Saturday, June 21, 2014

ஐராவதம் மகாதேவன் - தினமணி ஆசிரியர் கலாரசிகன்





தமிழ் இலக்கியத் திருவிழாவிற்குத் தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டு அறிஞரும், "தினமணி' நாளிதழின் மேனாள் ஆசிரியப் பெருந்தகையுமான ஐயா ஐராவதம் மகாதேவனை நேரில் சென்று அழைக்கவும், அவரது ஆசியைப் பெறவும் சென்றிருந்தேன்.

தனது உடல் நலம் காரணமாக விழாவிற்கு வர இயலாமையைத் தெரிவித்த அவருடன் சுமார் இரண்டு மணி நேரம் இருந்த ஒவ்வொரு நொடித்துளியும், இப்பிறவியில் யான் பெற்ற பெரும் பேறு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்னிடம் தெரிவித்த சில கருத்துகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இப்போது நமது கையில் தவழும் "தினமணி' நாளிதழ், ஐயா ஐராவதம் மகாதேவன் ஆசிரியராகப் பொறுப்பேற்று மாற்றியமைத்த வடிவமைப்பு. ஒருபக்க ஆசிரியர் உரை, கட்டுரைகள் என்கிற ஒழுங்குமுறை அவர் நடைமுறைப்படுத்தியது. "தலையங்கம்' என்பதை நல்ல தமிழில் "ஆசிரியர் உரை' என்று மாற்றியவரும் அவர்தான். 

 ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. எப்படி ஊர் ஊராகச் சென்று ஓலைச்சுவடிகளைத் திரட்டி, சங்கத்தமிழ் இலக்கியங்களை நமக்குப் பாதுகாத்துத் தந்தாரோ, அதேபோல ஐயா ஐராவதம் மகாதேவனும் காடு மலையெல்லாம் சுற்றி அலைந்து, கோயில் குளங்கள் என்று சுற்றித் திரிந்து, பல அரிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து தமிழுக்குத் தந்திருக்கிறார். இவருடைய கண்டுபிடிப்புகள்தான் தமிழுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்குமான தொடர்பை உறுதிப்படுத்த உதவியிருக்கிறது.

அவர் "தினமணி' ஆசிரியராக இருந்தபோது எழுதிய சில முக்கியமான தலையங்கங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அதை என்னிடம் தந்துவிட்டார். கூடவே அவரது வாழ்த்துகளுடன். ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார்.

தினமும் அதிகாலையில் எழுந்ததும், ஐயா ஐராவதம் மகாதேவன், "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வை வணங்கிவிட்டுத்தான் அன்றைய நாளைத் தொடங்குகிறார். உ.வே.சா. நூலகத்தில், ஒரு மூலையில் கிடந்த தமிழ்த் தாத்தாவின் சிலையை நிறுவ அவர் எடுத்துக்கொண்ட முயற்சி பற்றியும், "தினமணி' வாசகர்களின் உதவியுடன் "சிலப்பதிகாரம்' பதிப்பு வெளிவந்தது பற்றியும் விளக்கும்போது, தமிழ்த் தாத்தாவுக்கு நன்றிக்கடன் செய்த பெருமிதம் அவரது குரலில் தெரிந்தது.

உ.வே.சா.வுக்கு அன்றாட சந்தியாவந்தனம் மற்றும் மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பண மந்திரங்கள் மனனமாகத் தெரியுமே தவிர, சம்ஸ்கிருதம் தெரியாது என்பது ஐராவதம் ஐயா சொல்லித்தான் எனக்குத் தெரியும். உ.வே.சா.வுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாதாம். தமிழை மட்டுமே நேசித்தும், சுவாசித்தும் வாழ்ந்திருக்கிறார் "தமிழ்த் தாத்தா'.

அகத்தியரின் மறுபிறவி "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. என்று கருதும் பெரியவர் ஐயா ஐராவதம் மகாதேவனின் கருத்துப்படி, தமிழில் வெளிவந்த சிறந்த சரித்திரம் உ.வே.சா. எழுதிய "மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரிதம்'. மிகச் சிறந்த சுயசரிதம் அவரது "என் சரித்திரம்'.

தமிழர்தம் இல்லங்களை எல்லாம் உ.வே.சா.வின் படம் அலங்கரிக்க வழிவகை செய்தல் வேண்டும் என்று எனக்குள்ளே ஓர் உத்வேகம் தோன்றி இருக்கிறது. ஐயா ஐராவதம் மகாதேவன் விட்ட இடத்திலிருந்து அந்தப் பணியை இட்டுச் செல்லும் பேறு எனக்கு வாய்க்க வேண்டும். அதற்கு இறைவன் அருள வேண்டும்.

உ.வே.சா. நூலகத்தில் பல புத்தகங்களை மறுபதிப்பாக வெளிக்கொணர நிதி இல்லை என்கிறார்கள். உ.வே.சா.வின் கையெழுத்துப் பிரதிகள் சில இன்னும் அச்சாகாமல் இருக்கின்றன. சங்க இலக்கியத்தை மீட்டுத்தந்த பெருந்தகையின் நூல்களைப் பதிப்பிக்க உ.வே.சா. நூலகம் இருந்தும், அதற்கு நிதி வசதி இல்லை என்பது இதயத்தைப் பிசைகிறது. நாம் அதற்கு என்ன செய்யப் போகிறோம்?



ஐயா ஐராவதம் மகாதேவன் போலவே, தமிழாகவே வாழும் இன்னொரு அறிஞர் "சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.இராமச்சந்திரன். இவரும் தமிழ் இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. "பயணத்தைத் தவிர்க்க விரும்புகிறேன்' என்று அவர் கூறியபோது அதற்குமேல் அவரை வற்புறுத்தத் தோன்றவில்லை.

கடந்த ஆண்டு தஞ்சையில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது, அவர் எனக்குச் சில புத்தகங்கள் தந்தார். அதில் அவர் எழுதிய "வழி வழி பாரதி' என்கிற புத்தகமும் அடக்கம். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று சொல்லத் தகுந்த தமிழ்ப் பேரறிஞர் பெருந்தகை தி.வே.கோபாலையர். அவரது அணிந்துரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் புத்தகம் இது. அப்புத்தகத்தின் மேன்மை பற்றி இனி கேள்விக்கே இடமில்லைதானே!

பெரியவர் டி.என்.இராமச்சந்திரனுக்கு சேக்கிழாரில் எந்த அளவுக்கு ஆழங்காற்பட்ட புலமையோ, அதேபோல பாரதியையும் வார்த்தைக்கு வார்த்தை ரசித்து மகிழும் பிரேமை. திருலோக சீதாராமும் கரிச்சான் குஞ்சுவும் பேசிக் கொண்டிருந்தார்களாம். பதிவு செய்கிறார் டி.என்.ஆர்.

""திருலோகம்! நான் பாரதியாரைப் பற்றி நிறையப் பேசிவிட்டேன்; எழுதி விட்டேன். மேலும் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று திருலோக சீதாராமைப் பார்த்து அமரர் கரிச்சான் குஞ்சு கேட்டார். அவருக்குத் திருலோகம் கூறிய விடை இது: ""நல்லது. நீ ஒரு காரியம் செய். பாரதியாரைப் படி''.

எத்தனை தடவை படித்தாலும் முழுமையான நிறைவு ஏற்படாத அளவுக்கு அத்தனை ஆழமும், கருத்துச் செறிவும், இனிமையும் கொண்டது பாரதியின் எழுத்து. அந்த பாரதியை வரிவரியாக ஆய்வு செய்ததுபோல இருக்கிறது சேக்கிழார் அடிப்பொடியின் "வழி வழி பாரதி'.

பாரதியின் தமிழ், பாரதியார் பாடல்களில் வேதாந்தக் கருத்துகள், பாரதியை ஷெல்லி, புஷ்கின், ரூமி, மில்டன், ப்ரௌனிங், ஃபிரான்சிஸ் தாம்ஸன் ஆகியோருடன் ஒப்பாய்வு செய்து வெளியிட்டிருக்கும் கட்டுரைகளை அடிப்படையாக வைத்து ஆய்வு மாணவர்கள் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுகளைக்கூட அமைத்துக்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, பாரதியும் மில்டனும் அற்புதமான ஒப்பாய்வு.

பதினான்கு உள்தலைப்புகள் கொண்ட "வழி  வழி பாரதி' புத்தகத்தின் அணிந்துரையில் தி.வே.கோபாலையர் குறிப்பிட்டிருப்பதுபோல, "பாரதியாரின் கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ள சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் பாரதியாரை உணர்ந்து நமக்கு உணர்த்துதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர்.

தமிழ்மணி, தினமணி

No comments:

Post a Comment