Sunday, June 29, 2014

"எழுத்தாளர்களின் வழிகாட்டி தஸ்தயேவ்ஸ்கி'



உலக எழுத்தாளர்களின் வழிகாட்டியாக ரஷிய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி திகழ்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் புகழாரம் சூட்டினார்.

சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலான "கரமாஸவ் சகோதரர்கள்' என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது.
இந்த நாவலை அதன் மூலமான ரஷிய மொழியில் இருந்து எழுத்தாளர் அரும்பு சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலை ரஷிய தூதரக அதிகாரி செர்கேய் எல். கோத்தவ் வெளியிட, கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி. மகேந்திரன் பேசியது:
ரஷிய எழுத்தாளரான தஸ்தயேவ்ஸ்கி உலகப் புகழ் பெற்றவர். அவரது படைப்புகள், உலக எழுத்தாளர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்து பலரது மனங்களை கவர்ந்துள்ளது.

அவர் 130 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய "கரமாஸவ் சகோதரர்கள்' என்ற நாவல் ஏற்கெனவே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்போது அதன் மூல மொழியான ரஷிய மொழியிலிருந்து தமிழில் அரும்பு சுப்பிரமணியனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ்ப் படைப்புலகில் மிகப்பெரிய சாதனையாகும்.

இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தஸ்தயேவ்ஸ்கி எழுதிய இந்த நாவல், உலகில் மிகப் பெரிய அதிர்வை உண்டாக்கியது. மனிதனின் மனசாட்சியை உலுக்கிய இந்த நாவல், தமிழகத்திலும் பலரை கவர்ந்துள்ளது. சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு சமூகம் காரணமா? தனி மனிதன் காரணமா? என்பது குறித்து விரிவாக உரையாடுகிறது இந்த நாவல். இதனைத் தமிழில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றார் மகேந்திரன்.

காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்பிரமணியன், தாரா கணேசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி

Saturday, June 28, 2014

தமிழகத்தில் முதல்முறையாக குரங்குகளுக்கு மறுவாழ்வு மையம்



தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை அருகே வார்பட்டு கிராமத்தில் 125 ஏக்கரில் குரங்குகள் மறுவாழ்வு மையம் அமைக் கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, திருமயம், பொன்னமராவதி பகுதி களில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன. காடுகள் எல்லாம் கட்டிடங்களாக உருமாறிவிட்ட நிலையில், கடும் வறட்சியால் பாதிக் கப்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

இதனால், தமிழகத்தில் மயில்களின் சரணாலயமாக திகழ்ந்த விராலிமலை முருகன்கோயில் பகுதி தற்போது குரங்குகளின் புகலிடமாக மாறிவிட்டது. மேலும் சித்தன்னவாசல், திருமயம் கோட்டை, புதுக்கோட்டை பி.யூ. சின்னப்பா பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களிலும் உணவுக்காக குரங்குகள் முகாமிட்டுள்ளன. 

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆவணங் களைக் கிழித்து எறிவதும், வீடுகளுக்குள் புகுந்து சமைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருள் களை சூறையாடுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டன. இதனால் நிம்மதி இழந்த மக்கள் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.1.20 லட்சத்தில் 37 கூண்டுகள் நிறுவப் பட்டு அதில் சிக்கும் குரங்குகளை அடர்ந்த காடுகளில் கொண்டு விடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனாலும் குரங்குகளின் தொந்தரவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக மாவட்ட ஆட்சியர் மனோகரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குரங்குகளுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட வன அலுவலர் என்.தங்கராஜு தலைமையில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. 


இதன்படி, பிரான்மலை அருகே பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வார்பட்டு கிராமத்தில் கல்தரையான 125 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் காடுகள் அமைக்கவும், குரங்குகளுக்கு எளிதில் உணவு கிடைக்கும் வகையில் கொய்யா, நாவல், நெல்லி, புளி, இலந்தை, சப்போட்டா, சீத்தாப்பழம் போன்ற பழம் தரும் மரக் கன்றுகளை நடுவதும் என்றும் அதைச் சுற்றி சோலார் மின் வேலி அமைக்கவும், தண்ணீர் தொட்டிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குரங்கு களுக்கு கருத்தடை செய்யத் தேவையான வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.50 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார் செய்து ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஒப்புதல் ஓராண்டுக்குள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வார்பட்டில் குரங்குகள் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும். அவ்வாறு இந்தமையம் அமைந்தால் இதுதான் தமிழகத்தின் முதல்மையமாக இருக்கும். 

தி இந்து

Wednesday, June 25, 2014

தஞ்சை அருகே குளத்தில் 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு


தஞ்சாவூர் புன்னைநல்லூர் அருகே குளத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ எடை கொண்ட 5 ஐம்பொன் சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டன. 

தஞ்சாவூர்- நாகை சாலையில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலை அடுத்த பவளக்காரன் சாவடி குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் டிராக்டர்களைக் கழுவிச் சுத்தம் செய்தபோது, தண்ணீருக்குள் சுவாமி சிலைகள் இருப்பதைக் கண்டனர். 

அவர்கள், அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற பாபநாசம் வட்டாட்சியர் அருண்மொழி, டிஎஸ்பி சிவாஜி அருட்செல்வன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் குளத்தைப் பார்வையிட்டு, அதில் கிடந்த 5 சிலைகளையும் கைப்பற்றினர். 

600 கிலோ எடை 
 
அவை 3 அடி உயரமுள்ள அய்யனார் சிலை, இரண்டரை அடி உயரமுள்ள பூர்ணா மற்றும் புஷ்கலா அம்மன் சிலைகள், ஒரு அடி உயரமுள்ள காளியம்மன் மற்றும் மாரியம்மன் ஐம்பொன் சிலைகள் என்பதும் பல லட்சம் மதிப்பு கொண்டவை என்பதும் தெரிந்தது. இவற்றின் மொத்த எடை 600 கிலோ.
கைப்பற்றப்பட்ட சிலைகள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 

அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இந்த 5 சிலைகளும் கடந்த மாதம் 25-ம் தேதி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள பாலையூர் அம்மன் கோயிலில் இருந்து திருடப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. 

திருடப்பட்ட சுவாமி சிலைகள் மீண்டும் கிடைத்துள்ளதை அறிந்த பாலையூர் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இச்சிலைகள் திருட்டில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

தி இந்து

Saturday, June 21, 2014

ஐராவதம் மகாதேவன் - தினமணி ஆசிரியர் கலாரசிகன்





தமிழ் இலக்கியத் திருவிழாவிற்குத் தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டு அறிஞரும், "தினமணி' நாளிதழின் மேனாள் ஆசிரியப் பெருந்தகையுமான ஐயா ஐராவதம் மகாதேவனை நேரில் சென்று அழைக்கவும், அவரது ஆசியைப் பெறவும் சென்றிருந்தேன்.

தனது உடல் நலம் காரணமாக விழாவிற்கு வர இயலாமையைத் தெரிவித்த அவருடன் சுமார் இரண்டு மணி நேரம் இருந்த ஒவ்வொரு நொடித்துளியும், இப்பிறவியில் யான் பெற்ற பெரும் பேறு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்னிடம் தெரிவித்த சில கருத்துகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இப்போது நமது கையில் தவழும் "தினமணி' நாளிதழ், ஐயா ஐராவதம் மகாதேவன் ஆசிரியராகப் பொறுப்பேற்று மாற்றியமைத்த வடிவமைப்பு. ஒருபக்க ஆசிரியர் உரை, கட்டுரைகள் என்கிற ஒழுங்குமுறை அவர் நடைமுறைப்படுத்தியது. "தலையங்கம்' என்பதை நல்ல தமிழில் "ஆசிரியர் உரை' என்று மாற்றியவரும் அவர்தான். 

 ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. எப்படி ஊர் ஊராகச் சென்று ஓலைச்சுவடிகளைத் திரட்டி, சங்கத்தமிழ் இலக்கியங்களை நமக்குப் பாதுகாத்துத் தந்தாரோ, அதேபோல ஐயா ஐராவதம் மகாதேவனும் காடு மலையெல்லாம் சுற்றி அலைந்து, கோயில் குளங்கள் என்று சுற்றித் திரிந்து, பல அரிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து தமிழுக்குத் தந்திருக்கிறார். இவருடைய கண்டுபிடிப்புகள்தான் தமிழுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்குமான தொடர்பை உறுதிப்படுத்த உதவியிருக்கிறது.

அவர் "தினமணி' ஆசிரியராக இருந்தபோது எழுதிய சில முக்கியமான தலையங்கங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அதை என்னிடம் தந்துவிட்டார். கூடவே அவரது வாழ்த்துகளுடன். ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார்.

தினமும் அதிகாலையில் எழுந்ததும், ஐயா ஐராவதம் மகாதேவன், "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வை வணங்கிவிட்டுத்தான் அன்றைய நாளைத் தொடங்குகிறார். உ.வே.சா. நூலகத்தில், ஒரு மூலையில் கிடந்த தமிழ்த் தாத்தாவின் சிலையை நிறுவ அவர் எடுத்துக்கொண்ட முயற்சி பற்றியும், "தினமணி' வாசகர்களின் உதவியுடன் "சிலப்பதிகாரம்' பதிப்பு வெளிவந்தது பற்றியும் விளக்கும்போது, தமிழ்த் தாத்தாவுக்கு நன்றிக்கடன் செய்த பெருமிதம் அவரது குரலில் தெரிந்தது.

உ.வே.சா.வுக்கு அன்றாட சந்தியாவந்தனம் மற்றும் மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பண மந்திரங்கள் மனனமாகத் தெரியுமே தவிர, சம்ஸ்கிருதம் தெரியாது என்பது ஐராவதம் ஐயா சொல்லித்தான் எனக்குத் தெரியும். உ.வே.சா.வுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாதாம். தமிழை மட்டுமே நேசித்தும், சுவாசித்தும் வாழ்ந்திருக்கிறார் "தமிழ்த் தாத்தா'.

அகத்தியரின் மறுபிறவி "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. என்று கருதும் பெரியவர் ஐயா ஐராவதம் மகாதேவனின் கருத்துப்படி, தமிழில் வெளிவந்த சிறந்த சரித்திரம் உ.வே.சா. எழுதிய "மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரிதம்'. மிகச் சிறந்த சுயசரிதம் அவரது "என் சரித்திரம்'.

தமிழர்தம் இல்லங்களை எல்லாம் உ.வே.சா.வின் படம் அலங்கரிக்க வழிவகை செய்தல் வேண்டும் என்று எனக்குள்ளே ஓர் உத்வேகம் தோன்றி இருக்கிறது. ஐயா ஐராவதம் மகாதேவன் விட்ட இடத்திலிருந்து அந்தப் பணியை இட்டுச் செல்லும் பேறு எனக்கு வாய்க்க வேண்டும். அதற்கு இறைவன் அருள வேண்டும்.

உ.வே.சா. நூலகத்தில் பல புத்தகங்களை மறுபதிப்பாக வெளிக்கொணர நிதி இல்லை என்கிறார்கள். உ.வே.சா.வின் கையெழுத்துப் பிரதிகள் சில இன்னும் அச்சாகாமல் இருக்கின்றன. சங்க இலக்கியத்தை மீட்டுத்தந்த பெருந்தகையின் நூல்களைப் பதிப்பிக்க உ.வே.சா. நூலகம் இருந்தும், அதற்கு நிதி வசதி இல்லை என்பது இதயத்தைப் பிசைகிறது. நாம் அதற்கு என்ன செய்யப் போகிறோம்?



ஐயா ஐராவதம் மகாதேவன் போலவே, தமிழாகவே வாழும் இன்னொரு அறிஞர் "சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.இராமச்சந்திரன். இவரும் தமிழ் இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. "பயணத்தைத் தவிர்க்க விரும்புகிறேன்' என்று அவர் கூறியபோது அதற்குமேல் அவரை வற்புறுத்தத் தோன்றவில்லை.

கடந்த ஆண்டு தஞ்சையில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது, அவர் எனக்குச் சில புத்தகங்கள் தந்தார். அதில் அவர் எழுதிய "வழி வழி பாரதி' என்கிற புத்தகமும் அடக்கம். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று சொல்லத் தகுந்த தமிழ்ப் பேரறிஞர் பெருந்தகை தி.வே.கோபாலையர். அவரது அணிந்துரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் புத்தகம் இது. அப்புத்தகத்தின் மேன்மை பற்றி இனி கேள்விக்கே இடமில்லைதானே!

பெரியவர் டி.என்.இராமச்சந்திரனுக்கு சேக்கிழாரில் எந்த அளவுக்கு ஆழங்காற்பட்ட புலமையோ, அதேபோல பாரதியையும் வார்த்தைக்கு வார்த்தை ரசித்து மகிழும் பிரேமை. திருலோக சீதாராமும் கரிச்சான் குஞ்சுவும் பேசிக் கொண்டிருந்தார்களாம். பதிவு செய்கிறார் டி.என்.ஆர்.

""திருலோகம்! நான் பாரதியாரைப் பற்றி நிறையப் பேசிவிட்டேன்; எழுதி விட்டேன். மேலும் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று திருலோக சீதாராமைப் பார்த்து அமரர் கரிச்சான் குஞ்சு கேட்டார். அவருக்குத் திருலோகம் கூறிய விடை இது: ""நல்லது. நீ ஒரு காரியம் செய். பாரதியாரைப் படி''.

எத்தனை தடவை படித்தாலும் முழுமையான நிறைவு ஏற்படாத அளவுக்கு அத்தனை ஆழமும், கருத்துச் செறிவும், இனிமையும் கொண்டது பாரதியின் எழுத்து. அந்த பாரதியை வரிவரியாக ஆய்வு செய்ததுபோல இருக்கிறது சேக்கிழார் அடிப்பொடியின் "வழி வழி பாரதி'.

பாரதியின் தமிழ், பாரதியார் பாடல்களில் வேதாந்தக் கருத்துகள், பாரதியை ஷெல்லி, புஷ்கின், ரூமி, மில்டன், ப்ரௌனிங், ஃபிரான்சிஸ் தாம்ஸன் ஆகியோருடன் ஒப்பாய்வு செய்து வெளியிட்டிருக்கும் கட்டுரைகளை அடிப்படையாக வைத்து ஆய்வு மாணவர்கள் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுகளைக்கூட அமைத்துக்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, பாரதியும் மில்டனும் அற்புதமான ஒப்பாய்வு.

பதினான்கு உள்தலைப்புகள் கொண்ட "வழி  வழி பாரதி' புத்தகத்தின் அணிந்துரையில் தி.வே.கோபாலையர் குறிப்பிட்டிருப்பதுபோல, "பாரதியாரின் கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ள சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் பாரதியாரை உணர்ந்து நமக்கு உணர்த்துதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர்.

தமிழ்மணி, தினமணி