Monday, April 14, 2014

இந்தியா என்ன சொல்கிறது? வடக்கு




பெரிய குழப்பம் இது... வட இந்தியாவை எங்கிருந்து தொடங்குவது? மேலே ஜம்மு காஷ்மீரிலிருந்து இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, சண்டீகர், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் வரை நீண்டு கிடக்கும் மாபெரும் பரப்பின் பயணத்தை எங்கிருந்து தொடங்குவது? உண்மையிலேயே மிக நீண்ட அலைச்சல் இது.

ராஜஸ்தானை எடுத்துக்கொண்டால், நிலப்பரப்பில் அது காங்கோவுக்குச் சமம். உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், மக்கள்தொகையில் அது பிரேசிலுக்குச் சமம். டெல்லி, ஜெய்பூர், லக்னோ, கான்பூர், இந்தூர், போபால், காசியாபாத், லூதியானா, அமிர்தசரஸ் என்று நீளும் வாய்ப்புகளில் வாரணாசியைத் தேர்ந்தெடுத்தேன்.

ஒரு நகரத்தை எவ்வளவு நாசம் ஆக்கலாம், எப்படியெல்லாம் நாசம் ஆக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் வாரணாசியின் ரயில் நிலையத்திலிருந்தே தெரிகின்றன. புகையும் புழுதியும் கலந்த காற்றைக் கிழித்துக்கொண்டு, நெரிசல் மிகுந்த குறுக லான சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இடையே மெல்லப் புகுந்தது ஆட்டோ. “எங்கள் ஊர் உள்ளபடி இரண்டு ஊர்கள்.

நீங்கள் இந்த நவீன ஊரை மறந்துவிட வேண்டும். கங்கைக் கரையை ஒட்டியுள்ள பழைய காசியை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். காசிக்கு ஐந்து சிறப்புகள் உண்டு. இங்கு மாடுகள் முட்டாது, கருடன்கள் பறக்காது, பல்லிகள் கவுளி சொல்லாது, பூக்கள் மணக்காது, பிணங்கள் நாறாது” என்று தொடங்கினார் ஆட்டோக்காரர். “இங்கு போக்குவரத்து விதிகள் எதுவும் எடுபடாது என்ற இன்னொரு சிறப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “அந்தச் சிறப்பு ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்துக்கும் சொந்தமானது. வாரணாசிக்காரர்கள் மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும்?”

சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பின் அடைந்து காசி கங்கைக் கரையை அடைந்தேன்.

சாவதற்கு ஓர் ஊர்

மரணத்துக்குப் பேர்போன ஊர் காசி. காசியில் சாக வேண்டும் அல்லது செத்த பின் இங்கு எரியூட்டப்பட வேண்டும் - அப்படி நடந்தால் வாழும் காலத்தில் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் களைந்து சொர்க்கத்துக்குச் சென்றுவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. காசி கங்கைக் கரையை ஒட்டியுள்ள நூற்றுக் கணக்கானோரின் பிழைப்பை இந்த நம்பிக்கை வாழவைக்கிறது.

“ஒரு பிணத்தை இங்கு எரிக்க குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் ஆகும்; வசதி படைத்தவர்கள் என்றால், இருபது முப்பதாயிரமும் செலவழிப்பார்கள். இங்கு சீசன், உச்சபட்சக் கோடையும் உச்சபட்சக் குளிரும்தான். சீசனில் நூறிலிருந்து இருநூறு பிணங்கள் வரை வரும்” என்கிறார்கள்.

அரிச்சந்திரா படித்துறை நோக்கிச் சென்றேன். காசியில் இப்படி ஏராளமான படித்துறைகள் உண்டு. அவற்றில் மன்னர் அரிச்சந்திரன் பிணங்களை எரித்த கரையாம் இது. ஏற்கெனவே பிணங்கள் எரிந்துகொண்டிருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் பிணங்கள் வாகனங்களில் வரிசை கட்டி நின்றன. படித்துறையில் அமர்ந்து, எரியும் பிணங்களை ஏராளமானோர் பார்த்துக்கொண்டிருந்தனர். தவிர, அரசாங்கம் வேறு, உட்கார்ந்து பார்க்கும் மேடையைக் கட்டிவிட்டிருக்கிறது.

அதிலும் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிணங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் சிறுவர்கள். தீயின் உக்கிரத்துக்கு அருகே, கொட்டும் வியர்வையில் எதையும் பொருட்படுத்தாமல், ஏற்கெனவே எரிந்த பிணங்களின் சாம்பலை மண்வெட்டியால் வெட்டிச் சுமந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். “படிக்கவில்லையா?” என்று கேட்டால், “ஏதோ இதனால்தான் சாப்பாடு கிடைக்கிறது சார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையைப் பார்க்கிறார்கள். எதிரே ஒரு கடல்போல பிரம்மாண்டமான கங்கை. இந்தியாவின் சகல பாவங்களையும் சுமந்து நகர்ந்துகொண்டிருக்கிறது.

அம்மா, ஐயா, இளவரசர், சாமியார்கள் கதை

வட இந்தியாவின் உயிர்நாடி கங்கைதான். “ஆனால், கங்கை கொஞ்சம்கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே யமுனையைக் கொன்றுவிட்டோம்; இப்போது கங்கையையும் கொன்றுகொண்டிருக்கிறோம்” என்கிறார் சூழலியலாளர் வந்தனா சிவா. சுற்றுச்சூழல் விஷயத்தில், அரசியல்வாதிகள் காட்டும் அலட்சியத்தைக் கடுமையாக அவர் சாடுகிறார். “ஆனால், வட இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில் எல்லாமே அவர்களுக்கு அலட்சியம்தான்” என்கிறார் விவசாயி ராஜு பையா.

சிரிக்காமல் கேலி பேசும் இந்த மனிதரை அமேத்தியில் சந்தித்தேன். “எங்களூரில் ஆட்சியாளர்களிடையே ஒரே வேறுபாடுதான். அம்மா (மாயாவதி) தான் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது சாலைகளைக் கழுவிவிடச் சொல்வார். ஐயா (முலாயம் சிங் யாதவ்) தன் மகன், மருமகள் எங்கு சென்றாலும் அவர்கள் நடப்பதற்கு ரோஜா மலர்களைச் சாலையில் இறைக்கச் சொல்கிறார். அவ்வளவுதான்.

சாமியார்கள் (பா.ஜ.க.) கதையைச் சொல்ல வேண்டியதில்லை. அக்கப்போர் அரசியல் அவர்களுடையது. இளவரசர் (ராகுல்) இங்கு எப்போதாவது வருவார். ஒரு ரயில் விட்டால் எங்களுக்கு எல்லாம் நடந்துவிடும் என்பது இளவரசர் குடும்பத்தின் நினைப்பு” என்கிறார்.

அமேதியைப் பார்த்தபோது உண்மை உரைத்தது. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று இந்திரா குடும்பம் மாற்றி மாற்றிக் கையில் வைத்திருக்கும் தொகுதி இது. ரயில் நிலையத்தையும் ஊரை இணைக்கும் சில சாலைகளையும் தவிர, ஒரு சராசரியான உத்தரப் பிரதேச நகரத்துக்கும் அமேதிக்கும் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியவில்லை. ரேபரேலியின் நிலையும் இதுதான். “நாட்டுக்கு எட்டுப் பிரதமர்களைத் தந்த மாநிலம் இது. இன்றைக்கும் உத்தரப் பிரதேசம்தான் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப்போகிறது. ஆனால், எங்கள் தலைவிதி மாறப்போவதில்லை” என்கிறார்கள்.

கிராமங்களின் உறைநிலை

இமயமலை எல்லையில் தொடங்கினால், விந்திய- சாத்புரா மலைத்தொடர்கள் வரை மேற்கே தார் பாலைவனம் நீங்கலாக, வட இந்தியாவின் பெரும் பகுதிகள் வளமானவைதான். சிந்து – கங்கைச் சமவெளியில்தான் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளன. உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இமயமலையை ஒட்டியிருக்கின்றன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவை காடுகள் மிகுந்தவை. ஆக, வளங்களுக்குக் குறைவு இல்லை.

பிரச்சினை எங்கே ஆரம்பிக்கிறது என்றால், வட இந்தியாவின் ஆகப் பெரும்பான்மைப் பகுதிகள் கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன; ஆனால், கிராமங்களை இன்னும் அரை நூற்றாண்டு பின் தள்ளியே வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள் (நகரங்களும் நாசமாக இருப்பது தனிக் கதை).

உத்தரப் பிரதேசத்தில் அசாரா கிராமத்தில் பெண்கள் ஆண்களைக் கண்டால் இன்னமும் முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள். பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று பஞ்சாயத்துக்காரர்களால் தடை விதிக்கப்பட்ட கிராமம் இது. மத்தியப் பிரதேசத்தில் பகாரியா சோர் கிராமத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுச் சிலர் இறக்க அதோடு அந்தக் கிராமத்தையே எய்ட்ஸ் கிராமம் என்று புறக்கணித்துவைத்திருக்கின்றன சுற்றுப்புற ஊர்கள்.

ஹரியாணாவின் பல கிராமங்களில் பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் சுரிதார் நீங்கலாக எந்த உடையும் போடக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றன பஞ்சாயத்து அமைப்புகள். எல்லா இடங்களிலுமே சாதிய அமைப்பு மிக வலுவான சங்கிலிகளால் தலித் மக்களைப் பிணைத்து அவர்கள் மீதேறி நிற்கிறது.

வட இந்தியாவின் பெரும்பாலான கிராமங்கள் – குறிப்பாக சத்தீஸ்கரில் - மிகுந்த இடைவெளிக்கு இடையே இருக்கின்றன. அகன்ற நிலப்பரப்பில் முப்பது நாற்பது கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு கொத்தாகப் பத்து இருபது வீடுகள். அவ்வளவுதான். அது ஒரு கிராமம்! சாலை, மருத்துவமனை வசதி ஏதும் இல்லை. மக்கள் தாங்களாக மண் பாதையில் செங்கற்களைப் பதித்து சைக்கிள் ஓட்டும் வழி அமைத்திருக்கிறார்கள்.

“அரசாங்கம் எந்தப் பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ளாததாலேயே ஊர்ப் பஞ்சாயத்துக்கு எல்லா அதிகாரங்களும் சென்றுவிடுகின்றன. ஆகையால், அவர்கள் வைத்ததே சட்டம். ஓட்டுக் கேட்க இவர்களிடம்தான் வர வேண்டும் என்பதால், அரசியல் கட்சிகள் இவர்களைப் பகைத்துக்கொள்வதில்லை. வட இந்தியக் கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள்தான் குறுநில மன்னர்கள்” என்று சொன்னார் டெல்லியில் படிக்கும் ஹரியாணா மாணவி ஆதீத்ரி.

தண்ணீர் தண்ணீர்

இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்சினைக்கு முதல் களபலியாகும் மாநிலமாக ராஜஸ்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அஜ்மீரில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம், அதற்கு மக்கள் இரவு இரண்டு மணிக்கு சாலையில் நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் சூழல். மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அஜ்மீரைச் சேர்ந்த ரதோட்டிக்கு இது சகஜம். “எங்கள் நிலை எவ்வளவோ மேல். பார்மர், பாலி, நகௌர் பகுதிகளில் எல்லாம் வாரத்துக்கு ஒரு முறைதான் விநியோகம்.

இன்னும் கிராமப்புறங்களை நோக்கிச் சென்றால், இரண்டு குடம் தண்ணீருக்குப் பல மைல்கள் நடப்பவர்களை சகஜமாகப் பார்க்க முடியும். குடிக்கவே இந்தக் கதி என்றால், விவசாயத்தின் கதியை ஊகித்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.

கொல்லும் போதை

பஞ்சாப், ஹரியாணாவில் இந்தப் பிரச்சினை இல்லை. இப்போதும் பஞ்சாப் வாரிக்கொடுக்கிறது. நாட்டின் கோதுமை உற்பத்தியில் 19.5%, அரிசி உற்பத்தியில் 11%, பருத்தி உற்பத்தியில் 10.26% பஞ்சாப் மட்டுமே தருகிறது. கார் இல்லாத கிராமங்கள் இல்லை. நன்றாக உழைக்கிறார்கள்; நன்றாகச் சாப்பிடுகிறார்கள்; நன்றாகக் கொண்டாடுகிறார்கள் பஞ்சாபிகள்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், அதீதமான பணப் புழக்கத்தின் விளைவாக ஏற்படும் தீமைகள். ஏற்கெனவே, மது நுகர்வில் நாட்டிலேயே முதல் இடத்தில் பஞ்சாப்தான் இருக்கிறது. இந்நிலையில், போதைப் பழக்கம் பஞ்சாபின் மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஹெராயின், பிரவுன் சுகர் தொடங்கி கஞ்சா, அபினி வரை சகல வஸ்துகளும் சரளமாகப் புழங்குகின்றன. “பஞ்சாபின் கிராமப்புறங்களில் 67% வீடுகளில் வீட்டுக்கு ஒருவராவது போதை நோயாளி. இவர்களில் 70% இளைஞர்கள்” என்கிறார் பேராசிரியை நவ்னீத்.

டெல்லி உங்களை வரவேற்பதில்லை

வட இந்தியாவைப் பொறுத்த அளவில், ஊரில் வேலை இல்லாவிட்டால், உடனே ரயில் ஏறும் ஊர் டெல்லி. ஒவ்வொரு நாளும் பல நூறு இளைஞர்கள் டெல்லிக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள். தானும் பிதுங்கி, வருபவர்களையும் பிதுக்கி நைந்துபோக வைக்கிறது டெல்லி. நகரங்களின் நகரமான டெல்லியில், அரசு புது டெல்லி பகுதியை மட்டும் ஒய்யாரமாக வைத்துக்கொண்டால் போதும் என்று நினைப்பதுபோல் இருக்கிறது. குதுப் மினார் சென்றபோது வெளியே ஆட்டோவுடன் சவாரிக்காக வெகுநேரம் காத்துக்கொண்டிருந்த அன்சாரியிடம் பேசினேன்.

“இங்கே சந்தோஷம் இல்லை சார். ஊருக்குப் போய்விடலாம் என்றால், பிச்சைதான் எடுக்க வேண்டும். என்றைக்காவது சூழல் மாறும் என்று நினைத்துதான் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். என்ன வாழ்க்கை இது” என்று தலையைக் குனிந்துகொண்டார். டெல்லியிலிருந்து இந்தியாவைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் அன்சாரியின் வாக்கியங்கள்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தன!

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

இந்தியா என்ன சொல்கிறது?- கிழக்கு





கிழக்கு இந்தியாவின் அசலான முகத்தைப் பார்க்க வேண்டும் என்றால், கொல்கத்தாவிலிருந்தோ பாட்னாவிலிருந்தோ பார்ப்பதில் அர்த்தம் இல்லை; ஜார்க்கண்டின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் பயணத்தைத் தொடங்குங்கள் என்றனர் நண்பர்கள்.

தன்பாத் ரொம்பவே பொருத்தமானதாக இருந்தது. ஜார்க்கண்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று தன்பாத். மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, அந்தமான்-நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவின் சகல அம்சங்களையும் தன்பாத்திலிருந்து தொடங்கிய பயணம் பார்க்க உதவியது. தன்பாத்தைச் சுற்றிச் சுற்ற ஆரம்பித்தேன்.

தன்பாத், இந்தியாவின் நிலக்கரித் தலைநரம். தன்பாத்தைச் சுற்றிப் புறப்பட்டால் நான்கு ஊருக்கு ஒரு ஊர் என்கிறரீதியில் நிறைய சுரங்கங்களைப் பார்க்க முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். ஆண்டுக்குச் சுமார் 27.5 மில்லியன் டன் நிலக்கரியை இந்தச் சுரங்கங்கள் உற்பத்திசெய்கின்றன. அனல்மின் உற்பத்தியும் புனல்மின் உற்பத்தியும் ஜரூராக நடக்கின்றன.

நாட்டிலேயே மும்பைக்கு அடுத்து, இந்திய ரயில்வேக்கு வருமானம் கொடுப்பது தன்பாத் கோட்டம்தானாம். ஆனால், இந்தத் தொழில் - வருமானப் புள்ளிவிவரங்களையெல்லாம் வைத்து, தன்பாத்தையோ ஜார்க்கண்டையோ கற்பனைசெய்தால் ஏமாந்துபோவீர்கள். சுற்றிலும் வனாந்தரம், நடுநடுவே சுரங்கங்கள், பெரும் இடைவெளி விட்டு வீடுகள், பரிதாபமான உடைகளில் வியர்க்க விறுவிறுக்க ஓடும் மக்களே இங்கு பெரும்பான்மை அடையாளங்கள்.

பத்து ரூபாயின் உண்மையான மதிப்பு

ஒரு சுரங்கத்துக்கு அருகே வண்டி நின்றபோது ரயில் பாதையையொட்டி, ஒரு டீக்கடையைப் பார்த்தேன். பத்து நைந்துபோன லாரி டயர்கள் சுவர்போல அடுக்கப்பட்டு, வெயிலைச் சமாளிக்க வேட்டித் துணி கூரையாக்கப் பட்டிருந்தது. அவ்வளவுதான் கடை.

நான்கு கற்களை அடுக்கி டீ போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். ஒரு டீ ஒரு ரூபாய் (தெற்கைத் தாண்டிவிட்டால், டீ அளவு பொதுவாகவே குறைவு - நாம் குடிப்பதில் பாதி என்று சொல்லலாம்). நான்கு பேர் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும் என்றேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கு விற்றால் அதிகம் என்கிறார். இருபது ரூபாய் கிடைத்தால் சந்தோஷம் என்கிறார்.

தன்பாத்தில் மட்டும் அல்ல; கிழக்கிந்தியாவின் பல இடங்களிலும் - பத்துக்கும் இருபதுக்கும் நாள் முழுவதும் உழைக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறார்கள்? கொல்கத்தாவில் ஒரு கைரிக்‌ஷாக்காரர் குடும்பத்தைப் பார்த்தேன்.

சோறு வடித்தது. அரிசி கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கையும் கொஞ்சம் உப்பையும் போட்டு, அந்தச் சோற்றில் பிசைந்தது. தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய். கயாவில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் ரொட்டியையும் மிளகாய்ச் சட்னியையும் மட்டுமே உண்டு வாழ்பவர்களைச் சந்தித்தேன். ஜார்க்கண்டில் பலருக்குப் பல வேளைகளில் சன்னா மட்டுமே உணவு. உண்மையில் பத்து ரூபாயின் உண்மையான மதிப்பைக் கிழக்கு இந்தியா உணர்த்துகிறது.

சுரண்டித் தின்னத்தான் வளமா?

கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதி வங்கக் கடலோரத் திலும் கங்கைச் சமவெளியிலுமே இருக்கிறது. ஜார்க்கண்ட் மலைப் பிரதேசம் என்றாலும் கனிம வளத்துக்குப் பஞ்சம் இல்லை. ஆனாலும், ஏழ்மை சூழ்ந்திருக்கிறது. காரணம், மோசமான அரசியல்.

“பிஹாரையே எடுத்துக்கொள்ளுங்களேன், பண்டைய இந்தியாவின் கல்வி மையம் இது. ஐந்தாம் நூற்றாண்டிலேயே உலகின் முக்கியமான கல்விக் கேந்திரமாக இருந்தது நாளந்தா. பின்னர் ஏற்பட்ட அழிவுகளைக்கூட நாம் காரண மாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், பிரிட்டிஷார் காலத்தில் மீண்டும் கல்வியைத் தூக்கி நிறுத்தினார்கள். ஆனால், சுதந்திரத்துக்குப் பின், சத்யேந்திர நாராயண் சின்ஹாவோடு கல்வித் துறை இங்கு புதைகுழிக்குச் சென்றுவிட்டது. வேலைவாய்ப்புகளை இது நாசமாக்கிவிட்டது.

விளைவு, இன்று பிஹாரிகள் நாடு முழுக்கக் கூவிக்கூவி வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பேராசிரியர் சத்யேந்திரா.

“ஏனைய பகுதிகளின் நிலையும் இதுதான். ஒடிசாவை எடுத்துக்கொண்டால், ஒரியர்கள் எந்த அளவுக்கு வேலைக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், இன்றைக்கு ஒரியர்கள் அதிகம் வசிக்கும் நகரம் கொல்கத்தா என்கிற அளவுக்கு” என்கிறார் அவர்.

ரயிலில் சந்தித்த, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, “எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களைச் சுரண்டித் தின்னத்தான் அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும் விரும்புகின்றன. நாங்கள் நம்பிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணை போய்விட்டார்கள். மாவோயிஸ்ட்டு களின் எங்களுக்காகக் கேள்வி கேட்கிறார்கள்” என்றார்.

கிழக்கு இந்தியாவின் கணிசமான பகுதிகள் மாவோயிஸ்ட்டுகள் கைகளில் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் அரசாங்கம் அவர்கள் நடத்துவது. சகர்பந்தா வனப் பகுதியில் மத்தியப் படைகளால் ‘விடுவிக்கப்பட்ட' 15 கிராமங்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கின்றன. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டபோது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு என்று சொன்னார்கள். இதுதான் கள நிலைமை!

இடப்பெயர்ச்சி எனும் சாபம்

கிழக்கு இந்தியாவின் இன்றைய பெரும் பிரச்சினை வேலைவாய்ப்பின்மையும் அதனால் ஏற்படும் இடப் பெயர்ச்சியும். “என் அம்மா ரயில் நிலையத்தில் அழுது கொண்டு என்னை வழியனுப்பியபோது, இரண்டு வருடங்களில் பணம் சம்பாதித்துக்கொண்டு வருவேன் என்று சொன்னேன்.

இன்றைக்கு எனக்கு நான்கு பேரப் பிள்ளைகள் ஆகிவிட்டது. என் காலத்தில் திரும்புவேனா என்று தெரியவில்லை” என்கிறார் கொல்கத்தாவில் ஆட்டோ ஓட்டும், அறுபதுகளில் இருக்கும் அப்துல் கபூர்.

இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிடவும் கிழக்கின் கிராமப்புற வாழ்க்கை அழகானதாக இருக்கிறது. ரொம்பவும் எளிமையான வாழ்க்கை முறை. கிழக்கின் ஆகப் பெரும்பான்மையான கிராமப்புற அடுப்புகள் வறட்டியால் எரிக்கப்படுகின்றன என்பது ஓர் உதாரணம். மேற்கு வங்கத்தில் போக்குவரத்து, சுகாதார வசதிகள் ஓரளவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பிஹார், ஒடிசா மோசம். ஜார்க்கண்ட் படுமோசம்.

“இங்கு நிலத்துக்கோ வளத்துக்கோ பஞ்சம் இல்லை. உழைப்பவர்களுக்கு நில உரிமை வேண்டும். அப்புறம் போக்குவரத்து, சுகாதார வசதிகளை உருவாக்கித்தர வேண்டும். அரசாங்கம் அதைச் செய்துகொடுத்தாலே போதும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட முடியும்” என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

ரூ. 467 சொத்துள்ள வேட்பாளர்!

கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவது என்பது பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனவு அல்ல. நாட்டின் ஏழ்மையான வேட்பாளர்கள் இங்குதான் போட்டியிடுகிறார்கள் (பூஜ்ய சொத்து மதிப்புக் காட்டுபவர்கள் தனிரகம்). ஏதோ சுயேச்சை ஆசாமிகள் அல்ல. கட்சி வேட்பாளர்கள். ஒடிசாவின் மோகனா தொகுதியில் போட்டியிடும் பூர்ண சந்திர புயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வேட்பாளர். சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரூ.467. கந்தமால் தொகுதியில் போட்டியிடும் ஒடிசா ஜன மோர்ச்சாவின் வேட்பாளர் சந்தீப் குமார் மெஹரின் சொத்து ரூ. 500. கட்சி சார்பில் பத்தாயிரம், இருபதாயிரம் தருவார்கள். தெரிந்தவர்கள் தரும் நூறு, இருநூறு என்று ஆயிரம் இரண்டாயிரம் தேறும். வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டியதுதான்” என்கிறார்கள். இப்படிக் காசில்லாமலே ஜெயித்தவர்களும் உண்டாம்.

தேசியக் கட்சிகளின் தோல்வி

ஒருகாலத்தில் தேசியக் கட்சிகளின் ஆளுகையில் இருந்த கிழக்கு இந்தியா இன்றைக்குத் தங்களுக்கு மாநிலக் கட்சிகளே வேண்டும் என்று விரும்புவதுபோலத் தெரிகிறது. காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள். பா.ஜ.க., கம்யூனிஸ்ட்டுகள்மீது நம்பிக்கை இல்லை. நிதீஷ் குமாரையும் நவீன் பட்நாயக்கையும் தங்கள் மாநிலத் தலைவர்களாகவே பார்க்கிறார்கள்.

மம்தா கட்சியினர் மீது இல்லாத நம்பிக்கை மம்தாமீது இருப்பதைப் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த ஒரியர்கள் - பிஹாரிகளிடம் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி நிதீஷ், நவீன் மீது மரியாதை வெளிப்படுகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நிலைமை மாறும், நாங்களும் போய்விடுவோம் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய கனவுகளில்தான் வாழ்கிறது கிழக்கு இந்தியா!

ஓர் உணவு: சன்னா

பொதுவாகவே, தென்னிந்தியாவுக்கு மேல் எந்த மாநிலம் சென்றாலும் சன்னாவைக் காண முடியும். ஏனைய பிரதேசங்களில் சன்னா நொறுக்குத்தீனி என்றால், கிழக்கு இந்தியாவில் எளிய மக்களுக்கு அதுவே பல வேளைகளில் உணவும்கூட. ஆகையால், ஏனோ தானோ என்று செய்யாமல் ரொம்பவும் கரிசனத்துடன் செய்கிறார்கள்.

இரு கை அளவு நன்கு முளைவிட்ட கொண்டைக் கடலை, அதில் சில துண்டுகள் தக்காளி, வெங்காயம், மல்லித் தழை, பச்சை மிளகாய் சீவல், இவற்றின் மீது அரை மூடி எலுமிச்சைச் சாறு. இந்தக் கலவைதான் சன்னா. நல்ல சத்து. பசிக்கும் ஈடுகொடுக்கிறது. காடு, மலை என்று தேர்தலுக்குச் சுற்ற வேண்டியிருக்கும் சூழலில், வேட்பாளர்கள் வண்டிகளில் சன்னாவும் பயணிக்கிறது!

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து


Sunday, April 13, 2014

இந்தியா என்ன சொல்கிறது?- வட கிழக்கு






வானிலிருந்து பார்க்கும்போது தன் அழகால் வாரிச்சுருட்டுகிறது குவாஹாத்தி. சுற்றிலும் மலைகளும் குன்றுகளும். பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா நதிக் கரையில் விரிந்திருக்கிறது. குழந்தைகள் வரையும் இயற்கைக் காட்சி ஓவியம்போல இருக்கும் நகரம், கால் பதித்து உள்ளே நுழைய நுழைய… ஒரு அழுமூஞ்சிக் குழந்தை ஆகிறது. ஒரு அழகான குழந்தையை மூக்குச்சளி வழிய அழுதுகொண்டேயிருக்கும்போது பார்க்க எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

கிழக்கு இந்தியாவின் நுழைவாயில்

குவாஹாத்திக்கு நீண்ட வரலாறு உண்டு. நரகாசுரன், சூரன் பகதத்தனின் புராணக் காலத்திலேயே அதன் கதை தொடங்கிவிடுகிறது. இப்போதும் அது அசாமின் தலைநகரம் மட்டும் அல்ல; அதுதான் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயில். அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஏழு சகோதரிகள் மாநிலங்களுக்கும் அதுதான் கல்வி - வணிக மையம். குவாஹாத்தியின் ஓராண்டு உற்பத்தி மதிப்பு ரூ. 6,000 கோடி ரூபாய் என்கிறார்கள். சர்வதேச அளவில் கொழும்புக்கு அடுத்த நிலையில் குவாஹாத்தி தேயிலை ஏல மையம் இருக்கிறது. குவாஹாத்தியில் உள்ள இந்திய அறிவியல் கழகமும் பல்கலைக்கழகமும் காட்டன் கல்லூரியும்தான் இன்றைக்கும் இந்த ஏழு மாநில மாணவர்களின் கனவுக் களங்கள். இங்குள்ள மருத்துவக் கல்லூரியே ஏழு மாநில எளிய மக்களின் கடைசி மருத்துவ நம்பிக்கை.

இவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் ஒரு மழை பெய்தால், நகரம் தண்ணீரோடு போக்குவரத்து நெரிசலில் மிதக்கிறது. நகரைப் பிரிக்கும் ரயில் பாதையில் ஊருக்குள் ஒரு ரயில் நுழைந்தால் 100 இடங்களில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. ஊருக்குள் வீதிக்கு வீதி சாக்கடைகள் வாய்க்கால்கள்போல ஓடுகின்றன. குவாஹாத்தியின் பிரதான சாலைகளில்கூட விளக்குகள் எரிவதில்லை. “உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் கீழை உலகின் ஒளி நகரம் என்று அழைக்கப்பட்ட இடம் இது. நீங்கள் பார்ப்பது குவாஹாத்தியின் அவலம் அல்ல; வட கிழக்கு இந்தியாவின் அவலம்” என்கிறார் பேராசிரியர் தெபர்ஷி தாஸ்.

எங்கே பிரதிநிதித்துவம்?

வட கிழக்கு இந்தியாவின் மக்கள்தொகை 3.9 கோடிதான். இவர்களில் 68% பேர் வசிக்கும் அசாமிலேயே ஒரு சதுர கிலோ மீட்டரில் 340 பேர்தான் வாழ்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 13. எனில், வட கிழக்கு எப்படி வெறிச்சோடிக் கிடக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. நாட்டின் மக்களவையில் வட கிழக்கின் பங்களிப்பு 25 இடங்கள். அதாவது, 4.6%. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வட கிழக்கின் பங்கான 3.1%-ஐவிடவும் இது அதிகம் என்றாலும், உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு மாநிலம் 80 மக்களவைத் தொகுதிகளுடன் இருக்கும்போது, இந்த ஏழு மாநிலங்களின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையே 25 என்றால், நம் அரசியல் கட்சிகள் பொருட்படுத்துமா? வட கிழக்குப் புறக்கணிப்பு அரசியலின் அடிப்படை இங்கிருந்தே தொடங்கிவிடுகிறது.

ஒருவனின் கதை அல்ல

பான் பஜாரில் டீ விற்றுப் பிழைக்கிறார் மேகாலயாவைச் சேர்ந்த லிங்டோ, “நன்றாகத்தான் படித்தேன். ஆனாலும், கல்லூரிகள் குறைவு என்பதால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அம்மா வேறு திடீரென்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்கள். ‘இங்கே பார்க்க வசதியில்லை. சென்னைக்குக் கொண்டுபோ’ என்று ஒரு தனியார் மருத்துவமனையில் சொன்னார்கள். அங்கே கூட்டிப்போனால் இரண்டே வாரங்களில் இரண்டு லட்சம் செலவு வைத்தார்கள். இருந்த வீட்டையும் விற்றோம். அப்புறம் 20 லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். ஊருக்கே அம்மாவை அழைத்துவந்துவிட்டேன். அம்மா செத்துவிட்டார். நான் ஊரைவிட்டு இங்கே சாயா விற்க வந்துவிட்டேன்” என்கிறார். சாதாரண நாய்க் கடிக்காகவும் காசநோய்க்காகவும்கூடத் தங்கள் மாநிலங்களைவிட்டு கொல்கத்தாவுக்கோ, சென்னைக்கோ ரயில் ஏறிய குடும்பங்கள் ஏராளம். அதேபோல, உயர் கல்விக்கும் பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கே அனுப்பிவைக்கிறார்கள். மிகப் பலவீனமான கல்வி, மருத்துவக் கட்டமைப்பு, இருக்கும் வீடு, நிலங்களையும் கல்விக்கோ, மருத்துவத்துக்கோ விற்றுவிட்டுக் கூலியாகி நிற்கிறார்கள். “ஏதாவது ஒரு வேலை வேண்டும்” - இது லிங்டோவின் பிரச்சினை மட்டும் அல்ல, இன்றைய வட கிழக்கின் தலையாய பிரச்சினை. இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. அதுதான் வட கிழக்கின் இன்றைய அரசியலைத் தீர்மானிக்கிறது. நாளைய எதிர்காலத்தையும் அதுவே தீர்மானிக்கும் - அடையாளச் சிக்கல்.

நான் யார்?

“பெரும்பான்மை இந்தியர்களுக்கு எங்கள் மாநிலங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதே தெரிவதில்லை. எங்களைப் பார்த்தால் மங்கோலியர்களா, சீனர்களா என்றுதான் கேட்கிறார்கள். நாங்கள் பேசுவதே அவர்களுக்கு இழிவாகத் தெரிகிறது. தவிர, இங்கே என்ன நடந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நெல்லி கலவரத்தில் 3,000 பேர் கொல்லப்பட்டபோதும், கோக்ரஜார் கலவரத்தில் லட்சம் பேர் அகதிகளானபோதும் யார் கவலைப்பட்டார்கள்?” என்று கேட்கிறார் வீரேந்தர். “ஒரு கிழவர் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தபோது துடித்த இந்தியா, 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஐரோம் ஷர்மிளாவுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது?” என்கிறார் வட கிழக்கின் உரிமைகளைப் பாடும் இம்பால் டாக்கீஸ் குழுவைச் சேர்ந்த சின்கங்பம்.

சிக்கலின் ஆணிவேர்

பெரும்பாலான வட கிழக்கின் பகுதிகள் மலைகளால் சூழப்பட்டவை. கணிசமான மக்கள் பழங்குடிகள். அசாமில் 19.3% என்றால், மிசோரமில் 94.5% பழங்குடி மக்கள். இவர்களில் ஏறத்தாழ 160-க்கும் மேற்பட்ட தொல் பழங்குடி இனங்களும் 400-க்கும் மேற்பட்ட குழுச் சமூகங்களும் இருக்கின்றன. இந்தக் குழுக்களால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கையே 200-ஐத் தாண்டும். இப்படி மொழியில் தொடங்கி உணவு வரை ஏராளமான கலாச்சார வேறுபாடுகள் இவர்களுக்குள் உண்டு. ஏற்கெனவே, உரசல்கள் இருந்த நிலையில், இப்போது அவர்கள் வெளியே செல்லும்போதும் வெளியாட்கள் இங்கே நுழைவதாலும் ஏற்படும் மாற்றங்களே அடையாளச் சிக்கலின் ஆதாரச் சுருதி.

உதாரணமாக, அசாமில் போடோக்களின் அரசியலை முன்வைக்கும் போர்கோயுரி, “வட கிழக்கின் பெரும்பான்மைப் பகுதிகள் கிறிஸ்தவ சபைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்துவிட்டன. தவிர, அசாமில் சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட, இப்போது அவர்கள் வலுவான சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள். அசாமில் ஐந்தில் ஒருவர் வங்கதேசி. இப்போது தொழிலில் அசைக்க முடியாதவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். எங்களுக்கென்று என்ன இருக்கிறது” என்று கேட்கிறார் .

இந்தக் கதைக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. “ஆங்கிலேயர் காலத்தில் வங்கத்துடன் சேர்ந்திருந்த பகுதிகள்தான் இவையெல்லாம். எங்கள் குடும்பம் கொல்கத்தாவில் இருந்தது. பிரிவினையின்போது நாங்கள் டாக்காவுக்கு மாறினோம். அங்கு சூழல் சரியில்லாத நிலையில், இங்கே குவாஹாத்தி வந்தோம். எத்தனையோ அசாமிகளுக்குக் கொல்கத்தாவில் வேலை கொடுத்தவர்கள் எங்கள் முன்னோர்கள். இன்றைக்கு நாங்கள் அவர்கள் ஊருக்கு வரும்போது அந்நியர்களாகிவிட்டோம். எந்தச் சூழலிலும் தாக்கப்படுவோம் என்கிற நிலையில்தான் வாழ்கிறோம்” என்கிறார் ரிக்‌ஷா தொழிலாளியான இஸ்மாயில்.

வட கிழக்கில் இன அரசியலின் பலம் சாதாரணமானதல்ல. அசாம் மாநிலத்திலிருந்து நாகாலாந்தும் மேகாலயாவும் அருணாசலப் பிரதேசமும் பிரிய அதுவே முக்கியக் காரணம். இது தவிர, இப்போது இந்திமயமாதலும் அவர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. கொஞ்சம் சோறு, பருப்பு, ரொம்ப மசாலா சேர்க்காமல், கடுகு எண்ணெய் தடவி, ஒரு குச்சியில் செருகி வாட்டப்பட்ட மீன். இது ஒரு வேளை உணவாக எனக்குக் கிடைத்தது. “ஒருகாலத்தில் இப்படியான விதவிதமான வட கிழக்கு உணவு வகைகள்தான் எங்கும் கிடைக்கும். இன்றைக்கு எங்கும் ரொட்டி, சப்ஜிதான்” என்று அலுத்துக்கொண்டார் ஒரு அசாமிய நண்பர்.

“சாதாரணமான வாழ்க்கை முறை எங்களுடையது. 20 மரப் பலகைகளோ, மூன்று தகரங்களோ போதும், நாங்கள் வீடு கட்டிக்கொள்ள. பணக்காரர்கள் என்றால், இன்னும் அழகாக மர வீடு கட்டுவார்கள். இப்போது பாருங்கள், எங்கு பார்த்தாலும் டெல்லிக்காரர்களைப் போலவே கான்கிரீட் கட்டிடங்கள்தான். பாலிவுட் சினிமாதான். இங்கிருந்து வெளியேறிய இளைய தலைமுறை எங்கள் மொழியை மறந்துவிடுகிறார்கள். எதிர்காலம் பயமாக இருக்கிறது” என்கிற குரல்களைப் பரவலாகக் கேட்க முடிகிறது. எல்லோருமே தேசிய இனப் போராட்டங்களை நடத்தியவர்கள் என்றாலும், மணிப்பூரில் மட்டுமே இன்னும் சுதந்திர கோஷங்கள் வலுவாக ஒலிக்கின்றன.

அரசியலில் பிராந்தியக் கட்சிகளைத் தாண்டி, காங்கிரஸே பரவலான செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் படாடோப உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள். அமைச்சர்கள் வீதிகளில் வந்தால், ராஜ சவாரியைப் பார்ப்பதுபோல இருக்கிறது பந்தோபஸ்து. வட கிழக்கின் மோசமான சூழலுக்கு காங்கிரஸுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த அரசியல் கட்சியையும் நம்ப முடியவில்லை என்கிறார்கள். நிறைய ஏமாற்றங்கள், துயரங்கள், வலிகள்...

இவை எல்லாவற்றையும் மீறியும் ஆக்கபூர்வமான தீர்வுகளை இந்தியப் பொதுச் சமூகத்திடமிருந்து வட கிழக்கு எதிர்பார்க்கிறது. வட கிழக்கின் சுவர்களை அலங்கரிக்கும் மேரி கோம் அதன் அடையாளச் சின்னமாகப் புன்னகைக்கிறார்!

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து




Thursday, April 10, 2014

கடவுள் ஊரின் அரசியல் கலாச்சாரம்





பன்மைத்துவம் மிக்க இந்தியாவைப் பகுத்துப் பார்க்கப் புவி அரசியல் சார்ந்து எப்படிப் பிரிக்கலாம்? குறைந்தது ஆறு பகுதிகளாகப் பிரிக்கலாம். தென் இந்தியா, மத்திய இந்தியா, மேற்கு இந்தியா, வட இந்தியா, கிழக்கு இந்தியா, வட கிழக்கு இந்தியா.

ஓரளவுக்கு நாம் இந்தியாவைப் புரிந்துகொள்ள இப்படிப் பகுத்துக் கொண்டு செய்யும் பயணம் உதவும். நாம் இந்தத் தொடரில் இந்த ஆறு இந்தியாக்களிலும் பயணம் செய்யப்போகிறோம். அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரங்களையும் பார்க்கப்போகிறோம். கூடவே, ஆறு பகுதிகளின் கலாச்சார மையங்களையும் வெவ்வேறு வாழ்க்கை வாழும் மனிதர்களையும் சந்திக்கப்போகிறோம். இடையிடையே இந்திய ஜனநாயகத்தின் பல்வேறு குரல்களைக் கேட்கப்போகிறோம். தென்னிந்தியாவிலிருந்து தொடங்குவோம்.

திருவனந்தபுரத்துக்குள் எங்கெல்லாம் சுற்றலாம் என்று உள்ளூர்க்காரர் யாரிடம் கேட்டாலும், “முதலில் பத்மநாப சுவாமி கோயிலைப் பார்த்துவிடுங்கள்” என்கிறார்கள். நியாயம்தான். ஊரின் பெயரே பத்மநாபர் பெயரில்தான் இருக்கிறது திரு + அனந்த + புரம். அனந்தரின் நகரம்.

உலகின் பணக்கார சாமி

தென்னிந்தியாவில் கோயில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஓர் அடையாளக் குறியீடு பத்மநாப சுவாமி கோயில். சேரமான் பெருமானால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், ஆரம்பக் காலம் தொட்டே செல்வாக்குக்குக் குறைவில்லாதது. ராஜா மார்த்தாண்ட வர்மா 1750-ல் தனது அரசாங்கம், ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் அனந்த பத்மநாப சுவாமிக்குப் பட்டயம் எழுதித்தந்து, தன் உடை வாளையும் திருவடியில் வைத்துப் பரிபூரண சரணாகதி அடைந்த பின்னர், கோயில் இன்னும் செல்வாக்கு பெற்றதாகிவிட்டது.

அதாவது, பத்மநாப சுவாமியே திருவிதாங்கூர் அரசின் தலைவர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் காலத்தில், பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய ராணுவமும் இந்தச் சடங்கைப் பின்பற்றியிருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் தாண்டி இப்போது உலகின் பணக்கார சாமி பத்நாப சுவாமி. கோயிலில் உள்ள ஆபரணங்களின் மதிப்பு மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிய அனுமதி இல்லை. போலீஸ்காரர்களுக்குக்கூட இங்கே துண்டும் வேட்டியும்தான் சீருடை. பெண்களுக்கும் புடவையுடன் மட்டுமே அனுமதி. ஆகையால், பேன்ட் அணிந்துவரும் ஆண் - பெண் பக்தர்கள் இருபாலரும் வித்தியாசமின்றி அதற்கு மேல் கோயிலில் தரப்படும் வேட்டியை அணிந்துகொண்டு சுற்றுகிறார்கள்.

“ஒருகாலத்தில் அரசப் பரம்பரையும் உயர் சாதி என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையும் தாண்டி யாரையும் இந்தக் கோட்டை வீதிக்குள்கூட விட மாட்டார்கள். அவ்வளவு சாதிப் பாகுபாடு இங்கிருந்தது” என்று நினைவுகூர்ந்தார் ஒரு பெரியவர். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.

திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகரம் பத்மநாபபுரத்திலிருந்து மாற்றப்பட்ட 1795 முதல் தலைநகரமாகவே நீடிக்கும் திருவனந்தபுரம், ஒருகாலத்தில் காந்தியால், இந்தியாவின் பசுமையான நகரம் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும் அந்தப் பெருமையை நகரம் இழந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. அழகான சாலைகள், தேவைக்கேற்ப வாகனங்கள், நல்ல தண்ணீர் - மின் விநியோகம், தேவையான அளவுக்குப் பூங்காக்கள், மைதானங்கள், அரசாங்கமே நடத்தும் திரையரங்குகள், கலையரங்குகள்…

இந்தியாவின் ஏனைய பெருநகரங்களின் பயங்கரப் பரபரப்பு, நெரிசல் நெருக்கடி இங்கு இல்லை. பாரம்பரியக் கட்டுமானங்கள் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்படுகின்றன. ஆட்டோக்காரர்கள் 15 ரூபாய்க்கு வருகிறார்கள். சாப்பிட உட்கார்ந்தால், “போத்தல் தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்காமல், எல்லா உணவகங்களிலும் சீரகம் அல்லது கருங்காலிக் கட்டை போட்டுக் கொதிக்கவைத்த வெந்நீர் தருகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட திருவனந்தபுரத்தின் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்றால், அது பேணும் அரசியல் கலாச்சாரத்தில் இருக்கிறது!

காழ்ப்புணர்வுக்கு விடைகொடு

திருவனந்தபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். ‘கௌரிசங்கர் மெஸ்’ ராஜன் அவர்களில் ஒருவர். பால் சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு மசால், தயிர்ப் பச்சடி, நார்த்தங்காய் ஊறுகாய், சட்னி சகிதம் பூரி கிடைக்கிறது இவர் கடையில். குட்டிக் கடை. எந்தப் பகட்டும் இல்லை. ஏராளமான சாமி படங்கள் நடுவே ராஜா ரவிவர்மாவின் ஓவியமும் தொங்குகிறது.

பக்திப் பழமாகக் காட்சியளிக்கும் ராஜன் ஒரு மார்க்சிஸ்ட் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் காரசாரமாக விமர்சிக்கிறார்; அதேசமயம், அவர்கள் செய்திருக்கும் முக்கியமான பணிகளையும் அங்கீகரித்துப் பேசுகிறார். “என்னதான் அடித்துக்கொண்டாலும் பொதுக் காரியங்களில் நாங்கள் நோக்கம் மாற மாட்டோம். போகும்போது ரயில் நிலையத்துக்கு அருகில் பாருங்கள். புது பஸ் நிலையம் கட்டிக்கொண்டிருப்பார்கள். முந்தைய கம்யூனிஸ்ட் அரசு கொண்டுவந்த திட்டம்.

காங்கிரஸ் அரசாங்கம் உற்சாகமாக நிறைவேற்றுகிறது. பாகுபாடு கிடையாது” என்கிறார். திருவனந்தபுரத்தில் எந்த ஓர் அரசு நிகழ்ச்சியானாலும் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து பங்கேற்கும் கலாச்சாரம் வெறுமனே மேடைக் காட்சியாக உருவாகிவிடவில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துகிறார்கள் மலையாளிகள். பா.ஜ.க. இப்போதுதான் வேர் விட ஆரம்பித்திருக்கிறது. ஆச்சரியமாக சிவசேனா ஆட்களையும் பார்க்க முடிந்தது. இயக்கத்தின் சார்பில் இங்கு கட்டணமற்ற ஆம்புலன்ஸ் வேன் சேவை நடத்துகிறார்கள்.

பேசுவதற்கு ஓர் இடம்

திருவனந்தபுரத்தின் கௌரவ அடையாளங்களில் ஒன்றான ‘இந்தியா காபி ஹவுஸ்’ போனபோது கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தேன். திருவனந்தபுரவாசி. மனிதர் ஒரு காபியை ஒரு மணி நேரம் ரசித்து, ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தார். “நாட்டுக்குக் கேரளம் கொடுத்த நல்ல விஷயங்களில் இந்தக் கடையும் ஒன்று. கூட்டுறவு அமைப்பு. ஒரு காபியோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாம். நண்பர்களோடு கதை பேசலாம். ஒரு நகரத்தில் இப்படியான இடங்களெல்லாம் அவசியம் இல்லையா?” என்கிறார்.

ஜனநாயகத் தளம்

கேரளத் தலைமைச் செயலகத்துக்குப் போனபோது, அந்த வளாகத்தின் சுற்றுச்சுவரையொட்டி, பல்வேறு கோரிக்கைகளுடன் வரிசையாகக் குடில் அமைத்து உட்கார்ந்திருந்த போராட்டக்காரர்களைப் பார்க்க முடிந்தது. போராட்ட நாள் 206 என்ற அறிவிப்புப் பலகையுடனும் பழங்குடியின அடையாளங்களுடனும் அமர்ந்திருந்த பெண் போராட்டக்காரர்களிடம் பேசினேன்.

செங்கரா எனும் இடத்தில் அவர்களுக்கு வசிப்பதற்குப் பட்டயம் தருவதாகச் சொன்ன அரசு, இப்போது இங்கே அங்கே என்று இழுத்தடிப்பதை எதிர்த்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இப்படி ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கோரிக்கையோடு கூடாரம் அடித்திருக்கிறார்கள். போலீஸார் துரத்தியடிக்கவில்லை.

மக்கள் அந்நியர்கள் அல்ல

ஊரைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோதே திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளரும் அமைச்சருமான சசி தரூரை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்த முதல்வர் உம்மன் சாண்டி காணக்கிடைத்தார். நான்கு கார்கள். கொஞ்ச நேரம் பேசுகிறார். கடந்துவிட்டார்.

கேரள அரசியல்வாதிகள் மக்களோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள், அணுகுவதற்கு எவ்வளவு எளிதாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்தது ஒரு சந்திப்பு. கார் ஓட்டுநர் ஜான் கேட்டார்: “பெரிய தலைகள் எதையும் பார்க்க விரும்புகிறீர்களா?”

கேரள அரசியலில் இன்றைக்குப் பெரிய தலைகள் என்றால், இரண்டு பேர். ஒருவர் முதல்வர் உம்மன் சாண்டி. மற்றொருவர் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன்.

எனக்கு உம்மன் சாண்டியைவிடவும் அச்சுதானந்தனைச் சந்திப்பதில்தான் அதிக விருப்பம். கேரள அரசியலில் எப்போதுமே சுவாரஸ்யங்களுக்கும் பரபரப்புக்கும் குறைவைக்காதவர் அச்சுதானந்தன் என்கிற காரணம் மட்டும் இல்லை; இந்தத் தேர்தலில் படைகளை வழிநடத்துபவர்களில் நாட்டிலேயே மூத்த தலைவர் அச்சுதானந்தன். ‘கன்டோன்மென்ட் ஹவுஸ்' புறப்படுகிறோம். கேரள எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு தந்திருக்கும் வீடு இது. வாசலில் ஏழெட்டு போலீஸார் நிற்கிறார்கள். வீட்டில் ஐந்தாறு கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். காத்திருக்கச் சொல்கிறார்கள். தூங்கி எழுந்த பத்து நிமிடத்தில், பொலிவாகிக்கொண்டு அழைக்கிறார் அச்சுதானந்தன்.

மனிதருக்கு 91 வயது ஆகிறது. துள்ளலுக்குக் குறைவில்லை. “இந்த வயதிலும் எது அசராமல் ஓடவைக்கிறது?” என்று கேட்டால், “காற்றுதான்” என்று கலாய்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர் அச்சுதானந்தன். “இந்தியாவில் இன்றைக்கும் இடதுசாரிகள் அப்படிப் பிரிந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறதா?” என்று கேட்டேன்.

கொஞ்ச நேரம் யோசிக்கிறார். “உலகெங்கும் காலமெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கான தேவை இருக்கத்தான் செய்யும். இந்தியாவில் ஒரு சமதர்ம சமுதாயம் அமைய வேண்டுமானால், அதை கம்யூனிஸ்ட்டுகளால்தான் செய்ய முடியும். நோக்கம் ஒன்றுதான். பாதை வேறுபடும்போதும் இணைந்து செயல்படுகிறோம்” என்றவர் “பிரச்சாரத்துக்கு வாருங்களேன்” என்று அழைத்தவாறே புறப்படுகிறார். நான் சிரித்தவாறே மறுத்துவிட்டுப் புறப்பட்டேன்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

அரசியலும் தேர்தலும் தகாதவை அல்ல!- வி. சுரேஷ் நேர்காணல்




சென்னையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்புறம் அங்கிருந்து கற்பனை செய்துகொள்ளுங்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கச் சாதியினரால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்துக்கான பயணத்தை அல்லது தண்டகாரண்ய வனப் பகுதியில் அரசு அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளின் குடியிருப்புக்கான பயணத்தை அல்லது அரசின் அத்துமீறலை எதிர்த்து டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்காட ஒரு பயணத்தை....

பெரும்பாலும் பயணங்கள்தான் சுரேஷின் இருப்பிடம். இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்களுக்காக ஜெயப்பிரகாஷ் நாராயணனால் தொடங்கப்பட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) இன்றைய பொதுச்செயலர் சுரேஷ். இந்திய அரசு தொந்தரவாகப் பார்க்கும் மனித உரிமைப் போராளிகளில் முக்கியமானவர். இந்திய அரசியலின் உள்கூறுகளைப் பற்றி உரையாட சரியான நபர்.

இந்திராவின் நெருக்கடிநிலை இந்தியாவுக்குப் பிந்தைய இந்த 37 ஆண்டுகளில், மனித உரிமைகளுக்கான மதிப்பு இங்கே எப்படி இருக்கிறது? நாம் மேம்பட்டிருக்கிறோமா?

இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவித்தபோது, சென்னை லயோலா கல்லூரியின் மாணவன் நான். தொழிற்சங்கவாதிகளுடன் அப்போது எனக்குப் பழக்கம் இருந்தது. இந்திராவின் நெருக்கடி நிலை அறிவிப்புக்குப் பின் ஏராளமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், தொழிற்சங்கவாதிகள், இளைஞர்கள் நாடு முழுக்க ஆயிரக் கணக்கில் கைதுசெய்யப்பட்டு, விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை அவர்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். “மாணவர்களே... இந்திய ஜனநாயகத்தை மீட்க நீங்கள் கிளர்ந்தெழுந்து போராடவில்லை என்றால், நீங்கள் படித்துப் பெறும் பட்டத்துக்கு, அது அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்கு இருக்கும் மதிப்புகூட இருக்காது” என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தபோது, தனிப்பட்ட லட்சியங்கள், கனவுகள் எல்லாவற்றையும் உதறிவிட்டுப் போராட்டக் களத்தில் இறங்கிய எண்ணற்ற மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால், இந்திய வரலாற்றின் மோசமான கலவரங்களில் ஒன்றான 2002 குஜராத் மதக் கலவரங்களில் தொடர்புடைய மோடிதான் இன்றைக்கு இந்தியாவின் முக்கியமான பிரதமர் வேட்பாளர். நாம் மேம்பட்டிருக்கிறோமா?

ஜனநாயகமும், மனித உரிமைகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். தேர்தலையொட்டி எவ்வளவோ விஷயங்கள் சூடாகவும் விரிவாகவும் விவாதிக்கப்படும் இன்றைய சூழலில், யாராவது மனித உரிமைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறார்களா? சொல்லுங்கள்... நாம் மேம்பட்டிருக்கிறோமா?

ஆனால், மனித உரிமைகள் தொடர்பாக இன்றைய கால கட்டத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது அல்லவா?

அடிப்படை உரிமைகள் என்ன என்ற விவரம் சாமானிய மக்களையும் எட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இங்கு மனித உரிமைகளுக்கான இடம் கவலைகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நாம் அடைந்துள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் கொடுத்திருக்கும் விலை மனித உரிமைகளிலிருந்துதான் தொடங்குகிறது.

நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரரீதியாகச் சுரண்டப்பட்டு, அழுத்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்டே சில பணக்காரர்கள், பெருநிறுவனங்களுக்கான இந்த வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

அன்றைக்குப் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், சுதந்திரம், விடுதலை, ஜனநாயகம் ஆகியவற்றில் மக்களுக்குப் பெரும் விருப்பம் இருந்தது. பெரும் ஊழல் அதிகார சாம்ராஜ்யங்களுக்கு எதிராக வீதிகளுக்கு வந்து போராட மக்கள் - முக்கியமாக மாணவர்கள் - தயாராக இருந்தார்கள். இன்றைக்குப் படிப்பறிவு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை எதிர்த்துப் போராட யாரும் தயாராக இல்லை.

இன்றைய இளைஞர்களின் கனவுகளையே எடுத்துக்கொள்வோம். தங்கள் படிப்பு, வேலை, வீடு, கார் என்றுதானே அவர்களுடைய அக்கறைகள் நீள்கின்றன? நாட்டின் 80 கோடி மக்கள் பொருளாதாரரீதியாக அடிமைப்பட்டு, பசி, பட்டினி, வறுமையில் கிடப்பது எத்தனை பேரை உலுக்குகிறது? காற்றும் நீரும் நிலமும் நஞ்சாகிக்கொண்டிருக்கிறதே… இன்றைக்கு நாம் தலையிட்டு இதையெல்லாம் தடுத்து, சீரழியும் ஜனநாயகத்தையும் சரிப்படுத்தாவிட்டால் நாளை நம்முடைய சந்ததியினர் மிகவும் பயங்கரமான நாட்டில் வாழ நேரிடும் என்பதையெல்லாம் பற்றி எத்தனை பேர் கவலைப்படுகின்றனர்?

இதற்கு அடிப்படைக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?

கல்விமுறை. மக்களின் சுயசிந்தனையைத் திட்டமிட்டு அழித்துவிட்டு, தொழிலதிபர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்யும் கூலிகளாக நம் மாணவர்களை நம் கல்வி நிறுவனங்கள் தயாரிக்கின்றன. சமூக உணர்வோ அற உணர்வோ அற்ற, சுயநலனே வளர்ச்சி என்ற உணர்வுகளைக் கொண்டவர்களாக நம் குழந்தைகளை நம்முடைய கல்விமுறை வெற்றிகரமாக உருவாக்குகிறது. நம்முடைய சிந்தனையையும் அது ஊழல் சிந்தனையாக்கிவிடுகிறது.

இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், அரசியல்வாதிகள்தான் என்று நம்புவதுகூட நம்முடைய ஊழல் சிந்தனையின் விளைவுதான். உண்மையில், நம் அறிவுச் சமூகத்தின் அத்தனை பிரதிநிதிகளும், ஊழலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்; விலைக்கு வாங்கக்கூடியவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். புகழ்வாய்ந்த நம்முடைய கல்வி நிறுவனங்கள்கூட பெரிய தொழில்நிறுவனங்களுக்குச் சாதகமாக அறிக்கைகளையும் சான்றுகளையும் போலியாகத் தயாரிக்கக்கூடியவை. ஒடிசாவில் போஸ்கோ உருக்காலையால் ஏற்படக்கூடிய விளைவுகள்குறித்து ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர் குழுவில் நானும் ஒருவன். பிரபலமான சில நிறுவனங்களே போஸ்கோ நிறுவனத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சந்தேகத்துக்குரிய வகையில் வினாக்களைத் தயார்செய்ததுடன் போலியான வழிமுறைகளையும் அறிக்கை தயாரிப்பில் சேர்த்திருந்தன. நாம் எவ்வளவு மோசமான அடிப்படையைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்தான்.

இதன் மையம் எதுவென்று நினைக்கிறீர்கள்?

1960-களில் காலனி ஆதிக்கத்திலிருந்து ஆப்பிரிக்க நாடுகளை விடுவிக்க நடந்த முயற்சிகளின்போது பிரான்ட்ஸ் பேனன் கூறினார், “கறுப்புத் தோல்கள் - வெள்ளை முகமூடிகள்” என்று. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர், அவர்களைவிட மோசமான அதிகாரிகளை விட்டுச் சென்றனர் - அவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடைய நீட்சியில் பள்ளிக்கூடங்கள் முதல் சட்டமியற்றும் மன்றங்கள் வரை ஆதிக்கச் சக்திகளுக்கு ஏற்ற மாதிரியே வடிவமைக்கப்படுகின்றன. ஆங்கிலேயர்களே இயற்றியிராத சட்டங்கள் தடா, பொடா போன்றவை. இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு விடப்படும் சவால்கள் என்றும், நீக்கப்பட வேண்டியவை என்றும் எந்தெந்தச் சட்டங்களைக் கருதுகிறீர்கள்?

நிறைய. காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், இந்தியத் தண்டனையியல் சட்டப்பிரிவில் உள்ள தேசத் துரோகச் சட்டம் 124ஏ, தேசத்துக்கு எதிராகப் போர் தொடுப்பதுபற்றிய சட்டம் 121ஏ ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நாட்டின் உண்மையான ஜனநாயக விழுமியங்களுக்காகப் போராடும் எளிய மக்களை இந்தச் சட்டங்கள் மூலமாகத்தான் அரசாங்கம் ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. இன்னும், மரண தண்டனையை அனுமதிக்கும் சட்டம் தொடங்கி நிறைய இருக்கின்றன.

இந்தச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது சரிதான்.ஆனால், அப்பாவிகளுக்கு மட்டும் அல்லாமல் கடுமையான குற்றவாளிகளுக்கும்கூடக் குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள் மறுபுறம் மக்களைப் பாதுகாக்கும் அரசின் பொறுப்பை எந்த அளவுக்குக் கருத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள்?

மாவோயிஸ்ட்டுகள் ஆறு காவலர்களைக் கடத்திக் கொண்டுபோய் வைத்திருந்தபோது, மீட்பதற்காக பஸ்தார் காட்டில் 60 கி.மீ. நடந்துசென்றது மனித உரிமை ஆர்வலர்கள்தான். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அநீதியை யார் இழைத்தாலும், மனித உரிமைகள் எங்கே கேள்விக்குள்ளானாலும் அதற்கு எதிராகப் போராடுகிறோம். எங்களுடைய மனச்சாட்சியும் நாங்களும் விற்பனைப் பொருட்கள் அல்ல.

பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு வராத - பழங்குடிகளின் போராட்டங்கள் உட்பட - நிறையப் போராட்டங்களை நெருக்கமாக இருந்து கவனித்திருக்கிறீர்கள். அவை எதை உணர்த்துவதாக நினைக்கிறீர்கள்?

வெறும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்கள் அல்ல அவை. அடக்குமுறையைக் கையாளும் முரட்டு அரசு, சகமனிதர்களின் துயரைக் கண்டு கவலைப்படாத உணர்ச்சியற்ற சமூகம், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் அரிய வளங்களைச் சூறையாடும் நாசவேலைகள் என அனைத்துக்கும் எதிரான போராட்டங்கள். முக்கியமாக நாளைய இந்தியாவுக்கான போராட்டங்கள். உண்மையில், இந்தியாவில் ஜனநாயகம் என்பது எப்போது வேண்டுமானாலும் அறுபடக்கூடிய மெல்லிய கயிற்றில்தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதை அவர்கள்தான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் எதிர்காலத்துக்கு நம்பிக்கைக்குரிய அம்சமாக எதைப் பார்க்கிறீர்கள்?

உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜனநாயகமும் அதைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும், இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற போராளிகளும்தான் நம்பிக்கை. இன்னும்கூட அவகாசம் இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் – கிளர்ந்தெழுந்து, சுதந்திரமான – சமத்துவமான – இந்தியாவுக்காகப் போராட வேண்டும். அரசியலும் தேர்தலும் தகாதது அல்ல என்று உணர வேண்டும்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா?




பிரம்மபுத்திரா படகு வீடுகள், சாலையோரப் பரிதாப வாழ்க்கை, முண்டியடிக்கும் ரிக்‌ஷாக்களைப் பார்த்துக் கொண்டே அதிலிருந்து கொஞ்சம் பிரிந்து, நீலாஞ்சல் மலையைச் சுற்றிச் சுற்றி ஏறினால், மாயங் கிராமத்தை அடைந்துவிடலாம். இந்தியாவின் தாந்திரிக வழிபாட்டின் மையமான காமாக்யா கோயில் இங்கேதான் இருக்கிறது.
வெல்லும் சொல் கொல்லும்
சுற்றி அமைந்திருக்கும் மலைக் குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயிலில் நுழைவது - அதுவும் பொழுது சாய்ந்து செல்வது - திகிலூட்டும் ஓர் அனுபவம். மந்திர தந்திரங்களின் பூமி இது. சிவனை மணந்த இளம் மனைவியான சக்தியே இங்கு காமாக்யாவாக நின்று அருள்பாலிப்பதாக ஐதீகம். ஒரு குகையில், தரை மட்டத்துக்கும் கீழ் எப்போதும் நீர் சுரக்கும் சுனையிலிருக்கிறாள் உக்கிர தேவதை காமாக்யா.
எல்லாக் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் காமாக்யா நிறைவேற்றுவதாக நம்பிக்கை. பலியை ஏற்கும் தாய் என்பதால், ரத்தக் கவுச்சி கோயில் வளாகத்தைச் சூழ்ந்திருக்கிறது. தரையிலும் ஆங்காங்கே ரத்தம். கோயில் படிக்கட்டுகளில் நீண்ட தாடியுடனும் மிரட்டும் விழிகளுடனும் கஞ்சா புகைக்கும் சாமியார்களில் மந்திரவாதிகளும் அடக்கம்.
வழிபாடுகள் உக்கிரமாக நடக்கின்றன. “எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் தாந்திரிக மரபின் சடங்குகளும் யோக வழிமுறைகளும் நுட்பமானவை. பொதுவில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை. தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகள் ஆரம்பக் காலத்தில் பன்றிகளைப் பலியிட் டார்கள்.
அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆட்டுக் கடாக்களையே பலி கொடுக்கிறார்கள். திருவிழா காலத்தில் எல்லா வகையான ஆண் பிராணிகளும் பலியிடப்படும்” என்றார் உடன் வந்த நண்பர்.
பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, ஒரு மந்திர வித்தகரைச் சந்தித்தோம். “சொற்களின் வலிமையும் கூர்மையும்தான் மந்திரங்கள். ஒரு மந்திரம் போதும், உங்கள் வாயைக் கட்டிப்போட்டுவிட; இன்னொரு மந்திரம் மூலம் உங்களை மறையச் செய்துவிடலாம். ஆனால், தர்மம் இல்லாமல் மந்திரங்களைப் பிரயோகிக்கக் கூடாது. பிரயோகித்தவன் பாவத்தை அனுபவிக்க வேண்டும். காமாக் யாவில் அருளும் மந்திரங்களின் வலிமையும் கட்டுக்கதை அல்ல. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு” என்றவர் கண் முன்னே ஒரு பூச்செடியின் முள் ஒன்றை ஒரு மந்திரத்தின் மூலம் பூவாக மாற்றினார். பின்னர், ஒரு இடை வெளிக்குப் பின் நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அந்தப் பூவை முள்ளாக மாற்றினார். “மந்திரங்கள் விளையாட்டு அல்ல; கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இயல்பை நாம் மாற்றுவதை அன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள்” என்கிறார்.
அரண்டுபோய்விட்டார்களா ஆங்கிலேயர்கள்?
புராதனமான காமாக்யா கோயில் அசாமின் முதல் பேரரசான காமரூபா காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றிய முதல் குறிப்புகள் மிலேச்ச வம்ச வனமாலா வர்மதேவர் ஆட்சிக் காலத்திய தேஜ்பூர் கல்வெட்டுகளில் (ஏழாம் நூற்றாண்டு)காணக் கிடைக்கின்றன. ஏகப்பட்ட படையெடுப்புகள், தாக்குதல்களுக்குப் பின் 500 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட கோயிலையே இப்போது பார்க்கிறோம் என்கிறார்கள். கோச் வம்சம், அஹோம் வம்சம், கச்சார் வம்சத்தோடு கோயிலைத் தொடர்புபடுத்தி வெவ்வேறான கதைகள் சொல்லப்பட்டாலும், கோயில் கதையைச் சொல்பவர்கள் யாவரும் ஆங்கிலேயர்கள் காமாக்யாவுக்கு அஞ்சி இங்கு கை வைக்க நடுங்கினார்கள் என்ற விஷயத்தைச் சொல்கிறார்கள்.
தாந்திரிக அறிஞர் மந்தீர் சாய்கியா, “மணிப்பூர் இளவரசர் மைபாங், கச்சார் சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவருடைய பெயர்களில் ஒன்றே ஊரின் பெயரான மாயாங். புத்தத் துறவிகள் இங்கு தாந்திரிகம் கற்றனர். அவர்கள் அசாமின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தாந்திரிகத்தைக் கொண்டுசென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
வாய்மொழி வழக்கில் இருந்த மந்திரங்களைக் கச்சார் மன்னர்கள்தான் எழுத்தில் பதிய ஊக்குவித்தார்கள். ஏராளமானவை தொலைந்து விட்டாலும் இப்போதும் அங்கும் இங்குமாக சுமார் நானூறு சுவடிகள் இருக்கின்றன. ஆனால், மந்திரங்களைத் தேவையில்லாமல் பிரயோகிக்கக் கூடாது; தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் கூட்டம்
எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நம்பப்படும் ஒரு கோயிலை எப்படி விட்டுவைப்பார்கள் நம்முடைய அரசியல் வாதிகள்? வடகிழக்குப் பகுதி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவி கிறார்கள். “எப்போதும் கோடைக்காலத்தில் நடக்கும் அம்புபாச்சி மேளாவின்போதும் இலை யுதிர் காலத்தில் நவராத்திரி துர்கா பூஜை யின்போதும்தான் இங்கு கூட்டம் அலை மோதும். அப்போது நாடு முழுவதிலுமிருந்து தாந்திரிகர்கள் இங்கே வழிபட வருவார்கள். இப்போதெல்லாம் தேர்தல் காலகட்டத்திலும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது” என்கிறார் கோயில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் பூரி.
அரசியல்வாதிகளுக்கு காமாக்யாவின் மந்திர விற்பன்னர்கள் இடம் அளிக்கிறார்களா? இல்லை என்று வலுவாக மறுக்கிறார்கள். “காமாக்யா பீடத்தின் சக்தியைக் கேள்விப்பட்டு, மந்திரங்களைப் பயன்படுத்திப் பதவிக்கு வந்துவிடலாம் என்கிற நப்பாசையில்தான் அரசியல்வாதிகள் இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கு மந்திர விற்பன்னர்கள் அவர் களுக்கெல்லாம் துணைபோவது கிடையாது. தவிர, எல்லோருக்குமே ஒரு விஷயம் தெரியும் - மந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், காமாக்யாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று. ஆகையால், வரு வார்கள், பிராத்தனை செய்வார்கள், பலி கொடுப்பார்கள், அவ்வளவுதான்” என்கிறார்கள்.
கோயிலை விட்டு வெளியேறியபோது சரசரவென வந்து புகுகின்றன கொடி கட்டிய நான்கு கார்கள். உள்ளிருந்து கச்சிதமான உடைகளில் இறங்குகின்றனர் அரசியல்வாதிகள். ஒரு காரிலிருந்து எதையோ எடுக்க/இழுக்க படாத பாடுபடுவது தெரிந்தது. நெருங்கிப் பார்த்த போது, மறுத்துக்கொண்டு வெளியே வந்தது ஒரு முரட்டுக் கடா. அதை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி முழங்கிக்கொண்டே நுழைகிறார்கள்: “ஜெய் காமாக்யா!”
தொடர்புக்கு: samas@kslmedia.in
தி இந்து

Wednesday, April 9, 2014

இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி





ஒரு சுவாரஸ்யமான மனிதர் மூலமாக சுவாரஸ்யமான சயோனா சானாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். மிசோரமின் பக்த்வாங் கிராமத்தின் ‘செல்வாக்கு' மிக்க குடிமகன் சயோனா சானா. ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே... ஜனநாயக நாட்டில் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த மனிதர்.

மலைக் குன்றுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட நிலத்தின் மீது பசும் போர்வையைப் போர்த்தியதுபோல இருக்கும் மிசோரம் மாநிலத்தின் பக்த்வாங் கிராமம்தான் சயோனாவின் ஆளுகைப் பிரதேசம். பெரும்பாலும் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்ட குடில்களிடையே நான்கு தளங்களில் 100 அறைகள், 22 படுக்கை அறைகள், 17 குளியல் அறைகளுடன் விரிந்திருக்கிறது சயோனாவின் கான்கிரிட் வீடான ‘சுவாந்தர் ரன்' - இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி. இங்கேதான் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 36 பேரப் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்கிறார் எழுபது வயது சாயோனா, உலகின் மிகப் பெரிய குடும்பத் தலைவர்.

வீடல்ல; விடுதி!

ஒரு பெரிய விடுதிபோல இருக்கும் சயோனாவின் வீடு கிட்டத்தட்ட விடுதிபோலத்தான் இயங்குகிறது. மூன்று தச்சு வேலையகங்களை வைத்திருக்கிறார் சயோனா. தவிர, காய்கறித் தோட்டங்கள், கோழி - பன்றிப் பண்ணைகளில் தொடங்கி பள்ளிக்கூடம், மைதானம் வரை வைத்திருக்கிறார் சயோனா. ஆண்கள் தச்சு வேலையைக் கவனிக்க, பெண்கள் தோட்டம், பண்ணை மற்றும் சமையல் வேலைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

வெவ்வேறு வார்த்தைகளில் இந்தக் குடும்பத்தின் வேலைகளை வர்ணித்தாலும் அடிப்படையில், எல்லாமே குடும்பத்துக்கான சாப்பாட்டுச் சமாச்சாரம் மட்டும்தான். ஒரு நாளைக்குச் சராசரியாக 90 கிலோ அரிசி, 40 கிலோ உருளைக் கிழங்கு வேண்டுமாம். அசைவம் என்றால், 30 கோழிகளும் இரண்டு பன்றிகளும் வேண்டுமாம். ஆக, குடும்பத் தேவையைப் பெண்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வேலையைப் பகிர்ந்துகொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. “சயோனா எல்லாவற்றையும் சரியாகப் பிரித்துக்கொடுத்துவிடுவார்” என்கிறார்கள் மனைவிகள்.

சயோனாவுக்கு எல்லாமே சுழற்சி முறைதான். அவருடன் உணவு மேஜையில் யார் உட்கார்ந்து சாப்பிடுவது, வேலைக்குக் கூடப் போவது என்பதிலிருந்து படுக்கையைப் பகிர்ந்துகொள்வது உட்பட. சுழற்சி முறையை யாரும் மீறக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் சயோனா, ஊரில் செல்வாக்கு மிக்க ‘ஹம்த்லன் ருன்புய்' தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறார். “குடும்பத்தில் மட்டுமல்ல; ஊரிலும் அவர் ஒரு ராஜா மாதிரிதான். சாப்பாடு, கல்வி, மருத்துவச் செலவுக்குத் தேவை என்று யார் போய் நின்றாலும் தட்டாமல் உதவி செய்வார். அதனாலே அவர்மீது இந்த ஊரில் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நிறைய பெண்கள் அதனால்தான் அவரை விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டார்கள்’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

உண்மைதான். எல்லாத் திருமணங்களையும் பூரண சம்மதத்தின்பேரிலேயே செய்து கொண் டிருக்கும் சயோனாவின் பெரும்பாலான திரு மணங்கள் காதல் திருமணங்கள்.

சயோனா சேவை கடவுள் சேவை

முதல் மனைவி ஜத்தியாங்கிக்கு இப்போது 70 வயதாகிறது. முதல் திருமணம் நடந்தபோது சயோனாவுக்கு 17 வயதாம். “அவர் கடவுள் மாதிரி. அவரை எல்லோருமே விரும்புவார்கள். அவரால் நிறைய பேரை வாழவைக்க முடியும். நான் அவரை ஒரு கைதி மாதிரி ஆக்கிவிடக் கூடாது அல்லவா?” என்று கேட்கும் ஜத்தியாங்கிக்கு, சயோனாவின் மனைவி என்கிற ஸ்தானத்தைப் பலரிடம் பறிகொடுக்க அல்லது பகிர்ந்துகொள்ள நேரிட்ட இழப்பைக் காட்டிலும் குடும்பத்தின் மூத்த நிர்வாகி என்கிற பெருமிதமே வெளிப்படுகிறது. அச்சுப் பிறழாமல் அதே மாதிரி பேசுகிறார் கடைசி மனைவியான முப்பது வயது சயாம்தாங்கி. “உலகத்தில் எல்லோருக்கும் தாங்கள் விரும்பிய கணவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனக்குக் கிடைத்திருப்பதைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். அவரைக் கவனித்துகொள்வது கடவுளைக் கவனித்துக்கொள்வதற்குச் சமம்” என்கிறார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சயோனா வேடிக்கையானவராகத் தெரியலாம். அவரோ மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவராகப் பேசுகிறார்.

“என்னுடைய தந்தை சாலியா சானாவுக்கு ஏழு மனைவிகள், நாங்கள் 29 பிள்ளைகள். கடவுள் என்னை மேலும் ஆசிர்வதித்திருக்கிறார். கடவுள் என்னிடத்தில் நிறைய பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். என் குடும்பத்தின் ஒவ்வொரு ஜீவனின் சந்தோஷ வாழ்க்கைக்கும் நான் உழைக்க வேண்டும்; உழைக்கிறேன். இதற்கு மேலும் மனைவி - குழந்தைகளைத் தந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்” என்று சொல்லும் சயோனா, பலதார மணம்பற்றிப் பேசும்போது, “எங்கள் சமூகத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. என்னை விரும்பியவர்களை நான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். அதனால், நான் எதுவும் தவறு செய்வதாக நினைக்கவில்லை” என்கிறார்.

இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நியாயமா என்று கேட்டால், “நாட்டிலேயே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று எங்களுடையது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்கிறார். “எங்கள் குடும்பமும் வாழ்க்கையும் கூட்டுறவுக்கான உதாரணம். இந்தக் கூட்டுறவுதான் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரும். நான் இப்படிப்பட்ட வாழ்க்கையைப் புதிய தலைமுறைக்கான வாழ்க்கையாகப் பார்க்கிறேன். அதனால்தான் என் வீட்டுக்கும் பள்ளிக்கும் மைதானத்துக்கும்கூட புதிய தலைமுறை (சுவாந்தர்) என்றே பெயரிட்டிருக்கிறேன்’’ என்கிறார்.

ஐந்து ஓட்டுகள் இருக்கும் வீட்டையே மொய்க்கும் நம்மாட்கள் சயோனாவைத் தாங்குதாங்கென்று தாங்கும் விதத்தைச் சொல்லவும் வேண்டுமா? சயோனா கையில் வீட்டு ஓட்டுகள் மட்டும் இல்லை; வெவ்வேறு வீடுகளில், பகுதிகளில் உள்ள குடும்ப ஓட்டுகள், அவரை மதிக்கும் ஊர் மக்கள் ஓட்டுகளும் இருக்கின்றன என்பதால் ராஜ கவனிப்புதான். ஒரு முரண்பாடு என்னவென்றால், சயோனா அரசாங்கத்தை நம்பவில்லை. பொறுப்புகளை நாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

சயோனாவைப் பொறுத்த அளவில் இந்தியா என்பது முழுக்க முழுக்க சுதந்திரத்தின் குறியீடு. “சீனாவில் இப்படியொரு வாழ்க்கையை வாழ அனுமதிப்பார்களா? யாருக்கும் தீங்கிழைக்காமல், ஒவ்வொருவரும் அவரவர் போக்கில் வாழ ஒரு நாடு அனுமதிக்க வேண்டும். இந்தியா என் மூலம் இந்தச் செய்தியை உலகுக்குச் சொல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்.

சயோனாவின் மூத்த மகன் பர்லியனாவும் பலதார மணத்தில் ஆர்வத்தோடு இருக்கிறார். “தாத்தா, அப்பா அளவுக்கு இல்லாவிட்டாலும், குறைந்தது இரண்டு திருமணங்களாவது செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் பர்லியனா.

பிள்ளைகள் எல்லோரும் இப்போதே சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஜூலை 21 அன்று சயோனாவின் 70-வது பிறந்த நாள். ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு பக்த்வாங் இப்போதே தயாராகிக்கொண்டிருக்கிறது. அப்போது சயோனாவின் வாக்கு வங்கியில் இன்னொரு வாக்கு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

- தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து