கிழக்கு இந்தியாவின் அசலான முகத்தைப் பார்க்க வேண்டும் என்றால், கொல்கத்தாவிலிருந்தோ பாட்னாவிலிருந்தோ பார்ப்பதில் அர்த்தம் இல்லை; ஜார்க்கண்டின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் பயணத்தைத் தொடங்குங்கள் என்றனர் நண்பர்கள்.
தன்பாத் ரொம்பவே பொருத்தமானதாக இருந்தது. ஜார்க்கண்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று தன்பாத். மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, அந்தமான்-நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவின் சகல அம்சங்களையும் தன்பாத்திலிருந்து தொடங்கிய பயணம் பார்க்க உதவியது. தன்பாத்தைச் சுற்றிச் சுற்ற ஆரம்பித்தேன்.
தன்பாத், இந்தியாவின் நிலக்கரித் தலைநரம். தன்பாத்தைச் சுற்றிப் புறப்பட்டால் நான்கு ஊருக்கு ஒரு ஊர் என்கிறரீதியில் நிறைய சுரங்கங்களைப் பார்க்க முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். ஆண்டுக்குச் சுமார் 27.5 மில்லியன் டன் நிலக்கரியை இந்தச் சுரங்கங்கள் உற்பத்திசெய்கின்றன. அனல்மின் உற்பத்தியும் புனல்மின் உற்பத்தியும் ஜரூராக நடக்கின்றன.
நாட்டிலேயே மும்பைக்கு அடுத்து, இந்திய ரயில்வேக்கு வருமானம் கொடுப்பது தன்பாத் கோட்டம்தானாம். ஆனால், இந்தத் தொழில் - வருமானப் புள்ளிவிவரங்களையெல்லாம் வைத்து, தன்பாத்தையோ ஜார்க்கண்டையோ கற்பனைசெய்தால் ஏமாந்துபோவீர்கள். சுற்றிலும் வனாந்தரம், நடுநடுவே சுரங்கங்கள், பெரும் இடைவெளி விட்டு வீடுகள், பரிதாபமான உடைகளில் வியர்க்க விறுவிறுக்க ஓடும் மக்களே இங்கு பெரும்பான்மை அடையாளங்கள்.
பத்து ரூபாயின் உண்மையான மதிப்பு
ஒரு சுரங்கத்துக்கு அருகே வண்டி நின்றபோது ரயில் பாதையையொட்டி, ஒரு டீக்கடையைப் பார்த்தேன். பத்து நைந்துபோன லாரி டயர்கள் சுவர்போல அடுக்கப்பட்டு, வெயிலைச் சமாளிக்க வேட்டித் துணி கூரையாக்கப் பட்டிருந்தது. அவ்வளவுதான் கடை.
நான்கு கற்களை அடுக்கி டீ போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். ஒரு டீ ஒரு ரூபாய் (தெற்கைத் தாண்டிவிட்டால், டீ அளவு பொதுவாகவே குறைவு - நாம் குடிப்பதில் பாதி என்று சொல்லலாம்). நான்கு பேர் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும் என்றேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கு விற்றால் அதிகம் என்கிறார். இருபது ரூபாய் கிடைத்தால் சந்தோஷம் என்கிறார்.
தன்பாத்தில் மட்டும் அல்ல; கிழக்கிந்தியாவின் பல இடங்களிலும் - பத்துக்கும் இருபதுக்கும் நாள் முழுவதும் உழைக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறார்கள்? கொல்கத்தாவில் ஒரு கைரிக்ஷாக்காரர் குடும்பத்தைப் பார்த்தேன்.
சோறு வடித்தது. அரிசி கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கையும் கொஞ்சம் உப்பையும் போட்டு, அந்தச் சோற்றில் பிசைந்தது. தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய். கயாவில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் ரொட்டியையும் மிளகாய்ச் சட்னியையும் மட்டுமே உண்டு வாழ்பவர்களைச் சந்தித்தேன். ஜார்க்கண்டில் பலருக்குப் பல வேளைகளில் சன்னா மட்டுமே உணவு. உண்மையில் பத்து ரூபாயின் உண்மையான மதிப்பைக் கிழக்கு இந்தியா உணர்த்துகிறது.
சுரண்டித் தின்னத்தான் வளமா?
கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதி வங்கக் கடலோரத் திலும் கங்கைச் சமவெளியிலுமே இருக்கிறது. ஜார்க்கண்ட் மலைப் பிரதேசம் என்றாலும் கனிம வளத்துக்குப் பஞ்சம் இல்லை. ஆனாலும், ஏழ்மை சூழ்ந்திருக்கிறது. காரணம், மோசமான அரசியல்.
“பிஹாரையே எடுத்துக்கொள்ளுங்களேன், பண்டைய இந்தியாவின் கல்வி மையம் இது. ஐந்தாம் நூற்றாண்டிலேயே உலகின் முக்கியமான கல்விக் கேந்திரமாக இருந்தது நாளந்தா. பின்னர் ஏற்பட்ட அழிவுகளைக்கூட நாம் காரண மாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், பிரிட்டிஷார் காலத்தில் மீண்டும் கல்வியைத் தூக்கி நிறுத்தினார்கள். ஆனால், சுதந்திரத்துக்குப் பின், சத்யேந்திர நாராயண் சின்ஹாவோடு கல்வித் துறை இங்கு புதைகுழிக்குச் சென்றுவிட்டது. வேலைவாய்ப்புகளை இது நாசமாக்கிவிட்டது.
விளைவு, இன்று பிஹாரிகள் நாடு முழுக்கக் கூவிக்கூவி வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பேராசிரியர் சத்யேந்திரா.
“ஏனைய பகுதிகளின் நிலையும் இதுதான். ஒடிசாவை எடுத்துக்கொண்டால், ஒரியர்கள் எந்த அளவுக்கு வேலைக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், இன்றைக்கு ஒரியர்கள் அதிகம் வசிக்கும் நகரம் கொல்கத்தா என்கிற அளவுக்கு” என்கிறார் அவர்.
ரயிலில் சந்தித்த, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, “எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களைச் சுரண்டித் தின்னத்தான் அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும் விரும்புகின்றன. நாங்கள் நம்பிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணை போய்விட்டார்கள். மாவோயிஸ்ட்டு களின் எங்களுக்காகக் கேள்வி கேட்கிறார்கள்” என்றார்.
கிழக்கு இந்தியாவின் கணிசமான பகுதிகள் மாவோயிஸ்ட்டுகள் கைகளில் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் அரசாங்கம் அவர்கள் நடத்துவது. சகர்பந்தா வனப் பகுதியில் மத்தியப் படைகளால் ‘விடுவிக்கப்பட்ட' 15 கிராமங்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கின்றன. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டபோது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு என்று சொன்னார்கள். இதுதான் கள நிலைமை!
இடப்பெயர்ச்சி எனும் சாபம்
கிழக்கு இந்தியாவின் இன்றைய பெரும் பிரச்சினை வேலைவாய்ப்பின்மையும் அதனால் ஏற்படும் இடப் பெயர்ச்சியும். “என் அம்மா ரயில் நிலையத்தில் அழுது கொண்டு என்னை வழியனுப்பியபோது, இரண்டு வருடங்களில் பணம் சம்பாதித்துக்கொண்டு வருவேன் என்று சொன்னேன்.
இன்றைக்கு எனக்கு நான்கு பேரப் பிள்ளைகள் ஆகிவிட்டது. என் காலத்தில் திரும்புவேனா என்று தெரியவில்லை” என்கிறார் கொல்கத்தாவில் ஆட்டோ ஓட்டும், அறுபதுகளில் இருக்கும் அப்துல் கபூர்.
இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிடவும் கிழக்கின் கிராமப்புற வாழ்க்கை அழகானதாக இருக்கிறது. ரொம்பவும் எளிமையான வாழ்க்கை முறை. கிழக்கின் ஆகப் பெரும்பான்மையான கிராமப்புற அடுப்புகள் வறட்டியால் எரிக்கப்படுகின்றன என்பது ஓர் உதாரணம். மேற்கு வங்கத்தில் போக்குவரத்து, சுகாதார வசதிகள் ஓரளவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பிஹார், ஒடிசா மோசம். ஜார்க்கண்ட் படுமோசம்.
“இங்கு நிலத்துக்கோ வளத்துக்கோ பஞ்சம் இல்லை. உழைப்பவர்களுக்கு நில உரிமை வேண்டும். அப்புறம் போக்குவரத்து, சுகாதார வசதிகளை உருவாக்கித்தர வேண்டும். அரசாங்கம் அதைச் செய்துகொடுத்தாலே போதும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட முடியும்” என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.
ரூ. 467 சொத்துள்ள வேட்பாளர்!
கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவது என்பது பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனவு அல்ல. நாட்டின் ஏழ்மையான வேட்பாளர்கள் இங்குதான் போட்டியிடுகிறார்கள் (பூஜ்ய சொத்து மதிப்புக் காட்டுபவர்கள் தனிரகம்). ஏதோ சுயேச்சை ஆசாமிகள் அல்ல. கட்சி வேட்பாளர்கள். ஒடிசாவின் மோகனா தொகுதியில் போட்டியிடும் பூர்ண சந்திர புயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வேட்பாளர். சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரூ.467. கந்தமால் தொகுதியில் போட்டியிடும் ஒடிசா ஜன மோர்ச்சாவின் வேட்பாளர் சந்தீப் குமார் மெஹரின் சொத்து ரூ. 500. கட்சி சார்பில் பத்தாயிரம், இருபதாயிரம் தருவார்கள். தெரிந்தவர்கள் தரும் நூறு, இருநூறு என்று ஆயிரம் இரண்டாயிரம் தேறும். வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டியதுதான்” என்கிறார்கள். இப்படிக் காசில்லாமலே ஜெயித்தவர்களும் உண்டாம்.
தேசியக் கட்சிகளின் தோல்வி
ஒருகாலத்தில் தேசியக் கட்சிகளின் ஆளுகையில் இருந்த கிழக்கு இந்தியா இன்றைக்குத் தங்களுக்கு மாநிலக் கட்சிகளே வேண்டும் என்று விரும்புவதுபோலத் தெரிகிறது. காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள். பா.ஜ.க., கம்யூனிஸ்ட்டுகள்மீது நம்பிக்கை இல்லை. நிதீஷ் குமாரையும் நவீன் பட்நாயக்கையும் தங்கள் மாநிலத் தலைவர்களாகவே பார்க்கிறார்கள்.
மம்தா கட்சியினர் மீது இல்லாத நம்பிக்கை மம்தாமீது இருப்பதைப் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த ஒரியர்கள் - பிஹாரிகளிடம் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி நிதீஷ், நவீன் மீது மரியாதை வெளிப்படுகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நிலைமை மாறும், நாங்களும் போய்விடுவோம் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய கனவுகளில்தான் வாழ்கிறது கிழக்கு இந்தியா!
ஓர் உணவு: சன்னா
பொதுவாகவே, தென்னிந்தியாவுக்கு மேல் எந்த மாநிலம் சென்றாலும் சன்னாவைக் காண முடியும். ஏனைய பிரதேசங்களில் சன்னா நொறுக்குத்தீனி என்றால், கிழக்கு இந்தியாவில் எளிய மக்களுக்கு அதுவே பல வேளைகளில் உணவும்கூட. ஆகையால், ஏனோ தானோ என்று செய்யாமல் ரொம்பவும் கரிசனத்துடன் செய்கிறார்கள்.
இரு கை அளவு நன்கு முளைவிட்ட கொண்டைக் கடலை, அதில் சில துண்டுகள் தக்காளி, வெங்காயம், மல்லித் தழை, பச்சை மிளகாய் சீவல், இவற்றின் மீது அரை மூடி எலுமிச்சைச் சாறு. இந்தக் கலவைதான் சன்னா. நல்ல சத்து. பசிக்கும் ஈடுகொடுக்கிறது. காடு, மலை என்று தேர்தலுக்குச் சுற்ற வேண்டியிருக்கும் சூழலில், வேட்பாளர்கள் வண்டிகளில் சன்னாவும் பயணிக்கிறது!
தொடர்புக்கு: samas@kslmedia.in
தி இந்து
No comments:
Post a Comment