்வு நடத்தும் அட்ஹாக் கமிட்டியில் நான் இருந்தேன். டி.வி.ஆர்., நிச்சயம் இதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வாதாடினேன். அவருக்குப் பதில் வேறு ஒருவர் பெயரைச் சிபாரிசு செய்தனர். அவர் எந்த வகையிலும் டி.விஆருக்கு நிகராகமாட்டார். என் கருத்தைக் கூட நான் மினிட்டில் எழுதி வைத்துள்ளேன். அவரைக் தேர்ந்தெடுக்காதது எனக்கு அப்போது வருத்தம். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதுவும் ஒரு நல்லதற்குத் தான். அப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவரது பணி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் கிடைத்திருக்கும். இன்றுபோல் தமிழகம் முழுவதற்குமாக இருந்திருக்காது என்றார்.)
இந்த இரண்டு தேர்தல்களும் எனக்குப் பயனற்றுப் போயிற்று. இந்த நிலைமையில் நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் தீவிரமாக ஈடுபடவும், மக்களுக்குத் தொண்டு செய்யவும், ஒரு பத்திரிகை வேண்டும் என்று என் மனதில் ஏற்கனவே இருந்த எண்ணம் மேலும் வலுப்பட்டது. அதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினேன். சில நண்பர்களிடம் இது பற்றி ஆலோசனை செய்தேன். பெரும்பாலும் அதற்கு எதிராகவே கருத்துக் கூறினர். ஊக்கம் தருவார் யாரும் இல்லை. அதன் பாதகங்கள் பற்றி அச்சுறுத்திய வர்கள்தான் அதிகம். பத்திரிகை நடத்திப் பணத்தை இழந்து, வாழ்க் கையில் நொடித்துப் போனவர்கள் பற்றியெல்லாம் விரிவாக கூறினர். நாகர்கோவிலில் வழக்கறிஞர் சிதம்பரம்பிள்ளை, ‘தமிழன்’ என்று ஒரு வார இதழை இரண்டு மூன்று ஆண்டுகள் நடத்தி மேலும் நடத்திச் செல்ல முடியாமல் கைவிட்டு விட்டார். நேசமணி, ‘திங்கள்’ என்ற ஒரு வார இதழை சிறிது காலம் நடத்திப் பின் நிறுத்தி விட்டார். மாகலிங்க முதலியார், ‘தேவி’ என்ற வார இதழ் தொடங்கி, தொடர்ந்து நடத்த முடியாமல் மூடிவிட்டார். இதுதான் நாஞ்சில் நாட்டின் அந்தநாள் நிலைமை.
இந்த நிலையில் எடுத்த எடுப்பிலேயே ஒரு தமிழ் நாளிதழைத் தொடங்கி நடத்த நினைப்பவனைப் பைத்தியக்காரன் என்றே நினைத்தனர். என் இயற்கை சுபாவப்படி, நஷ்டமே வருவது என்று வைத்துக் கொண்டாலும், எவ்வளவு நஷ்டம் வரும், அந்த நஷ்டத்தை நம்மால் தாங்க முடியுமா, அதற்குள்ள பணபலம் நம்மிடம் உள்ளதா என்று கணக்குப் போட்டேன். மாதம் ஆயிரம் ரூபாய் நஷ்டம் வரலாம் என்று தெரிந்தது. இதன்படி பத்திரிகை மக்களிடம் வேரூன்றும் வரையான (உத்தேசம் ஐந்து வருட காலங்களுக்கு) 60 ஆயிரம் ரூபாய் நஷ்டம் வரும். அதை நம்மால் தாங்க முடியுமா என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்தது. அப்போது இருந்த என் பொருளாதார நிலையில் தாங்க முடியும் என்ற நிலைமை இருந்தது.
உடனே மனத்தை உறுதி செய்து கொண்டு, யார் சொன்னதையும் பொருட்படுத்தாமல், விரைவாகச் செயலில் இறங்கி விட்டேன். என்னுடைய பள்ளித் தோழரின் தம்பியான ஆசாரிப்பள்ளம் குழந்தை சாமி என் எண்ணத்தை அறிந்து என்னிடம் வந்தார். அவர், ‘தினசரி’யில், சொக்கலிங்கத்தின் கீழ் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர். பத்திரிகை தொடங்க அவரை ஆசிரியராக ஏற்றுக் கொண்டால் ஒத்துழைப்புத் தருவதாவும் கூறினார். அவரும் சில கணக்குகளையெல்லாம் சொல்லி ஆறு மாதத்துக்குள் மாதம் ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று புள்ளி விவரங்களோடு கூறினார். நான் வெளிப் பார்வைக்குச் சரியென்று சொன்னாலும், மாதம் ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்ற தீர்மானத்துடனேயே செயலில் இறங்கினேன்.
இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் வஞ்சியூர் நீதிமன்றத்திற்கெதிரில் ஓர் இடமும் பார்த்து, வாடகை பேசி முன் பணமும் கொடுத்துச் சாவியும் வாங்கி ரெடியாகிவிட்டது. அச்சு இயந்திரத்தை கொண்டு போய் திருவனந்தபுரத்தில் நிர்மாணித்து, பத்திரிகை தொடங்கத் தயாராகிவிட்டேன்; பெயர் வைப்பது தான் பாக்கி. பெயர் வைப்பதற்கு நானும், என் தமிழ் ஆசிரியர் சுசீந்திரம் தசாவதானி ஆறுமுகம் பிள்ளையும் யோசித்தோம். அவர், ‘பொன்மலர்’ என்று பெயர் வைக்கலாமென்றார். நான் நாளிதழ் என்பது பெயரி லேயே தொனிக்க வேண்டுமென்று சொன்னேன். இறுதியில், ‘தினமலர்’ என்ற பெயர் வைப்பதாக முடிவாகியது. எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, 1951ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி திறப்பு விழா நடத்துவது என்று முடிவு செய்தேன். அன்று திருவிதாங்கூர் முதல் அமைச்சராக இருந்த கேசவனைத் திறந்து வைக்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர் இசைவது போலத் தோன்றியது.
நான், ஒரு நாளிதழ் என்று விளக்கினேன். ‘டெய்லி ஆணோ?’ என்று மலையாளத்தில் என்னிடம் கேட்டு மெதுவாக நழுவி விட்டார். அவர், ‘கேரளகவுமதி’ என்ற மலையாளப் பத்திரிக்கையின் உரிமை யாளர்களில் ஒருவர். அந்த இதழ்,முதன் முதலாக மாத இதழாவும், பிறகு மாதம் இரு முறையாகவும், பிறகு வார இதழாகவும் வெளிவந்து, பின் நாளிதழாகி, மிகுந்த கஷ்டத்துடன் வளர்ந்த ஒரு நாளிதழ். நாளிதழ் என்ற உடன், இதன் வெற்றியில் அவருக்கு அச்சம் ஏற்பட்டதோ என்னவோ. தன் கையால் திறந்து, பின் அதற்கு ஏதாவது ஏற்பட்டால் தமக்கு இழுக்கு வருமோ என்றுதான் நழுவி னாரோ என்று நான் அவருடன் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து தெரிந்துகொண்டேன். பிறகு, என் ஆப்த நண்பர், பிரபலத் தமிழறிஞ ரான வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு விழா நடத்தினேன். விழாவிற்கு வந்திருந்தவர்களில் முக்கியமாகப் பிரதமச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்றவரும், என்னிடம் மிகுந்த அன்புடையவரும்மான சி.ஒ.மாதவனைக் குறிப்பிடலாம்.
சிந்தனைகளும் முடிவும்
எந்த ஒரு காரியத்தையும் அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு டி.வி.ஆர்., செய்வது கிடையாது. ஒரு காரியம் தொடங்குவதற்கு முன் நீண்ட காலம் யோசித்துக் கொண்டிருப்பார். அக்காரியம் முடிய சரியான திட்டங்களும் மனத்திற்குள் வகுத்து வைத்திருப்பார். தாமே ஒரு முடிவுக்கு வந்து விட்டால், அதுபற்றி பலரிடம் கருத்தும் கேட்டுக் கொள்வார். காலம் கனிந்து தமது திட்டப்படி எல்லாம் நடத்த முடியும் என்று அவர் மனம் பச்சைக் கொடி காட்டி விட்டால் உடனே மளமளவென செயலாக்கி விடுவார். அன்றைக்குத் தேசபக்தி என்ற ஒரே லட்சியத்திற்காகவே பலர், பத்திரிகைகள் ஆரம்பித்துத் தங்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும் அதில் முடக்கி, பெரும் பாடுபட்டு பெரும் தியாக வாழ்க்கை வாழ்ந்தும், பத்திரிக்கை நடத்த முடியாமல் நொடிந்து போனவர்தான் அதிகம். அத்தனை துபரம் போவானேன். டி.வி.ஆர்., வாங்கிய அச்சகம், ‘தினச்செய்தி’ நடத்த முடியாத நிலையில் மூழ்கி, கேட்பாரில் லாமல் வங்கியில் முடங்கிக் கிடந்தது. இத்தனையும் தெரிந்த பின் இந்த வேள்வியில் குதித்துள்ளார் டி.வி.ஆர்., என்பதற்குக் காரணம், நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைப் போராட்டம். இதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இராஜாஜிக்கு, தான் (டி.வி.ஆர்.,) ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப் போவதாக எழுதிய போது, இராஜாஜி எழுதினார் : it is very difficult to couduct a Daily News Paper these days and I hope financial arrangements are such as to give no cause for daily anxiety. என்றே தமது வாழ்த்துச் செய்தியின் முதல் வரியைத் தொடங்குகிறார். ஆனால் "தினமலர்' ஒரு வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அதை ஆரம்பித்து நடத்தத் தனக்கெனச் சிலக் கொள்கைகளை டி.வி.ஆர்., வைத்திருந்தார். |
இதன் காரணமாகவே அன்றைய நாளிதழ் ஆசிரியர்களில் ஜாம்பவான் என்று பாராட்டப்படும் டி.எஸ். சொக்க லிங்கம் வங்கி மேலாளருக்கு எழுதிய கடிதத்தில், ‘மிக உயர்ந்த ஒரு பணிக்காக இவர்கள் பத்திரிகை நடத்தப் போகின்றனர்; அச்சகத்தை வட்டி எதுவும் வாங்காமல் கொடுத்து உதவவும்’ என்று எழுதி இருக்கிறார்.
டி.வி.ஆர்., எதற்காக தான் ஒரு பத்திரிகை நடத்த முன்வந்தேன் என்பதை டி.எஸ்.சொக்கலிங்கத்திடம் விளக்கி இருக்க வேண்டும். அது நீண்டகாலப் பத்திரிகையாளரான அவரது மனத்திற்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் நல்ல வார்த்தை சொல்லி டி.வி.ஆரைத் திரும்ப அனுப்பி இருப்பார். எடுத்த எடுப்பிலேயே, ‘மிக உயர்ந்த பணிக்காக இவர்கள் பத்திரிகை நடத்தப் போகின்றனர்’ என்று சபாஷ் போட்டிருக்க மாட்டார். ‘தினமலர்’ இதழுக்குக் கிடைத்த முதல் வாழ்த்து இதுதான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இராஜாஜியும், ‘The principles you have mentioned are excellant’ என்று மனமாரப் பாராட்டியும் உள்ளார். இராஜாஜியிடம் இப்படி சர்டி பிகேட் வாங்குவது என்பது சாதாரணமல்ல. தெரிந்தேதான் இந்த வேள்வியில் அவர் குதித்துள்ளார்.
கோலாகல ஆரம்ப விழா
‘தினமலர்’ மலர்ந்தது தமிழ்நாட்டில் அல்ல; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில். டி.வி.ஆர்., பத்திரி கையைத் தொடங்கிய இடமும், பின்னர் அதன் கிளைகளை விரிவாக் கிய இடங்களும், இவருக்கு முன் தமிழ்ப் பத்திரிகை கால் ஊன்றாத புதிய இடங்கள்தான் என்பதையும் கவனிக்க வேண்டும். முழுவதும் மலையாளிகளே நிறைந்த அவர்கள் ராஜ்யத்தில், மலையாளப் பத்திரிகைகள் அன்றைக்கே கொடிகட்டிப்பறந்த அந்தக் கோட்டையில், ஒரு தமிழ் நாளிதழ் தொடங்கப்படுகிறது. ஆரம்பவிழா டி.வி.ஆரின் செல்வாக்கை நமக்கு உணர்த்தவே செய்கிறது.
விழாவிற்குத் திருவிதாங்கூர் சர்வ கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியர் ராவ்சாகிப் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமை தாங்கினார். திருவனந்த புரம் மேயர் பெர்ணாண்டஸ், மாஜி அரசாங்கப் பிரதமச் செயலாளர் சி.ஒ.மாதவன், லஷ்மண சாஸ்திரிகள், திருவனந்தபுரம் கலெக்டர் இராமானுஜம் ஐயர், அட்வகேட் சுப்பிரமணியபிள்ளை, தென்னிந்திய கார்ப்பரேஷன் காளியப்பச் செட்டியார், அரசாங்கச் செயலாளர் வெங்கட சுப்பிரமணிய ஐயர், திருவிதாங்கூர் பேங்க் மேனேஜிங் டைரக்டர் வேதமுத்து மற்றும் நகரப்பிரமுகர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள தமிழர்கள் ஏராளமாக விழாவில் கலந்து கொண்டனர்.
|
விழாவிற்குத் தலைமை தாங்கிய பேராசிரியரை வரவேற்று டி.வி.ஆர்., பேசுகையில்: ‘இந்த வைபவத்திற்குத் தலைமை தாங்கும் தமிழ்மணி, தமிழ்த் தொண்டாற்றும் பெரியார் வையாபுரிப்பிள்ளையை நான் மனமார வாழ்த்துவதுடன் அவரையே இப்பத்திரிகையைத் திறந்து வைக்குமாறும் வேண்டுகிறேன்’ என்று கூறிவிட்டு, ‘பத்திரிகை பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்’ என்று கூறி, தான் ஏன் இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தேன் என்பதை டி.வி.ஆர்., தெளிவாகத் தொடக்க விழாவில் கூறுகிறார்...
சிறு பிராய முதலே எனக்கு ஒரு நீண்ட ஆசை. அதை நிறைவேற்று வதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் வாய்த்தது. திருவனந்தபுரத்தில் தமிழ்ப் பத்திரிகை நல்ல முறையில் நடக்குமா என்று பலர் என்னிடம் கேட்டதுண்டு. அதுவே நாளிதழ் தொடங்க என்னைத் தூண்டியது. இந்தத் ‘தினமலர்’ பத்திரிகை எந்தக் கட்சியையும் சார்ந்தது அன்று. எந்தக் கட்சியிலுள்ளவர்களும் தங்கள் அபிப்பிராயங்களைத் ‘தினமலர்’ மூலம் வெளியிடலாம். மலையாளி, தமிழர் உறவை வளர்க்கத் ‘தினமலர்’ பாடுபடும். ஆனால், தமிழர்களுடைய நியாயமான குறைகளுக்குப் பரிகாரம் தேடுவது இதன் சீரிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று திட்டவட்டமாக கொள்கைப் பிரகடனம் போலக் கூறி உள்ளார்.
பத்திரிக்கையை ஆரம்பித்து வைத்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பேசியதாவது:
தினமலர்’ப் பத்திரிகைக்குக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அனுப்பி இருக்கும் வாழ்த்துப்பாவை புகழ்ந்து பேசிவிட்டுப் பத்திரி கையை ஆரம்பித்து வைத்தார். பத்திரிகையை ஆரம்பித்து வைத்த பின்னர் அவர் பேசியதாவது : ‘தினமலர்’ப் பத்திரிகையை டி.வி.ஆர்., தொடங்குகிறார். திருவிதாங்கூரில் சில தமிழ்ப் பத்திரிகைகள் உண்டு; அவை வாரப் பத்திரிகைகளே! ‘தினமலர்’ பொது ஜனங் களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும்எதிர்பார்க்கிறோம். ‘பத்திரிகை ஆரம்பிப்பது லேசான காரியமல்ல. எப்பொழுதும் குடி யானவர்களின், பொதுமக்களின் பொது நன்மை கருதியே உழைக்க வேண்டும். மக்களைக் காக்கப் பத்திரிகைகளால் முடியும். ‘தின மலர்’ மக்களின் ஐக்கியத்திற்காகப் பாடுபடும் என்று நம்பி மனமார வாழ்த்துகிறேன்றீ என்று கூறி, வந் திருந்த பிரமுகர்களிடம் பிரதி களைத் தாமே வழங்கினார்.
|
அடுத்தபடியாக, திருவிதாங்கூர் அரசாங்க மாஜி தலைமைச் செயலாளர் சி.ஓ.மாதவன் "தினமலர்' பத்திரிக்கையை ஆசீர்வதித்து பேசுகையில்:
திருவிதாங்கூர் தனி மலை யாள மொழியினர் கொண்ட நாடு அல்ல. மலையாளமும், தமி ழும் கலந்தே இருக்கும் நாடாகும். இங்கு வேற்றுமை ஏதுமில்லை. மக்களெல்லாரும் ஒன்றே என்ற உணர்வில், மொழி வேற்றுமைகள் குறுக்கிடாமல், சகோதரப் பாசத் துடன் வாழ்ந்து வருகின்றனர். ‘தினமலர்’ இந்த நோக்கத்திலேயே உழைக்கும் என்ற நம்பிக்கையுடன் இதை வாழ்த்துகிறேன் என்றார். மேயர் பெர்னாண்டஸ் பேசு கையில்: நல்ல கருத்துக்களுடன் மக்கள் நலனை மனத்தில் கொண்டு நல்ல முறையில், ‘தினமலர்’ வெளிவருமாக. பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேர வேண்டும் என்றும், அது வெகு பிரபல்யம் அடைய வேண்டு மென்றும் வாழ்த்துகிறேன் என்றார்.
வையாபுரிப் பிள்ளை தமது முடிவுரையில் : றிபல பத்திரிகைகள் ஆரம்பத்தில் ஆடம்பரமாய் இருக்கும்; பின், தளர்ந்து மறைந்துவிடும். ஆனால், எத்தனையோ காரியங்களில் வெற்றிகண்ட இராமசுப்பையர் நடத்துவதால் இது நல்ல கீர்த்தி அடையும். ஆனால், கவிமணி கூறியது போல, நம் பத்திரிகை என்ற உணர்ச்சியோடு மக்கள் நடத்த வேண்டும். பத்திரிகையை முன்னுக்குக் கொண்டு வருவது நம் கடமை என்று பொதுமக்களும் உணர்ந்து முழு ஆதரவும் காட்ட வேண்டும்றீ என்று கேட்டுக்கொண்டார்.
இராஜாஜி வாழ்த்து
இராஜாஜி அனுப்பி இருந்த வாழ்த்து செய்தி: பத்திரிகை திறம்பட நடத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளுடன் இப்புது முயற்சியைத் தொடங்குகிறீர்கள் என்று நம்புகிறேன்; எனது வாழ்த்துக்கள். பத்திரிகை நடத்துவது சம்பந்தமாக தாங்கள் வகுத்துள்ள கொள்கைகள் மிக உன்னதமானவை. அந்தக் கொள்கைகளை இறுதி வரை திடமாய்க் கடைப்பிடித்து வெற்றி பெறுவீர்களாக என ஆசி கூறுகிறேன்.
வந்து குவிந்த வாழ்த்துச் செய்திகள்
பத்திரிகைத் தொடக்க விழாவிற்கு அன்றைய காங்கிரஸ் தலை வர் (பிற்காலத்தில் முதன் மந்திரியாக இருந்த) எம். பக்தவத்சலம், ரயில்வே இலாகா உதவி மந்திரி கே.சந்தானம், டாக்டர் அழகப்பச் செட்டியார், டாக்டர் நடராஜன், ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன், இரசிகமணி டி.கே.சி., கவிஞர் கா.மு.ஷெரிப், ஆறுமுக நாவலர், ராஜா சர் முத்தையா செட்டியார், தசாவதானம் ஆறுமுகம் பிள்ளை மற்றும் ஏராளமான பிரமுகர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர்.
டி.வி.ஆர்., கூறுகிறார்: ‘ஆறாம் தேதி விழா நடத்தினேன். ஏழாம் தேதி காலை பேப்பர் எல்லா ஊர்களுக்கும் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தது!’ இதனால், சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டதால் எல்லாம் ஒழுங்காகவே நடைபெற்றுள்ளது என்பது விளங்குகிறது.
முதல் தலையங்கம்
ஆசீர்வதித்து ஆதரவு தருக ஜனசமூகம் இன்னல்கள் நீங்கி, இன்ப நிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன், ‘தினமலர்’ப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறோம். உலகமெங்கும் சுபிட்சம் நிலவ வேண்டும். மக்களெல்லாரும் சமாதானத்துடன் இன்பமாக வாழ வேண்டும். இவை கைகூடுவதற்கு இடையறாது உழைத்து வரும் ஜனசக்திகளுக்கு எதிராகச் செல்லாமல், அவற்றிற்கு ஒரு சிறு அளவேனும் உதவி செய்யும் வகையில், ‘தினமலர்’ தினந் தோறும் பணியாற்றி வரும் என்று உறுதி கூறுகிறோம். மக்கள் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்ற சபதத்தை மனத்தில் நிறுத்தி இப்புது முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.
இம்முயற்சியில், ‘தினமலர்’ நிலைத்து நின்று வெற்றி காண அன்பர்கள் அனைவரும் எமக்கு ஆதரவு தரவேண்டுமெனப் பணி வுடன் வேண்டுகிறோம். ‘தினமலர்’ பத்திரிக்கையை எந்த அரசியல் கட்சியுடனும் சார்பு கொள்ளாத வகையில் சுயேட்சையாக நடத்த முற்படுவதால் எந்த அரசியல் கட்சிக்கும், ‘தினமலர்’ விரோதி என்று அர்த்தமாகாது. தங்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்டே எல்லா அரசியல் கட்சிகளும், ஸ்தாபனங்களும் செயலாற்றி வருகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். லட்சியத்தை அடைவதற்காக வகுத்துள்ள செயல்முறைகளில்தான் பல அபிப்பிராய பேதங்களும், சண்டை சச்சரவுகளும் உதிக்கின்றன.
இந்த அபிப்பிராய வித்தியாசம் ஜனசமூகம் உள்ளளவும் இருக்கவே செய்யும். எந்தக் கட்சியினர் கையாளும் செயல் முறை பூர்ணபலன் தரத்தக்கது என்பதை இன்றைய உலக நிலையில் யாரும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. எனவே, கட்சிச் சார்பற்ற முறையில், ‘தினமலர்’ப் பத்திரிக்கையை நடத்துவது என நாம் தீர்மானித்திருப்ப தால், பிழை எதுவும் இல்லை என்பதை எவரும் அவரவர் விவேகத் திற்கும், அனுபவ அறிவிற்கும் எட்டிய முறையில் மட்டுமே நிர்ணயிக்க முடியும். அந்த முறையில் சர்ச்சை செய்து அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமை, ‘தினமலர்’ இதழுக்கு உண்டு. அந்தப் புனித உரிமைக்குப் பங்கம் வராத ரீதியில் பணியாற்றுவது எனத் தீர்மானித்திருக்கிறோம்.
எல்லா கட்சியினரும் தத்தம் அபிப்பிராயங்களைத் கண்ணியமான முறையில் தெரிவிக்க, ‘தினமலர்’இதழில் எப்போதும் இடமுண்டு. ஜன சமூகத்திற்குத் தீங்கு இழைப்போர் யாராக இருந்தாலும் சரி... அவர்களை வன்மையாகக் கண்டிப்பதில், ‘தினமலர்’ சற்றும் தயங்காது. வகுப்புவாதிகள், மதவெறியர்கள், பிற்போக்குக் கும்பல்கள், குழப்பங் கள் உண்டுபண்ணுபவர்கள், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நய வஞ்சகர்கள், தமிழினத்திற்கு துரோகம் செய்யும் கோடாலிக் காம்புகள், இத்யாதி கோஷ்டிகள் அத்தனைபேரும் எமது விரோதிகள். இவர்களை முறியடிப்பதில், ‘தினமலர்’ முன்னணியில் நின்று பணியாற்றும்.
சிறுமை வழியில் செல்லும் நபர்களையும், கோஷ்டிகளையும் சிதைக்கும் நோக்கம், ‘தினமலர்’ இதழுக்குக் கிடையாது. அவர்கள் எல்லாரையும் சீர்திருத்தி நேர்வழிக்குக் கொண்டு வருவதற்குத் ‘தினமலர்’சதா உழைக்கும். பொதுவாக ஜனசமூகத்தின் நன்மைக்காக வும், சிறப்பாக இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் கடமை எமக்கு உண்டென்றாலும், திருவிதாங்கூர் - கொச்சியிலுள்ள தமிழர்களின் நன்மைக்காக, சதா பாடுபட வேண்டியது எமது தலையாய கடமை.
திருவிதாங்கூர் - கொச்சி தமிழர்களின் அன்றாடப் பிரச்னைகளில், ‘தினமலர்’ சிரத்தை எடுத்துச் செயலாற்றும். அவர்களுடைய லட்சியம் நிறைவேறுவதற்கு நமது பத்திரிகையின் உதவி எப்போதும் உண்டு. இந்திய நாடானது தமிழர், மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள், மகாராஷ்டிரர்கள், வங்காளிகள் முதலிய பல மொழிவழி இனத்தவர் எல்லாரும் சகோதரத்துவ இணைப்பில் என்றென்றைக்கும் சமாதான மாக வாழ வேண்டியவர்கள். எனவே, ஒரு மொழியினருக்கும் இன்னொரு மொழியினருக்கும் இடையே சண்டை சச்சரவுகளும் குதர்க்க, குரோதங்களும் ஏற்படாத படி தடுத்து, அவரவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்குத் ‘தினமலர்’ சதா உழைத்து வரும். தமிழர் பிரச்னைகள், இந்திய உள்நாட்டுப் பிரச்னைகள், சர்வேதேசப் பிரச்னைகள் முதலிய சகல துறைகளிலும் நீதியின் பீடத்தில் நின்று ஜனசமூகத்திற்குச் சேவை செய்ய முன் வந்திருக்கும், ‘தினமலர்’ப் பத்திரிகையை உள்ளன்புடன் ஆசிர்வதித்து எம்மை ஆதரிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கவிமணியின் ஆசி
ஈசன் அருளால்
எழுத்தாளர் ஒத்துழைப்பால்
வாசகரின் ஆசி
வலிமையால் - பேசுபுகழ்
தென்னனந்தை பூத்த
‘தினமலர்’ வாடாது
மன்னுலகில் வாழ்க
வளர்ந்து.
-தேசிக வினாயகம் பிள்ளை
‘தினமலர்’ முதல் நாள், முதல் பக்கத்தில் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் இந்த வாழ்த்துக் கவிதை வெளியாகியுள்ளது.
ஒரு வருடத்துப் பயிர்
செப்.,6,' 52ம் ஆண்டு "தினமலர்' இதழில் வெளியான தலையங்கம்!
இன்றோடு, ‘தினமலர்’ இதழுக்கு ஒரு வயது பூர்த்தியாகிறது. அதாவது திருவிதாங்கூர் தமிழர்களின் அச்சுக் குரலான, ‘தினமலர்’ 365 நாட்கள் போராடி அடுத்த கட்டத்தை எட்டுகிறது. கடந்த ஒரு வருடத்திலுள்ள, ‘தினமலர்’ இதழின் பாலசரித்திரத்தை வாசகர்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வருவது எங்கள் கடமையாகும். செப்., 6,1951ல் படாடோபமில்லாமல், ‘தினமலர்’ இதழின் முதற்பதிப்பு வெளியாயிற்று. ஆரம்ப காலத்தில், ‘தினமலர்’ இதழுக்கு எவ்வளவு கஷ்ட, நஷ்டங்கள் ஏற்பட முடியுமோ அவ்வளவும் ஏற்பட்டு விட்டது. மலையாளப் பகுதியில் தமிழ் அச்சுக்கோர்ப்பவர்கள் அகப்பட்டாலும், தினப்பதிப்புப் பத்திரிக்கைகளில் அனுபவமுள்ளவர்களுக்குப் பெரும் கிராக்கியாகவே இருந்ததோடு, அச்சுக் கோர்ப்பவர்களுக்காக மட்டுமே சகோதரப் பத்திரிகைகளுக்கான செலவில் இரட்டிப்பு ஆயிற்று.
அதையும் பொருட்படுத்தவில்லை. பத்திரிகை காகித விலையும் பிரமாதமாகவே இருந்தது. திருவிதாங்கூர் - கொச்சியிலுள்ள மலையாளப் பத்திரிகைகள் ஒன்றே காலணாவாக விற்று வரும்போது, நமது, ‘தினமலர்’ ஓரணா விலைக்கே விற்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூரில் 15லட்சம் தமிழர் கள் இருக்கின்றனர். ஐந்து பேருக்கு ஒரு வீடு என்று கணக்கிட்டாலும் மூன்று லட்சம் தமிழ் வீடுகள் இருக்கின்றன. பத்து வீட்டிற்கு ஒரு ‘தினமலர்’ வீதம் வாங்கினாலும், 30 ஆயிரம், ‘தினமலர்’ சுலபமாக விற்பனையாகிவிடும் என்ற பரிபூரண நம்பிக்கை நமக்கு உண்டு. திருவிதாங்கூர் - கொச்சி தமிழர்களின் அபிலாஷைகளைத்தான், ‘தினமலர்’ பேசும். அதுதான் அதன் மூச்சாகும். தமிழர்களின் பெருந்தன்மையையும், பண்பாட்டையுமே, ‘தினமலர்’ எடுத்துக் சொல்லி வருகிறது. கடந்த 365 நாட்களில் என்னென்ன செய்தது என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறோம்:
1. தமிழ் மந்திரி வேண்டுமென விடாது குரல் எழுப்பி, உள்ளும் புறமும் பெரும் பாடுபட்டு ஒரு தமிழரை மந்திரியாகக் கொண்டு வந்தது.
2. சட்டசபையில் முதலில் சமர்ப்பிக்கப்பட்ட மிச்ச பட்ஜெட்டில் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து பிரஸ் தாபிக்கப்படவில்லையே என்று, ‘தினமலர்’ பெரும்பாடு பட்டது; அதில் வெற்றியும் கண்டது.
3. தமிழாசிரியர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டு வந்ததை எடுத்து உரைத்தோம். அதன் காரணமாக. பாஷை ஆசிரியர்களின் சம்பளம் கணிசமான முறையில் உயர்த்தப்படலாயிற்று.
4. வாரத்தில் ஒருநாள், ‘தினமலர்’ வருவதில்லையே என்ற வாசகர் களின் இடையறாத கோரிக்கையை நிறைவேற்றுகிறோம்.
5. நாகர்கோவில், ‘இண்டர்மீடியட்’ மாணவர்களின் செப்டம்பர் பரீட்சைக்கு நாகர்கோவிலையும் ஒரு மையமாக்கத் ‘தினமலர்’ பெரும்பாடு பட்டு வெற்றியைக் கண்டது.
6. மணியகரம் சம்பந்தமாக ஓயாது எழுதி, அதற்குரிய பரிகாரத்திற் கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதும், ‘தினமலர்’ என்பதை ஒருவரும் மறுக்க மாட்டார்கள்.
இதுபோல எவ்வளவோ விஷயங்கள் இன்று அரசாங்கத்தின் கவனத்திலிருக்கிறதென்றால் அதற்குக் காரணம், ‘தினமலர்’ இதழே. எனவேதான், ‘தினமலர்’ப் பத்திரிகைக்கு இன்று ஒரு நிலையான இடம் கிடைத்திருக்கிறது. ‘தினமலர்’நமது வீட்டிற்கு வருவதால் திரு விதாங்கூர் - கொச்சியே நமது வீட்டிற்கு வருவதாக வாசகர்கள் கருதுகின்றனர். ‘நமது பத்திரிகையில் பல குறைகள் இருக்கலாம்; குறைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். . . ஒரு வருடப்பிராயத்தில் எவ்வளவு குறைகளை எதிர்பார்க்க முடியுமோ அதற்குக் குறைவாகவே காணப்படுகின்றன. ‘தினமலர்’ பால் திருவிதாங் கூர் தமிழ் மக்கள் காட்டும் பற்றுதலை ஒருநாளும் மறக்க முடியாது. அந்த ஒரு ஆறுதல்தான், ‘தினமலர்’ பத்திரிகையின் எதிர்கால வாழ்வின் அஸ்திவார மூலதனம். ‘தினமலர்’ இதழின் அளவு சிறி தாக இருக்கிறதென்று ஒரு குறை வாசகர்களிடம் இருந்து வருகிறது. அக்குறையும் அதிவிரைவில் அகற்றப்படும். ‘தினமலர்’ திருவனந்தபுரம் அரசாங்கச் செய்திகளையும், திருவிதாங்கூர் - கொச்சி செய்திகளையும் உடனுக்குடன் விளக்கமாகத் தெளிவாகக் கூறி வருவது.
எனவே, திருவிதாங்கூர் - கொச்சியிலுள்ள ஒவ்வொரு தமிழரும், ‘தினமலர்’ எவ்வளவு இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டி ருப்பார்கள். பி.டி.ஐ., - ராய்ட்டர் வசதி உள்ளதால், மதுரை பத்திரிகை களுக்கு முன்னதாகச் செய்திகளைத் ‘தினமலர்’ வெளியிட்டு வருவதை வாசகர்கள் கவனித்திருப்பர். இட நெருக்கடி காரணமாகத்தான் விரிவாகத் தெரிவிக்க முடியவில்லை. அந்தப் பிரச்னையும் விரைவில் பைசலாகிவிடும். இன்றுபோல், தமிழர்கள் என்றும் ஆதரிப்பதுடன், ‘தினமலர்’வளர்ச்சிக்கான சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டு மென்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். தமிழர்களிடம் இருக்கும் ஆயுதம் துரு ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழர்களின் கடமை என்பதை உணரக் கோருகிறோம். மீண்டும் ஒரு முறை நமது நேயர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் எங்கள் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இரண்டாம் ஆண்டு தொடக்க நாளில்
கவிமணியின் ஆசி
பத்திமிகுந் தன்பர்
பரவுபழ வங்காடி
அத்திமுகத் தண்ணல்
அருளாலே - நித்தமுமே
வாடா மலராய்
மலர்க, ‘தினமலர்’
நீடாழி சூழும்
நிலத்து
- தேசிக விநாயகம் பிள்ளை
இருவருடச் சேவை
செப்.,6,’53 ‘தினமலர்’ இதழில் வெளியான தலையங்கம்: உங்கள், ‘தினமலர்’ இரண்டாண்டைப் பூர்த்தி செய்துவிட்டு இன்று மூன்றாவது ஆண்டிற்குக் காலெடுத்து வைக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த இரண்டாண்டுகளிலும் திருவிதாங்கூர் - கொச்சி மக்களுக்காகக் குறிப்பாகத் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்காக என்ன என்ன சேவைகள் புரிந்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வது பொருத்தமாகும்.
அரசாங்கம் வேறு; திருவிதாங்கூர் - கொச்சி தமிழ் மக்கள் வேறு என்று நிலவிய அவல நிலையை அகற்றித் தமிழர்களுக்கும் அரசாங் கத்துக்குமிடையே இருக்க வேண்டிய ஆழமான நெருக்கத்தைத் ‘தினமலர்’கொண்டுவந்தது என்பது, ‘தினமலர்’ சாதித்த முதல் சேவை. தமிழர்களுக்கு அவ்வப்போது நேரிடும் குறைகள், கஷ்டங்கள், நெருக்கடிகள் யாவும், ‘தினமலர்’ மூலம் அம்பலமாகி, அரசாங்கத்தின் கவனத்தைக் கவர்ந்தன. பல கஷ்டங்களுக்கும் நேரடியான முறையில் அரசாங்கத்தோடு போராடி நியாயத்தைப் பெற்றிருக்கிறது.
திருவிதாங்கூர் - கொச்சி தமிழ் பிரதேசம் தவிர, அங்கங்கே சிதறி வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இருக்க வேண்டிய தொடர்பு, ‘தினமலர்’ வருவதற்கு முன் துரு ஏறி இருந்தது; அந்த துரு அகற்றப்பட்டு விட்டது. தென் திருவிதாங்கூர் விவசாயப் பிரச்னைகள், நீர்ப்பாசன வசதிகள், விளவங்கோடு தாலுகாவிற்குத் தேவையான பட்டணம் கால், விளத்துறை, ‘லிப்ட் இரிகேஷன்’ மற்றும், நெய்யாறு இடதுகரைச்சானல் முதலிய பிரச்னை களை மந்திரிசபை அந்தஸ்திற்குக் கொண்டுவந்ததோடு, கணிசமான முறையில் விளம்பரப்படுத்திய பெருமையும் தன் இரண்டாண்டு காலச் சேவை மூலம் பெற்றிருக்கிறதென்பது நேயர்களுக்கு சந்தோஷ மாக இருக்கும்.
பத்திரிகை உலகம் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியமான கருத்தையும், நாணயமான நடத்தையையும், ‘தினமலர்’ வார்த்தைக்கு வார்த்தை பிறழாமல் பின்பற்றி வருகிறதென்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். இதற்காகச் சில கட்டங்களில் எக்கச்சக்கமான நெருக்கடி களையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. இப்பொழுதும், ‘தினமலர்’ பத்திரிகையில் எங்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் எவ்வளவோ குறைகள் இருக்கலாம். அக்குறைகளை அவ்வப்போது எடுத்துக்காட்டி, சரியான பாதை அமைத்துத்தர வாசகர்கள் கடமைப்பட்டிருக்கின்ற னர். வாசகர்களின் யோசனைகள் எப்பொழுதும் எந்த நிமிஷத்திலும் இரண்டு கைகளாலும் வரவேற்கப்படும்.
‘தினமலர்’ பத்திரிகை வெளிவருவது மூலம், ஆண்டுதோறும் அனுபவித்து வரும் பொருளாதார நஷ்டத்தைப் பார்த்தால் பயமாக இருக்கும். எனினும், தமிழர் நன்மையைக் கருதி, நாங்கள் அந்தப் பக்கத்தை திருப்பாமலேயே இருந்து வருகிறோம். சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் துணிந்து இறங்கிவிட்ட பின், தமிழர் அபிமானத்தைத்தான் லட்சியமாகக் கொண்டிருக்கிறோமே அல்லாது வேறு திசைகளை நோக்கவே இல்லை.
பத்திரிகை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது அதை தெரிந்தவர் களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நீர் பாய்ச்சுவது எளிது. ஆனால், பள்ளத்திலிருந்து மேட்டிற்கு நீர் பாய்ச்சுவதற்கு எவ்வளவு சக்தி வேண்டும் என்பது சுலபமாகத் தெரிந்துகொள்ளக்கூடியதாகும். அதுபோல, நெருக்கடியான போட்டி களுக்கிடையே இருக்கிற சக்தியைப் பயன்படுத்திப் பத்திரிகை விவசாயத்தில், ‘லிப்ட் இரிகேஷன்’ நடத்துகிறது ‘தினமலர்’ இதழ். அதற்குரிய பிரதிபலன் நிச்சயமாகக் கிடைக்கப் போகிறதென்பது திண்ணம்.
ஆரம்ப காலத்தில் துச்சமாகத் தோன்றிய, ‘தினமலர்’ இன்று சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் முக்கியமாகப் படுகிறதென்பதை எங்கள் இருவருட அனுபவத்தில் கண்டு வருகிறோம். தமிழர்களுக்காக, தமிழர்களின் ஆதரவோடும், அனுதாபத்தோடும் நடந்து வரும் பத்திரிகையாதலால், ‘தினமலர்’ இவ்வளவு தூரத்திற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதைத் துணிந்து கூறலாம். இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும்பட்சத்தில், ‘தினமலர்’ இனியும் எவ்வளவோ எண்ணரிய காரியங்களைச் சாதித்துத் தரும் என்பதற்கு உறுதி கூறுகிறோம். இந்த மூன்றாம் வருஷப் பிறப்பின் ஞாபகார்த்தமாக இன்றுள்ள ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை யும், ‘தினமலர்’ ஆறு பக்கங்களோடு வெளிவரும்.
கூடுதலாக உள்ள இருபக்கம் சஞ்சிகைப் பகுதியாகத் திகழும். இதற்காக ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையின் விலையில் ஒரு சிறு மாற்றம் செய்துள்ளோம். அதாவது, வழக்கமான விலையிலிருந்து வெறும் அரை அணா கூட்டியுள்ளோம். இதனால், ‘தினமலர்’ பட்ஜெட் மீது வாசகர்களுக்கு மாதம் 2 அணா வீதம் அதிகமாகிறது. இந்தச்சிறு விலை உயர்வை தமிழர்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என்பதில் பூர்ண நம்பிக்கை உண்டு. தமிழ் வாசகர்களின் ஆசியாலும், உழைப்பாலும் மூன்றாவது வருட சேவை தொடரவிருக்கிறது. இதிலும் வெற்றியை சாதித்துத் தரப் பிரார்த்திக்கிறோம்.
கடைசி கவிதை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை படுத்த படுக்கையில் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார். ‘காலா அருகில் வாடா சற்று எட்டி உதைக்கிறேன்’ என்று பாரதி கூறியதைப் போல, வீட்டின் வாசலில் வந்து நிற்கும் மரணதேவனை சற்றே காத்திருக்கும் படி ஆணையிட்டு விட்டு, பேனாவும், பேப்பரும் கொண்டுவரச் சொல்லி, அவசர அவசரமாக ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி தனது மைத்துனரிடம் தந்து, ‘தினமலர்’ அலுவலத்தில் கொடுக்கச் சொன்னார்.
அன்று தேதி செப்.,24, ’54. கவிதை, 26ம் தேதி, ‘தினமலர்’ அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது; உடன் வெளியாகவும் செய்தது. கவிதை அச்சேறிக்கொண்டிருக்கும் அதே சமயம், ஒரு துயரமான செய்தியும் கிடைத்தது . . . கவிமணி அமரராகி விட்டார் என்ற செய்திதான் அது.
அந்தச் செய்தியுடன் இந்தக் கவிதையும் வெளியானது. கவிமணியின் கடைசிக் கவிதை இதுதான்:
ஐயம் அறவே உண்மைகளை
ஆராய்ந் தெவர்க்கும் அஞ்சாமல்
செய்ய தமிழில் எடுத்தோதும்
திருவனந்தத் ‘தினமலர்’ நீ
ஐயன் முருகன் திருவருளால்
அறிஞர் போற்றிப் பாராட்ட
வையம் மீது நீடூழி
வாழ்க வாழ்க வாழ்கவே!
புத்தேரி, -தேசிக விநாயகம் பிள்ளை 24.09.1954
பேனா வலிமை
மூச்சைப் பிடித்துக் கொண்டு, 1951ல் ஆரம்பித்து ’54 வரை, ‘தினமலர்’ பல்வேறு சாதனைகளுடன் நிலைத்து நின்று வெற்றிகரமாகத் தனது மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. அப்போது டி.கே.சி., எழுதினார், ‘போனவலி மிகப் பெரியது. எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் அறம் பிறழாது செய்யும் எப்பணிக்கும் நிலையான பயன் உண்டுறீ என்றார். டி.கே.சி., கூறிய போனவலிகள் என்ன? பத்திரிகை எப்படி நடைபெற்றது, எந்தெந்தக் கடுமையான கட்டங்களைத் தாண்டி வந்தது, அலுவலகம் எப்படி இயங்கியது என்பது போன்ற விவரங்களை இனிப் பார்க்கலாம்.
குமரேசன்
கன்னியாகுமரியைச் சேர்ந்த குமரேசன், சிறந்த கவிஞர். பத்திரிகை யாளர். திருவனந்தபுரம், ‘தினமலர்’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். அதற்கு முன் இவர், மாஜினி நடத்திய, ‘புரட்சி’ கவிஞர் கண்ணதாசன் தொடக்க காலத்தில் நடத்திய, ‘திருமகள்’ ஆகிய பத்திரிகைகளில் எழுதி வந்த பிரபலமான எழுத்தாளர். பத்திரிகையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை டி.வி.ஆர்., போட்டிருந்தார். பத்திரிகை திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட் டத்தில் மட்டுமே விற்பனையான காலம். பொதுவாகப் பத்திரிகை படிக்க மக்கள் முன்வராத மிகச் சிரமமான காலமது.அலுவலகத்தில் மொத்தம் 40 பேருக்கு மேல் வேலை பார்த்தோம். அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தின இதழும் கிடையாது; அன்று விடுமுறை. மீதமுள்ள நாட்களில் நாங்கள் பணி செய்தோம். கிட்டத்தட்ட ஒரு தியாக வாழ்க்கைதான். டி.வி.ஆர்., நாகர்கோவில் இருந்து பணம் கொண்டு வருவார். பணம் ஏராளமாகச் செலவானது; நஷ்டத்திலேயே ஓடியது.
ஆனாலும், பத்திரிகை மிக விறுவிறுப்பாக இருக்கும். தலைப்புக்கள் தடபுடலாக இருக்கும். தமிழர் பிரச்னை பேனர் போடுவதில் டி.வி.ஆர்., மிகக்கவனமாக இருப்பார். இரவு வெகு நேரமானாலும் செய்தி நிறுவனத்தின் செய்திகளைப் பார்த்து எட்டுப் பத்தித் தலைப்பை முடிவு செய்வார். பெரிய பெரிய பத்திரிகைகள் மிக மிக அனுபவம் உள்ள பத்திரிகை யாளர்களைக் கொண்ட பத்திரிகைகளின் தரத்திற்கு, ‘தினமலர்’ குறையவே கூடாது என்பதில் அவர் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அந்தக் காலத்தில், திருவனந்தபுரம் அரண்மனையில் ஒன்றாக விளங்கிய கட்டடத்தை அதிகமான வாடகைக்கு எடுத்திருந்தார். அப்போது அவர் கூறுவார்: றிநான் சம்பாதித்த பணம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் மென்று இதில் செலவு செய்கிறேன். நஷ்டமும், கஷ்டமும் அதிகம். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இதே பத்திரிகை தமிழ் மக்களால் நிச்சயம் போற்றப்படும்; வளர்க்கப் படும் என்ற நிச்சயமான நம்பிக்கை எனக்கு இருக்கிறதுறீ என்று கூறி, எங்களை உற்சாகமூட்டுவார். தமிழ் மக்கள் மீதும், தாம் செய்யும் தொழிலின் மீதும் அவர் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை இன்று நினைக்கும்போது எனக்குப் பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது.
நாஞ்சில் நாட்டின் எழுச்சி
இன்றைய கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தாங்கள் தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்று 1954ம் ஆண்டு மிகத் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போர் வாள், ‘தினமலர்’தான். இந்தப் போராட்டம் ஆரம்பித்த பின், தமிழர்கள் ஒவ்வொருவர் கையிலும், ‘தினமலர்’ இருந்தது. இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் நடத்தியே ஆக வேண்டுமென்ற உணர்வும், அதற்காகவே, ‘தினமலர்’ ஆரம்பிக்கப்பட்டது என்பதும் இன்றைக்குப் பலருக்கும் தெரியாத உண்மை. நாஞ்சில் நாட்டுத் தமிழர்களது உரிமை காக்கப்பட வேண்டுமென்ற டி.வி.ஆரின் அழுத்தமான நம்பிக்கையும், நாஞ்சில் நாட்டுத் தமிழ் மக்களுக்கு என்று பத்திரிகையும் இருந்தால் இவர்களைச் சுய மானத்துடன் காப்பாற்றிவிடலாமே என்ற லட்சிய வெறியும் அவர் இதயத்தில் பலமாக இடம் பெற்றதன் விளைவே, அவரைப் பத்திரிகைத் துறையில் இறக்கியது. ‘தினமலர்’ ஆரம்ப விழாவிலும், முதல் தலையங் கத்திலும் இதை அவர் உறுதியாகவே கூறி உள்ளார். மீண்டும் ஒரு முறை அதை நினைவுபடுத்துவது தவறில்லை. அதில் கூறியிருப்பவை:
ஹீ மலையாளிகள், தமிழர்கள் உறவை வளர்க்க, ‘தினமலர்’ பாடுபடும். ஹீ ஆனால், தமிழர்களுடைய நியாயமான குறைகளுக்குப் பரிகாரம் தேடுவது இதன் சீரிய நோக்கங்களில் ஒன்றாகும். ஹீ பொதுவாக ஜன சமூகத்தின் நன்மைக்காவும், சிறப்பாக இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் கடமை எமக்கு உண்டென்றாலும், திருவிதாங்கூர் - கொச்சியில் உள்ள தமிழர்களின் நன்மைக்காகவே சதா பாடுபட வேண்டியது நமது தலையாய கடமை என்பதை நாம் நன்குணர்ந்திருக்கிறோம். ஹீ தமிழினத்திற்குத் துரோகம் செய்யும் கோடாலிக் காம்புகள் எமது விரோதிகள். மேலேகண்ட கொள்கைகளின் அடிப்படையில் தமிழினத்தை ஒன்று திரட்ட, அவர்கள் உரிமைகளுக்குப் பாதுகாப்புத்தரவே, ‘தினமலர்’ மூன்று ஆண்டுகளாகப் பெரும் நஷ்டத்தில் பாடுபட்டது. பட்டபாட்டிற்குப் பலனாக நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் தங்கள் உரிமையைக் கோரி அலைகடலென ஆர்ப்பரித்து எழுந்தனர்.
குழந்தைசாமி
அன்றைக்குப் பத்திரிகை அலுவலகத்தின் நிலை என்ன? ‘தினமலர்’ பத்திரிகையின் முதல் செய்தி ஆசிரியர் என்று குழந்தைசாமி கூறு கிறார் . . . அன்றைக்கு நடந்தது அரசியல் இயக்கமல்ல; மக்கள் இயக்கம். பத்திரிகை காரசாரமாக இருந்தது. கொஞ்சம் கூட வளைந்து கொடுக்கவில்லை. முதன் மந்திரி பட்டம் தாணுபிள்ளை தமிழர் எதிர்ப்பு வெறியர். தன் அரசு இயந்திரங்களைக் கொண்டு பலதடவை மிகக் கடுமையாகத் ‘தினமலர்’ இதழை நெருக்கினார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். . . முதன் மந்திரியாகிய அவரே பல தடவை ஆபீசுக்கு வந்து எச்சரித்ததும் உண்டு. டி.வி.ஆர்., எங்களிடம், ‘தமிழர் பிரச்னைக்காக நாம் எதையும் விட்டுக் கொடுக்கக் கூடாது’ என்று கூறிவிட்டார். நோக்கத்தை விட்டுவிட்டு எந்த நெருக்கடியிலும் விலக அவர் சம்மதிக்கவே இல்லை. அது மட்டுமல்ல, இந்த இயக்கத்திற்குத் தாராளமாகப் பண உதவியும் செய்தார். நான் அறிந்தவரை, தமிழர்களின் இந்த இயக்கத்திற்கு என்.எஸ்.கிருஷ்ணன் அதிகமாக உதவினார். அதற்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் டி.வி.ஆர்., பண உதவி செய்தார். இயக்கத்தில் முழுமையாக இருந்தவன் என்ற முறையில் நான் இதை உறுதியாகக் கூற முடியும். தமிழ் இனப் பிரச்னைக்கு உதவுவது, அதற்காக அதிகமான செய்திகளைத் தேடி எடுத்து வெளியிடுவது என்பதுதான் என் வேலை. ஒரு மாநில அரசை எதிர்த்து அன்றைக்குப் பத்திரிகை நடத்துவது அத்தனை சுலபமல்ல. பணம்தான் முக்கியம் என்றால், பட்டம் அதைத் தாராளமாகத் தந்திருப்பார். மிரட்டலுக்கும் குறைவில்லை. ஆனால், டி.வி.ஆரோ, ‘யாரும் பயப்படத் தேவையில்லை’ என்று, உற்சாகப்படுத்துவார்.
மலையாள அரசியல்வாதிகளை எதிர்க்கும்போது தாட்சண்யம் காட்ட வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் மனம் நோகும் முறையில் எழுதக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அரசியலில் எந்த கட்சிப் பக்கமும் அவர் சாய்ந்ததில்லை.
அரசியல்வாதிகளின் பார்வையில்
அன்று நாஞ்சில் நாட்டில் நடைபெற்ற வீரமிக்க போராட்டத்தில் பல அரசியல்வாதிகள் தமிழகத்திற்கு அறிமுகமாயினர். அவர்கள் மிகப்பெரும் தியாகங்களைச் செய்தவர்கள். அன்றைய இயக்கம், அதில், ‘தினமலர்’ பங்கு பற்றி, இன்றும் கேட்டாலும் உணர்ச்சிப் பூர்வமாக, பெருத்த அபிமானத்துடன், பக்கம் பக்கமாக எழுதத்தக்க அளவு விவரங்களைக் கூறுகின்றனர்.
|
டி.எஸ்.இராமசாமி பிள்ளை
இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் இயக்கம் 1947ல் இருந்து ’56 வரை படிப்படியாக வளர்ந்த மிகத் தீவிரமான காலம். இவ்வியக்கத்தின் மகத்தான பலமே அன்றைக்குத் ‘தினமலர்’தான். அதன் சேவை ஈடு இணையற்றது. ‘தினமலர்’ இராமசுப்பையரின் உறுதியான இதயப் பின்னணியில் அப்பத்திரிகை மட்டும் இல்லையானால், அந்த இயக்கம் என்னாவாகியிருக்கும் என்று நான் இப்பொழுதுகூட எண்ணிப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
திருவனந்தபுரம் அன்றைக்குத் தலைநகர். அந்தக் தலைநகரிலிருந்தே இப்படிப்பட்ட ஒரு பத்திரிகையை நடத்துவது, அதுவும் அரசுக்கு எதிராக பலமான குரல் கொடுக்கும் வகையில் ஒரு பத்திரிகையை நடத்துவது என்ற முடிவுக்கு அவர் வந்தார் என்றால், அதற்குச் சாமான்ய தைரியம் போதாது. உடம்பெல்லாம் பெட்ரோலால் நனைத்துக்கொண்டு தகதகவென எரியும் இரும்புத் தீ வளையத்திற்குள் பாயும் சாகசச் செயல்தான் அது. துப்பாக்கி பேசத் தொடங்கியாச்சு; கைதுக்கும் குறைவில்லை. போலீஸ் கட்டவிழ்த்து விடப்பட்டது. எது, எப்போது, எப்படி நடக்கும் என்று யாராலும் கூற முடியாத நிலை. அப்போதும் தன் நிலையை விட்டுக் கொடுக்காமல் நின்ற தீரர் இராமசுப்பையர்.
பத்திரிகைக்கு அரசுத் தரப்பில் கடுமையான நெருக்கடிகள். அதுபற்றி என்னிடமோ, சட்டமன்றத்தில் தமிழர்களுக்காகப் போராடிய தலைவர்களிடமோ அவர் கூறி, எந்த உதவியும் கேட்டதில்லை. அதுமட்டுமல்ல, இயக்கத்தை வெற்றிகரமாக்க தாராளமாகப் பணத்தையும் செலவு செய்தார். இப்பொழுது மீண்டும் ஓர் உண்மையைச் சொல்லலாம் . . . எந்தவிதத்திலும் இராமசுப்பையர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. பட்டம் கூட அதுபற்றிச் சிந்தித்து வந்தார். அப்படி ஏதாவது ஒன்று நடந்தால் பெரும் கிளர்ச்சி வெடிக்கும் என் பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட பின்னரே அந்தக் கெட்ட எண்ணத்தை அவர் கை விட்டார்.
நாங்களெல்லாம் கைதானோம். அதுபற்றி எல்லாம் பட்டத்திற்குப் பயம் வரவில்லை. பட்டம், ஒரு விளையாட்டாக எண்ணி அதைச் செய்தார். இராமசுப்பையரைக் கைது செய்வது என்பதைக் கை விட வேண்டியது இருந்ததென் றால் இராமசுப்பையர், ‘தினமலர்’ இரண்டின் மீதும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் எத்தனை பாசம் அல்லதுவெறி வைத்திருக் கின்றனர் என்பதைப் பட்டத்தால் உணர்ந்து கொள்ள முடிந்திருக் கிறது. அவரால் துப்பாக்கியால் சுட முடிந்தது. ஏராளமான பேரைக் கைது செய்ய முடிந்தது. ஆனால், இராமசுப்பையரைக் கைது செய்யவோ, அவரது பத் திரிக்கையின் குரலை ஒடுக்கவோ முடியவில்லை. இப்போது, இராம சுப்பையர் பற்றி இதைப் படிப்ப வர்களுக்குப் புரிந்திருக்கும்.
அவர் ஒரு பெரும் சக்தி, நியாயமும், உண்மையும், அசாதாரண மான நேர்மையும் அவரது பத்திரி கைக்குக் கிடைத்துள்ள கேடயங்கள். தமிழ் மக்கள் அபிமானம் அவரது போர்வாள். இதுதான் யதார்த்த உண்மை. கடைசியாகப் பட்டத்தால் செய்ய முடிந்தது, அரசாங்க விளம்பரங்களைத் ‘தினமலர்’ இதழுக்குக் கொடுக்காமல் தடை செய்தது ஒன்றுதான். இந்தப் பணத்துக்கு அவர் ஒன்றும் ஏங்கி நிற்க வில்லை; எதிர்பார்த்ததும் இல்லை. ஏனெனில், ஒரு லட்சிய வெறியோடு பத்திரிகை நடத்த முன் வந்து விட்டார். அப்புறம் எப்படி இதற்காக அவர் ஏங்கி நிற்க முடியும்... ‘தினமலர்’ இதழுக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தம் பற்றி நான் சட்டசபையில் கேட்டேன். பட்டம் தாணுப்பிள்ளை, தனக்கு எதுவும் தெரியாதென்று சட்டசபையில் கூறினார். இதற்குச் சட்ட மன்றக் குறிப்புக்களே சாட்சிகளாகும்.
|
பி.ராமசாமி பிள்ளை
திருவிதாங்கூர் ராஜ்யத்திற்குட்பட்ட காங்கிரசின், மக்களின் பிரச்னைகள் தனியானவை. இவற்றைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல அன்று நாங்கள், ‘திங்கள்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தோம். ஆனால், அது அவ்வளவுதூரம் மக்களிடம் செல்லவில்லை. ‘தினமலர்’ வந்த பின்னர்தான், ஒரு விறுவிறுப்புடன், அந்த இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது. ‘தினமலர்’ தமிழர் இயக்கத்தின் தூணாக விளங்கியது. இராமசுப்பையர் எளிமையான சுபாவம் உள்ள பலமான மனிதர். அவர் உண்மையை மட்டுமே எழு துவார். அது ஒன்றே அவருடைய பத்திரிகையின் விசேஷம். அன் றைக்கு மலையாளப் பத்திரிகை கள் எங்களைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் எழுதி வந்த காலம். அந்தப் பத்திரிகைகள் மிகவும் வளர்ச்சி பெற்றிருந்த காலம். திருவிதாங்கூர் - கொச்சி யில் வாழ்ந்த தமிழர்கள் கூட அன்று மலையாளப் பத்திரிக்கை தான் படிப்பர்.
இந்தக் கட்டத்தில் தமிழர்களி டையே உண்மையைச் சொல்ல ஒரு துணிச்சல் வேண்டியிருந்தது. இன்னும் சொல்லப் போனால், மலையாளிகளிடையே கூட தமி ழர்களின் உண்மையான பிரச்னை கள் என்னவென்பதைத் ‘தினமலர்’ வந்த பின்னரே சொல்ல முடிந்தது. இவ்வாறு உண்மைகளை ஆதாரங் களுடன் துணிந்து எழுதி, ‘தின மலர்’ பலம் பெற்ற பிறகு, மலை யாளப் பத்திரிகைகளும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது. கன்னியா குமரி மாவட்டப் பிரச்னையில் ஏராள மான தமிழர்கள் வாழ்ந்த தேவிகுளம், பீர்மேடு பகுதியும் சேர்ந்ததே கன்னியாகுமரி மாவட்டம் என்பது ஒரு கோரிக்கை. இந்தக் கோரிக்கையை ஏராளமான ஆதாரங் களுடன் டி.வி.ஆர்., தமது பத்திரிகையின் மூலம் வலியுறுத்தி எழுதினார்.
இதுபற்றிப் பேச்சு வார்த்தை நடத்த, நந்தானியல், குஞ்சன் நாடார், நான் மூவரும் டில்லிக்குப் போய் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலைச் சந்தித்துப் பேசினோம். மொழிவழி மாகாணங்கள் அமையும் போது இந்தப் பிரச்னையைக் கவனிப்பதாகப் படேல் எங்களிடம் உறுதி கூறினார். பின்னர் இதுபற்றி ஆய்வு நடத்தப் பணிக்கர் கமிட்டி அமைக்கப் பட்டது. கமிட்டி, ‘தேவிகுளம் பீர்மேடு தோட்டப் பகுதிகளில் மதுரை மாவட்டத் தமிழ்க் கூலிகள்தான் வாழ்கின்றனர்; நிரந்தரமான வர்கள் இல்லை. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதியைத் தமிழ்நாட்டுடன் இணைக்க முடியாது’ என்று கருத்து வெளியிட்டது. இதை மிகப்பலமாக, ஆய்வுகளுடன், கடுமையாக எதிர்த்து, தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டுடன் சேர வேண்டும் என்று ஆதாரங்களுடன், ‘தினமலர்’ எழுதியது.இதேசமயம் செங்கோட்டைப் பகுதியை இரண்டாக்கி ஒரு பகுதியைக் கேரளாவுடன் இணைக்க முடிவு செய்தனர். ‘மதுரை மாவட்டத்துக்காரர்கள் குடியேறிய பகுதி தேவிகுளம், பீர்மேடு என்றால், செங்கோட்டையிலும் மலையாளிகள் குடியேறியவர்கள் தானே’ என்று மிகச்சரியான கேள்வியை டி.வி.ஆர்., எழுப்பினார்.
ஆனால், அன்றைய தலைவர்கள், நான் அவர்களை யார் என்று இன்றைக்குப் பெயர் சொல்லி வாதிக்கத் தயாராக இல்லை. ‘செங் கோட்டையில் கொஞ்சம் கேரளாவுடன் போனால் என்ன கெட்டுப் போச்சு? தமிழ்நாடு ரொம்பப் பெரிசு. கேரளா மிகவும் சிறியது. சிறிய பகுதியை நாம் விட்டுக் கொடுப்பதினால் தமிழ்நாடு குறைந்து விடாது’ என்று ஒரு புதுமையான வாதத்தைக் கூறினர். போராட்டத் தலைவர்களாகிய நாங்கள் ஒன்றைப் புரிந்து கொண்டோம். மத்தியிலும், தமிழ்நாட்டுக் காங்கிரசிலும், கேரளாவுக் குத்தான் செல்வாக்கு என்பதே அந்த உண்மை. கிடைத்தவரை போதும் என்ற நிலை இங்கும் வந்துவிட்டது. எங்களுக்கு அத்தனை கஷ்டங்களும், நெருக்கடிகளும் இருந்தன.
தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை முழுவதுமான ஒரு குமரி மாவட்டம் உருவானால் அது தமிழ்நாட்டுக் காங்கிரசின் பிரதான இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்று தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்கள் மனத்திற்குள் பயந்தனர். ஆனால், எப்படியும் இப்பகுதிகள் உள்ளிட்ட குமரி மாவட்டம் அமைந்தேயாக வேண்டுமென்று, பொருளாதாரம், அரசியல்,வரலாறு, நாகரிகம், பண்பாடு, மொழி எல்லா அம்சங்களையும் தெளிவாக்கித் ‘தினமலர்’ மட்டுமே விடாமல் போராடி வந்தது.
டி.வி.ஆர்., காட்டிய அந்த உறுதியை நாங்கள் தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இன்று இம்மாவட்டத்தால் உயர்ந் திருக்கும். நடந்ததவற்றைப் பேசிப் புண்ணியம் இல்லை. குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைந்ததில் இம்மாவட்டத்து மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. ஆனால், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை விட்டு விட்டு, ஒரு சிறிய மாவட்டம் வந்ததில் கடைசி வரை டி.வி.ஆருக்குச் சந்தோஷமே கிடையாது.
கிராமங்களின் வளர்ச்சியிலும், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சியிலும் அதிக அக்கறை அவருக்கு உண்டு. மிகப் பொறுப்புள்ள அரசியல் தலைவரைக் காட்டிலும் இதில் அவர் ஓயாமல் கவலைப் படுவார். அவர்களது குரலாவே, ‘தினமலர்’ இருக்கும். இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல முன்னேற்றங்கள் வந்திருக்கிறதென் றால், ‘தினமலர்’ மூலம் அவர் நடத்திய விடாப்பிடியான போராட்டங்களே காரணம்.
|
டாக்டர் நூ.அ.நூர் முகம்மது
தாய்த் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்ததோடு பலர் ஒதுங்கிவிட்டனர் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டனர். அந்தப் போராட்ட காலத்தை விட, அதன் பின் உள்ள பணி மிக அதிகமானது என்பதைப் புரிந்து கொண்டு இன்று வரை, ‘தினமலர்’ எழுதி வருகிறதென்றால் அதுதான் டிவி.ஆர்., காட்டிய வழியாகும். அது சிரஞ்சீவித்தன்மை பெற்றது. ‘தினமலர்’ பற்றித் தெளிவாகக் கூற வேண்டுமானால் இப்படிக் கூறலாம்: கன்னியாகுமரி மாவட்டத்தையும், இங்கு வாழும் தமிழர்களையும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததே, றிதினமலர்’தான்.
அன்றைக்கு அது சாதாரணப் பணியல்ல. டி.வி.ஆர்., ஆகட்டும், அவருடன் பணியாற்றிய ஆசிரியர் குழுவினர், ஏன், ‘தினமலர்’ கன்னியாகுமரி மாவட்ட நிருபர்கள் எவ்விதமாக நெருக்கப்பட்டனர் என்பதை நாங்கள் அறிவோம். அவற்றை இன்று கூறினால் நம்பவே முடியாத கதை போல இருக்கும்.
போராட்டம் முடிந்து வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் நாம். அந்தச் சமயத்தில் கொஞ்சம்கூடத் தாமதியாமல், ‘தினமலர்’ பத்திரிகையைத் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லைக்கு மாற்றினார் டி.வி.ஆர்., திருவனந்தபுரம் அரசு எதிர்ப்புக்கு அஞ்சியா? எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி டி.வி.ஆருக்கு எப்போதும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் அன்றைக்கு எங்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகமே, ‘தினமலர்’ அலுவல கம்தான். ஆனால், தமிழ்நாட்டின் கவனத்தையும், தமிழ் மக்களின் கவனத்தையும், புதிதாக இணைக் கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின்பால் திருப்புவதற் குத், ‘தினமலர்’ தமிழ்நாட்டில் இருப்பதே நல்லது என்று தனக்கே உரிய முறையில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் டி.வி.ஆர்., இது ஒரு சிறந்த அரசியல் முடிவு.
பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்து மக்களுக்கு ஆரல் வாய்மொழியைத் தாண்டி விட் டால் ஏதோ அன்னிய நாட்டிற் குள் போவது போல இருக்கும். நடை, உடை, பாவனை நாகரிகம், உணவு எல்லாம் தனி. கேரளம் எங்களுக்கு இயல்பாக இருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக, கேரள அரசு எங்களை இரண் டாம்தரக் குடியினராக நடத்தி யது. தமிழ் மக்களுக்கோ எங் களைத் தெரியாது. எத்தனை விசித் திரமான நிலையில் நாங்கள் இருந் தோம் பாருங்கள்!இந்தச் சூழ்நிலையில், ‘தின மலர்’ கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்குத் தமிழக மக்களிடம் ஓர் அங்கீகாரம் வாங்கிக் கொடுத் தது. ஒரு பத்திரிகையால் இவ்வளவு பெரிய சாதனையைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தியவர் டி.வி.ஆர்.,
|
டி.டி.டானியல்
அன்றைய நிலைமை என்ன தெரியுமா? நாஞ்சில் நாட்டின் மக்களை தமிழகத் தமிழர்கள் யாரும் தமிழர் என ஒப்புக்கொண்ட தில்லை; தமிழ்நாட்டுத் தலைவர்களையும் உள்ளடக்கியே இதைச் சொல்கிறேன். இதை முதலில் உடைத்தெறிய வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் டி.வி.ஆருக்கு இருந்தது. அவருக்கு கன்னியாகுமரி மாவட்டத் தமிழர்களை வெகு வேகமாக முன்னுக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற பேராசையே இருந்தது. இயக்கம் வளர்ந்தது என்றால், தலைவர்களை மட்டும், அவர் களது பேச்சுக்கள், படங்கள் இவற்றை மட்டுமே, போட்டுப் பத்திரிகை நடத்தவில்லை. தொண்டர் களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகள் வரும். இதனால், தொண்டர்கள் நாளுக்கு நாள் பெருகினர்.
காலையில், ‘தினமலர்’ வரட் டும் என்று அதிகமான மக்கள் காத்திருப்பர் காரணம்: நேற்று எங்கெங்கு போலீஸ் கெடுபிடிகள் நடந்தன? யார் யார் எல்லாம் கைது செய்யப்பட்டு எந்தெந்த ஜெயிலுக்கு கொண்டு போகப்பட் டுள்ளனர் என்ற எல்லா விவரங் களையும் சேகரித்துத் ‘தினமலர்’ தரும். தனியார் சத்தியாக்கிரகம், மறு நாள் யார் தலைமையில், எங்கு நடக்கும் என்று முதல் நாள் மாலையில் முடிவாகும். சத்தியாக் கிரத் தலைவர்கள் காலையில் குறிப்பிட்ட இடத்திற்குப் போனால் விரைவாக மக்கள் கூடி இருப்பர். ஏனெனில் அதிகாலையி லேயே, ‘தினமலர்’ தகவல் கொடுத்துவிடும்.
யார் யார் எல்லாம் மறியலில் ஈடுபட்டுச் சிறைக்குப் போனார்கள் என்ற, ‘ஸ்பெஷல் சப்ளிமென்ட்’ வரும். இதனால், தேவிகுளம், பீர் மேடு, செங்கோட்டை இங்கெல்லாம் எங்களுக்கு ஆதரவு பெருகியது. மூன்று மாதம் பயங்கரக் கொடுங்கோலாட்சி; துப்பாக்கிச் சூடு. 17 பேர் இறந்ததாக அரசே கூறியது. அதில் காணாமல் போன பலரைப் பற்றி இன்று கூடத் தகவல் இல்லை. இந்தச் சூழ்நிலையில் டி.வி.ஆர்., தமது பத்திரிகை ஆபீஸ் ஊழியர்கள், ஆசிரியர்கள், நிருபர்களைக் கூப்பிட்டு, ‘போராட்டம் உச்ச கட்டத்திற்குப் போயாகி விட்டது. நம்மையும் சிறைக்குள்ளும் தள்ளலாம். துணிந்து இருக்க வேண்டும். உண்மையை எழுதுங்கள். வருவது வரட்டும்’ என, ஊக்கம் கொடுத்தார். இந்தத் துணிவு யாருக்கு வரும்.
இவ்வளவு பெரிய போராட்டம் நடைபெற்றபோதும், நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த மலையாளிகள் யார் மீதும் ஒரு சிறு துளி துவேஷம் கூட இல்லை. அவர்கள் சொத்து எதுவும் நாசம் செய்யப் படவே இல்லை. இந்தப் பண்பாட்டைச் சாதாரண மக்களிடம் உருவாக்குவதில், ‘தினமலர்’ மிகக் கவனமாக இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு தமிழன்கூட மன்னிப்புக் கேட்டு ஜெயிலில் இருந்து வெளிவர வில்லை. அன்று தனக்கிருந்த செல்வாக் கால் தவறான கண்ணோட்டத் தில், ‘தினமலர்’ ஒரு சிறு செய்தி வெளியிட்டிருந்தாலும், போராட் டம் பல வழிகளில் போய் நாச மாகி இருக்கும். மதத்தின் பெயரா லும், ஜாதியின் பெயராலும், மொழியின் பெயராலும், உணர்ச்சிவசப்பட்ட சாதாரண மக்களைத் திசை திருப்புவது மிகச் சுலபம். அம்மாதிரி எண்ணம் எங்கள் மாவட்டத்து மக்களிடம் இல்லை. அதைக் கட்டிக் காப் பாற்றியது டி.வி.ஆரின் பத்திரிகை தர்மம். தமிழகத்துடன், தமிழர்களா கிய நாங்கள் இணைய நடந்த இந்த மாபெரும் போராட்டம், அதன் வெற்றிகள், ‘தினமலர்’ மற் றும் டி.வி.ஆர்., இல்லாமல் சாத் தியப்பட்டிருக்காது என்கிறார் டானியல்.
|
குப்புசாமி
இன்றைக்குத் தமிழ், தமிழர், தமிழர் இனம் என்றெல்லாம் பிர மாதமாகப் பேசப்படுகிறது. ஆனால், இவற்றுக்காகவே பெரிய போராட்டம் நடைபெற்றது; வெற்றிபெற்ற போராட்டம் அது. போராட்டம் மலையாள அரசு டன் மட்டுமா . . . இல்லை . . . தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுட னும்தான்! வரலாற்றில் பல போராட்டங்கள் வரும். அப்போது பத்திரிகைகள் ஏதாவது ஒருபக்கம் நின்று குரல் கொடுக்கும். ஆனால், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவே பத்திரிகையைத் தொடங்குவது என்பது சாதாரணமான விஷயமா . . . அன்று முதல்வர் பட்டத்திடம் துப்பாக்கி இருந்தது. அது தமிழர்களை மட்டும்தான் சுடும். அந்தப் பட்டம் ஆட்சி புரியும் தலைநகரில் இருந்தே தமிழர் உரிமைக்காக பத்திரிகை நடத்தலாம் என்று கற்பனை யாவதுசெய்ய முடியுமா . . .
‘பொதுக் கூட்டங்களில் பேசக்கூடாது’ என, எனக்கும் ஜீவாவிற்கும் ‘வாரன்ட்’ உண்டு. எங்கள் இருவரது இயக்கமும், ‘அண்டர்கிரவுண்ட்’ இயக்கம். நாங்கள் அப்போதும் பெரிய பெரிய பொதுக் கூட்டங்களில் பேசவே செய்தோம்; தெரிந்தால் துப்பாக்கிச் சூடுதான். எந்த தைரியத்தில் பேசினோம்? மக்கள் அரண்தான் அந்தத் துணிவைத் தந்தது. இந்த மக்கள் அரணை எங்களுக்கு உருவாக்கித் தந்தவர் டி.வி.ஆர்.,
எந்த நெருக்கடியிலும் அவர் யாரையும் காட்டிக் கொடுத்ததே இல்லை. இயக்கத்தில் பலர் தலைமறைவானவர்கள். அவர்கள் எங்கே உள்ளார் என்பது அவருக்குத் தெரியும்; தலைமறைவானவர் களின் அறிக்கை பத்திரிகையில் வரும். அப்போது, ‘தினமலர்’ அலுவலகத்திற்குள் போலீஸ் கெடுபிடி எப்படி இருக்கும் பாருங்கள். அதைக் கண்டு அவர் அஞ்சியதே இல்லை.
டி.வி.ஆர்., குள்ளம்; ஆஜானுபாகுவான உடற்கட்டு கொண்டவரல்ல. நான் பழகின மட்டும் அவர் உரக்கப்பேசிக் கேட்டதில்லை. பூனை போல இருப்பார். அவரை முழுவதும் தெரியாதவர் அவரை மகா சாது என்றே முடிவு செய்வர். ஆனால், அவர் இரும்பு மனிதர். அவரது இதயம் மிகவும் கடுமையான உருக்குப் போன்றது. மனோ தைரியத்திற்கு யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமானால் நான் டி.வி.ஆரைத்தான் காட்டுவேன். கவலை, சலனம், பயம், சமயத்திற்குத் தக்கபடி சாய்வது போன்றவை அவரை நெருங்கியதே இல்லை. சாதனைக்காரர், உணர்ச்சிவசப்படவே மாட்டார். மிகுந்த சகிப்புத்தன்மை அவரிடம் உண்டு. அந்த மாபெரும் இயக்கத்தின் சூத்திரதாரி, ராஜதந்திரி அவர்தான். தெய்வமே ஆனாலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் சிறப்பாக ஒரு ஆயுதம் உண்டல்லவா . . . ‘தினமலர்’ இந்தச் சூத்திரதாரியின் ஆயுதம். இதற்கு மேல் அவரை நினைத்தால் நான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்.
அனந்தராமன்
நாகர்கோவில் நகரசபைத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்த அனந்தராமன் கூறுகையில் . . . பத்திரிகைத் தொழில் சிக்கல் பிடித்த தொழில்; அரசாங்கத்தின் எதிர்ப்புகளும் ஏராளம். படிக்கத் தெரிந்த தமிழர் பலரும் மலையாளம், ஆங்கில பத்திரிகைகளைத்தான் படித்து வந்தனர். அப்படி இருந்தும் ஒரு தமிழ் பத்திரிகையை ஆரம்பித்தது, வியாபார நோக்கத்தில் அல்ல. இவருக்குத் தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டுடன் நாஞ்சில் நாடு இணைவதிலும் தீவிரமான வேட்கை இருந்தது. இதன் காரணமாக இவரது அச்சகத்தைக் கொளுத்த திட்டமிட்டனர். எனக்கு அது நன்றாகத் தெரியும். டி.வி.ஆர்., அதற்கெல்லாம் பயப்படவோ, கவலைப் படவோ இல்லை. பொதுவாக அவரது குணம் அது. அவரை யாரும் பயமுறுத்திவிட முடியாது. வெற்றி காணும் வரை எடுத்த பணியை விடவும் மாட்டார்.
நாஞ்சில் நாட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் ஒருவருக்கு ஹைகோர்ட் நீதிபதி பதவியும், மற்றொருவருக்கு டி.எஸ்.பி., பதவியும், ஒருவருக்குப் பப்ளிக் பிராசிக்கியூட்டர் பதவியும் கொடுத்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் பேரம் பேசி முடித்தா யிற்று. நெருங்கிய சிலருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் இது. மற்ற தலைவர்கள், ‘காரியம் கெட்டுப் போச்சு . . . இப்போது நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே’ என்று அலறிக் கொண்டிருந்தனர். எந்த யோசனையும் தென்படவில்லை. ஆனால், ‘நாளையே இது நடக்கப் போவதில்லை . . . பார்த்துக் கொள்ளலாம்; பதற்றப்பட வேண்டாம்’ என்று மிக நிதானமாக டி.வி.ஆர்., கூறினார். அடுத்த நாள் முதல், இந்த ஊசலாட்டத் தலைவர்களின் செய்திகள் பெரிய படங்களுடன் பெரிய தலைப்புக்களில், ‘தினமலர்’ இதழில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியது. பெரிய பதவிகள் கிடைக்கும் என்ற பேராசையில், கொள்கைகளையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஓடத் துடித்த பிரமுகர்களை மடக்கிப் பிடித்து, நிலையாக இயக்கத்தில் இருக்கச் செய்த டி.வி.ஆரின் ராஜதந்திரம் அன்று ஒரு ரகசியம். அதை இன்று கூறலாம் அல்லவா?
ஊசலாட்டத் தலைவர்களின் பேச்சுக்கள், படங்களுடன் பெரிது பெரிதாக, ‘தினமலர்’ இதழில் வெளிவரத் தொடங்கியது. அவர்களைத் தினம் கண்டு பேட்டிகள், அறிக்கைகள், செய்திகள் என தினம் வெளியிடச் செய்தார்.
இந்த விளம்பரம், சபலத்திலிருந்த தலைவர்களைக் கட்டிப் போட்டது. இந்தச் செய்திகளைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் நுபற்றுக்கணக்கானவர், இவர்கள் வீடுகளுக்குச்சென்று வாழ்த்தத் தொடங்கினர். இப்படிப்பட்ட விளம்பரங்களால் இவர்கள் அரசு வேலைக்குப் போகலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, உண்மையிலேயே அரசியல் இயக்கத் தலைமைக்கு வந்துவிட்டனர். இது டி.வி.ஆரின் மிகப் பெரிய ராஜதந்திரமாகும்.
|
நேசமணி
நறிதிங்கள்றீ என்ற பத்திரிகையை நானும் நடத்தி வந்தேன். நாம் நம் காரியங்களையும் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் எடுத்துக் காட்ட, பத்திரிகை மிகமிகத் தேவை. அந்தப் பத்திரிகை (திங்கள்) வைத்து நடத்தியதில் பலப் பல கஷ்டங்கள். அவற்றைச் சகிக்க வேண்டி வந்தது. ‘தினமலர்’ பத்தி ரிகை நாஞ்சில் நாட்டிற்கு, தமி ழகத்திற்குச் செய்த சேவை கொஞ்ச நஞ்சமா . . . டி.வி.ஆர்., எத்தனைத் துணிச்சலுடன் செயல் பட்டார்.
தினமலர் பட்டபாடு
தமிழர்களின் இன உரிமைக்காக கன்னியாகுமரி மாவட்டத் தில் நடைபெற்ற போராட்டத்தில், ‘தினமலர்’ இதழுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும், அனுபவங் களையும் டி.வி.ஆர்., கூறியது உண்டு. முதன் மந்திரி பட்டம் தாணுப் பிள்ளை தனது தவறான கண்ணோட்டத்தில் தமிழர்கள் மீது பாய்ந்தார் என்பது உண்மை. அவ ரால் சொல்ல முடியாத துன்பத் திற்குள்ளான டி.வி.ஆரோ அவரை அப்படி விமர்சிக்கவில்லை. இது தான் டி.வி.ஆரிடம் காணப்படும் தனிப்பண்பு. இனி டி.வி.ஆரிடமே அது பற்றிக் கேட்கலாம் . . . பட்டம் தாணுப்பிள்ளை 1954ம் வருடம் முதல் அமைச்சராக இருந்தார்; அவர் நல்லவர்; பழைய காங்கிரஸ்வாதி. தமிழர்களிடம் உண்மையிலேயே நட்பு உள்ளவர். தமிழர்கள் பிரிந்து போவதில் அவருக்கு விருப்பம் இல்லை. ஏதோ சில அரசியல்வாதிகளை ஜெயிலில் தள்ளிவிட்டால் அந்த இயக்கம் அடங்கிவிடும் என்று நினைத்து அடக்குமுறையில் ஈடுபட்டார்.
இரப்பர் பந்தை ஓங்கி அடித்தால் எப்படி உயரத்தில் எழும்புமோ அதுபோல, அடக்குமுறையின் விளைவாக மிகவும் வலுப்பெற்றது இயக்கம். ‘தினமலர்’ முழுவதுமாக இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. அப்பொழுது நிதி அமைச்சராக பி.எஸ்.நடராஜ பிள்ளை இருந்தார். அவர் எனது நண்பர். அவர் என்னிடம், தென்திருவிதாங்கூரில் நடக்கும் பிரிவினை இயக்கம் நியாயமற்றது என்றார். இப்பொழுது தமிழர்களுக்கு என்ன குறை உள்ளது என்றும் கேட்டார். ‘தினமலர்’ அந்த இயக்கத்திற்குப் பிரசாரம் மூலம் மிகுந்த பலத்தைக் கொடுக்கிறது என்றும் சொன்னார். இந்த ஆதரவுக் கொள்கையைத் ‘தினமலர்’ கைவிட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் பத்திரிகை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மறைமுகமாகச் சொன்னார்.
அவர்களிடம் ஒரு சிறு தவறான எண்ணம் இருந்தது. இந்த இயக்கம் நாடார் சமுதாய மக்களால்தான் நடத்தப்படுகிறது என்றும், மற்றவர்கள் அதில் ஈடுபடவில்லையென்றும் நினைத்தனர். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. அடக்குமுறை தலைவிரித்தாடியது. வழக்கறிஞர் குஞ்சன் நாடாரை வேனில் ஏற்றும்போதே போலீஸ்காரர்கள் நன்றாக அடித்தனர். அந்த அடியின் வேகம் தாங்க முடியாமல் அவர், ஆயுள் காலம் முழுவதும் துன்பப்பட்டு, அதில் ஏற்பட்ட நோயாலேயே இறந்தார். சென்னையின் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்த இயக்கத்திற்கு எதிராகப் பல செய்திகள் வெளியிட்டு, பலத்த தலையங்கங்களும் தீட்டின. மக்கள் கோபமடைந்து மதுரையில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல நாளிதழைக் கட்டோடு வாங்கி, அப்படியே எரித்தனர். பத்திரிகை வேன் ஊருக்குள் வர முடியாத நிலை உருவானது. அதன் பிறகு அவர்கள் செய்தியில் கொஞ்சம் மாற்றம் செய்து, சில செய்திகளை இயக்கத்திற்கு ஆதரவாகப் வெளியிட்டனர்.
ஜெயிலில் இருந்தவர்களைத் தவிர, அநேகர் தென்திருவிதாங்கூரை விட்டு வெளியேறி, திருநெல்வேலி, மதுரை முதலான இடங்களுக்கும் சென்று ஓட்டலில் தங்கி இருந்தனர். நாஞ்சில் நாட்டில், யார் கையிலாவது, ‘தினமலர்’ நாளிதழ் இருந்தால், அவர்களையும் போலீசார் அடித்தனர். பனையேறும் தொழிலாளி, ‘தினமலர்’ இதழை வாங்கி மடித்துத் தன் இடுப்பில் வைத்துக் கொண்டு, பனையின் உச்சியில் போய் உட்கார்ந்துகொண்டு படிப்பார். பதநீர் விற்கும் கிழவி, ‘தினமலர்’ இதழை வாங்கி சேலைக்குள் மறைத்து வைத்துக்கொள்வாள். சுற்றுமுற்றும் பார்த்தப் பின், தொல்லை இல்லை என்று கண்டபின், யாரையாவது ஒரு வாலிபரைக் கூப்பிட்டுப் படிக்கச் சொல்லிக் கேட்பாள். சென்னை அரசியல் தலைவர்கள் எவரும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை.
திருவனந்தபுரத்தில் இருந்து, ‘தினமலர்’ தைரியமாக ஆதரவு கொடுத்தது. ஒருநாள் திருவனந்தபுரத்தில் நிறைய ரவுடிகள் சேர்ந்து அங்கு சாலை பஜாரில் உள்ள நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் களின் கடைகளைச் சூரையாடினர். ‘தினமலர்’ அலுவலகத்தையும் கொளுத்த வேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டதாகத் தகவல் வந்தது. அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு தமிழர். வேண்டிய உதவிகளை அவர் செய்தார். இப்படி ரவுடிகள் நெருக்கடி ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், ‘தினமலர்’ இதழின் உத்தேசமாக 100 நாள் இதழ்களை சட்ட இலாகாவிற்கு அனுப்பி, இதில் இருக்கிற விஷயங்களை வைத்துத் ‘தினமலர்’ ஆசிரியரைக் கைது செய்து, பத்திரிகையையும் முடக்க முடியுமா என்று ஆலோசனை செய்தனர். அந்த இலாகாவினரோ, ‘இது எதையும் வைத்து வழக்குப் போட முடியாது; போட்டாலும் ஜெயிக்காது’என்று கருத்து தெரிவித்து விட்டனர்.
தமிழர் போரட்டம் வெற்றி பெற்றது. பட்டம் தாணுப்பிள்ளை மந்திரிசபை ராஜினாமா செய்தபின் பனம்பள்ளி கோவிந்தமேனன் தலைமையில் புதிய மந்திரிசபை அமைந்தது. அதில் தமிழர்களின் சார்பாக சிதம்பர நாடார் அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தமிழர்கள் போராட்டம் வெற்றியடையவும், பட்டம் தாணுப் பிள்ளை மந்திரிசபை ராஜினாமா செய்யவும், ‘தினமலர்’ பெரும் காரணமாக இருந்தது; இதைத் தற்பெருமையாகச் சொல்லவில்லை. கன்னியாகுமரியில் யாரிடம் கேட்டலும் இதைச் சொல்லத் தயங்க மாட்டார்கள். மொழிவழி மாநில அமைப்புக்காகச் சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் ஒரு கமிட்டி இயங்கியது. படேல் கமிட்டி, எந்த ஒரு பகுதியும் பிரிந்து ஒரு மாநிலத்தில் இணைவதாக இருந்தாலும், ஒரு தாலுகாவிற்குக் குறைந்த பகுதியாக அது இருக்கக்கூடாது என்பது நிபந்தனை. அதாவது ஒரு தாலுகாவை எக்காரணம் கொண்டும் பிரிக்கக் கூடாது. ஆனால் பனம்பள்ளி தமது திறமையா லும், தந்திரத்தாலும், கே.எம்.பணிக்கர் உதவியுடன் செங்கோட்டைத் தாலுகாவை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியைக் கேரளத்துடன் இணைத்தார். தமிழக மந்திரிசபை இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக் காமல் மவுனம் சாதித்துவிட்டது.
இந்த இயக்க காலத்தில் எனக்கு வந்து மோதிய பிரச்னைகள் ஏராளம். ஒன்றை மட்டும் மாதிரிக்குச் சொல்கிறேன் . . . கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைய மூன்று ஆண்டுகளாகப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு அபசுரம் கேட்டது. இயக்கத்தில் பணியாற்றிய சிலருக்குத் திருவனந்தபுரத்தில் அமைச்ச ராக வர ஆசை வந்துவிட்டது. அதற்காக அவர்கள் திருவிதாங்கூர் தமிழ்நாட்டுக் காங்கிரசின் பொதுக்குழுவைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற முயன்றனர். இதற்குத் கேரள அமைச்சர்களின் மறைமுக ஆதரவு உண்டு. பொதுக்குழுவை நாகர்கோவிலில் கூட்டினால், எல்லா உறுப்பினர்களும் வந்து, மெஜாரிட்டி கிடைக்காமல் செய்து விடுவர் என்ற அச்சத்தில், கூட்டத்தைச் செங்கோட்டையில் கூட்டினர். எல்லாரும் செலவு செய்து செங்கோட்டைக்கு வரமாட்டார்கள் என்பது அவர்கள் கணக்கு. இதற்குப் போட்டியாளர்கள் பெரும் பாடுபட்டு நிறையப் பேரைத் திரட்டிச் செங்கோட் டைக்குப் போய்விட்டனர்.
இது தெரிந்ததும், உடனடியாக, வழக்கறிஞர் ரசலையா, ஆர்.கே. ராம் தலைமையில் எதிர்கோஷ்டியினர், ஐந்து பேரை செங்கோட்டை செல்ல பணித்தேன், அவர்களோ, ‘டாக்சியில் செல்ல பண மில்லையே . . . இன்னும் 15 நிமி டத்தில் கிளம்பினால், மாலை 5 மணிக்குள் சென்றுவிடலாம். அவர்கள் திட்டத்தைப் பொடிப் பொடியாக்கிவிடலாம்’ என்றனர். உடனே, டாக்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன். இரவு 7 மணிக்கு பொதுக்குழுக் கூட்டத் தின் முடிவு பற்றி தந்தி மூலம் நாகர்கோவிலுக்கு செய்தி வந்தது. ஆதரவுத் தீர்மானம் ஓர் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனது. வழக்கறிஞர் ரசலையா மறுநாள் செங்கோட்டையில் நடந்த கதைகளையெல்லாம் விரி வாகச் சொன்னார்.
ஏ.குஞ்சன் நாடார் நெய்யாற்றங்கரைத் தாலுகா திருபுரம் என்ற ஊரில் 1911ம் வருடம் பிறந்த குஞ்சன் நாடார், சிறந்த வழக்கறிஞர். தென்திருவிதாங்கூர் தமிழர் போராட்டத் தளபதிகளில் ஒருவர். 1952ல் பாறசாலையில் சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தி.த.நா,. காங்கிரஸ் சட்டசபைக் கட்சிச் செயலாளராகப் பணியாற்றினார். 1954 பொதுத் தேர்தலிலும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். |
1954ல் பட்டம் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் சர்வாதிகாரியாகத் தேர்வு பெற்றார். எட்டு மாதம் கடும் சிறைவாசம். சித்ரவதை. 1962ல் சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தேசபக்தர். ஆக., 19, 1974ல் இவர் காலமானார். |
இதே போல மற்றொரு ரசமான நிகழ்ச்சியும் உண்டு... திருவிதாங்கூர் மகாராஜா தமிழர்களை எப்படியாவது அங் குத் தங்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதற்காக அவ ரது அந்தரங்கச் செயலாளர் வைத்தியநாத ஐயரை விட்டுத் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் களையெல்லாம், குறிப்பாக நேசமணியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தச் செய்தார். ‘தமிழர்கள் அங்கு இருப்பதற்காக முக்கியமான சலுகை வழங்கப்படும்; எந்த அமைச்சரவை வந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவி உண்டு. இதை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். நீங்கள் (தமிழர்கள்) இங்கேயே இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
வைத்தியநாத ஐயர் என்னைப் போனில் கூப்பிட்டு, ‘தமிழர் தலைவர்களிடம் நான் இப்படி சமரசத்திற்காக முயற்சி எடுக்கிறேன். நீங்கள் ஏதாவது செய்திகளைப் போட்டுக் குழப்பிவிடாதீர்கள்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘தமிழர்களுக்கு அப்படி ஓர் ஆசை இருந்தால் நானாகக் கெடுக்க மாட்டேன்’ என்று சொன்னேன். வைத்தியநாத ஐயர், ஒரு நாள் நேசமணியை அவரது வீட்டில் பார்த்துவிட்டுப் போனார். போராட்டத்தில் ஈடுபட்டு, அடி, உதை வாங்கி, ஜெயிலில் இருந்த தியாகி, வழக்கறிஞர் குஞ்சன்நாடார், மறுநாள் ஜெயிலில் இருந்து ஒரு அறிக்கை கொடுத்தது அனுப்பினார். அதில், ‘நாஞ்சில் நாட்டை, கேரளத்துடன் இணைந்தே இருக்க வைக்க சதி நடக்கிறது; உடனடியாக மக்கள் விழித்தெழ வேண்டும்’ எனக் கூறி இருந்தார்.
அந்த அறிக்கையை, ‘திரைமறைவில் சதி’ என்று தலைப்பிட்டு, அடுத்த நாளே வெளியிட்டேன். அச்செய்தி வெளியான உடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. வைத்தியநாத ஐயர் தன்னைச் சந்தித்தது உண்மையானாலும், அதற்குத் தான் சம்மதிக்கவில்லை என்று நேசமணி உடனே அறிக்கை கொடுத்து, அதை வெளியிட வேண்டுமென்று போனில் கூறினார். இதுவும் வெளியானவுடன் பிரச்னை அதோடு முடிந்தது.
ஆனால், வைத்தியநாத ஐயருக்கு நான்தான் கெடுத்துவிட்டேன் என்று ஓர் எண்ணம். அதனால், அவர் தகப்பனார் சுப்பிரமணிய ஐயர் காலம் வரை, திருவனந்தபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு போய்வந்த என்னை ஒரு விரோதி போலப் பாவித்து, இன்றுவரை என்னைக் கண்டால் பேசுவதே இல்லை. என் பெயரில் தவறு உண்டா, இல்லையா என்பதை நாஞ்சில் நாட்டுத் தமிழர் அறிவர்.
Advertisement
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- தமிழகத்தில் 'மெகா' கூட்டணி அமைக்க ஸ்டாலினுக்கு ஆலோசனை: பீஹாரில் தலைவர்கள் வகுத்த வியூகம் பற்றி பரபரப்பு தகவல் நவம்பர் 23,2015
- தமிழக அரசு வழங்கிய மின்விசிறி கர்நாடகாவில் கூவி கூவி விற்பனை நவம்பர் 23,2015
- கர்நாடகா கவர்னரின் 'மசாஜ்' செலவு ரூ.1.72 லட்சம்! நவம்பர் 23,2015
- மதத்துடன் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம்: மலேஷியாவில் பிரதமர் மோடி வலியுறுத்தல் நவம்பர் 23,2015
- அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! நவம்பர் 23,2015
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
No comments:
Post a Comment