சென்னையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்புறம் அங்கிருந்து கற்பனை செய்துகொள்ளுங்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கச் சாதியினரால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்துக்கான பயணத்தை அல்லது தண்டகாரண்ய வனப் பகுதியில் அரசு அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளின் குடியிருப்புக்கான பயணத்தை அல்லது அரசின் அத்துமீறலை எதிர்த்து டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்காட ஒரு பயணத்தை....
பெரும்பாலும் பயணங்கள்தான் சுரேஷின் இருப்பிடம். இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்களுக்காக ஜெயப்பிரகாஷ் நாராயணனால் தொடங்கப்பட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) இன்றைய பொதுச்செயலர் சுரேஷ். இந்திய அரசு தொந்தரவாகப் பார்க்கும் மனித உரிமைப் போராளிகளில் முக்கியமானவர். இந்திய அரசியலின் உள்கூறுகளைப் பற்றி உரையாட சரியான நபர்.
இந்திராவின் நெருக்கடிநிலை இந்தியாவுக்குப் பிந்தைய இந்த 37 ஆண்டுகளில், மனித உரிமைகளுக்கான மதிப்பு இங்கே எப்படி இருக்கிறது? நாம் மேம்பட்டிருக்கிறோமா?
இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவித்தபோது, சென்னை லயோலா கல்லூரியின் மாணவன் நான். தொழிற்சங்கவாதிகளுடன் அப்போது எனக்குப் பழக்கம் இருந்தது. இந்திராவின் நெருக்கடி நிலை அறிவிப்புக்குப் பின் ஏராளமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், தொழிற்சங்கவாதிகள், இளைஞர்கள் நாடு முழுக்க ஆயிரக் கணக்கில் கைதுசெய்யப்பட்டு, விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை அவர்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். “மாணவர்களே... இந்திய ஜனநாயகத்தை மீட்க நீங்கள் கிளர்ந்தெழுந்து போராடவில்லை என்றால், நீங்கள் படித்துப் பெறும் பட்டத்துக்கு, அது அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்கு இருக்கும் மதிப்புகூட இருக்காது” என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தபோது, தனிப்பட்ட லட்சியங்கள், கனவுகள் எல்லாவற்றையும் உதறிவிட்டுப் போராட்டக் களத்தில் இறங்கிய எண்ணற்ற மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால், இந்திய வரலாற்றின் மோசமான கலவரங்களில் ஒன்றான 2002 குஜராத் மதக் கலவரங்களில் தொடர்புடைய மோடிதான் இன்றைக்கு இந்தியாவின் முக்கியமான பிரதமர் வேட்பாளர். நாம் மேம்பட்டிருக்கிறோமா?
ஜனநாயகமும், மனித உரிமைகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். தேர்தலையொட்டி எவ்வளவோ விஷயங்கள் சூடாகவும் விரிவாகவும் விவாதிக்கப்படும் இன்றைய சூழலில், யாராவது மனித உரிமைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறார்களா? சொல்லுங்கள்... நாம் மேம்பட்டிருக்கிறோமா?
ஆனால், மனித உரிமைகள் தொடர்பாக இன்றைய கால கட்டத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது அல்லவா?
அடிப்படை உரிமைகள் என்ன என்ற விவரம் சாமானிய மக்களையும் எட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இங்கு மனித உரிமைகளுக்கான இடம் கவலைகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நாம் அடைந்துள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் கொடுத்திருக்கும் விலை மனித உரிமைகளிலிருந்துதான் தொடங்குகிறது.
நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரரீதியாகச் சுரண்டப்பட்டு, அழுத்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்டே சில பணக்காரர்கள், பெருநிறுவனங்களுக்கான இந்த வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
அன்றைக்குப் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், சுதந்திரம், விடுதலை, ஜனநாயகம் ஆகியவற்றில் மக்களுக்குப் பெரும் விருப்பம் இருந்தது. பெரும் ஊழல் அதிகார சாம்ராஜ்யங்களுக்கு எதிராக வீதிகளுக்கு வந்து போராட மக்கள் - முக்கியமாக மாணவர்கள் - தயாராக இருந்தார்கள். இன்றைக்குப் படிப்பறிவு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை எதிர்த்துப் போராட யாரும் தயாராக இல்லை.
இன்றைய இளைஞர்களின் கனவுகளையே எடுத்துக்கொள்வோம். தங்கள் படிப்பு, வேலை, வீடு, கார் என்றுதானே அவர்களுடைய அக்கறைகள் நீள்கின்றன? நாட்டின் 80 கோடி மக்கள் பொருளாதாரரீதியாக அடிமைப்பட்டு, பசி, பட்டினி, வறுமையில் கிடப்பது எத்தனை பேரை உலுக்குகிறது? காற்றும் நீரும் நிலமும் நஞ்சாகிக்கொண்டிருக்கிறதே… இன்றைக்கு நாம் தலையிட்டு இதையெல்லாம் தடுத்து, சீரழியும் ஜனநாயகத்தையும் சரிப்படுத்தாவிட்டால் நாளை நம்முடைய சந்ததியினர் மிகவும் பயங்கரமான நாட்டில் வாழ நேரிடும் என்பதையெல்லாம் பற்றி எத்தனை பேர் கவலைப்படுகின்றனர்?
இதற்கு அடிப்படைக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?
கல்விமுறை. மக்களின் சுயசிந்தனையைத் திட்டமிட்டு அழித்துவிட்டு, தொழிலதிபர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்யும் கூலிகளாக நம் மாணவர்களை நம் கல்வி நிறுவனங்கள் தயாரிக்கின்றன. சமூக உணர்வோ அற உணர்வோ அற்ற, சுயநலனே வளர்ச்சி என்ற உணர்வுகளைக் கொண்டவர்களாக நம் குழந்தைகளை நம்முடைய கல்விமுறை வெற்றிகரமாக உருவாக்குகிறது. நம்முடைய சிந்தனையையும் அது ஊழல் சிந்தனையாக்கிவிடுகிறது.
இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், அரசியல்வாதிகள்தான் என்று நம்புவதுகூட நம்முடைய ஊழல் சிந்தனையின் விளைவுதான். உண்மையில், நம் அறிவுச் சமூகத்தின் அத்தனை பிரதிநிதிகளும், ஊழலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்; விலைக்கு வாங்கக்கூடியவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். புகழ்வாய்ந்த நம்முடைய கல்வி நிறுவனங்கள்கூட பெரிய தொழில்நிறுவனங்களுக்குச் சாதகமாக அறிக்கைகளையும் சான்றுகளையும் போலியாகத் தயாரிக்கக்கூடியவை. ஒடிசாவில் போஸ்கோ உருக்காலையால் ஏற்படக்கூடிய விளைவுகள்குறித்து ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர் குழுவில் நானும் ஒருவன். பிரபலமான சில நிறுவனங்களே போஸ்கோ நிறுவனத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சந்தேகத்துக்குரிய வகையில் வினாக்களைத் தயார்செய்ததுடன் போலியான வழிமுறைகளையும் அறிக்கை தயாரிப்பில் சேர்த்திருந்தன. நாம் எவ்வளவு மோசமான அடிப்படையைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்தான்.
இதன் மையம் எதுவென்று நினைக்கிறீர்கள்?
1960-களில் காலனி ஆதிக்கத்திலிருந்து ஆப்பிரிக்க நாடுகளை விடுவிக்க நடந்த முயற்சிகளின்போது பிரான்ட்ஸ் பேனன் கூறினார், “கறுப்புத் தோல்கள் - வெள்ளை முகமூடிகள்” என்று. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர், அவர்களைவிட மோசமான அதிகாரிகளை விட்டுச் சென்றனர் - அவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடைய நீட்சியில் பள்ளிக்கூடங்கள் முதல் சட்டமியற்றும் மன்றங்கள் வரை ஆதிக்கச் சக்திகளுக்கு ஏற்ற மாதிரியே வடிவமைக்கப்படுகின்றன. ஆங்கிலேயர்களே இயற்றியிராத சட்டங்கள் தடா, பொடா போன்றவை. இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.
இந்தியாவின் ஜனநாயகத்துக்கு விடப்படும் சவால்கள் என்றும், நீக்கப்பட வேண்டியவை என்றும் எந்தெந்தச் சட்டங்களைக் கருதுகிறீர்கள்?
நிறைய. காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், இந்தியத் தண்டனையியல் சட்டப்பிரிவில் உள்ள தேசத் துரோகச் சட்டம் 124ஏ, தேசத்துக்கு எதிராகப் போர் தொடுப்பதுபற்றிய சட்டம் 121ஏ ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நாட்டின் உண்மையான ஜனநாயக விழுமியங்களுக்காகப் போராடும் எளிய மக்களை இந்தச் சட்டங்கள் மூலமாகத்தான் அரசாங்கம் ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. இன்னும், மரண தண்டனையை அனுமதிக்கும் சட்டம் தொடங்கி நிறைய இருக்கின்றன.
இந்தச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது சரிதான்.ஆனால், அப்பாவிகளுக்கு மட்டும் அல்லாமல் கடுமையான குற்றவாளிகளுக்கும்கூடக் குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள் மறுபுறம் மக்களைப் பாதுகாக்கும் அரசின் பொறுப்பை எந்த அளவுக்குக் கருத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள்?
மாவோயிஸ்ட்டுகள் ஆறு காவலர்களைக் கடத்திக் கொண்டுபோய் வைத்திருந்தபோது, மீட்பதற்காக பஸ்தார் காட்டில் 60 கி.மீ. நடந்துசென்றது மனித உரிமை ஆர்வலர்கள்தான். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அநீதியை யார் இழைத்தாலும், மனித உரிமைகள் எங்கே கேள்விக்குள்ளானாலும் அதற்கு எதிராகப் போராடுகிறோம். எங்களுடைய மனச்சாட்சியும் நாங்களும் விற்பனைப் பொருட்கள் அல்ல.
பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு வராத - பழங்குடிகளின் போராட்டங்கள் உட்பட - நிறையப் போராட்டங்களை நெருக்கமாக இருந்து கவனித்திருக்கிறீர்கள். அவை எதை உணர்த்துவதாக நினைக்கிறீர்கள்?
வெறும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்கள் அல்ல அவை. அடக்குமுறையைக் கையாளும் முரட்டு அரசு, சகமனிதர்களின் துயரைக் கண்டு கவலைப்படாத உணர்ச்சியற்ற சமூகம், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் அரிய வளங்களைச் சூறையாடும் நாசவேலைகள் என அனைத்துக்கும் எதிரான போராட்டங்கள். முக்கியமாக நாளைய இந்தியாவுக்கான போராட்டங்கள். உண்மையில், இந்தியாவில் ஜனநாயகம் என்பது எப்போது வேண்டுமானாலும் அறுபடக்கூடிய மெல்லிய கயிற்றில்தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதை அவர்கள்தான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் எதிர்காலத்துக்கு நம்பிக்கைக்குரிய அம்சமாக எதைப் பார்க்கிறீர்கள்?
உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜனநாயகமும் அதைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும், இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற போராளிகளும்தான் நம்பிக்கை. இன்னும்கூட அவகாசம் இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் – கிளர்ந்தெழுந்து, சுதந்திரமான – சமத்துவமான – இந்தியாவுக்காகப் போராட வேண்டும். அரசியலும் தேர்தலும் தகாதது அல்ல என்று உணர வேண்டும்.
தொடர்புக்கு: samas@kslmedia.in
தி இந்து
No comments:
Post a Comment