பாரதி, அரவிந்தர், வ.வே.சு. அய்யர் என்ற இந்த மூவரும் காந்தியுகத்திற்கு முந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள். இவர்களில் பாரதியை நாம் நினைவுபடுத்தும் அளவிற்கு, மற்றவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. அரவிந்தர் தீவிரவாதியாக இருந்து ஆன்மிகவாதியாக மாறியவர். ஆனால் வ.வே.சு. அய்யர் கடைசி வரை தீவிரவாதியாகவே இருந்து மறைந்தவர்.
.
இந்த வட்டத்தில் பாரதிக்கு அடுத்தபடியாக வ.வே.சு. அய்யர், தமிழ் இலக்கியத்திற்கு மிகப் பெரிய தொண்டு செய்துள்ளார். வ.வே.சு. அய்யர் லண்டன் சென்று பாரிஸ்டர் படித்தார். அங்கு வீரசாவர்க்கரைச் சந்தித்தார். அங்கு கம்பராமாயணம் பற்றி சொற்பொழிவாற்றினார். டி.எஸ்.எஸ்., ராஜன், எம்.பி.டி. ஆச்சார்யா ஆகியோருடன் பழகினார். துருக்கிப் புரட்சி வீரர் கமால் ஆட்டா துருக்கினைச் சந்தித்தார். பின்னர் புரட்சித்தாய் மேடம் காமாவினைச் சந்தித்தார். "இந்தியா' பத்திரிகையில் எழுதினார்.
1909இல் காந்தியைச் சந்தித்தார். சாவர்க்கர் கைதானவுடன் சாவர்க்கருக்காக வழக்காட பல ஏற்பாடுகளைச் செய்தார். பாரீஸ் சென்று அபிநவ பாரத் சபையின் பாரீஸ் கிளையில் டிரஸ்டிகளில் ஒருவராகப் பணியாற்றினார். 1910 ஆகஸ்ட் 27இல் இன்டர்நேஷனல் சோஷலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள மேடம் காமாவுடன் சென்றார். பாரீஸ் குழு என்ற புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டார். பின்னர் எகிப்து, பெர்லின் சென்று 1910இல் இந்தியா வந்தார். வரும் வழியில் ஒற்றர்களை ஏமாற்ற பல வேடங்கள் புனைந்து தப்பினார்.
1911இல் வாஞ்சிநாதன் வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார். வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தார். மேடம் காமா அனுப்பிய பிரெüனிங் பிஸ்டலை வாஞ்சியிடம் அய்யர் கொடுத்தார். பரத்துவாஜ ஆசிரமம் என்ற குருகுலத்தை நிறுவினார். 1881 ஏப்ரல் 2ஆம் தேதி பிறந்த அய்யர் 1925இல் மகள் சுபத்திராவைக் காப்பாற்றுவதற்காக பாபநாசம் அருவியில் குதித்தார். பிறகு மீளவேயில்லை.
அய்யரது இலக்கியப் பணிக்குப் பின்புலமாக இருந்தது அவரது பரந்த படிப்பு. தமிழ்நாட்டு அறிஞர்களில் இவ்வளவு மொழிப் புலமை வாய்த்த ஆய்வாளர்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு முதலான மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். அந்த மொழிகளில் உள்ள காவியங்களை அந்த மொழிகளிலேயே படித்தவர் அவர். 1916ஆம் ஆண்டில் மண்டையம் எஸ். ஸ்ரீனிவாசச்சாரியாருடன் இணைந்து "கம்ப நிலையம்' என்ற பதிப்பகம் ஒன்றை நிறுவினார்.
கம்பனை மற்றக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுக் காட்டி, இவர்கள் எல்லாரையும் விடக் கம்பன் உயர்ந்தவன் என்று கூறியவர் அய்யர்.
"கவி லோகத்தில் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடி சாய்ந்து வணங்க வேண்டியதுதான். மேல்நாட்டாருக்குள் கவி சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மோலியர், கதே ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை.'
இந்த நோக்கில் அய்யர், கம்பன் பற்றி ஆங்கிலத்தில் 'ஓஹம்க்ஷஹழ்ஹம்ஹஹ்ஹய்ஹ அ நற்ன்க்ஹ்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல், அய்யர், பெல்லாரி சிறையில் (1921) இருக்கும்பொழுது எழுதப்பட்டது.
இந்த முயற்சியுடன் அய்யர் நிற்கவில்லை. சாமன்யனுக்கும் விளங்க வேண்டும் என்று கம்பராமாயணத்தினை பதம் பிரித்து பாலகண்டத்தினை சுருக்கி வெளியிட்டார். இதேபோன்று பாட பேத ஆராய்ச்சி, கம்பனது காலம் பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றிலும் அய்யர் ஈடுபட்டார்.
இத்துடன் மட்டுமல்லாமல் கவிதை பற்றிய கொள்கையை மூன்று கட்டுரைகளில் விவரித்துள்ளார். அவரது "காவிய உத்தியானம்' என்ற கட்டுரை உலக இலக்கியங்கள் அனைத்தினையும் பற்றியது. இவை தவிர வ.வே.சு. அய்யரைத் தமிழ் சிறுகையின் மூலவர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவரது "மங்கையர்க்கரசியின் காதல்' என்ற தொகுப்பு கலாபூர்வமான சிறுகதைகளைக் கொண்டது. பாரதியின் "கண்ணன் பாட்டு' முன்னுரை அவரது ரசனைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
ஒரு தீவிரமான தேசபக்தர், அப்பழுக்கற்ற இலக்கியவாதி என்று அய்யர் பரிணாமம் பெற்றுள்ளார்.
சேரன்மகாதேவியில் அவர் நடத்திய குருகுலத்தில் ஜாதி வேறுபாடு காட்டியவர் என்ற குற்றச்சாட்டையே வைக்கின்றனர். இதன் காரணமாக அவரது மற்ற அம்சங்கள் மூடி மறைக்கப்பட்டு விட்டன.
தினமணி
No comments:
Post a Comment