Monday, April 21, 2014

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டி







உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 

2002, பிப்ரவரி மாதத்தில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. 

அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். 

‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. 

அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். 

அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

கலவரத்தில் நீங்கள் சிக்கியிருந்த அந்தக் காலகட்டத்தை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?

நான் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயம் மட்டும் சொல்வேன். நான் அன்றைக்குச் செத்துவிட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான் இருந்தேன். கடவுள் அருளால் பிழைத்தேன்.

ஆளும் கட்சியிடமிருந்து உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா?

நான் இதெல்லாம்பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதோ இருக்கும் காலத்தைக் கொஞ்சமாவது நிம்மதியுடன் வாழ நாங்கள் நினைக்கிறோம்.

மன்னியுங்கள்... அந்தப் படம் இன்னமும் உங்களைத் துரத்துகிறதா?

இங்கே குதுப் வீடு எது, எங்கிருக்கிறது என்று கேட்டால், யாராவது ஒருவர் வழிகாட்டிவிடுவார். ஒரு சாமானிய வாழ்க்கை வாழ்பவனுக்கு இப்படிப்பட்ட அடையாளம் சுமை. (அருகில் உள்ள மேஜைக்கு அடியில் உள்ள ஒரு பெரிய பையை எடுப்பவர் அதிலிருந்து நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டுகிறார். சமீபத்தில் வெளியான ஒரு இந்திப் படத்தின் ஒரு பாத்திரம், சுவரில் மாட்டியிருக்கும் குதுப் படத்தைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் படங்கள் அவை. அவற்றைக் காட்டிச் சொல்கிறார்...) இப்படி எவ்வளவோ இடங்களில் தேவையே இல்லாமல் நான் குறிவைக்கப்படுகிறேன்.

கலவரங்களின்போது முற்றிலுமாகத் தீக்கிரையான பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்போது ஓரளவுக்கு எல்லா வீடுகளுமே புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் உதவியதா?

நாங்கள் இப்போது முன்பைவிட மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம்.

மிகக் கடுமையான வன்முறையைப் பார்த்த நீங்கள், அந்த அரசாங்கமும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், பின் எந்த நம்பிக்கையில் மீண்டும் குஜராத் திரும்பினீர்கள்?

இரண்டு நம்பிக்கைகள். ஒன்று, இந்த குஜராத்தான் எங்கள் பூர்வீக மண். என் தந்தையும் தாத்தாவும் அவர் முன்னோர்களும் பிறந்து வளர்ந்த மண். இத்தனை தலை முறைகளாக எங்களைக் காத்த மண் கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கை. இன்னொரு நம்பிக்கை, இத்தனை தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில்தான் நாங்கள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

அற்புதமான விஷயம். இந்த நன்னம்பிக்கை துளிர்விட எது காரணமாக அமைந்தது என்று தெரிந்துகொள்ளலாமா?

கலவரத்தின்போது ஏதோ ஒரு தீய சக்தி எல்லோரையும் இயக்கியதேயன்றி, கலவரத்துக்குப் பின் எல்லோரையுமே இந்தக் கலவரம் சங்கடப்பட வைத்தது. இங்கே எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் உதவினார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த சின்ன உதவிகள்கூட எங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. என்னை மீண்டும் குஜராத்துக்கே அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. இந்தக் காரணங்கள்தான் என் நம்பிக் கைக்கான அடிப்படை.

மோடியைப் பற்றியும் அவருடைய ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடி முஸ்லிம்களுக்காக நிறையச் செய்திருப்பதாகவும் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...

எனக்குத் தெரிந்து இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட் காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்ற வர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை.

கலவரத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையைப் பெற அவர் ஒன்றுமே செய்யவில்லையா?

உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும்தானே... குஜராத் கலவரத்தில் என் புகைப்படத்தைப் போலவே, கத்தியுடன் கைகளை உயர்த்தியபடி சத்தமிடும் அவர் படமும் பிரபலம். பின்னாளில் அவர் மனம் மாறினார். முஸ்லிம்களுக்குத் தான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்டார். இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். மோடிஜி அப்படியெல்லாம் ஒரு வார்த்தை வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்றைக்கு இந்தியா முழுவதும் மோடியைப் பற்றியும் அவர் குஜராத்தில் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லப்படும் வளர்ச்சியைப் பற்றியும்தானே பேசுகிறார்கள்...

ஒரேயொரு உதாரணம். சகோதரர் அசோக் மோச்சியையே எடுத்துக் கொள்வோம். அன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருந்தார், இன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருக்கிறார். வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை.

அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதை வளர்ச்சியாக - ஒரு அரசாங்கம் உருவாக்க வேண்டிய விஷயமாக - கருதுகிறீர்கள்?

காலையில் எழுந்திருக்கிறோம். வேலைக்குப் போகிறோம். கடுமையாக உழைக்கிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம். இரவாவது குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட முடிய வேண்டும். அவர்களோடு நிம்மதியாகப் பேச முடிய வேண்டும். முக்கியமாக, பயம் இல்லாமல் தூங்க முடிய வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின், வளர்ச்சியின் வெளிப்பாடு. சந்தோஷமான சூழலின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் அதைத்தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பேட்டியில் என் கேள்விகள் முடிந்துவிட்டன. இந்தக் கேள்விகளுக்கு அப்பாலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்த நாட்டின் விசேஷமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த நாட்டைச் சிதைத்துவிடக் கூடாது.

-ஆரத் தழுவி விடைகொடுக்கிறார் குதுப்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

Sunday, April 20, 2014

இந்தியர்களின் பார்வை வேறு; காஷ்மீரிகளின் பார்வை வேறு! - சையத் அலி ஷா கிலானி பேட்டி




இந்தியாவின் மணிமகுடம் காஷ்மீர். அதன் தீராத தலைவலியும் அதுதான். காஷ்மீரைக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கட்டுப்படுத்தும் குரல்களில் சையது அலி ஷா கிலானியினுடைய குரல் முக்கியமானது. ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீர், தேரிக்-இ-ஹுரியத், அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு என கிலானி எந்த அமைப்பில் இருந்தாலும் காஷ்மீர் பிரிவினை ஒன்றே அவர் முன்வைக்கும் நிரந்தரத் தீர்வு.

“காஷ்மீரில் பயங்கரவாதமும் ரத்தக்களரியும் அதிகரிக்க கிலானியே காரணம்” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. வாழ்வின் பிற்பகுதியில் திடீர் திடீரென்று வீட்டுச் சிறை நடவடிக்கைக்கு உள்ளாகும் கிலானி, தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகளை எதிர்கொள்கிறார். 85 வயது முதுமை, சிறுநீரகப் புற்றுநோய், இதயக் கோளாறு எல்லாவற்றையும் தாண்டி சுதந்திர காஷ்மீர் கனவு அவரைத் துடிப்போடு இயக்குகிறது. கிலானியிடம் பேசினேன்.

நீங்கள் உங்களை எப்படி முதலில் உணர்கிறீர்கள் – ஒரு காஷ்மீரியாகவா அல்லது இந்தியராகவா?

நான் எப்போதுமே என்னை ஒரு காஷ்மீரி என்று அழைத்துக்கொள்வதையே பெருமையாக உணர்கிறேன்.

சரி, காஷ்மீரிகளின் தேவை என்ன? தேசத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் ரீதியாக சில தேவைகள் இருக்கின்றன; காஷ்மீருக்கும் அப்படியே. காஷ்மீரத்தின் முக்கிய அரசியல் தேவை இந்தியா, பாகிஸ்தான், சர்வதேச சமூகம் ஆகியவை உறுதிகூறியபடி தங்களுடைய எதிர்காலம் குறித்த முடிவை எடுக்கும் சுயநிர்ணய உரிமை.

ஆனால், காஷ்மீர் பிரிவினையை எல்லோருமே விரும்பவில்லை. அப்படி விரும்பாத காஷ்மீரி பண்டிட்டுகள் அவர்களுடைய சொந்த ஊர்களிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். அவர்களும் காஷ்மீர் மண்ணின் மைந்தர்கள்தான் இல்லையா?

காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று நாங்கள் கோரும்போது முஸ்லிம்களை மட்டும் சொல்லவில்லை. பண்டிட்டுகள், சீக்கியர்கள், பௌத்தர்கள் என்று எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறோம். பண்டிட்டுகளும் இந்த மண்ணின் பிள்ளைகள்தான். பண்டிட்டுகள் ஏன் தங்கள் ஊரைவிட்டுச் சென்றார்கள் என்பது பெரிய கேள்விக்குறி, அதைப் பற்றி நிறைய விவாதிக்க வேண்டியிருக்கிறது.

காஷ்மீரிகளுக்கு எல்லா வகையிலும் உதவ இந்திய அரசும் காஷ்மீர் சகோதரர்களை அரவணைக்க இந்தியர்களும் தயாராகவே இருக்கிறோம். ஏன் உங்களைப் போன்ற தலைவர்கள் இந்திய அரசை ஆக்கிரமிப்பாளராகவும் சக இந்தியர்களை எதிரிகளாகவும் பார்க்கிறீர்கள்?

இந்தியாவை ஆக்கிரமிப்பாளராகவும் இந்தியர்களை எதிரிகளாகவும் பார்ப்பது எங்களைப் போன்ற தலைவர்கள் அல்ல – காஷ்மீர் மக்களே அப்படிப் பார்க்கின்றனர். ராணுவ பலத்தாலும் பல்வேறு வகை அடக்குமுறைகளாலும் இந்திய அரசு எங்கள் வாயை அடைப்பதில் வெற்றி பெற்றிருக்கலாம்; உணர்வுகளை வெற்றி கொள்ள முடியாது. இந்திய அரசும் இந்திய மக்களும் எங்களுக்குச் செய்யக்கூடிய சிறந்த உதவி, காஷ்மீரிகளின் உணர்வை மதித்து – அவர்கள் விரும்பும் வகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவுவதே.

தீர்வு என்று நீங்கள் குறிப்பிடுவது காஷ்மீர் பிரிவினையைத்தானே... பிரிவினை நீங்கலாக உங்களுக்கு வேறு தீர்வே தெரியாதா?

இந்தக் கேள்வியே அபத்தமானது; என்னுடைய நாட்டை ஆக்கிரமிப்பாளன் ஒருவன் ஆக்கிரமித்திருக்கிறான். என்னுடைய நியாயமான உரிமைகளும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆக்கிர மிப்புக்கு எதிரான என் குரல் பொருத்தமற்றதாகப் பார்க்கப் படுவது அபத்தம் இல்லையா?

உங்கள் வரலாற்று நியாயங்களை நான் மதிக்கிறேன். அதேசமயம், எந்த ஒரு போராட்டமும் சமகாலப் புவியரசியலைப் புறக்கணிக்க முடியாது. காஷ்மீருக்கும் இது பொருந்தும் இல்லையா?]

வரலாற்று உண்மைகளை ஒருபோதும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் உள்ள நியாயமான கவலைகளைக் கருத்தில்கொண்டு செயல்பட காஷ்மீரிகள் தயாராக இருக்கின்றனர். அதேசமயம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ராணுவ நோக்கங்களுக்காக காஷ்மீர் மக்களைப் பிணையாக்க முடியாது.
]
சரி, காஷ்மீர் தனிநாடாகவே ஆகிறது என்றே வைத்துக்கொள்வோம்... சுற்றிலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற ராணுவ சக்திகளின் நடுவே எத்தனை ஆண்டுகளுக்கு காஷ்மீர் தனித்து இருந்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைவிடச் சிக்கலான புவிசார் அரசியல் சூழலில் ஏராளமான சிறு நாடுகள் தனித்துவம் மிக்க நாடுகளாகச் செயல்படுகின்றன. நாமிருப்பது 21-ம் நூற்றாண்டு; எந்த நாடும் தனது ராணுவ பலத்தின் மூலம் இன்னொரு நாட்டைக் கைப்பற்றிவிட முடியாது. எனவே, தனி நாடாக எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சிந்தனைக்கே இடம் இல்லை.

இந்தியச் சுதந்திரத்துக்குப் பின் 66 ஆண்டுகள் ஆகியும்கூட இன்னமும் காஷ்மீரிகளால் தேசிய நீரோட்டத்தில் கலக்க முடியவில்லையே...

கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினையை இந்தியா கையாண்டுவரும் விதத்தைப் பார்த்தால், காஷ்மீரிகளின் தேவைகளை நிறைவேற்றுவது ஒருபுறம் இருக்கட்டும் – காஷ்மீரிகளின் தேவைகள் என்னவென்று தெரிந்துகொள்ளக்கூட அது அக்கறை காட்டவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சுதந்திரம், தேசிய நீரோட்டம் இவற்றைப் பற்றியெல்லாம் உங்களுடைய பார்வைக்கும் காஷ்மீரிகளின் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் சுதந்திரம் அடைந்திருக்கலாம். நாங்கள் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. எங்களைப் பொருத்த அளவில் தேசிய நீரோட்டம் என்பது உங்களுடைய தேர்தல் சார்ந்த அரசியல் அல்ல; அது எங்களுடைய சுதந்திரப் போராட்டம்தான்.
]
ஒரு போராட்டத்துக்குப் பல்வேறுகட்ட இலக்குகள் முக்கியம் இல்லையா? காஷ்மீர் பொருளாதாரரீதியாகக் கீழே தள்ளப்பட இப்படிப் பிரிவினை ஒன்றே முதலும் இறுதியுமான இலக்கு என்ற உங்கள் போக்கும் காரணம் என்பதை உணர்கிறீர்களா? வளர்ச்சிக்கான தேவைகள் உங்கள் கண்களில் படவே இல்லையா?

இல்லை. நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். வளர்ச்சிக்கு அமைதியும் அரசியல் ஸ்திரத்தன்மையும் அவசியம். காஷ்மீரிகளின் விருப்பப்படி தீர்வுகாணப்பட்டால்தான் அவை இரண்டுமே அமையும். காஷ்மீரின் வளர்ச்சிக்காக இந்திய அரசு செலவு செய்வதாகக் கூறுவதெல்லாம் சாம, தான, பேத, தண்ட முறைகளில் காஷ்மீரைப் பணியவைக்க - சாணக்கிய நீதியைப் பின்பற்றுவதற்காகும் வழியே.

இந்தியாவில் அழுத்தப்பட்ட சமூகங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவரவர் விருப்பத்துக்கேற்ப நாட்டைத் துண்டாடுவதைவிடவும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தி நம்முடைய தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்திசெய்துகொள்வதே சிறந்த வழியாக இருக்க முடியும் இல்லையா?

இந்தியாவின் வெவ்வேறு சமூகத்தவரின், இனத்தவரின் ஆசைகள், கோரிக்கைகள், போராட்டங்கள்குறித்து நான் அறிவேன். பழங்குடிகள் - நீராதாரம், காடு, நிலம் - ஆகியவற்றின் மீது காலங்காலமாகத் தங்களுக்கு இருந்துவரும் உரிமைகளுக்காகப் போராடுகின்றனர். சமூகத்தில் தங்களுக்கு கௌரவமும் சமத்துவ உரிமையும் வேண்டும் என்று பட்டியலினத்தவர் போராடுகின்றனர்.

தங்களுடைய விடுதலைக்காக வட கிழக்கு மாநில மக்கள் போராடுகின்றனர். தங்களுடைய இலக்குகளை அடையப் போராடும் அனைத்துத் தரப்பினர் மீதும் எனக்கு மரியாதை உண்டு. அனைத்துத் தரப்பினரும் இணைந்து போராட வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் எங்களுடைய ஆதரவு உண்டு.

எங்களுடைய சுதந்திர காஷ்மீர் கோரிக்கையைப் பிரிவினை நோக்கம் கொண்டதாக நான் பார்க்கவில்லை. மாறாக, இந்திய அரசும் இந்திய மக்களும்தான் தங்களுடைய ஜனநாயகம் எவ்வளவு குறுகிய மனம் கொண்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன். 66 ஆண்டுகளுக்கு முன்னால் சுதந்திரம் அடைந்த இந்தியர்கள் அதன் பொருள் என்ன என்று அமர்ந்து யோசிக்க வேண்டும்!

தொடர்புக்கு: samas@kslmedia.in 

தி இந்து 

Wednesday, April 16, 2014

இந்தியா என்ன சொல்கிறது? - மேற்கு






மேற்கு இந்தியாவின் பயணத் திட்டம் தெளிவாக இருந்தது. கோவா, குஜராத், மகாராஷ்டிரம், டையு டாமன், நாகர் ஹவேலியை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியம் ஆரம்பக் காலத்திலிருந்தே தொழில் வளர்ச்சிக்குப் பேர்போனது. குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பின் தொழில்துறை வளர்ச்சியையும் நகரமயமாக்கலையும் படு வேகமாக முன்னெடுத்த மாநிலங்கள் மகாராஷ்டிரமும் குஜராத்தும்.

இதே முந்தைய காலகட்டமாக இருந்தால், மும்பையிலிருந்து பயணத்தைத் தொடங்குவதே பொருத்தமாக இருந்திருக்கும். இப்போது? ஆம், அகமதாபாத்திலிருந்தே பயணத்தைத் தொடங்கினேன்.

மேற்கின் ஆபரணம் என்று அழைக்கப்படும் குஜராத் வளத்துக்குப் பஞ்சம் இல்லாதது. அபார உழைப்பும் தொழில் உத்திகளையும் கொண்ட குஜராத்திகள் அந்த வளத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதவர்கள். காந்தியும் படேலும் குஜராத்தில் பிறந்தவர்கள் என்பதைக் காட்டிலும் ஜாம்ஷெட்ஜி டாடாவும் திருபாய் அம்பானியும் இந்த பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்பது குஜராத்திகளுக்கு இந்தியத் தொழில் துறையோடு உள்ள பிணைப்பைச் சரியாக அடையாளப்படுத்தும்.

நம்முடைய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிடவும் குஜராத்திகளின் சராசரி தனிநபர் வருமானம் மிகவும் அதிகம். ஆனால், இவ்வளவு பணம் கொழிக்கும் சிறப்பு அடையாளங்கள் எதுவும் அகமதாபாதில் இல்லை. ஒரு சராசரி இந்திய மாநகரம் எப்படி இருக்கும்? அப்படியே அகமதாபாதும்.

ஊரில் இறங்கியதும் கேட்ட முதல் குரல், ரயில் நிலையத்தில் சிதறிக் கிடக்கும் நிலக்கரியைப் பொறுக்கும் ராஜு சோலங்கியின் குரல். தன்னைப் போலவே அகமதாபாதின் சாலையோரக் குடிசை வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெரும் கூட்டத்திடம் அவர் அழைத்துச் சென்றார். எல்லோருமே கிராமப் பின்னணி உடையவர்கள். எனக்கு இது அதிர்ச்சி. ஏனென்றால், கிட்டத்தட்ட குஜராத்தின் எல்லாக் கிராமங்களும் சாலை வசதி உடையவை.

நீண்ட காலமாகவே வேளாண்மையும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. பின் ஏன் கிராமங்களிலிருந்து இவர்கள் வந்தார்கள்? “சாலைகள் இரண்டு காரியங்களைச் செய்தன. ஒன்று, வயலில் இயந்திரங்களைக் கொண்டுவந்து இறக்க உதவின. இன்னொன்று, நாங்கள் அங்கிருந்து வெளியேற உதவின.

மேற்கின் வயல்களில் மனிதர்களைவிடவும் இயந்திரங்கள் அதிகம். வேளாண்மை நன்றாக இருக்கிறதுதான். ஆனால், செழிப்பவர்கள் யார்? முதலாளிகள். விவசாயத் தொழிலாளர்கள் இன்னமும் கையேந்தும் நிலையில்தான் இருக்கிறோம். கடந்த 10 வருஷங்களில் விலைவாசி எவ்வளவு கூடியிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் சம்பளமும் கூடியிருக்கிறது.

ஆனால், விவசாயத் தொழிலாளர்களின் கூலி? இங்கே நிலக்கரியையோ பிளாஸ்டிக் பாட்டில்களையோ சேகரிப்பதால் கிடைக்கும் வருமானத்தில் பாதிகூடக் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடையாது என்பதுதான் உண்மை. கொஞ்சம் வீடு - தோட்டம் வைத்திருப்பவர்கள்தான் இன்னும் அங்கு பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை!

அகமதாபாதில் மட்டும் அல்ல; சூரத், வடோதரா, ராஜ்கோட், பவநகர், ஜாம்நகர், ஜுனாகட் எனப் பெரும்பாலான குஜராத் நகரங்களில் பெரும்பாலானவர்கள் இரட்டை வேலை செய்கிறார்கள். அதாவது, பகலில் ஓரிடத்துக்கு வேலைக்குச் சென்றால், மாலையில் இன்னோர் இடத்துக்கு வேலைக்குப் போவது அல்லது சாலையோரக் கடைகள் போடுவது. “முதலாளிகள் ஒரு வேலை பார்க்கலாம்; தொழிலாளிகள் ஒரு வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட முடியுமா?” என்கிறார், பகலில் சூரத்தில் ஒரு ஆலையில் வேலை செய்துகொண்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராம் சிங். இது ஓர் உலகம். இன்னோர் உலகமும் இருக்கிறது.

“இன்றைக்கு நீங்கள் ஒரு பெட்டியில் பணம் எடுத்துக்கொண்டு குஜராத் வந்தால், அடுத்த ஒரு மாதத்தில் நீங்கள் விரும்பும் தொழிலைத் தொடங்கிவிடலாம். எந்த அலைச்சலும் இல்லாமல் பத்தே நாட்களில் அரசாங்கம் எல்லா வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிடும். மின்சாரம், தண்ணீர் எல்லாம் சலுகை விலை. அருமையான தொழிலாளர்கள் ஏனைய இடங்களை விடவும் குறைவான கூலிக்குக் கிடைப்பார்கள்” என்கிறார் அகமதாபாத் தொழிலதிபரும் முதலீட்டாளருமான நீரவ் படேல்.

இரு உலகங்களின் கதாநாயகன்

பொதுவாக, இந்த இரு உலகங்களுமே மோடியை விரும்பு கின்றன. “பணம் முக்கியம் என்றால், தொழில் முக்கியம். இங்கு எல்லா முதல்வர்களுமே தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள். இன்றைக்கு மோடிக்கு இணையாகச் சொல்ல குஜராத்தில் ஆள் இல்லை” என்கிறார்கள். குஜராத் கிராமப்புறங்களில் மோடி அரசு செயல்படுத்திய நர்மதை கால்வாய்த் திட்டமும் சபர்மதி ஆற்றங்கரையை கான்கிரிட் கரையாக மாற்றும் திட்டமும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கின்றன.

ஆனால், எல்லோருமே மோடியைப் பற்றிப் பயத்துடனே பேசுகிறார்கள். “மோடிஜி மர்மமானவர்” என்கிறார்கள். பொதுவாக, குஜராத் எங்கும் இந்து முஸ்லிம் சமூகம் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இந்துக்களிடம் பேசும்போது, “மோடிதான் எங்கள் பாதுகாப்புக்கு உறுதுணை” என்கிறார்கள். முஸ்லிம்களிடம் பேசும்போது, “மோடி நாசக்காரர்; எங்கள் வாழ்வைக் குலைத்தவர்’’ என்கிறார்கள்.

இந்தியா நகரமயமாக முடியுமா?

குஜராத்துடன் ஒப்பிடும்போது - சுரங்க மாஃபியாக்கள் பிரச்சினை நீங்கலாக - கோவா சௌக்கியமாக இருக்கிறது. சுற்றுலா வாழவைக்கிறது. டையு டாமன், நாகர் ஹவேலி நிலைமையும் அப்படியே. ஆனால், மகாராஷ்டிரத்தை நோக்கி நகர்ந்தபோது நிலைகுலைந்துபோனேன். இந்தியாவின் அதிர்ச்சியான முகங்களை இங்குதான் சந்தித்தேன்.

ஒருகாலத்தில் நகரமயமாக்கலையும் சிறுதொழில் துறையையும் வளர்த்தெடுத்த மகாராஷ்டிரம், இன்றைக்கு நகர மயமாக்கலை ஊக்குவிக்கும் ஏனைய மாநிலங்களுக்கு ஒரு பாடம் என்பதுபோல இருக்கிறது. நாட்டின் மாபெரும் நகரமான மும்பையில் ஒருபுறம் அதன் அற்புதமான கட்டமைப்புக்கும் மறுபுறம் அது ஏழைகளுக்கு அளிக்கும் அசிங்கமான வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தடயங்கள் ஏதும் தென்படவில்லை.

நவிமும்பை, புனே, நாக்பூர், நாசிக், ஔரங்காபாத், கோலாப்பூர், தானே, சோலாப்பூர், அமராவதி, சாங்லி நகரங்கள் யாவும் அடிப்படை வசதிகளை அளிக்கவே போராடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கிராமப்புற வாழ்க்கையை மகாராஷ்டிர ஆட்சியாளர்கள் எவ்வளவு சீரழித்திருக்கிறார்கள் என்பதற்கு விதர்பா விவசாயிகள் ரத்த சாட்சியம் அளிக்கிறார்கள். நாட்டிலேயே ஏழ்மையான வாழ்க்கை நிலவும் மேற்கு இந்தியாவின் எல்லையோரமான விதர்பா பிரதேசம் சுமார் 11 மாவட்டங்களை உள்ளடக்கியது.

இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரமாக அறியப்பட்ட இந்தப் பிராந்தியத்தில், இதுவரை கிட்டத்தட்ட 1.4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். “கடந்த மாதம்கூட 23 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்” என்று தொடங்கினார் விவசாயியும் விதர்பா ஜன் அந்தோலன் சமிதியின் பிரதிநிதியுமான பாபு ராம்.

“மகாராஷ்டிரத்தின் மூன்றில் இரு பங்கு கனிம வளம் இங்கு இருக்கிறது. அரசாங்கம் அக்கறை காட்டியிருந்தால், இந்த வறண்ட பிரதேசத்தின் வறுமையைப் போக்கியிருக்க முடியும். ஆனால், அரசாங்கம் புறக்கணிக்கிறது... தொடர்ந்து புறக்கணிக்கிறது. மகாராஷ்டிர விவசாயிகளுக்குத் தண்ணீர் பெரிய பிரச்சினை. நியாயமாக நீராதாரங்களை உருவாக்குவதுதான் அரசியல்வாதிகளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் கொள்ளையடிப்பதற்கான துறை பாசனத் துறை.

ரூ. 70 ஆயிரம் கோடியைப் பாசனத்துக்கு என ஒதுக்கி 0.1% பாசன வசதியை மட்டுமே உருவாக்குபவர்களை நீங்கள் உலகில் எங்காவது பார்க்க முடியுமா? தண்ணீர் கேட்டுப் போராடும் மக்களுக்கு, ‘அணையில் நான் வேண்டுமானால் மூத்திரம் பெய்துவிடவா?’ என்று கேட்கும் அரசியல்வாதிகளை நீங்கள் எங்காவது பார்க்க முடியுமா? மகாராஷ்டிரத்தில்தான் பார்க்க முடியும். துணை முதல்வராக இருந்த அஜித் பவார் பொது மேடையில் அப்படிக் கேட்டார். பாசனத் திட்டங்களின் பெயரால் ரூ. 70 ஆயிரம் கோடியை அவர் காலிசெய்தார் என்பதைப் பின்னாளில் முதல்வரே சொன்னார். இவ்வளவு கொடூரமான வர்களை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது” என்கிறார் பாபு ராம்.

இன்னும் அதிரவைக்கின்றன ‘பிரயாஸ்’அமைப்பு சொல்லும் உண்மைகள். மகாராஷ்டிரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 பாசனத் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட தண்ணீரில் 40% முதல் 80% வரை தொழிற்சாலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய அமைப்பு இது. “அரசின் கொள்கை, மொத்தம் உள்ள தண்ணீரில் 72% விவசாயத்துக்கும் 7% தொழிற்சாலைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. நடப்பதோ தலைகீழ்” என்கின்றனர் இந்த அமைப்பினர்.

“இப்படி ஒருபுறம் எங்களை வஞ்சிக்கும் அரசாங்கம், மறுபுறம் பி.டி. பருத்தி சாகுபடி செய்யச் சொல்லி எங்களைப் பரிசோதனை எலிகளாக்கிக்கொண்டது. தண்ணீர் பாடு பெரும்பாடு. பத்துக் காசு வட்டிக்குக் கடன் வாங்கிதான் பருத்தி விவசாயத்தில் ஈடுபடுகிறோம். பத்தாண்டுகளில் உற்பத்திச் செலவு ஐந்து மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது. பருத்தி விலையோ முன்னைவிடவும் குறைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், விளைச்சலும் பொய்த்தால் ஒரு விவசாயிக்குத் தற்கொலையைத் தவிர என்ன வழி இருக்கிறது?” என்று கேட்கும் அம்பே தானூரா அடுத்துச் சொன்ன விஷயங்கள் மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கக் கூடியவை. “வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எங்களுக்குப் பல நாள் இரவு உணவு வெறும் தண்ணீர்தான். பசியில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தண்ணீரை உணவாகக் கொடுப்பதைவிடவும் ஒரு கொடுமை உலகில் கிடையாது. இங்குள்ள விவசாயிகளில் பாதிப் பேர் அந்தக் கொடுமையைத்தான் தினமும் செய்கிறோம்.

சிறுநீரகத்தை விற்றால் கிடைக்கும் காசில் கொஞ்ச நாள் சாப்பிடலாம் என்பதால், பலர் சிறுநீரகத்தை விற்றார்கள். அப்படி விற்றவர்களில் ஒருவன்தான் நானும்” என்று அறுவைச் சிகிச்சை தழும்பைக் காட்டுகிறார். சிங்னபூர், டோர்லி, லெஹேகான் போன்ற கிராமங்களில் சர்வ சாதாரணமாக மும்பையின் பெரு மருத்துவமனைகளின் சிறுநீரக விற்பனைத் தரகர்களை அணுக முடிகிறது. “விதர்பா தனி மாநிலம் ஆக வேண்டும். அதுதான் இப்போதைக்கு ஒரே தீர்வு” - இதுதான் விதர்பா எங்கும் ஒலிக்கும் ஒரே குரல்.

நீண்ட காலத்துக்கு முன் தமிழகத்திலிருந்து நாக்பூரில் குடியேறிய காஷ்யபனிடம் பேசியபோது சொன்னார்: “தொழில் வளர்ச்சியினால் மட்டுமே நாட்டை வளப்படுத்திவிட முடியும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை மகாராஷ்டிரத்துக்கு - விதர்பாவுக்கு வந்து செல்ல வேண்டும். எப்படிப்பட்ட நரகமாக இந்த நாட்டை உருவாக்க விரும்புகிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்துவிடும்!”

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

Monday, April 14, 2014

இந்தியா என்ன சொல்கிறது? வடக்கு




பெரிய குழப்பம் இது... வட இந்தியாவை எங்கிருந்து தொடங்குவது? மேலே ஜம்மு காஷ்மீரிலிருந்து இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, சண்டீகர், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் வரை நீண்டு கிடக்கும் மாபெரும் பரப்பின் பயணத்தை எங்கிருந்து தொடங்குவது? உண்மையிலேயே மிக நீண்ட அலைச்சல் இது.

ராஜஸ்தானை எடுத்துக்கொண்டால், நிலப்பரப்பில் அது காங்கோவுக்குச் சமம். உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், மக்கள்தொகையில் அது பிரேசிலுக்குச் சமம். டெல்லி, ஜெய்பூர், லக்னோ, கான்பூர், இந்தூர், போபால், காசியாபாத், லூதியானா, அமிர்தசரஸ் என்று நீளும் வாய்ப்புகளில் வாரணாசியைத் தேர்ந்தெடுத்தேன்.

ஒரு நகரத்தை எவ்வளவு நாசம் ஆக்கலாம், எப்படியெல்லாம் நாசம் ஆக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் வாரணாசியின் ரயில் நிலையத்திலிருந்தே தெரிகின்றன. புகையும் புழுதியும் கலந்த காற்றைக் கிழித்துக்கொண்டு, நெரிசல் மிகுந்த குறுக லான சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இடையே மெல்லப் புகுந்தது ஆட்டோ. “எங்கள் ஊர் உள்ளபடி இரண்டு ஊர்கள்.

நீங்கள் இந்த நவீன ஊரை மறந்துவிட வேண்டும். கங்கைக் கரையை ஒட்டியுள்ள பழைய காசியை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். காசிக்கு ஐந்து சிறப்புகள் உண்டு. இங்கு மாடுகள் முட்டாது, கருடன்கள் பறக்காது, பல்லிகள் கவுளி சொல்லாது, பூக்கள் மணக்காது, பிணங்கள் நாறாது” என்று தொடங்கினார் ஆட்டோக்காரர். “இங்கு போக்குவரத்து விதிகள் எதுவும் எடுபடாது என்ற இன்னொரு சிறப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “அந்தச் சிறப்பு ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்துக்கும் சொந்தமானது. வாரணாசிக்காரர்கள் மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும்?”

சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பின் அடைந்து காசி கங்கைக் கரையை அடைந்தேன்.

சாவதற்கு ஓர் ஊர்

மரணத்துக்குப் பேர்போன ஊர் காசி. காசியில் சாக வேண்டும் அல்லது செத்த பின் இங்கு எரியூட்டப்பட வேண்டும் - அப்படி நடந்தால் வாழும் காலத்தில் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் களைந்து சொர்க்கத்துக்குச் சென்றுவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. காசி கங்கைக் கரையை ஒட்டியுள்ள நூற்றுக் கணக்கானோரின் பிழைப்பை இந்த நம்பிக்கை வாழவைக்கிறது.

“ஒரு பிணத்தை இங்கு எரிக்க குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் ஆகும்; வசதி படைத்தவர்கள் என்றால், இருபது முப்பதாயிரமும் செலவழிப்பார்கள். இங்கு சீசன், உச்சபட்சக் கோடையும் உச்சபட்சக் குளிரும்தான். சீசனில் நூறிலிருந்து இருநூறு பிணங்கள் வரை வரும்” என்கிறார்கள்.

அரிச்சந்திரா படித்துறை நோக்கிச் சென்றேன். காசியில் இப்படி ஏராளமான படித்துறைகள் உண்டு. அவற்றில் மன்னர் அரிச்சந்திரன் பிணங்களை எரித்த கரையாம் இது. ஏற்கெனவே பிணங்கள் எரிந்துகொண்டிருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் பிணங்கள் வாகனங்களில் வரிசை கட்டி நின்றன. படித்துறையில் அமர்ந்து, எரியும் பிணங்களை ஏராளமானோர் பார்த்துக்கொண்டிருந்தனர். தவிர, அரசாங்கம் வேறு, உட்கார்ந்து பார்க்கும் மேடையைக் கட்டிவிட்டிருக்கிறது.

அதிலும் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிணங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் சிறுவர்கள். தீயின் உக்கிரத்துக்கு அருகே, கொட்டும் வியர்வையில் எதையும் பொருட்படுத்தாமல், ஏற்கெனவே எரிந்த பிணங்களின் சாம்பலை மண்வெட்டியால் வெட்டிச் சுமந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். “படிக்கவில்லையா?” என்று கேட்டால், “ஏதோ இதனால்தான் சாப்பாடு கிடைக்கிறது சார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையைப் பார்க்கிறார்கள். எதிரே ஒரு கடல்போல பிரம்மாண்டமான கங்கை. இந்தியாவின் சகல பாவங்களையும் சுமந்து நகர்ந்துகொண்டிருக்கிறது.

அம்மா, ஐயா, இளவரசர், சாமியார்கள் கதை

வட இந்தியாவின் உயிர்நாடி கங்கைதான். “ஆனால், கங்கை கொஞ்சம்கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே யமுனையைக் கொன்றுவிட்டோம்; இப்போது கங்கையையும் கொன்றுகொண்டிருக்கிறோம்” என்கிறார் சூழலியலாளர் வந்தனா சிவா. சுற்றுச்சூழல் விஷயத்தில், அரசியல்வாதிகள் காட்டும் அலட்சியத்தைக் கடுமையாக அவர் சாடுகிறார். “ஆனால், வட இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில் எல்லாமே அவர்களுக்கு அலட்சியம்தான்” என்கிறார் விவசாயி ராஜு பையா.

சிரிக்காமல் கேலி பேசும் இந்த மனிதரை அமேத்தியில் சந்தித்தேன். “எங்களூரில் ஆட்சியாளர்களிடையே ஒரே வேறுபாடுதான். அம்மா (மாயாவதி) தான் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது சாலைகளைக் கழுவிவிடச் சொல்வார். ஐயா (முலாயம் சிங் யாதவ்) தன் மகன், மருமகள் எங்கு சென்றாலும் அவர்கள் நடப்பதற்கு ரோஜா மலர்களைச் சாலையில் இறைக்கச் சொல்கிறார். அவ்வளவுதான்.

சாமியார்கள் (பா.ஜ.க.) கதையைச் சொல்ல வேண்டியதில்லை. அக்கப்போர் அரசியல் அவர்களுடையது. இளவரசர் (ராகுல்) இங்கு எப்போதாவது வருவார். ஒரு ரயில் விட்டால் எங்களுக்கு எல்லாம் நடந்துவிடும் என்பது இளவரசர் குடும்பத்தின் நினைப்பு” என்கிறார்.

அமேதியைப் பார்த்தபோது உண்மை உரைத்தது. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று இந்திரா குடும்பம் மாற்றி மாற்றிக் கையில் வைத்திருக்கும் தொகுதி இது. ரயில் நிலையத்தையும் ஊரை இணைக்கும் சில சாலைகளையும் தவிர, ஒரு சராசரியான உத்தரப் பிரதேச நகரத்துக்கும் அமேதிக்கும் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியவில்லை. ரேபரேலியின் நிலையும் இதுதான். “நாட்டுக்கு எட்டுப் பிரதமர்களைத் தந்த மாநிலம் இது. இன்றைக்கும் உத்தரப் பிரதேசம்தான் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப்போகிறது. ஆனால், எங்கள் தலைவிதி மாறப்போவதில்லை” என்கிறார்கள்.

கிராமங்களின் உறைநிலை

இமயமலை எல்லையில் தொடங்கினால், விந்திய- சாத்புரா மலைத்தொடர்கள் வரை மேற்கே தார் பாலைவனம் நீங்கலாக, வட இந்தியாவின் பெரும் பகுதிகள் வளமானவைதான். சிந்து – கங்கைச் சமவெளியில்தான் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளன. உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இமயமலையை ஒட்டியிருக்கின்றன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவை காடுகள் மிகுந்தவை. ஆக, வளங்களுக்குக் குறைவு இல்லை.

பிரச்சினை எங்கே ஆரம்பிக்கிறது என்றால், வட இந்தியாவின் ஆகப் பெரும்பான்மைப் பகுதிகள் கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன; ஆனால், கிராமங்களை இன்னும் அரை நூற்றாண்டு பின் தள்ளியே வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள் (நகரங்களும் நாசமாக இருப்பது தனிக் கதை).

உத்தரப் பிரதேசத்தில் அசாரா கிராமத்தில் பெண்கள் ஆண்களைக் கண்டால் இன்னமும் முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள். பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று பஞ்சாயத்துக்காரர்களால் தடை விதிக்கப்பட்ட கிராமம் இது. மத்தியப் பிரதேசத்தில் பகாரியா சோர் கிராமத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுச் சிலர் இறக்க அதோடு அந்தக் கிராமத்தையே எய்ட்ஸ் கிராமம் என்று புறக்கணித்துவைத்திருக்கின்றன சுற்றுப்புற ஊர்கள்.

ஹரியாணாவின் பல கிராமங்களில் பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் சுரிதார் நீங்கலாக எந்த உடையும் போடக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றன பஞ்சாயத்து அமைப்புகள். எல்லா இடங்களிலுமே சாதிய அமைப்பு மிக வலுவான சங்கிலிகளால் தலித் மக்களைப் பிணைத்து அவர்கள் மீதேறி நிற்கிறது.

வட இந்தியாவின் பெரும்பாலான கிராமங்கள் – குறிப்பாக சத்தீஸ்கரில் - மிகுந்த இடைவெளிக்கு இடையே இருக்கின்றன. அகன்ற நிலப்பரப்பில் முப்பது நாற்பது கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு கொத்தாகப் பத்து இருபது வீடுகள். அவ்வளவுதான். அது ஒரு கிராமம்! சாலை, மருத்துவமனை வசதி ஏதும் இல்லை. மக்கள் தாங்களாக மண் பாதையில் செங்கற்களைப் பதித்து சைக்கிள் ஓட்டும் வழி அமைத்திருக்கிறார்கள்.

“அரசாங்கம் எந்தப் பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ளாததாலேயே ஊர்ப் பஞ்சாயத்துக்கு எல்லா அதிகாரங்களும் சென்றுவிடுகின்றன. ஆகையால், அவர்கள் வைத்ததே சட்டம். ஓட்டுக் கேட்க இவர்களிடம்தான் வர வேண்டும் என்பதால், அரசியல் கட்சிகள் இவர்களைப் பகைத்துக்கொள்வதில்லை. வட இந்தியக் கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள்தான் குறுநில மன்னர்கள்” என்று சொன்னார் டெல்லியில் படிக்கும் ஹரியாணா மாணவி ஆதீத்ரி.

தண்ணீர் தண்ணீர்

இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்சினைக்கு முதல் களபலியாகும் மாநிலமாக ராஜஸ்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அஜ்மீரில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம், அதற்கு மக்கள் இரவு இரண்டு மணிக்கு சாலையில் நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் சூழல். மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அஜ்மீரைச் சேர்ந்த ரதோட்டிக்கு இது சகஜம். “எங்கள் நிலை எவ்வளவோ மேல். பார்மர், பாலி, நகௌர் பகுதிகளில் எல்லாம் வாரத்துக்கு ஒரு முறைதான் விநியோகம்.

இன்னும் கிராமப்புறங்களை நோக்கிச் சென்றால், இரண்டு குடம் தண்ணீருக்குப் பல மைல்கள் நடப்பவர்களை சகஜமாகப் பார்க்க முடியும். குடிக்கவே இந்தக் கதி என்றால், விவசாயத்தின் கதியை ஊகித்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.

கொல்லும் போதை

பஞ்சாப், ஹரியாணாவில் இந்தப் பிரச்சினை இல்லை. இப்போதும் பஞ்சாப் வாரிக்கொடுக்கிறது. நாட்டின் கோதுமை உற்பத்தியில் 19.5%, அரிசி உற்பத்தியில் 11%, பருத்தி உற்பத்தியில் 10.26% பஞ்சாப் மட்டுமே தருகிறது. கார் இல்லாத கிராமங்கள் இல்லை. நன்றாக உழைக்கிறார்கள்; நன்றாகச் சாப்பிடுகிறார்கள்; நன்றாகக் கொண்டாடுகிறார்கள் பஞ்சாபிகள்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், அதீதமான பணப் புழக்கத்தின் விளைவாக ஏற்படும் தீமைகள். ஏற்கெனவே, மது நுகர்வில் நாட்டிலேயே முதல் இடத்தில் பஞ்சாப்தான் இருக்கிறது. இந்நிலையில், போதைப் பழக்கம் பஞ்சாபின் மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஹெராயின், பிரவுன் சுகர் தொடங்கி கஞ்சா, அபினி வரை சகல வஸ்துகளும் சரளமாகப் புழங்குகின்றன. “பஞ்சாபின் கிராமப்புறங்களில் 67% வீடுகளில் வீட்டுக்கு ஒருவராவது போதை நோயாளி. இவர்களில் 70% இளைஞர்கள்” என்கிறார் பேராசிரியை நவ்னீத்.

டெல்லி உங்களை வரவேற்பதில்லை

வட இந்தியாவைப் பொறுத்த அளவில், ஊரில் வேலை இல்லாவிட்டால், உடனே ரயில் ஏறும் ஊர் டெல்லி. ஒவ்வொரு நாளும் பல நூறு இளைஞர்கள் டெல்லிக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள். தானும் பிதுங்கி, வருபவர்களையும் பிதுக்கி நைந்துபோக வைக்கிறது டெல்லி. நகரங்களின் நகரமான டெல்லியில், அரசு புது டெல்லி பகுதியை மட்டும் ஒய்யாரமாக வைத்துக்கொண்டால் போதும் என்று நினைப்பதுபோல் இருக்கிறது. குதுப் மினார் சென்றபோது வெளியே ஆட்டோவுடன் சவாரிக்காக வெகுநேரம் காத்துக்கொண்டிருந்த அன்சாரியிடம் பேசினேன்.

“இங்கே சந்தோஷம் இல்லை சார். ஊருக்குப் போய்விடலாம் என்றால், பிச்சைதான் எடுக்க வேண்டும். என்றைக்காவது சூழல் மாறும் என்று நினைத்துதான் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். என்ன வாழ்க்கை இது” என்று தலையைக் குனிந்துகொண்டார். டெல்லியிலிருந்து இந்தியாவைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் அன்சாரியின் வாக்கியங்கள்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தன!

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

இந்தியா என்ன சொல்கிறது?- கிழக்கு





கிழக்கு இந்தியாவின் அசலான முகத்தைப் பார்க்க வேண்டும் என்றால், கொல்கத்தாவிலிருந்தோ பாட்னாவிலிருந்தோ பார்ப்பதில் அர்த்தம் இல்லை; ஜார்க்கண்டின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் பயணத்தைத் தொடங்குங்கள் என்றனர் நண்பர்கள்.

தன்பாத் ரொம்பவே பொருத்தமானதாக இருந்தது. ஜார்க்கண்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று தன்பாத். மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, அந்தமான்-நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவின் சகல அம்சங்களையும் தன்பாத்திலிருந்து தொடங்கிய பயணம் பார்க்க உதவியது. தன்பாத்தைச் சுற்றிச் சுற்ற ஆரம்பித்தேன்.

தன்பாத், இந்தியாவின் நிலக்கரித் தலைநரம். தன்பாத்தைச் சுற்றிப் புறப்பட்டால் நான்கு ஊருக்கு ஒரு ஊர் என்கிறரீதியில் நிறைய சுரங்கங்களைப் பார்க்க முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். ஆண்டுக்குச் சுமார் 27.5 மில்லியன் டன் நிலக்கரியை இந்தச் சுரங்கங்கள் உற்பத்திசெய்கின்றன. அனல்மின் உற்பத்தியும் புனல்மின் உற்பத்தியும் ஜரூராக நடக்கின்றன.

நாட்டிலேயே மும்பைக்கு அடுத்து, இந்திய ரயில்வேக்கு வருமானம் கொடுப்பது தன்பாத் கோட்டம்தானாம். ஆனால், இந்தத் தொழில் - வருமானப் புள்ளிவிவரங்களையெல்லாம் வைத்து, தன்பாத்தையோ ஜார்க்கண்டையோ கற்பனைசெய்தால் ஏமாந்துபோவீர்கள். சுற்றிலும் வனாந்தரம், நடுநடுவே சுரங்கங்கள், பெரும் இடைவெளி விட்டு வீடுகள், பரிதாபமான உடைகளில் வியர்க்க விறுவிறுக்க ஓடும் மக்களே இங்கு பெரும்பான்மை அடையாளங்கள்.

பத்து ரூபாயின் உண்மையான மதிப்பு

ஒரு சுரங்கத்துக்கு அருகே வண்டி நின்றபோது ரயில் பாதையையொட்டி, ஒரு டீக்கடையைப் பார்த்தேன். பத்து நைந்துபோன லாரி டயர்கள் சுவர்போல அடுக்கப்பட்டு, வெயிலைச் சமாளிக்க வேட்டித் துணி கூரையாக்கப் பட்டிருந்தது. அவ்வளவுதான் கடை.

நான்கு கற்களை அடுக்கி டீ போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். ஒரு டீ ஒரு ரூபாய் (தெற்கைத் தாண்டிவிட்டால், டீ அளவு பொதுவாகவே குறைவு - நாம் குடிப்பதில் பாதி என்று சொல்லலாம்). நான்கு பேர் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும் என்றேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கு விற்றால் அதிகம் என்கிறார். இருபது ரூபாய் கிடைத்தால் சந்தோஷம் என்கிறார்.

தன்பாத்தில் மட்டும் அல்ல; கிழக்கிந்தியாவின் பல இடங்களிலும் - பத்துக்கும் இருபதுக்கும் நாள் முழுவதும் உழைக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறார்கள்? கொல்கத்தாவில் ஒரு கைரிக்‌ஷாக்காரர் குடும்பத்தைப் பார்த்தேன்.

சோறு வடித்தது. அரிசி கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கையும் கொஞ்சம் உப்பையும் போட்டு, அந்தச் சோற்றில் பிசைந்தது. தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய். கயாவில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் ரொட்டியையும் மிளகாய்ச் சட்னியையும் மட்டுமே உண்டு வாழ்பவர்களைச் சந்தித்தேன். ஜார்க்கண்டில் பலருக்குப் பல வேளைகளில் சன்னா மட்டுமே உணவு. உண்மையில் பத்து ரூபாயின் உண்மையான மதிப்பைக் கிழக்கு இந்தியா உணர்த்துகிறது.

சுரண்டித் தின்னத்தான் வளமா?

கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதி வங்கக் கடலோரத் திலும் கங்கைச் சமவெளியிலுமே இருக்கிறது. ஜார்க்கண்ட் மலைப் பிரதேசம் என்றாலும் கனிம வளத்துக்குப் பஞ்சம் இல்லை. ஆனாலும், ஏழ்மை சூழ்ந்திருக்கிறது. காரணம், மோசமான அரசியல்.

“பிஹாரையே எடுத்துக்கொள்ளுங்களேன், பண்டைய இந்தியாவின் கல்வி மையம் இது. ஐந்தாம் நூற்றாண்டிலேயே உலகின் முக்கியமான கல்விக் கேந்திரமாக இருந்தது நாளந்தா. பின்னர் ஏற்பட்ட அழிவுகளைக்கூட நாம் காரண மாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், பிரிட்டிஷார் காலத்தில் மீண்டும் கல்வியைத் தூக்கி நிறுத்தினார்கள். ஆனால், சுதந்திரத்துக்குப் பின், சத்யேந்திர நாராயண் சின்ஹாவோடு கல்வித் துறை இங்கு புதைகுழிக்குச் சென்றுவிட்டது. வேலைவாய்ப்புகளை இது நாசமாக்கிவிட்டது.

விளைவு, இன்று பிஹாரிகள் நாடு முழுக்கக் கூவிக்கூவி வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பேராசிரியர் சத்யேந்திரா.

“ஏனைய பகுதிகளின் நிலையும் இதுதான். ஒடிசாவை எடுத்துக்கொண்டால், ஒரியர்கள் எந்த அளவுக்கு வேலைக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், இன்றைக்கு ஒரியர்கள் அதிகம் வசிக்கும் நகரம் கொல்கத்தா என்கிற அளவுக்கு” என்கிறார் அவர்.

ரயிலில் சந்தித்த, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, “எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களைச் சுரண்டித் தின்னத்தான் அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும் விரும்புகின்றன. நாங்கள் நம்பிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணை போய்விட்டார்கள். மாவோயிஸ்ட்டு களின் எங்களுக்காகக் கேள்வி கேட்கிறார்கள்” என்றார்.

கிழக்கு இந்தியாவின் கணிசமான பகுதிகள் மாவோயிஸ்ட்டுகள் கைகளில் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் அரசாங்கம் அவர்கள் நடத்துவது. சகர்பந்தா வனப் பகுதியில் மத்தியப் படைகளால் ‘விடுவிக்கப்பட்ட' 15 கிராமங்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கின்றன. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டபோது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு என்று சொன்னார்கள். இதுதான் கள நிலைமை!

இடப்பெயர்ச்சி எனும் சாபம்

கிழக்கு இந்தியாவின் இன்றைய பெரும் பிரச்சினை வேலைவாய்ப்பின்மையும் அதனால் ஏற்படும் இடப் பெயர்ச்சியும். “என் அம்மா ரயில் நிலையத்தில் அழுது கொண்டு என்னை வழியனுப்பியபோது, இரண்டு வருடங்களில் பணம் சம்பாதித்துக்கொண்டு வருவேன் என்று சொன்னேன்.

இன்றைக்கு எனக்கு நான்கு பேரப் பிள்ளைகள் ஆகிவிட்டது. என் காலத்தில் திரும்புவேனா என்று தெரியவில்லை” என்கிறார் கொல்கத்தாவில் ஆட்டோ ஓட்டும், அறுபதுகளில் இருக்கும் அப்துல் கபூர்.

இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிடவும் கிழக்கின் கிராமப்புற வாழ்க்கை அழகானதாக இருக்கிறது. ரொம்பவும் எளிமையான வாழ்க்கை முறை. கிழக்கின் ஆகப் பெரும்பான்மையான கிராமப்புற அடுப்புகள் வறட்டியால் எரிக்கப்படுகின்றன என்பது ஓர் உதாரணம். மேற்கு வங்கத்தில் போக்குவரத்து, சுகாதார வசதிகள் ஓரளவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பிஹார், ஒடிசா மோசம். ஜார்க்கண்ட் படுமோசம்.

“இங்கு நிலத்துக்கோ வளத்துக்கோ பஞ்சம் இல்லை. உழைப்பவர்களுக்கு நில உரிமை வேண்டும். அப்புறம் போக்குவரத்து, சுகாதார வசதிகளை உருவாக்கித்தர வேண்டும். அரசாங்கம் அதைச் செய்துகொடுத்தாலே போதும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட முடியும்” என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

ரூ. 467 சொத்துள்ள வேட்பாளர்!

கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவது என்பது பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனவு அல்ல. நாட்டின் ஏழ்மையான வேட்பாளர்கள் இங்குதான் போட்டியிடுகிறார்கள் (பூஜ்ய சொத்து மதிப்புக் காட்டுபவர்கள் தனிரகம்). ஏதோ சுயேச்சை ஆசாமிகள் அல்ல. கட்சி வேட்பாளர்கள். ஒடிசாவின் மோகனா தொகுதியில் போட்டியிடும் பூர்ண சந்திர புயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வேட்பாளர். சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரூ.467. கந்தமால் தொகுதியில் போட்டியிடும் ஒடிசா ஜன மோர்ச்சாவின் வேட்பாளர் சந்தீப் குமார் மெஹரின் சொத்து ரூ. 500. கட்சி சார்பில் பத்தாயிரம், இருபதாயிரம் தருவார்கள். தெரிந்தவர்கள் தரும் நூறு, இருநூறு என்று ஆயிரம் இரண்டாயிரம் தேறும். வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டியதுதான்” என்கிறார்கள். இப்படிக் காசில்லாமலே ஜெயித்தவர்களும் உண்டாம்.

தேசியக் கட்சிகளின் தோல்வி

ஒருகாலத்தில் தேசியக் கட்சிகளின் ஆளுகையில் இருந்த கிழக்கு இந்தியா இன்றைக்குத் தங்களுக்கு மாநிலக் கட்சிகளே வேண்டும் என்று விரும்புவதுபோலத் தெரிகிறது. காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள். பா.ஜ.க., கம்யூனிஸ்ட்டுகள்மீது நம்பிக்கை இல்லை. நிதீஷ் குமாரையும் நவீன் பட்நாயக்கையும் தங்கள் மாநிலத் தலைவர்களாகவே பார்க்கிறார்கள்.

மம்தா கட்சியினர் மீது இல்லாத நம்பிக்கை மம்தாமீது இருப்பதைப் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த ஒரியர்கள் - பிஹாரிகளிடம் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி நிதீஷ், நவீன் மீது மரியாதை வெளிப்படுகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நிலைமை மாறும், நாங்களும் போய்விடுவோம் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய கனவுகளில்தான் வாழ்கிறது கிழக்கு இந்தியா!

ஓர் உணவு: சன்னா

பொதுவாகவே, தென்னிந்தியாவுக்கு மேல் எந்த மாநிலம் சென்றாலும் சன்னாவைக் காண முடியும். ஏனைய பிரதேசங்களில் சன்னா நொறுக்குத்தீனி என்றால், கிழக்கு இந்தியாவில் எளிய மக்களுக்கு அதுவே பல வேளைகளில் உணவும்கூட. ஆகையால், ஏனோ தானோ என்று செய்யாமல் ரொம்பவும் கரிசனத்துடன் செய்கிறார்கள்.

இரு கை அளவு நன்கு முளைவிட்ட கொண்டைக் கடலை, அதில் சில துண்டுகள் தக்காளி, வெங்காயம், மல்லித் தழை, பச்சை மிளகாய் சீவல், இவற்றின் மீது அரை மூடி எலுமிச்சைச் சாறு. இந்தக் கலவைதான் சன்னா. நல்ல சத்து. பசிக்கும் ஈடுகொடுக்கிறது. காடு, மலை என்று தேர்தலுக்குச் சுற்ற வேண்டியிருக்கும் சூழலில், வேட்பாளர்கள் வண்டிகளில் சன்னாவும் பயணிக்கிறது!

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து


Sunday, April 13, 2014

இந்தியா என்ன சொல்கிறது?- வட கிழக்கு






வானிலிருந்து பார்க்கும்போது தன் அழகால் வாரிச்சுருட்டுகிறது குவாஹாத்தி. சுற்றிலும் மலைகளும் குன்றுகளும். பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா நதிக் கரையில் விரிந்திருக்கிறது. குழந்தைகள் வரையும் இயற்கைக் காட்சி ஓவியம்போல இருக்கும் நகரம், கால் பதித்து உள்ளே நுழைய நுழைய… ஒரு அழுமூஞ்சிக் குழந்தை ஆகிறது. ஒரு அழகான குழந்தையை மூக்குச்சளி வழிய அழுதுகொண்டேயிருக்கும்போது பார்க்க எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

கிழக்கு இந்தியாவின் நுழைவாயில்

குவாஹாத்திக்கு நீண்ட வரலாறு உண்டு. நரகாசுரன், சூரன் பகதத்தனின் புராணக் காலத்திலேயே அதன் கதை தொடங்கிவிடுகிறது. இப்போதும் அது அசாமின் தலைநகரம் மட்டும் அல்ல; அதுதான் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயில். அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஏழு சகோதரிகள் மாநிலங்களுக்கும் அதுதான் கல்வி - வணிக மையம். குவாஹாத்தியின் ஓராண்டு உற்பத்தி மதிப்பு ரூ. 6,000 கோடி ரூபாய் என்கிறார்கள். சர்வதேச அளவில் கொழும்புக்கு அடுத்த நிலையில் குவாஹாத்தி தேயிலை ஏல மையம் இருக்கிறது. குவாஹாத்தியில் உள்ள இந்திய அறிவியல் கழகமும் பல்கலைக்கழகமும் காட்டன் கல்லூரியும்தான் இன்றைக்கும் இந்த ஏழு மாநில மாணவர்களின் கனவுக் களங்கள். இங்குள்ள மருத்துவக் கல்லூரியே ஏழு மாநில எளிய மக்களின் கடைசி மருத்துவ நம்பிக்கை.

இவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் ஒரு மழை பெய்தால், நகரம் தண்ணீரோடு போக்குவரத்து நெரிசலில் மிதக்கிறது. நகரைப் பிரிக்கும் ரயில் பாதையில் ஊருக்குள் ஒரு ரயில் நுழைந்தால் 100 இடங்களில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. ஊருக்குள் வீதிக்கு வீதி சாக்கடைகள் வாய்க்கால்கள்போல ஓடுகின்றன. குவாஹாத்தியின் பிரதான சாலைகளில்கூட விளக்குகள் எரிவதில்லை. “உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் கீழை உலகின் ஒளி நகரம் என்று அழைக்கப்பட்ட இடம் இது. நீங்கள் பார்ப்பது குவாஹாத்தியின் அவலம் அல்ல; வட கிழக்கு இந்தியாவின் அவலம்” என்கிறார் பேராசிரியர் தெபர்ஷி தாஸ்.

எங்கே பிரதிநிதித்துவம்?

வட கிழக்கு இந்தியாவின் மக்கள்தொகை 3.9 கோடிதான். இவர்களில் 68% பேர் வசிக்கும் அசாமிலேயே ஒரு சதுர கிலோ மீட்டரில் 340 பேர்தான் வாழ்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 13. எனில், வட கிழக்கு எப்படி வெறிச்சோடிக் கிடக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. நாட்டின் மக்களவையில் வட கிழக்கின் பங்களிப்பு 25 இடங்கள். அதாவது, 4.6%. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வட கிழக்கின் பங்கான 3.1%-ஐவிடவும் இது அதிகம் என்றாலும், உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு மாநிலம் 80 மக்களவைத் தொகுதிகளுடன் இருக்கும்போது, இந்த ஏழு மாநிலங்களின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையே 25 என்றால், நம் அரசியல் கட்சிகள் பொருட்படுத்துமா? வட கிழக்குப் புறக்கணிப்பு அரசியலின் அடிப்படை இங்கிருந்தே தொடங்கிவிடுகிறது.

ஒருவனின் கதை அல்ல

பான் பஜாரில் டீ விற்றுப் பிழைக்கிறார் மேகாலயாவைச் சேர்ந்த லிங்டோ, “நன்றாகத்தான் படித்தேன். ஆனாலும், கல்லூரிகள் குறைவு என்பதால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அம்மா வேறு திடீரென்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்கள். ‘இங்கே பார்க்க வசதியில்லை. சென்னைக்குக் கொண்டுபோ’ என்று ஒரு தனியார் மருத்துவமனையில் சொன்னார்கள். அங்கே கூட்டிப்போனால் இரண்டே வாரங்களில் இரண்டு லட்சம் செலவு வைத்தார்கள். இருந்த வீட்டையும் விற்றோம். அப்புறம் 20 லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். ஊருக்கே அம்மாவை அழைத்துவந்துவிட்டேன். அம்மா செத்துவிட்டார். நான் ஊரைவிட்டு இங்கே சாயா விற்க வந்துவிட்டேன்” என்கிறார். சாதாரண நாய்க் கடிக்காகவும் காசநோய்க்காகவும்கூடத் தங்கள் மாநிலங்களைவிட்டு கொல்கத்தாவுக்கோ, சென்னைக்கோ ரயில் ஏறிய குடும்பங்கள் ஏராளம். அதேபோல, உயர் கல்விக்கும் பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கே அனுப்பிவைக்கிறார்கள். மிகப் பலவீனமான கல்வி, மருத்துவக் கட்டமைப்பு, இருக்கும் வீடு, நிலங்களையும் கல்விக்கோ, மருத்துவத்துக்கோ விற்றுவிட்டுக் கூலியாகி நிற்கிறார்கள். “ஏதாவது ஒரு வேலை வேண்டும்” - இது லிங்டோவின் பிரச்சினை மட்டும் அல்ல, இன்றைய வட கிழக்கின் தலையாய பிரச்சினை. இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. அதுதான் வட கிழக்கின் இன்றைய அரசியலைத் தீர்மானிக்கிறது. நாளைய எதிர்காலத்தையும் அதுவே தீர்மானிக்கும் - அடையாளச் சிக்கல்.

நான் யார்?

“பெரும்பான்மை இந்தியர்களுக்கு எங்கள் மாநிலங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதே தெரிவதில்லை. எங்களைப் பார்த்தால் மங்கோலியர்களா, சீனர்களா என்றுதான் கேட்கிறார்கள். நாங்கள் பேசுவதே அவர்களுக்கு இழிவாகத் தெரிகிறது. தவிர, இங்கே என்ன நடந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நெல்லி கலவரத்தில் 3,000 பேர் கொல்லப்பட்டபோதும், கோக்ரஜார் கலவரத்தில் லட்சம் பேர் அகதிகளானபோதும் யார் கவலைப்பட்டார்கள்?” என்று கேட்கிறார் வீரேந்தர். “ஒரு கிழவர் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தபோது துடித்த இந்தியா, 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஐரோம் ஷர்மிளாவுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது?” என்கிறார் வட கிழக்கின் உரிமைகளைப் பாடும் இம்பால் டாக்கீஸ் குழுவைச் சேர்ந்த சின்கங்பம்.

சிக்கலின் ஆணிவேர்

பெரும்பாலான வட கிழக்கின் பகுதிகள் மலைகளால் சூழப்பட்டவை. கணிசமான மக்கள் பழங்குடிகள். அசாமில் 19.3% என்றால், மிசோரமில் 94.5% பழங்குடி மக்கள். இவர்களில் ஏறத்தாழ 160-க்கும் மேற்பட்ட தொல் பழங்குடி இனங்களும் 400-க்கும் மேற்பட்ட குழுச் சமூகங்களும் இருக்கின்றன. இந்தக் குழுக்களால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கையே 200-ஐத் தாண்டும். இப்படி மொழியில் தொடங்கி உணவு வரை ஏராளமான கலாச்சார வேறுபாடுகள் இவர்களுக்குள் உண்டு. ஏற்கெனவே, உரசல்கள் இருந்த நிலையில், இப்போது அவர்கள் வெளியே செல்லும்போதும் வெளியாட்கள் இங்கே நுழைவதாலும் ஏற்படும் மாற்றங்களே அடையாளச் சிக்கலின் ஆதாரச் சுருதி.

உதாரணமாக, அசாமில் போடோக்களின் அரசியலை முன்வைக்கும் போர்கோயுரி, “வட கிழக்கின் பெரும்பான்மைப் பகுதிகள் கிறிஸ்தவ சபைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்துவிட்டன. தவிர, அசாமில் சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட, இப்போது அவர்கள் வலுவான சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள். அசாமில் ஐந்தில் ஒருவர் வங்கதேசி. இப்போது தொழிலில் அசைக்க முடியாதவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். எங்களுக்கென்று என்ன இருக்கிறது” என்று கேட்கிறார் .

இந்தக் கதைக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. “ஆங்கிலேயர் காலத்தில் வங்கத்துடன் சேர்ந்திருந்த பகுதிகள்தான் இவையெல்லாம். எங்கள் குடும்பம் கொல்கத்தாவில் இருந்தது. பிரிவினையின்போது நாங்கள் டாக்காவுக்கு மாறினோம். அங்கு சூழல் சரியில்லாத நிலையில், இங்கே குவாஹாத்தி வந்தோம். எத்தனையோ அசாமிகளுக்குக் கொல்கத்தாவில் வேலை கொடுத்தவர்கள் எங்கள் முன்னோர்கள். இன்றைக்கு நாங்கள் அவர்கள் ஊருக்கு வரும்போது அந்நியர்களாகிவிட்டோம். எந்தச் சூழலிலும் தாக்கப்படுவோம் என்கிற நிலையில்தான் வாழ்கிறோம்” என்கிறார் ரிக்‌ஷா தொழிலாளியான இஸ்மாயில்.

வட கிழக்கில் இன அரசியலின் பலம் சாதாரணமானதல்ல. அசாம் மாநிலத்திலிருந்து நாகாலாந்தும் மேகாலயாவும் அருணாசலப் பிரதேசமும் பிரிய அதுவே முக்கியக் காரணம். இது தவிர, இப்போது இந்திமயமாதலும் அவர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. கொஞ்சம் சோறு, பருப்பு, ரொம்ப மசாலா சேர்க்காமல், கடுகு எண்ணெய் தடவி, ஒரு குச்சியில் செருகி வாட்டப்பட்ட மீன். இது ஒரு வேளை உணவாக எனக்குக் கிடைத்தது. “ஒருகாலத்தில் இப்படியான விதவிதமான வட கிழக்கு உணவு வகைகள்தான் எங்கும் கிடைக்கும். இன்றைக்கு எங்கும் ரொட்டி, சப்ஜிதான்” என்று அலுத்துக்கொண்டார் ஒரு அசாமிய நண்பர்.

“சாதாரணமான வாழ்க்கை முறை எங்களுடையது. 20 மரப் பலகைகளோ, மூன்று தகரங்களோ போதும், நாங்கள் வீடு கட்டிக்கொள்ள. பணக்காரர்கள் என்றால், இன்னும் அழகாக மர வீடு கட்டுவார்கள். இப்போது பாருங்கள், எங்கு பார்த்தாலும் டெல்லிக்காரர்களைப் போலவே கான்கிரீட் கட்டிடங்கள்தான். பாலிவுட் சினிமாதான். இங்கிருந்து வெளியேறிய இளைய தலைமுறை எங்கள் மொழியை மறந்துவிடுகிறார்கள். எதிர்காலம் பயமாக இருக்கிறது” என்கிற குரல்களைப் பரவலாகக் கேட்க முடிகிறது. எல்லோருமே தேசிய இனப் போராட்டங்களை நடத்தியவர்கள் என்றாலும், மணிப்பூரில் மட்டுமே இன்னும் சுதந்திர கோஷங்கள் வலுவாக ஒலிக்கின்றன.

அரசியலில் பிராந்தியக் கட்சிகளைத் தாண்டி, காங்கிரஸே பரவலான செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் படாடோப உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள். அமைச்சர்கள் வீதிகளில் வந்தால், ராஜ சவாரியைப் பார்ப்பதுபோல இருக்கிறது பந்தோபஸ்து. வட கிழக்கின் மோசமான சூழலுக்கு காங்கிரஸுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த அரசியல் கட்சியையும் நம்ப முடியவில்லை என்கிறார்கள். நிறைய ஏமாற்றங்கள், துயரங்கள், வலிகள்...

இவை எல்லாவற்றையும் மீறியும் ஆக்கபூர்வமான தீர்வுகளை இந்தியப் பொதுச் சமூகத்திடமிருந்து வட கிழக்கு எதிர்பார்க்கிறது. வட கிழக்கின் சுவர்களை அலங்கரிக்கும் மேரி கோம் அதன் அடையாளச் சின்னமாகப் புன்னகைக்கிறார்!

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து




Thursday, April 10, 2014

கடவுள் ஊரின் அரசியல் கலாச்சாரம்





பன்மைத்துவம் மிக்க இந்தியாவைப் பகுத்துப் பார்க்கப் புவி அரசியல் சார்ந்து எப்படிப் பிரிக்கலாம்? குறைந்தது ஆறு பகுதிகளாகப் பிரிக்கலாம். தென் இந்தியா, மத்திய இந்தியா, மேற்கு இந்தியா, வட இந்தியா, கிழக்கு இந்தியா, வட கிழக்கு இந்தியா.

ஓரளவுக்கு நாம் இந்தியாவைப் புரிந்துகொள்ள இப்படிப் பகுத்துக் கொண்டு செய்யும் பயணம் உதவும். நாம் இந்தத் தொடரில் இந்த ஆறு இந்தியாக்களிலும் பயணம் செய்யப்போகிறோம். அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரங்களையும் பார்க்கப்போகிறோம். கூடவே, ஆறு பகுதிகளின் கலாச்சார மையங்களையும் வெவ்வேறு வாழ்க்கை வாழும் மனிதர்களையும் சந்திக்கப்போகிறோம். இடையிடையே இந்திய ஜனநாயகத்தின் பல்வேறு குரல்களைக் கேட்கப்போகிறோம். தென்னிந்தியாவிலிருந்து தொடங்குவோம்.

திருவனந்தபுரத்துக்குள் எங்கெல்லாம் சுற்றலாம் என்று உள்ளூர்க்காரர் யாரிடம் கேட்டாலும், “முதலில் பத்மநாப சுவாமி கோயிலைப் பார்த்துவிடுங்கள்” என்கிறார்கள். நியாயம்தான். ஊரின் பெயரே பத்மநாபர் பெயரில்தான் இருக்கிறது திரு + அனந்த + புரம். அனந்தரின் நகரம்.

உலகின் பணக்கார சாமி

தென்னிந்தியாவில் கோயில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஓர் அடையாளக் குறியீடு பத்மநாப சுவாமி கோயில். சேரமான் பெருமானால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், ஆரம்பக் காலம் தொட்டே செல்வாக்குக்குக் குறைவில்லாதது. ராஜா மார்த்தாண்ட வர்மா 1750-ல் தனது அரசாங்கம், ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் அனந்த பத்மநாப சுவாமிக்குப் பட்டயம் எழுதித்தந்து, தன் உடை வாளையும் திருவடியில் வைத்துப் பரிபூரண சரணாகதி அடைந்த பின்னர், கோயில் இன்னும் செல்வாக்கு பெற்றதாகிவிட்டது.

அதாவது, பத்மநாப சுவாமியே திருவிதாங்கூர் அரசின் தலைவர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் காலத்தில், பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய ராணுவமும் இந்தச் சடங்கைப் பின்பற்றியிருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் தாண்டி இப்போது உலகின் பணக்கார சாமி பத்நாப சுவாமி. கோயிலில் உள்ள ஆபரணங்களின் மதிப்பு மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிய அனுமதி இல்லை. போலீஸ்காரர்களுக்குக்கூட இங்கே துண்டும் வேட்டியும்தான் சீருடை. பெண்களுக்கும் புடவையுடன் மட்டுமே அனுமதி. ஆகையால், பேன்ட் அணிந்துவரும் ஆண் - பெண் பக்தர்கள் இருபாலரும் வித்தியாசமின்றி அதற்கு மேல் கோயிலில் தரப்படும் வேட்டியை அணிந்துகொண்டு சுற்றுகிறார்கள்.

“ஒருகாலத்தில் அரசப் பரம்பரையும் உயர் சாதி என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையும் தாண்டி யாரையும் இந்தக் கோட்டை வீதிக்குள்கூட விட மாட்டார்கள். அவ்வளவு சாதிப் பாகுபாடு இங்கிருந்தது” என்று நினைவுகூர்ந்தார் ஒரு பெரியவர். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.

திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகரம் பத்மநாபபுரத்திலிருந்து மாற்றப்பட்ட 1795 முதல் தலைநகரமாகவே நீடிக்கும் திருவனந்தபுரம், ஒருகாலத்தில் காந்தியால், இந்தியாவின் பசுமையான நகரம் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும் அந்தப் பெருமையை நகரம் இழந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. அழகான சாலைகள், தேவைக்கேற்ப வாகனங்கள், நல்ல தண்ணீர் - மின் விநியோகம், தேவையான அளவுக்குப் பூங்காக்கள், மைதானங்கள், அரசாங்கமே நடத்தும் திரையரங்குகள், கலையரங்குகள்…

இந்தியாவின் ஏனைய பெருநகரங்களின் பயங்கரப் பரபரப்பு, நெரிசல் நெருக்கடி இங்கு இல்லை. பாரம்பரியக் கட்டுமானங்கள் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்படுகின்றன. ஆட்டோக்காரர்கள் 15 ரூபாய்க்கு வருகிறார்கள். சாப்பிட உட்கார்ந்தால், “போத்தல் தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்காமல், எல்லா உணவகங்களிலும் சீரகம் அல்லது கருங்காலிக் கட்டை போட்டுக் கொதிக்கவைத்த வெந்நீர் தருகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட திருவனந்தபுரத்தின் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்றால், அது பேணும் அரசியல் கலாச்சாரத்தில் இருக்கிறது!

காழ்ப்புணர்வுக்கு விடைகொடு

திருவனந்தபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். ‘கௌரிசங்கர் மெஸ்’ ராஜன் அவர்களில் ஒருவர். பால் சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு மசால், தயிர்ப் பச்சடி, நார்த்தங்காய் ஊறுகாய், சட்னி சகிதம் பூரி கிடைக்கிறது இவர் கடையில். குட்டிக் கடை. எந்தப் பகட்டும் இல்லை. ஏராளமான சாமி படங்கள் நடுவே ராஜா ரவிவர்மாவின் ஓவியமும் தொங்குகிறது.

பக்திப் பழமாகக் காட்சியளிக்கும் ராஜன் ஒரு மார்க்சிஸ்ட் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் காரசாரமாக விமர்சிக்கிறார்; அதேசமயம், அவர்கள் செய்திருக்கும் முக்கியமான பணிகளையும் அங்கீகரித்துப் பேசுகிறார். “என்னதான் அடித்துக்கொண்டாலும் பொதுக் காரியங்களில் நாங்கள் நோக்கம் மாற மாட்டோம். போகும்போது ரயில் நிலையத்துக்கு அருகில் பாருங்கள். புது பஸ் நிலையம் கட்டிக்கொண்டிருப்பார்கள். முந்தைய கம்யூனிஸ்ட் அரசு கொண்டுவந்த திட்டம்.

காங்கிரஸ் அரசாங்கம் உற்சாகமாக நிறைவேற்றுகிறது. பாகுபாடு கிடையாது” என்கிறார். திருவனந்தபுரத்தில் எந்த ஓர் அரசு நிகழ்ச்சியானாலும் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து பங்கேற்கும் கலாச்சாரம் வெறுமனே மேடைக் காட்சியாக உருவாகிவிடவில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துகிறார்கள் மலையாளிகள். பா.ஜ.க. இப்போதுதான் வேர் விட ஆரம்பித்திருக்கிறது. ஆச்சரியமாக சிவசேனா ஆட்களையும் பார்க்க முடிந்தது. இயக்கத்தின் சார்பில் இங்கு கட்டணமற்ற ஆம்புலன்ஸ் வேன் சேவை நடத்துகிறார்கள்.

பேசுவதற்கு ஓர் இடம்

திருவனந்தபுரத்தின் கௌரவ அடையாளங்களில் ஒன்றான ‘இந்தியா காபி ஹவுஸ்’ போனபோது கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தேன். திருவனந்தபுரவாசி. மனிதர் ஒரு காபியை ஒரு மணி நேரம் ரசித்து, ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தார். “நாட்டுக்குக் கேரளம் கொடுத்த நல்ல விஷயங்களில் இந்தக் கடையும் ஒன்று. கூட்டுறவு அமைப்பு. ஒரு காபியோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாம். நண்பர்களோடு கதை பேசலாம். ஒரு நகரத்தில் இப்படியான இடங்களெல்லாம் அவசியம் இல்லையா?” என்கிறார்.

ஜனநாயகத் தளம்

கேரளத் தலைமைச் செயலகத்துக்குப் போனபோது, அந்த வளாகத்தின் சுற்றுச்சுவரையொட்டி, பல்வேறு கோரிக்கைகளுடன் வரிசையாகக் குடில் அமைத்து உட்கார்ந்திருந்த போராட்டக்காரர்களைப் பார்க்க முடிந்தது. போராட்ட நாள் 206 என்ற அறிவிப்புப் பலகையுடனும் பழங்குடியின அடையாளங்களுடனும் அமர்ந்திருந்த பெண் போராட்டக்காரர்களிடம் பேசினேன்.

செங்கரா எனும் இடத்தில் அவர்களுக்கு வசிப்பதற்குப் பட்டயம் தருவதாகச் சொன்ன அரசு, இப்போது இங்கே அங்கே என்று இழுத்தடிப்பதை எதிர்த்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இப்படி ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கோரிக்கையோடு கூடாரம் அடித்திருக்கிறார்கள். போலீஸார் துரத்தியடிக்கவில்லை.

மக்கள் அந்நியர்கள் அல்ல

ஊரைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோதே திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளரும் அமைச்சருமான சசி தரூரை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்த முதல்வர் உம்மன் சாண்டி காணக்கிடைத்தார். நான்கு கார்கள். கொஞ்ச நேரம் பேசுகிறார். கடந்துவிட்டார்.

கேரள அரசியல்வாதிகள் மக்களோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள், அணுகுவதற்கு எவ்வளவு எளிதாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்தது ஒரு சந்திப்பு. கார் ஓட்டுநர் ஜான் கேட்டார்: “பெரிய தலைகள் எதையும் பார்க்க விரும்புகிறீர்களா?”

கேரள அரசியலில் இன்றைக்குப் பெரிய தலைகள் என்றால், இரண்டு பேர். ஒருவர் முதல்வர் உம்மன் சாண்டி. மற்றொருவர் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன்.

எனக்கு உம்மன் சாண்டியைவிடவும் அச்சுதானந்தனைச் சந்திப்பதில்தான் அதிக விருப்பம். கேரள அரசியலில் எப்போதுமே சுவாரஸ்யங்களுக்கும் பரபரப்புக்கும் குறைவைக்காதவர் அச்சுதானந்தன் என்கிற காரணம் மட்டும் இல்லை; இந்தத் தேர்தலில் படைகளை வழிநடத்துபவர்களில் நாட்டிலேயே மூத்த தலைவர் அச்சுதானந்தன். ‘கன்டோன்மென்ட் ஹவுஸ்' புறப்படுகிறோம். கேரள எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு தந்திருக்கும் வீடு இது. வாசலில் ஏழெட்டு போலீஸார் நிற்கிறார்கள். வீட்டில் ஐந்தாறு கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். காத்திருக்கச் சொல்கிறார்கள். தூங்கி எழுந்த பத்து நிமிடத்தில், பொலிவாகிக்கொண்டு அழைக்கிறார் அச்சுதானந்தன்.

மனிதருக்கு 91 வயது ஆகிறது. துள்ளலுக்குக் குறைவில்லை. “இந்த வயதிலும் எது அசராமல் ஓடவைக்கிறது?” என்று கேட்டால், “காற்றுதான்” என்று கலாய்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர் அச்சுதானந்தன். “இந்தியாவில் இன்றைக்கும் இடதுசாரிகள் அப்படிப் பிரிந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறதா?” என்று கேட்டேன்.

கொஞ்ச நேரம் யோசிக்கிறார். “உலகெங்கும் காலமெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கான தேவை இருக்கத்தான் செய்யும். இந்தியாவில் ஒரு சமதர்ம சமுதாயம் அமைய வேண்டுமானால், அதை கம்யூனிஸ்ட்டுகளால்தான் செய்ய முடியும். நோக்கம் ஒன்றுதான். பாதை வேறுபடும்போதும் இணைந்து செயல்படுகிறோம்” என்றவர் “பிரச்சாரத்துக்கு வாருங்களேன்” என்று அழைத்தவாறே புறப்படுகிறார். நான் சிரித்தவாறே மறுத்துவிட்டுப் புறப்பட்டேன்.

தொடர்புக்கு: samas@kslmedia.in