தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை அருகே வார்பட்டு கிராமத்தில் 125
ஏக்கரில் குரங்குகள் மறுவாழ்வு மையம் அமைக் கப்படவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, திருமயம், பொன்னமராவதி
பகுதி களில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன. காடுகள் எல்லாம் கட்டிடங்களாக
உருமாறிவிட்ட நிலையில், கடும் வறட்சியால் பாதிக் கப்பட்ட குரங்குகள்
குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.
இதனால், தமிழகத்தில் மயில்களின் சரணாலயமாக திகழ்ந்த விராலிமலை முருகன்கோயில் பகுதி தற்போது குரங்குகளின் புகலிடமாக மாறிவிட்டது. மேலும்
சித்தன்னவாசல், திருமயம் கோட்டை, புதுக்கோட்டை பி.யூ. சின்னப்பா பூங்கா
போன்ற சுற்றுலாத் தலங்களிலும் உணவுக்காக குரங்குகள் முகாமிட்டுள்ளன.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து
ஆவணங் களைக் கிழித்து எறிவதும், வீடுகளுக்குள் புகுந்து சமைத்து
வைக்கப்பட்ட உணவுப் பொருள் களை சூறையாடுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
இதனால் நிம்மதி இழந்த மக்கள் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த
கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.1.20 லட்சத்தில் 37 கூண்டுகள் நிறுவப்
பட்டு அதில் சிக்கும் குரங்குகளை அடர்ந்த காடுகளில் கொண்டு விடும்
நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனாலும் குரங்குகளின் தொந்தரவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு
நிரந்தர தீர்வு காணும் விதமாக மாவட்ட ஆட்சியர் மனோகரன் தலைமையில் நடந்த
ஆலோசனைக் கூட்டத்தில் குரங்குகளுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க முடிவு
செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட வன அலுவலர் என்.தங்கராஜு தலைமையில் திட்ட
அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது.
இதன்படி, பிரான்மலை அருகே பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட
வார்பட்டு கிராமத்தில் கல்தரையான 125 ஏக்கர் நிலம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. அதில் காடுகள் அமைக்கவும், குரங்குகளுக்கு எளிதில் உணவு
கிடைக்கும் வகையில் கொய்யா, நாவல், நெல்லி, புளி, இலந்தை, சப்போட்டா,
சீத்தாப்பழம் போன்ற பழம் தரும் மரக் கன்றுகளை நடுவதும் என்றும் அதைச்
சுற்றி சோலார் மின் வேலி அமைக்கவும், தண்ணீர் தொட்டிகள் ஏற்படுத்தவும்
திட்டமிடப்பட்டுள்ளது. குரங்கு களுக்கு கருத்தடை செய்யத் தேவையான வசதிகளும்
அங்கு ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.50 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார்
செய்து ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் ஓராண்டுக்குள் கிடைத்துவிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வார்பட்டில் குரங்குகள் மறுவாழ்வு மையம்
ஏற்படுத்தப்படும். அவ்வாறு இந்தமையம் அமைந்தால் இதுதான் தமிழகத்தின்
முதல்மையமாக இருக்கும்.
தி இந்து
No comments:
Post a Comment