Thursday, March 20, 2014

நியூட்டன், ஆப்பிள், அணுகுண்டு…



அறிவின் சில பகுதிகள் மனிதர்களுக்கு எட்டாதவை என்றும் கடவுள் எதை வெளிப்படுத்துகிறாரோ அதை மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும் என்றும் பல நூற்றாண்டுகளாக மேற்கத்தியக் கலாச்சாரம் நம்பிவந்தது.

16-ம், 17-ம் நூற்றாண்டுகளில் ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் வகையில் நிறைய நிகழ்வுகள் நடந்தன. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், குறைந்தபட்சம் அதன் பௌதிக பாகங்கள் முழுவதையும் மனிதர்கள் அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான் அது. தடை ஏதுமின்றி அறிவைப் பெறுவதற்கான உரிமையின் மீது கொண்ட அந்த நம்பிக்கைதான் கடந்த 1000 ஆண்டுகளில் நடந்த அறிவு வளர்ச்சியில் மிக முக்கியமான நிகழ்வு.

முன்னுதாரணமற்ற புத்தகம்

அந்தப் புதிய நம்பிக்கையின் மகுடம் என்று ஐசக் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ (1687) புத்தகத்தைக் கூறலாம். இந்தப் பிரம்மாண்டமான அறிவியல் நூல்தான் நிலைமம் (ஒரு பொருள் ஓய்வு நிலையில் அல்லது சீரான இயக்கத்தில் இருக்கும் பண்புதான் நிலைமம்), விசை போன்ற அடிப்படையான கருத்துகளை நிறுவியது, இயக்கத்துக்கான பொது விதிகளைச் சொன்னது, ஈர்ப்புவிசைக்காகச் சிறப்பு விதியை முன்வைத்தது. நியூட்டனின் இந்தப் புத்தகம் அறிவியல் வரலாற்றில் முன்னுதாரணமற்றது.

அதேபோல் நவீன அறிவியலின் பிறப்பிலும் அது முக்கியப் பங்கு வகித்தது. ஈர்ப்புவிசை குறித்து அவர் உருவாக்கிய விதி மகத்தானதுதான். ஆனால், அதைவிட முக்கியமானது என்னவென்றால், எல்லையற்றும் பிரபஞ்ச அளவிலும் அந்த விதியைப் பொருத்திப்பார்க்கக் கூடிய தன்மைதான். மரத்திலிருந்து ஆப்பிளை விழவைத்த அதே ஈர்ப்புவிசைதான் பூமியை நிலவு சுற்றிவருவதற்கும் காரணமாகிறது.

இப்படியாக, பூமிக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே கோடு கிழித்து, அரிஸ்டாட்டிலால் பிரித்து வைக்கப்பட்டிருந்த உலகத்துக்கு நியூட்டனின் ‘பிரின்சிபியா' புத்தத்தால் சம்மட்டி அடி விழுந்தது.

பிரபஞ்சம் முழுமைக்கும் பொருந்தும் ஈர்ப்புவிசை என்பது நியூட்டனின் தத்துவம். அந்தத் தத்துவத்தின் ஆழத்தில் மறைந்திருப்பது இதுதான்: ‘இந்தப் பௌதிகப் பிரபஞ்சத்தை மனிதனால் அறிந்துகொள்ள முடியும்.' மனிதப் பிரக்ஞையின் பரிணாமத்தில் இது மிகவும் புதுமையான சிந்தனை. மேலும், புதிய விடுதலை என்றும், மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட புதிய அதிகாரம் என்றும் இந்தச் சிந்தனையைச் சொல்லலாம்.

இந்தச் சிந்தனை இல்லையென்றால், நமக்கு நியூட்டன் கிடைத்திருக்க மாட்டார். நியூட்டனைத் தொடர்ந்து நிகழ்ந்த அறிவுலக, அறிவியல் சாதனைகளும் சாத்தியமாகியிருக்காது.

அவர் கண்டுபிடித்த விதிகளைவிடவும் மிகமிக முக்கியமான வேறொன்றை நியூட்டன் சாதித்திருப்பதை அவருடைய சமகாலத்தவர்களும் உணர்ந்தார்கள். ‘பிரின்சிபியா' நூலின் இரண்டாம் பதிப்பில் தனது நூலறிமுகத்தில் ரோஜர் கோட்ஸ் என்பவர் இப்படி எழுதுகிறார்: “மனித மனதுக்கு எட்டாதவை என்று முன்பு கருதப்பட்டவற்றையும் எட்டிப்பிடித்த சாதனையை நியூட்டன் நிகழ்த்தியிருக்கிறார்… இப்போது கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.”

நவீன அறிவியலின் வரலாறு

நியூட்டனின் ‘பிரின்சிபியா'வில் காணப்படும் புதிய உளவியலை உருவாக்கியது எது? மதச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்கள் நிச்சயமாக இதில் பங்கு வகித்தன. 1517-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கின் பிரகடனங்கள் புராட்டெஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்ததுடன், திருச்சபையின் அதிகாரங்களைக் குறைத்தன. பைபிளை ஒவ்வொரு தனிமனிதரும் படித்துப் புரிந்துகொள்ள முடியும்.

அதற்காக அவர்கள் பாதிரியார்களாக ஆக வேண்டும் என்பதில்லை என்று அவர் சொன்னது புதுவிதமான ஓர் அக விடுதலையை ஊக்குவித்தது. மதரீதியான இந்தச் சுதந்திரம் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளுக்கும் பரவியது.

இதைத் தொடர்ந்து நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. 1572 நவம்பர் 11-ம் தேதியன்று, சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, டிக்கோ ப்ராயே என்ற டேனிஷ் வானியலாளர் காஸ்ஸியபியா நட்சத்திரக் கூட்டத்தில் மிகமிகப் பிரகாசமாக ஒளிரும் ஒரு பொருளைக் கண்டார். அதற்கு முன்னால் அந்தப் பொருளை அங்கே பார்த்ததில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.

ப்ராயே கண்டுபிடித்தது வேறொன்றுமில்லை, பெருநட்சத்திர வெடிப்புதான் அது. நட்சத்திரங்களெல்லாம் அழிவற்றவை, மாறாதவை என்ற பழம் நம்பிக்கைகளை ப்ராயேயின் கண்டுபிடிப்பு வெடிக்கச் செய்தது.

பிறகு, விண்ணுலகங்களின் தெய்விகப் பூரணத் தன்மை இத்தாலிய இயற்பியலாளர் கலிலியோவாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர் தனது புதிய தொலை நோக்கியை 1610-ல் நிலவை நோக்கித் திருப்பினார். “விண்வெளியில் இருக்கும் நிலவு முதலானவை சீராகவும், சமமாகவும், பரிபூரணக் கோளமாகவும் இருக்கும் என்று காலம்காலமாகத் தத்துவஞானிகள் சொல்லிவந்தார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் நேரெதிராக நிலவு மேடும் பள்ளமுமாக, கரடுமுரடாக, சீரற்ற பரப்பைக் கொண்டிருந்தது” என்கிறார் கலிலியோ.

நியூட்டன் பிறப்பதற்கு முந்தைய சில தசாப்தங்களில் வாழ்ந்த ரெனே தெகார்தேவின் தத்துவங்களும் அப்போது பெரும் செல்வாக்கு செலுத்தின. தன் இருப்பு உள்பட எல்லாவற்றின் இருப்பையும் சந்தேகிக்கக்கூடிய ஒரு தத்துவப் போக்கை முதன்முறையாக தெகார்தே தொடங்கிவைக்கிறார். “நான் சிந்திக்கிறேன். எனவே, நான் இருக்கிறேன்” என்றார் அவர்.

நியூட்டனின் பிரபஞ்சம் தழுவிய இயற்பியல் விதிக்கு முன்வடிவம் போன்ற ஒரு கருதுகோளை தெகார்தே முன்வைத்தார். அதற்கு ‘சுழல்கள்' என்று பெயர். ஆனால், இதை நிரூபிக்க முடியாமல் போனாலும் பூமியிலும் பிரபஞ்ச அளவிலும் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகளை விளக்கவும் ஒருங் கிணைக்கவும் கூடிய ஒரு துணிவை அவருடைய சித்தாந்தம் தந்தது.

பௌதிகப் பிரபஞ்சத்துக்கும் ஆன்மிகப் பிரபஞ்சத்துக்கும் இடையில் ஒரு வரையறை இருந்தது. மேற்கண்ட முன்னேற்றங்களெல்லாம் அந்த வரையறையை மாற்றியமைத்ததையும் தெளிவுபடுத்தியதையும் நம்மால் உணர முடியும். கொஞ்சம்கொஞ்சமாக, அரிஸ்டாட்டிலின் ‘புனிதப் புவியிய'லின் இடத்தை மேலும் நுட்பமான, அருவமான உலக வரைபடம் ஆக்கிரமித்துக்கொண்டது.

இந்த வரைபடத்தில் பௌதிக உலகம் இருக்கிறது. எலெக்ட்ரான்கள், அணுக்கள், ஒளி, வெப்பம், மூளைகள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய பருப்பொருட்கள்-ஆற்றல்கள் எல்லாம் இந்த வரைபடத்தில் அடக்கம். பரந்துவிரிந்த இந்தப் பிரபஞ்சம் அறிவியல் ஆய்வுகளுக்கும் கணித விதிகளுக்கும் உட்படுத்தக் கூடியதாக இருந்தது.

இந்த பௌதிகப் பிரபஞ்சத்துடன் இணையாக இருப்பது ஆன்மிகரீதியிலான பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சம் அளவிட முடியாதது, இடம் சாராதது, அணுக்களாலோ மூலக்கூறுகளாலோ உருவாகாதது.ஆனால், அதில் நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை எங்கும் நிறைந்திருப்பது அது. இந்த இரண்டு பிரபஞ்சங்களும் எண்ணற்ற, முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.

ஆனாலும், அறிவியலின் களம் என்பது பௌதிகப் பிரபஞ்சம்தானே தவிர, ஆன்மிகப் பிரபஞ்சம் அல்ல. இந்தப் பிரபஞ்சம்குறித்து அறிவியலால் எண்ணற்ற விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால், ஆன்மிகப் பிரபஞ்சம்குறித்து அதனால் எதையும் சொல்ல முடியாது. பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த ‘பெருவெடிப்பு' (பிக் பேங்) நிகழ்ந்த ஒரு நுண்விநாடிக்கும் (நானோசெகண்ட்) குறைவான கால அளவு வரை எட்டிப்பார்க்க அறிவியலால் முடியும்.

ஆனால், பிரபஞ்சம் ஏன் உருவானது, அதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியலால் பதில் சொல்ல முடியாது.

அறிவின் சில பகுதிகள் மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது என்ற எண்ணம் எல்லா உணர்வுகளை யும்போல நம் ஆழ்மனதில் உறைந்துகிடக்கிறது. அதை நமது பிரக்ஞையிலிருந்து அவ்வளவு எளிதாக வெட்டியெறிந்துவிட முடியாது. மேரி ஷெல்லியின் புகழ்பெற்ற ‘ஃப்ராங்கென்ஸ்டைன்' நாவலில் (1818) இப்படி வரும்: “அறிவைப் பெறுதல் என்பது எவ்வளவு ஆபத்தானது. தனது இயல்பு அனுமதிக்கும் அளவையும் கடந்து மிகப் பெரிய உயரத்தை அடைய நினைப்பவனைவிட, தான் இருக்கும் ஊர்தான் உலகம் என்ற நினைப்பில் வாழும் மனிதன் எவ்வளவு மகிழ்ச்சியானவன்!”

அழிவுக்கான ஆக்கமா?

நியூ மெக்ஸிகோவில் முதல் அணுகுண்டுச் சோதனையை அமெரிக்கா நடத்தியபோது வெளிப்பட்ட பயங்கரம் என்பது, நம் இயல்பைவிட அதீதமான சக்திகளை நாம் கட்டவிழ்த்துவிட்டோம் என்பதற்கான அடையாளமே. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் அணுகுண்டுத் தயாரிப்புத் திட்டத்தின் (மன்ஹாட்டன் புராஜெக்ட்) தலைவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர், “அப்போது நாங்கள் புரொமிதியஸ் கதையைப் பற்றியும் மனிதனின் புதிய சக்திகள்குறித்த ஆழமான குற்றவுணர்வைப் பற்றியும் நினைத்துக்கொண்டோம்” என்றார்.

படியாக்கத்தின் (குளோனிங்) மூலம் டாலி என்ற ஆட்டை உருவாக்கியபோது, “நவீன வாழ்க்கையின் மதிமயக்கக்கூடிய கதவுகள் திறந்துபார்க்கக் கூடாதவை என்று மூடப்பட்டிருந்தன. அந்தக் கதவுகளைத் திடீரென்று திறந்து, ரகசியங்களை எட்டிப்பார்த்ததுபோல இருக்கிறது” என்று ‘நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை எழுதியது.

திறக்கப்படும் ஒவ்வொரு கதவும் தொடர்ந்து நமக்கு உறுத்தலையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்தக்கூடும். நாம் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் ஆதிவாசிகளாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறோம். நியூட்டனின் சிந்தனைப் பாய்ச்சலும் நாமே, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்ட புரொமிதியஸும் நாமே. டி.என்.ஏ-வின் ரகசியங்களைக் கட்டவிழ்த்துவிட்ட வாட்சன்–கிரிக்கும் நாமே, ஆதாம்-ஏவாளும் நாமே.

பல நூற்றாண்டுகளின் விடுதலை உணர்வும் சிறைவாசமும் படைப்புத்திறனும் பயங்கரமும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கின்றன. திறக்கும் ஒவ்வொரு கதவும் நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்கும். இருப்பினும், தொடர்ந்து நாம் கதவுகளைத் திறந்துகொண்டிருப்போம்; ஏனெனில், நம்மை யாராலும் எதனாலும் தடுக்கவே முடியாது.

© ‘நியூயார்க் டைம்ஸ்', தமிழில்: ஆசை
(மார்ச் - 20, நியூட்டன் நினைவு நாள்)

தி இந்து 

Sunday, March 16, 2014

அடுத்த அரசாங்கத்துக்கு இருக்கும் அடுக்கடுக்கான பொறுப்புக்கள்


இந்தியாவில் இதுவரையில் இல்லாத ஒரு பரபரப்பு, இந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி இருக்கிறது. வரப்போகும் பிரதமரிடமும், மத்திய அரசாங்கத்திடமும் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதுதான் முதல் எதிர்பார்ப்பாக இருந்தாலும், அடுத்து விலைவாசி உயர்வு தடுக்கப்படவேண்டும், ரூபாயின் மதிப்பு உயரவேண்டும், பொருளாதாரம் சீர்பெற வேண்டும், வேலை இல்லா திண்டாட்டம் போக்கப்படவேண்டும், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அடுக்கடுக்காக அடுத்த அரசாங்கம் செய்யவேண்டும், அந்த அரசாங்கத்துக்குத்தான் ஓட்டுப்போடவேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து, அதையெல்லாம் எந்த கட்சி செய்யும்? என்று தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முடிவு எது? என்பதை மே மாதம் 16–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை காட்டிவிடும். அவர்களின் நம்பிக்கையைப் பெறத்தான் ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறது. தமிழக மக்களைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டுக்குரிய சில பிரச்சினைகளும் இருக்கின்றன.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் அனைவரையும் உலுக்குவது விலைவாசி உயர்வுதான். அதிலும், உணவு பண்டங்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ரூபாயின் மதிப்பு மளமளவென்று குறைவதும், பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயர்ந்துகொண்டிருப்பதுமே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுக்குள் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 18 ரூபாய் உயர்ந்திருக்கிறது. 2012–ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் டீசல் விலை 40 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.58.56 ஆகும். உணவு பொருட்கள், காய்கறிகள், பால் உள்பட அனைத்து பொருட்களையும் லாரிகள் மூலம்தான் எடுத்துச்செல்ல வேண்டிய நிலையில், இந்த டீசல் விலை உயர்வு, அந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவை அதிகரிக்க வைத்து, அதன் காரணமாக அந்த பொருட்களின் விலையை உயர்த்திவிடுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவோ அதற்கேற்பத்தான், விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்லலாம். ஆனால், கச்சா எண்ணெய் விலையைவிட, நம் நாட்டில் வரி அதிகமாக இருப்பதுதான் விலையை ஏற்றிவிடுகிறது.

அடுத்து, ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் கவலை அளிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு குறைகிறது என்றால், அதன் பாதிப்பு ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறது. அவன்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறான். சர்வதேச கரன்சியான அமெரிக்க டாலரை வாங்க எவ்வளவு ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதை வைத்துத்தான், ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. 1947–ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், ஒரு அமெரிக்க டாலரை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. 1966–ல் ரூ.6.35 ஆகவும், 1975–ல் ரூ.8.41 ஆகவும் இருந்த டாலரின் விலை, தற்போது ஏறத்தாழ 61 ரூபாய்க்கு வந்துவிட்டது. இதன் பாதிப்பு சாதாரண ஒரு குடும்பத்துக்கு எப்படி ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், 1968–ல் ஒரு ரூபாய்க்கு 12 முட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்தது. ஆனால், இன்று 12 முட்டைகளை வாங்க ஏறத்தாழ 50 ரூபாய் வரை ஆகிறது. இதேபோலத்தான், அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்து இருப்பதால், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை, ஏற்றுமதியைவிட, இறக்குமதிதான் அதிகம் என்கிற வகையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கவேண்டியது இருக்கும். இதனால் ஏற்படும் பொருட்களின் விலை உயர்வு, ஏழை, நடுத்தர மக்களைத்தான் அதிகம் பாதிக்கும்.

எனவே, அடுத்த அரசாங்கம் இந்த விஷயத்தில் நிறை, குறைகளையெல்லாம் வந்தவுடனேயே ஆராய்ந்து, விலைவாசி உயர்வை பெருமளவில் குறைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதுதான் நல்லாட்சி. அத்தகைய ஆட்சியின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கவேண்டும் என்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினத்தந்தி , 17, மார்ச் ,2014 

அரசின் சேவை பெறுவது மக்களின் உரிமை

இந்தியா, உலகில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனநாயக நாடாகும். இங்கே மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்கள் ஆட்சிதான் மத்தியிலும், மாநிலங்களிலும் நடக்கிறது. மக்களின் விருப்பத்தை ஓட்டு மூலம் நிறைவேற்றும் ஒரு முறையை உலகுக்கே காட்டியது தமிழகம்தான். குடவோலை மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை தமிழகத்தில்தான் கி.பி.921–ம் ஆண்டு தொடங்கியது என்பது காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள வைகுண்டபெருமாள் கோவில் மதில்சுவரில் உள்ள கல்வெட்டுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இப்படி தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆட்சி நடக்கும்போது மக்களுக்கான தேவைகள், சேவைகள் அனைத்தும் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவேண்டும். அந்தவகையில்தான், தகவல் பெறும் உரிமை சட்டம் மக்களுக்குச் சிறப்பான பணிகளை ஆற்றிவருகிறது.

அரசுத் துறைகளில் உள்ள எந்தத் தகவலையும் இந்தச் சட்டத்தைப்பயன்படுத்தி சாதாரண குப்பனும், சுப்பனும் தெரிந்துகொள்ளமுடியும். இந்த சட்டத்தின் மூலம் தகவலை மட்டும்தான் கேட்டு பெறமுடியும். அவர்களுக்கான சேவையை, உரிமையாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், மத்திய அரசாங்கம், சேவைபெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இந்தச் சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கவேண்டும் என்று சட்டத்தை நிறைவேற்றிய அதேநேரத்திலேயே கேட்டுக்கொண்டது. இந்த சட்டத்தின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், சாதி சான்றிதழ், பிறப்பு–இறப்பு சான்று, திருமண சான்றிதழ் போன்ற மக்களுக்குத் தேவையான சான்றுகளை பெறுதல், மின்சார இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் மற்றும் நிலம் தொடர்பான தஸ்தாவேஜூகள் பெறுதல் போன்ற எண்ணற்ற சேவைகள் ஆகும்.

இன்றைய சூழ்நிலையில், ஒரு வங்கி கணக்கைத் தொடங்கச் சென்றால்கூட ரேஷன் கார்டை எடுத்துவாருங்கள் என்கிறார்கள். ரெயில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் நேரத்தில்கூட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற சேவைகளுக்காக, ஒவ்வொரு அலுவலகத்திலும் மக்கள் கால்கடுக்க நின்று, பரிதாபமாக கேட்பதும், தினந்தோறும் செருப்புதேய நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தகைய சேவைகள் மக்களுக்கு கிடைக்கவில்லையென்றாலோ, நிராகரிக்கப்பட்டாலோ, இதற்கான முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் நிவாரணம் கேட்கலாம். அந்த அதிகாரி, இந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, அரசு ஊழியரை உடனடியாக அந்த சேவை வழங்க உத்தரவிடலாம். அல்லது அந்த மேல்முறையீட்டை ஏற்காவிட்டால் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்கவேண்டும்.

இதற்கு மேலாக இரண்டாவது மேல்முறையீட்டை, அதுதொடர்பான அதிகாரியிடம் கொடுக்கலாம். இதற்கு முகாந்திரம் இருந்தால், உடனடியாக, அந்தச் சேவை செய்யத் தவறிய அரசு ஊழியருக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கைக்கு அவர் உத்தரவிடலாம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், நிச்சயமாக ரேஷன் கார்டு உள்பட அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் மக்களுக்குக் கிடைத்துவிடும். ஏனெனில், அபராதம் விதித்துவிடுவார்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டுவிடுவோம் என்ற பயம் நிச்சயமாக அரசு ஊழியர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுவிடும். இந்த சட்டத்தை கேரளா, குஜராத், பஞ்சாப், கர்நாடகம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.

பொதுமக்களுக்குப் பயனுள்ள இந்தச் சட்டத்தைத் தமிழக அரசும் அமல்படுத்த பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, இதை தமிழக அரசு விரைவில் பரிசீலிக்கும் என்று உத்தரவாதம் அளித்து உள்ளார். இது பொதுமக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும். மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கு நிரூபிக்கப்படும் வகையில், அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் மக்கள் சேவையில் தங்களை முழுமையாக ஆள்படுத்திக்கொள்ளவேண்டும் என்றால், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால்தான் முடியும். எல்லா சேவைகளும் மக்களுக்குத் தங்கு தடையின்றிக் கிடைக்கும். 

திநத்தந்தி, 16, மார்ச், 2014  


காணாமற்போன விமானங்கள்



அமெலியா இயர்ஹார்ட் சென்ற விமானம் அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகைச் சுற்றி பார்க்க 1937 ஆம் ஆண்டு முயற்சிக்கும் போது, பசிபிக் பெருங்கடல் வழியே பறந்து சென்றார். அப்போது லேசான மேக கூட்டத்தில் சென்றவர்


விமானம் 739 1962 ஆம் ஆண்டு இராணுவ விமானம் ஒன்று மாயமானது. இந்த விமானத்தில் 93 இராணுவ வீரர்களும், 3 தெற்கு வியட்நாம் மக்களும் பயணித்தனர். இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும் போது திடீரென்று மாயமாகிவிட்டது.


ஏர் பிரான்ஸ் விமானம் 447 இந்த விமானத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், ஏர் பிரான்ஸ் விமானம் 447 ஆனது பிரேசிலிய வான்வெளியில் இருந்து பறந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும் போது, திடீரென்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன.


பெர்முடா முக்கோணம் பெர்முடா முக்கோணம் என்றாலே அனைவருக்கும் பயம் ஏற்படும். ஏனெனில் அந்த பகுதியை கடக்கும் எந்த ஒரு பொருளும் மாயமாகிவிடும் என்பதால் தான். அதுமட்டுமல்லாமல், உண்மையிலேயே விமானம் 19, பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது மாயமாகிவிட்டது


ஸ்டார் டஸ்ட் விமானம் இந்த கதையைக் கேட்டால் உண்மையிலேயே ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் இதுப்போன்று வரலாற்றில் எந்த ஒரு விமானமும் காணாமல் போனதில்லை. அது என்னவென்றால், ஸ்டார் டஸ்ட் விமானமானது ஆண்டிஸ் மலைத்தொடரை கடக்கும் போது காணாமற்போனது.



மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 மர்மமாக காணாமல் போன விமானங்களில் ஒன்று தான், மார்ச் 8 ஆம் தேதி மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த போது, சீன கடற்பகுதியில் மாயமானது. ஒரு வாரம் ஆகியும் இன்னும் அந்த விமானம் என்ன ஆனது, அதில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.

வரலாற்று புகழ்மிக்க தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு தீர்மானங்கள் -1938

13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடி வரும் இன்றைய சூழலில் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

1. இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.

2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமுகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.



4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்வதுடன், பிறமொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாகப் பள்ளிகளின் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாதெனத் தீர்மானிக்கிறது.

5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாகவிருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது; அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமுகத்தைக் கேவலமான வார்த்தைகளால் கூறியதையும், தோழர் மு.இராகவையங்கார், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னளவுக்கு மீறிக் கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், ஹைக்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.

6. சென்னை லார்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் மதுரையில் காங்கிரஸ் மந்திரிகள் அரசாங்கத்தை நன்றாக நடத்தி வைக்கிறார்கள் என்று பேசியதைப் பார்த்தால் தங்கள் காரியம் நடந்தால் போதுமானதென்றும், பார்ப்பனரல்லாத தமிழர்கள் நிலை எப்படியானாலும் தங்களுக்குக் கவலையில்லை என்பதைக் காட்டுகின்றதாகையால் கவர்னர் அவர்களின் அவ்வபிப்பிராயத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.

7. இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மகாநாட்டிலும், கட்டாய இந்தியை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டிக்கின்றது.

8. இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும், பார்ப்பன அன்புபெற்ற தாய்மொழியறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்டமென்று கருதுகிறது.

9. இம்மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீரமிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்து பார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.



10. இந்தியை எதிர்த்துச் சிறை சென்ற ஈழத்து சிவானந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.என். அண்ணாதுரை எம்.ஏ., உள்ளிட்ட பெரியார்களையும் தொண்டர்களையும் பாராட்டுகின்றது.

11. வகுப்புத்துவேஷக் குற்றம்சாட்டி 153 ஏ 505 ஸி செக்ஷன்களின் கீழ் 18 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்று சிறைசென்ற தோழர். பி.சாமிநாதனை இம்மாநாடு பாராட்டுகிறது.

12. தோழர்கள், சண்முகானந்த அடிகளும், சி.டி.நாயகமும் சிறை செல்வதை இம்மாநாடு பாராட்டுகிறது.

13. சென்னை நகர் தமிழ் நாடாதலாலும் தமிழர்கள் முக்கால் பாகத்துக்கு மேல் வாழ்ந்து வருவதாலும் இதுவரை முனிசிபாலிட்டியார் வீதிகளின் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரப் பலகைகளில் போட்டு வந்திருக்க இப்போது புதிதாக தெருக்களுக்குப் பெயர் போடுவதில் ஆங்கிலத்தில் மட்டும் போடப்பட்டு வீதிகளின் பெயர் தமிழில் போடாமலிருப்பதால் ஆங்கிலமறியாத மிகுதியான தமிழ் மக்கள் தெருப்பெயர் தெரியாமல் தொல்லைப்படுவதை நீக்க தமிழிலும் வீதிகளின் பெயர் போடவேண்டுமென, சென்னை நகரசபையாரையும் மற்ற தமிழ்நாட்டு நகர சபைகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

Friday, March 14, 2014

ஐன்ஸ்டைன்: ஒளியின் கடவுள்


ஒளிக்கு இணையாகப் பயணித்தோம் என்றால், அப்போது ஒளி எப்படித் தோற்றமளிக்கும்?’ என்ற சந்தேகம் 16 வயது ஐன்ஸ்டைனுக்கு ஏற்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தச் சந்தேகம் அவர் மனதைப் போட்டு அரித்துக்கொண்டிருந்தது.

1905-ம் ஆண்டில்தான், அதாவது தனது 26-ம் வயதில், இந்தச் சந்தேகத்துக்கு விடையை அவரே கண்டுபிடித்தார்: ‘ஒளியின் வேகத்தை யாரும் எட்டிப்பிடிக்க முடியாது; ஒளிதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே உச்சபட்ச வேகத்தைக் கொண்டது; ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணிக்கிறார் என்று கற்பனையில் வைத்துக்கொண்டால், அவருடைய உருவம் மிகமிக நுண்ணியதாகிவிடும்; ஆனால், அவருடைய நிறையோ எல்லையற்று அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அவருடைய காலமும் உறைந்துவிடும்.’

1905-ம் ஆண்டு என்பது ஐன்ஸ்டைனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அறிவியல் வரலாற்றிலும் அற்புத ஆண்டுகளுள் ஒன்று. மிகமிக முக்கியமான நான்கு ஆய்வுக் கட்டுரைகளை அந்த ஒரே ஆண்டில் ஐன்ஸ்டைன் வெளியிட்டார். இதையெல்லாம் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டு, பிரம்மாண்டமான ஆய்வுகளுக்குப் பிறகு வெளியிடவில்லை அவர்.

உண்மையில், தனது காலத்திய அறிவியல் அறிஞர்களின் தொடர்பற்று, சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு காப்புரிமை அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியராகப் பணிபுரிந்துகொண்டே நிகழ்த்தியவைதான் அந்தக் கண்டுபிடிப்புகள். இன்று உலகமே கொண்டாடும் மாபெரும் அந்த அறிவியல் மேதை அந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு, பணிஉயர்வு வேண்டி எழுதிய கடிதம் நிராகரிக்கப்பட்டிருந்தது.

ஆய்வுக் கட்டுரைகள் வெளியான பிறகும் உலகம், முக்கியமாக அறிவியல் உலகம் உடனடியாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. மாக்ஸ் பிளாங்க் என்ற மாபெரும் அறிவியல் அறிஞர்தான் (குவாண்டம் கோட்பாட்டின் தந்தை) இந்தக் கண்டுபிடிப்பாளரைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தார்.

அப்படி என்ன அற்புதங்களை அந்த ஆய்வுக் கட்டுரைகள் நிகழ்த்தின? அந்தக் கட்டுரைகளில் இரண்டு சார்பியல் தொடர்பானவை. முதல் கட்டுரை, நியூட்டனின் சிம்மாசனத்தை அசைத்துப்பார்க்கிறது. காலம், இடம் (வெளி) இரண்டும் அறுதியானவையோ, எல்லோருக்கும் ஒரே மாதிரியானவையோ அல்ல என்கிறார் ஐன்ஸ்டைன். அவரவர் அல்லது அந்தந்தப் பொருட்களின் இயக்கத்தைச் சார்ந்து இரண்டுமே வேறுபடும் என்கிறார். காலமும் வெளியும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதது என்ற சொல்லி, வெளியையும் காலத்தையும் ஒன்றுசேர்த்து, காலம்-வெளி என்ற ஒரு கருத்தை அதில் முன்வைக்கிறார்.

அடுத்த கட்டுரை, முதல் கட்டுரையின் தொடர்ச்சி. இதில்தான் உலகப் புகழ்பெற்ற E=mc2 என்ற சமன்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைக்கிறார். நிறையும் ஆற்றலும் வெவ்வேறானவை அல்ல என்றும் நிறையை ஆற்றலாக மாற்ற முடியும் என்றும் சொல் கிறது இந்தச் சமன்பாடு. அது மட்டுமல்ல, ஒவ்வொரு நிறையும் அளப்பரிய ஆற்றலைத் தனக்குள் வைத்திருக்கிறது என்றும் அந்தச் சமன்பாடு சொல்கிறது. இந்த உண்மையை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் சந்தேகமறத் தெரிந்துகொண்டது உலகம்.

மூன்றாவது கட்டுரையும் மிக முக்கியமானது. அதுநாள்வரை அணு என்பதை ஒரு கருதுகோளாகவும் கற்பனையாகவுமே அறிவியல் உலகம் கருதிவந்தது. ஆனால், ஐன்ஸ்டைனின் இந்தக் கட்டுரை தெளிவாக அணுக்களின் இருப்பை நிரூபித்தது.

இந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் உலகையே புரட்டிப் போடுவதற்குப் போதுமானவை என்றாலும், ஐன்ஸ்டைன் அத்துடன் நிற்கவில்லை. ஒளி என்பது அடிப்படையில் அலை வடிவத்தில் பயணிக்கிறது என்பதுதான் அதுவரையிலான நம்பிக்கை. ஆனால், உண்மையில் நுண்மையான தோட்டாக்கள் போன்ற கொத்துக்களாகத்தான் ஒளி பயணிக் கிறது என்று நான்காவது கட்டுரையில் நிறுவினார் ஐன்ஸ்டைன். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவராக ஆனார் ஐன்ஸ்டைன்.

ஒருசில ஆண்டுகளில் ஐன்ஸ்டைனின் மேதமையை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணிபுரிவதற்கான அழைப்புகள் அவருக்கு வந்தன. 1908-ம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு ஒளியின் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது அவருடைய புகழ்.

தனது 1905-ம் வருடத்திய ‘சிறப்பு சார்பியல் கோட்பாட்’டில் ஈர்ப்புவிசை விளக்கப்பட வில்லை என்பது அவருக்கு உறுத்திக்கொண்டிருந்தது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து 1915-ல் ‘சார்பியலின் பொதுக் கோட்பாடு’ என்ற இன்னொரு அற்புதம் அவரிடமிருந்து வெளிவந்தது. வெளி, காலம் இரண்டின் வளைவால் ஏற்படும் விளைவே ஈர்ப்புவிசை என்றார் அவர். பெரும் நிறை கொண்ட ஒரு பொருளைக் கடந்துசெல்லும்போது ஒளி வளையும் என்றார். இவையெல்லாம் அறிவியல் அறிஞர்கள் பலராலும்கூட உள்வாங்க முடியாத அளவுக்கு இருந்தன.

இந்தக் கோட்பாடுகளும் முந்தைய கோட்பாடுகளும் காலப்போக்கில் தெளிவாக நிரூபிக்கப்பட்டன. இந்தக் கோட்பாடுகளின் விளைவாக இயற்பியல், வானியல் போன்ற துறைகளில் பெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன/நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐன்ஸ்டைன் ஆரம்பித்த இடத்திலிருந்து இன்றைய அறிவியல் பயணித்திருக்கும் தூரம் மிகமிக அதிகம். ஆனால், இதற்கான மாபெரும் வித்துக்கள் விதைக்கப்பட்ட ஆண்டுகள்தான் 1905-ம் ஆண்டும் 1915-ம் ஆண்டும்.

தன் வாழ்நாளின் இறுதி 25 ஆண்டுகளில் ஐன்ஸ்டைன் தனது சக்தி முழுவதையும் குவாண்டம் கோட்பாட்டை மறுப்பதில் செலவிட்டார் (இந்தக் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஐன்ஸ்டைனும் ஒருவர் என்பது விந்தை). குவாண்டம் கோட்பாடு எல்லாவித சாத்தியங்களையும் அங்கீகரிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓர் இலக்கை நோக்கி எலக்ட்ரான் ஒன்று செலுத்தப்பட்டால், அது குறிப்பிட்ட ஒரு பாதையில்தான் பயணிக்க வேண்டுமென்பதில்லை.

அது பயணிக்கும் பாதையின் சாத்தியங்கள் எண்ணற்றவை. அதேபோல், அணுவில் ஒரு எலக்ட்ரான் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருக்க முடியும். இப்படியெல்லாம் குவாண்டம் கோட்பாடு சொன்னதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் பகடைக்காயாக உருட்டி விளையாடவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். வெவ்வேறு சாத்தியங்களின் கூட்டுத்தொகையாக அவர் பிரபஞ்சத்தைப் பார்க்கவில்லை. இந்தப் பிரபஞ்சத்துக்கு அடிப்படையாக அழகான, சீரான ஒரு தத்துவம் இருக்கிறது என்று அவர் நம்பினார். தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மூலம் குவாண்டம் கோட்பாடு நிரூபிக்கப்பட்டதால், ஐன்ஸ்டைன் தனது தோல்வியை வேறுவழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

அதன் பின்னர், தனது இறப்புவரை இன்னொரு பெருமுயற்சியில் ஈடுபட்டார். பிரபஞ்சத்தின் சாராம்சத்தை விளக்கக்கூடியதும், சார்பியல் கோட்பாடு, குவாண்டம் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதுமான ‘ஒருங்கிணைந்த கோட்பாடு’ ஒன்றை உருவாக்க அவர் முயன்றார். இறுதிவரை அது நடக்கவில்லை. இந்தப் பாதையில் இன்று பல்வேறு அறிவியலாளர்களும் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இன்னும் யாருக்கும் வெற்றி கிட்டவில்லை.

அறிவியலை ஆன்மிகச் செயலாகவே அவர் கருதினார். அறத்தை விடுத்த அறிவியலை அவர் வெறுத்தார். அவருக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், ஐன்ஸ்டைனுடைய கடவுள் மதரீதியான கடவுள் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படையான சக்திதான் அவருடைய கடவுள். ‘ஒருங்கிணைந்த கோட்பாடு’ என்பது அந்தக் கடவுளின் முகத்தைப் பார்ப்பதற்கான முயற்சியாகக்கூட இருக்கலாம்.

ஐன்ஸ்டைனின் பெயருடன் அணுகுண்டின் கண்டுபிடிப்பு பிணைக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக, வேறு வழியின்றிதான், அணுகுண்டு தயாரிக்கும்படி அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டைன் கடிதம் எழுதினார். அதன் விளைவை நாமெல்லோரும் அறிவோம்.

ஆனாலும், ஹிரோஷிமாமீது குண்டுவீசப்பட்ட தகவல் கிடைத்ததுமே அணு ஆயுதங்களுக்கு எதிரான தனது போரை அவர் தொடங்கிவிட்டார். தன் வாழ்நாளின் இறுதிவரை உலக அமைதிக்காகக் குரல்கொடுத்தார். ‘20-ம் நூற்றாண்டின் மனித’ராக ஐன்ஸ்டைனை 1999-ம் ஆண்டு ‘டைம்ஸ்’ பத்திரிகை தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தது (காந்திக்கு இரண்டாம் இடம்). இந்தப் பிரபஞ்சத்தின் புதிர்களுள் சிலவற்றை அவிழ்ப்பதில் வெற்றி பெற்றவரும் நவீன காலத்தின் மகத்தான மேதைகளில் ஒருவருமான ஐன்ஸ்டைனுக்கு அவருடைய பிறந்த நாளாகிய இன்று நம்முடைய நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.

தி இந்து, 14, மார்ச் ,2014 

Thursday, March 13, 2014

புலியைப் பிடிப்பார்களா?


காட்டுக்குள் புலியை வேட்டையாட செல்லும் வேட்டைக்காரன் புலியை தேடுவதை விட்டுவிட்டு, முயல் பின்னால் ஓடும் கதையாக இருக்கிறது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள் –வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் கொள்கைகளை, தாங்கள் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்ற வாக்குறுதிகளை சொல்லிதான் ஓட்டு கேட்கவேண்டும் என்பது காலம்காலமாக ஜனநாயக நாட்டில் கடைப்பிடிக்கவேண்டிய நீதியாகும். ஆனால், சமீபகாலமாக கொள்கைகள், வாக்குறுதிகளையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டுவிட்டு, ஓட்டுக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ? அவர்களுக்குத்தான் ஓட்டு என்ற தவறான நடைமுறை பின்பற்றப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. 
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தார்ப்பரியம் தேர்தல் நேரத்தில் மறைந்து போய்விடும். ஒரு வீட்டில் ஓட்டுபோட வயது உடைய எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு ஆதாயம் என்ற நிலை உருவாகி வருகிறது. ரூபாய் கொடுத்தால்தான் ஓட்டு என்கிற நிலைமை மக்களிடையே அதிகமாக வளர்ந்து வருவதால்தான், பணம் கொடுக்கிறவர் மட்டும் வெற்றிபெற முடியும் என்று ஒரு தூய்மையற்ற நடைமுறை உருவாகிவிட்டது. இதை தடுக்க தேர்தல் கமிஷன் எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்தாலும், ஏன் ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குவதை இவர்களால் தடுக்க முடியவில்லை? என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை டீ விற்பவர் என்ற வகையில் ஏளனமாக பேசியதை தங்களுக்கு தேர்தல் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்ட பா.ஜ.க., நாடு முழுவதும் டீக்கடைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யத்தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருப்பவர்களுக்கு ‘டீ’ வழங்குவதையே தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது என்று கூறி, ஒரு ‘சிங்கிள் டீ’ கொடுப்பதையே தேர்தல் கமிஷன் தடை செய்துவிட்டது. தேர்தல் நேரத்தின்போது, எந்த பொருளையும் இலவசமாக கொடுப்பது வாக்காளர்களை அந்த கட்சிக்கு ஒட்டு போடத்தூண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுவது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இதுபோன்ற தடைகளை எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பரிசு பொருளாகவோ, பணமாகவே கொடுப்பதை முற்றிலுமாக தடுத்துவிட்டால் நிச்சயமாக தேர்தல் கமிஷனுக்கு மக்கள் ஒரு ‘ஓ’ போடுவார்கள். 
ஆனால், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பெருமளவில் பணம் எடுத்து சென்றால், அதை தடுக்க வேண்டிய கடமையில் உள்ள தேர்தல் கமிஷன், மக்கள் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு சென்றாலும், அதற்கு கணக்கு காட்டு என்று பணத்தை பறிமுதல் செய்துவிடுகிறார்கள். திருமண காலம் இது. பெண்ணை பெற்றவர்கள் 4 பவுன் தங்க நகை வாங்க சென்றாலே, ஒரு லட்சத்திற்கு மேல் பணத்தை எடுத்து செல்லவேண்டும். அவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்து, அரசாங்க கஜானாவில் சேர்த்துவிட்டு, கணக்கை காட்டிவிட்டு பணத்தை எடுத்து செல்லுங்கள் என்றால், அவர்கள் எங்கே போவார்கள்?. 
சிறு, சிறு வியாபாரிகள் அன்றாடம் தங்கள் கடைகளில் விற்பனையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு பொருட்கள் வாங்க அடுத்த நாள் மொத்த விற்பனை கடைக்கு செல்வார்கள். அந்த பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துவிட்டு கணக்கை கேட்டால் என்ன செய்வார்கள்?. கிராமத்தில் இருந்து விவசாயிகள் விளைபொருளை விற்றுவிட்டு, அதில் வரும் பணத்தை நகரத்தில் உள்ள வங்கியில் போட சென்றாலும், அவசர செலவுகளுக்கு பணம் எடுத்துக்கொண்டு சென்றால்கூட, அந்த பணத்தை பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதுமட்டுமல்லாமல், ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் பணத்தை வங்கியில் எடுத்தாலும், போட்டாலும் கண்காணிக்கப்படும் என்றால், வங்கிக்கு போய் பணம் போடவேண்டும் என்ற ஆசை நடுத்தர மக்களுக்கு எப்படி வரும்? 
ஆக, அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டு கேட்கக்கூடாது, பரிசு பொருட்களை வழங்கக்கூடாது என்ற புலியை பிடிக்கவேண்டிய தேர்தல் கமிஷன், அந்த வேலையில் முழு ஈடுபாட்டை செலுத்துவதை விட்டுவிட்டு, முயலை பிடிக்க போன கதையாய் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், வியாபாரிகள், விவசாயிகளை பாதிக்கும் நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தினால், நிறைவேற்ற எடுத்துக்கொண்ட நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. 
தினத்தந்தி - 14-03-2014



Tuesday, March 11, 2014

சோழவரம் அருகே கிருஷ்ணர், ராதை சிலைகள் பறிமுதல்


சோழவரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 சாமி சிலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கியச் சாலைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜனப்பச்சத்திரம் கூட்ரோட் பகுதியில் பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை (தேர்தல்) வட்டாட்சியர் ரூபிநளினி தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

இதில் ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியிலிருந்து வந்த காரை சோதனை செய்தபோது, அதில் 3 அடி உயரமுள்ள கிருஷ்ணர், ராதை சிலைகள் இருந்தன.
இதையடுத்து காரில் இருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த சிதம்பரம், ராஜேஷ்கன்னா ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இதில், விஜயவாடாவில் உள்ள ஆலயத்தில் வைப்பதற்காக மயிலாடுதுறையில் சாமி சிலைகள் தயார் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்த சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோழவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக சோழவரம் போலீஸôர், அந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி

இது கிள்ளுக்கீரைதான்




மனித குலம் தோன்றிய நாளில் இருந்து சேமிப்பு பல வகைகளில் தொடங்கியது. எறும்புகூட மழை காலத்துக்காக உணவு பொருளை சேமிப்பதைப் பார்த்த மனிதன், பல வகைகளில் உணவு பொருட்களை சேமிக்க தொடங்கினான். காலப்போக்கில் பணத்தை சேமிக்க முற்பட்டபோது, அதில் சிறுசேமிப்பு முக்கிய பங்கு வகித்தது. என்னதான் வங்கிகள் பெருமளவில் தொடங்கப்பட்டாலும், கிராமப்புற மக்கள் பெரும்பாலும் தபால் ஆபீசில் உள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே பணம் போடுவதில் ஆர்வமாக இருந்தனர். தபால் ஆபீசு சேமிப்புக்கான முகவர்கள், இதில் பெரும்பாலும் பெண்களே இருப்பதால், அவர்களே வீடுகளுக்கு வந்து பெண்களிடம் சிறுசேமிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, பணம் வசூலித்து வந்தனர். போட்ட பணத்தின் வட்டியை தபால் ஆபீசில் இருந்து பெற்று தருவதிலும், முதிர்ச்சி அடைந்தவுடன் மொத்த பணத்தை எடுத்து திரும்பக்கொண்டு வருவதிலும் பெரும் பங்காற்றி வந்ததால், சிறுசேமிப்பில் தமிழ்நாடு உயர்வான இடத்தில் இருந்தது. மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழ்நாடு சிறு சேமிப்பில் முத்திரை பதித்துக்கொண்டு இருந்தது.

ஆனால் இப்போது தமிழக மக்கள் சிறு சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.24 ஆயிரம் கோடிக்கு மேல் சிறுசேமிப்பில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு பல மாநிலங்களைக் கடந்து ரூ.10 ஆயிரம் கோடி என்ற அளவிலேயே இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பொதுவாகவே நாடு முழுவதும் மக்களுக்கு சிறுசேமிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், மக்கள் நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்தால் அதை விற்கும்போது நல்ல லாபம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். அந்த லாபத்தை ஒப்பிடும்போது சிறுசேமிப்பு வட்டி விகிதம் மிகக்குறைவாகவே இருக்கிறது. தேர்தல் வருவதையொட்டி, சில சேமிப்புகளுக்கு மட்டும்
.1 சதவீதம் முதல் .2 சதவீதம் வரை வட்டி உயர்த்தினாலும், இது கிள்ளுக்கீரைதான். இப்போதும் தபால் ஆபிசுகளில் போடும் சேமிப்புத்திட்டங்களில் 4 சதவீதம் முதல் 8.8 சதவீதம் வரையே வட்டி கொடுக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு மட்டும் 5 ஆண்டுகால சேமிப்புக்கு 9.2 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. அரசின் நிதி நிறுவனங்களில் கூட குறைந்தபட்சம் 9.58 சதவீதம் முதல் 12.91 சதவீதம் வரை வட்டி கொடுக்கிறார்கள். மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகால சேமிப்புக்கு 13.73 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.

இந்தகாலத்தில் இருக்கும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு போன்ற நிலையையெல்லாம் கணக்கிட்டால், சிறுசேமிப்புத்திட்ட வட்டி விகிதம் நிச்சயமாக குறைவு. மேலும் சேமித்த பணத்தை எடுக்கப்போனால் வருமான வரியும் கட்டவேண்டியது இருக்கிறது. வயதான காலத்துக்காக சேமிப்பவர்களுக்காவது வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். மேலும், தபால் ஆபீசு முகவர்களின் கமிஷன் தொகையையும் பெருமளவில் குறைத்துவிட்டதால், அவர்களும் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். முகவர்களின் சேவையும் பெருமளவில் குறைந்துவிட்டதால், இதுவரை அவர்களின் சேவையில் பழக்கப்பட்ட மக்கள் இப்போது கஷ்டப்பட்டு தபால் ஆபீசுக்குச் சென்று பணம் போடவோ, எடுக்கவோ தயாராக இல்லை.

பொதுவாக சிறுசேமிப்புத்திட்டத்தில் மக்கள் முதலீடு செய்யும் பணம், உடனடியாக மத்திய அரசாங்கத்தால் பல சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிப்பதற்காக நீண்டகால தவணையில் திருப்பிக்கொடுக்க வழங்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கும் சாலை வசதி, மருத்துவமனைகள், போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நீண்டகால கடன் வழங்கப்படுகிறது. ஆக, ஒருபக்கம் சமுதாயத்துக்கு பயன்படும் சமூக நலத்திட்டங்களுக்கான பயன், மக்களுக்கு சேமிப்புக்கான வசதி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் சிறுசேமிப்புத்திட்டங்களை ஊக்குவிக்க மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு நல்ல வட்டி வழங்கவேண்டும், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும், இந்த திட்டத்தின் செயல்பாட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி, அவர்கள் பணியை விரைவுபடுத்த வேண்டும். அடுத்து எந்த ஆட்சி வந்தாலும், இதையெல்லாம் கருத்தில்கொண்டு செயல்படவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.

தினத்தந்தி 


உக்ரைன் மக்கள் ரஷ்யாவுக்கு எதிரான அறைகூவல்







உக்ரைனின் தேசியக் கவிஞரான தாரஸ் ஷெவ்சென்கோவின் 200-வது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் உக்ரைனியர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவகையில் ரஷ்யாவுக்கு எதிரான அறைகூவலை உக்ரைன் மக்கள் விடுத்திருக்கிறார்கள்.

சோவியத் யூனியன் பிளவுபட்டபோது உக்ரைன் தனி நாடானாலும், ரஷ்யாவின் துணை நாடுபோலத்தான் இதுநாள்வரை இருந்திருக்கிறது. உக்ரைனின் பொருளாதாரமும் கலாச்சாரமும் ரஷ்யாவைச் சார்ந்தே இருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய உறவுக்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவை விரும்பி உக்ரைனியர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்ததும் பிரச்சினை ஆரம்பமானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் தலைநகர் கீவில் சுதந்திரச் சதுக்கத்தை முற்றுகையிட, போராட்டம் தீவிரமடைந்தது. உக்ரைனைச் சரிகட்ட 15,000 கோடி டாலர்கள் கடன், உக்ரைனியர்களுக்கான இயற்கை எரிவாயுக்கு விலைக் குறைப்பு என ஏகப்பட்ட அறிவிப்புகளை ரஷ்யா வெளியிட்டாலும், போராட்டக்காரர்கள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து மோதல்கள், கலவரங்கள்… கடந்த பிப்ரவரி 20 அன்று மட்டும் கலவரத்தில் 64 பேர் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டுக்குப் பிறகு, பதவி விலகுவதற்கும் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதற்கும் பிரதமர் யனுகோவிச் ஒப்புக்கொண்டார். நாடாளுமன்றமும் அவரது அதிகாரங்களைப் பெரிதும் குறைத்தது. ஆனாலும், பலனில்லை. போராட்டக்காரர்கள் கைக்கு கீவ் நகரம் வந்தபோது யனுக்கோவிச் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். இடைக்காலப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்செனிய் யாட்சென்யுக்கை ரஷ்யா நிராகரித்துவிட்டது. இப்போது உக்ரைனின் தீபகற்பமான கிரிமியா நகரை ரஷ்யப் படைகள் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன.

ரஷ்யாவுக்கு உக்ரைன் ஏன் அவ்வளவு முக்கியம்?

கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவூதி அரேபியாவுடன் போட்டி போடும் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 70%-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உக்ரைன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், ரஷ்யாவின் ராணுவ நிலைகளில் ஒன்றுபோலத்தான் உக்ரைனும். உக்ரைன் மக்கள்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ரஷ்யர்களைப் பாதுகாக்கவே படைகளை இறக்கியிருக்கிறோம் என்று ரஷ்யா சொன்னாலும் இந்த ஆக்கிரமிப்பின் அடிப்படை இதுவே. ரஷ்ய ஆக்கிரமிப்பால் கோபமடைந்திருக்கும் ‘ஜி8’ உறுப்பினர்களான அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஜூனில் ரஷ்யா தலைமையில் சோச்சியில் நடைபெறவிருக்கும் ‘ஜி-8’ உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதோடு, ரஷ்யாவை அமைப்பிலிருந்து நீக்குவதைப் பற்றியும் ஆலோசித்துவருகின்றன.

வல்லரசுகளின் விளையாட்டுக்கான மேலும் ஒரு களமாக உக்ரைன் மாறியிருக்கிறது. உக்ரைன் பிரச்சினை நீடித்தால் பெட்ரோல் விலையில் தொடங்கி சர்வதேச அமைதிவரை எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்படும். அதேநேரத்தில் இதை சர்வதேசப் பிரச்சினையாக அணுகும்போது அங்குள்ள மக்களின் நலன் நம் கவனத்திலிருந்து தவறிப்போகிறது. சர்வதேச நாடுகள் களமிறங்கும்போது உக்ரைனியர்களின் உரிமைக் குரல் அமுங்கிப்போய் மேலாதிக்கத்துக்கான வல்லரசுகளின் போட்டியே முன்வந்து நிற்கும். மொத்தத்தில், கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தீர்வு என்பது தெரியவில்லை.

தினமணி -11-03-2014

Monday, March 10, 2014

ஒரே சிற்பியின் கைவண்ணத்தில் உருவான ஆடல்வல்லானின் ஐந்து அதியற்புத மூர்த்தங்கள்!




நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. பொதுவாக ஆதிரைத் திருநாள் அன்று சிவனைடியாரான சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனே அடியாராக வந்து சேந்தனாரிடம் களியும், குழம்பும் வாங்கிச் சாப்பிட்டதாயும், அந்தக் களி ஈசன் மேல் சிந்திக் கிடக்க, கோபம் கொண்ட தீட்சிதர்களுக்குச் சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த வேண்டி ஈசன் தன் தேரை ஓடாமல் தடைப்படுமாறு செய்கின்றார். அப்போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடாது கிடந்த தேரை நிலைக்குக் கொண்டு வருகின்றார் என்று சொல்லுவார்கள். இந்தப் பல்லாண்டு திருவிசைப்பா என்ற பெயரில் ஒன்பதாம் திருமுறையில் கடைசி 29-வது சேர்க்கையில் கோயில் என்ற தலைப்பில் காணக் கிடைக்கின்றன.


"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்டகோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

இந்தக் கதை எல்லாரும் அறிந்த ஒன்று. ஆகையால் நாம் காணப் போவது இந்த ஆதிரைத் திருநாளுக்கு உரிய நடராஜரின் திருமேனி சிதம்பரத்துக்கு வந்த கதையை.  கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னனுக்கு ஹிரண்ய வர்மன், சிம்ம வர்மன் என்னும் பெயர்கள் உண்டு. இவன் தான் பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்றொரு கூற்றும் உண்டு. 

இந்த மன்னன் நடராஜர்பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் சிலை வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான். சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை வடிக்கச் சொல்கின்றான். சிற்பிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிதாவது செம்பு கலவாமல் சிலை வடிக்க முடியவில்லை.

அப்போது நமசிவாய முத்து ஸ்தபதி என்றொருவரை விட்டு வடிக்கச் செய்த செப்புச் சிலையின் வடிவழகு மன்னனின் கண்ணையும் கருத்தையும் மிகக் கவர்ந்தது. எனினும் அது செப்பு என்பதால் சிதம்பரத்தில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என எண்ணிய மன்னன் தூய பொன்னால் நடராஜத் திருமேனியை வடிக்கச் சொன்னான். இந்த முதல் சிலையை என்ன செய்யலாம் என யோசித்த மன்னனுக்கு இரண்டாவதாய் வடித்துக் கொண்டிருக்கும் சிலையைக் காட்டுவதற்காகச் சிற்பிகள் வந்து அழைத்தனர். சிற்பிகள் முகமோ குதூகலமாய் இல்லை. ஒரே கலவரம் கூத்தாடியது அவர்கள் முகங்களில். என்றாலும் தங்கள் குருநாதர் ஆணை! மன்னனை அழைத்துவர! ஆகவே மன்னனை சிலையைக் காண வருமாறு அழைத்தனர்.

சிற்பசாலையில் சிற்பியோ குழம்பிப் போயிருந்தார். நல்ல சுத்தமான பசும்பொன்னை உருக்கி எடுத்துச் சிலை வார்க்கும்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு முதியவர். பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சில் கவனமாய் இருக்கையிலே தன் கையிலிருந்த செப்புக் காசுகளை பொன்னைக் குழம்பாய் உருக்கிக் கொண்டிருந்தவற்றில் போட்டுவிட்டு, இவற்றைச் சேர்த்துச் சிலை வடியுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார்.செப்பு உருகித் தங்கக் குழம்போடு கலந்து, அதை சிலையாகவும் வார்த்தாயிற்று. ஆனால் மன்னனுக்குத் தெரிந்தால்?? மன்னனிடம் சொல்லுவதா வேண்டாமா?? சிற்பி குழம்பிப் போய் இருந்தார். மன்னனும் வந்தான். சிலையைக் கண்டான். தூக்கிய திருவடியையும், ஊன்றிய திருவடியையும் கண்டான். கண் முன்னே அந்தக் கூத்தனே நடனம் ஆடுவதையும் உணர்ந்தான். சிலையைக் கைகளால் தொட்டுத் தடவிப் பார்த்தான். விரிந்த செஞ்சடை, அபய ஹஸ்தங்கள் என அனைத்துமே அவன் மனதில் பதிந்தன. என்றாலும் முழுக்க, முழுக்கப் பொன்னால் ஆனதா? சந்தேகம் கொப்பளிக்கச் சிற்பியை நோக்கினான்.

சிற்பி மன்னனிடம் நடந்ததைச் சொன்னார். மன்னனுக்குக் கோபம் மூண்டது. தலைமைச் சிற்பிநமச்சிவாய முத்துவையும், உடனிருந்து உதவிய சிற்பிகளையும் சிறையில் இட்டான். சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒருமுறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது. அன்றிரவு தூக்கம் இன்றித் தவித்த மன்னன் ஒருவழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி. கண்ணைக் கூசும் ஒளியைக் காணமுடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜத் திருமேனி காட்சி அளிக்க, மன்னனுக்கு ஓர் அசரீரி போன்றதொரு ஒலி கேட்டது. "மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன்மேனியாகக் காட்சி அளிப்போம். இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும், சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ, அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான்.

அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.

அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும், தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல், வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் இச்சிலை தாமிரபரணிக் கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள், மன்னன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது. அப்போது தோன்றிய மன்னன் கனவில், நெல்லையப்பர் வந்து, "மன்னா வனத்துக்குப் போ. சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை, சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார்.

விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்
றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம் கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அதோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான். ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி 
குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர்


செசெப்பறை அழகியகூத்தர்    செப்பறை அழகியகூத்தர்    செப்பறை ழசெப்பறை ஆனந்தக் கூத்தர்கிசெப்பறை அழகியகூத்தர்    செப்பறை அழகியகூத்தர்    செப்பறை அழகியகூத்தர்    யகூத்தர்    ப்பறை அழகியகூத்தர்    செப்செப்பறை அழகியகூத்தர்    பஸ்றை 

இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி மேலும் காண்போம்..


கட்டாரிமங்கலம்


ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா, இதை வடிவமைத்தவர் யாரோ!? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பி நமசிவாய முத்துவின்  அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட கட்டாரி மங்கலம்" என்னும் ஊரிலும், "கரிசூழ்ந்த மங்கலம்" ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார். அவற்றின் அழகில் மெய்மறந்த வீரபாண்டியன், இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன். பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள்.


கரிசூழ்ந்த மங்கலம் 

ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர, வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன், வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும், கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். 



கருவேலங்குளம்


சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர், அது சிலை என்பதையும் மறந்து, சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள, என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரம் சரியாக இருக்கும்.
 இருப்பிடம் :

வட மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள், திருநெல்வேலிக்கு சற்று முன்புள்ள தாழையூத்து என்ற ஊரில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் விலக்கில் இருந்து, செப்பறையை அடையலாம். அங்கு உலகின் முதல் நடராஜரை தரிசித்து விட்டு, அங்கிருந்து திருநெல்வேலி பைபாஸ் ரோடு வழியாக பத்தமடை செல்ல வேண்டும். பத்தமடையிலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் விலக்கில் திரும்பி 3கி,மீ., தூரத்திலுள்ள கரிசூழ்ந்தமங்கலம் சென்று, கனகசபாபதியை தரிசிக்க வேண்டும். இங்கிருந்து பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம். இங்கே, கன்னத்தில் கிள்ளப்பட்ட நடராஜரை தரிசித்து விட்டு, களக்காடு, நான்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக கட்டாரிமங்கலத்தை 40 கி.மீ., கடந்து அடையலாம். இந்த நான்கு தலங்களையும் திருநெல்வேலியில் இருந்து காரில் சென்று வந்தால் 4 மணி நேரத்தில் தரிசனம் முடித்து விடலாம்.திருவாதிரை அன்று இந்தக் கோயில்கள் நாள் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். பஸ்களிலும் சென்று வரலாம். 

அருகிலுள்ள ரயில் நிலையம் :

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் : 
  
மதுரை,திருவனந்தபுரம் 

.

Friday, March 7, 2014

துரோணாச்சார்யா, அர்ஜுனா விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு


துரோணாச்சார்யா, அர்ஜுனா விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தலைசிறந்த பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் வாழ்நாள் சாதனை படைத்தவர்கள், விளையாட்டு மேம்பாட்டுக்காக பாடுபடும் நிறுவனங்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் முறையே துரோணாச்சார்யா விருது, அர்ஜுனா விருது, தயான் சந்த் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, ராஷ்டீரிய கேல் புராத்சஹன் புரஸ்கார் விருது ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது மத்திய அரசு.

இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள மேற்கண்ட விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 15-ம் தேதியாகும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் www.sdat.tn.gov.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை “உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-A, பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-84” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து 

மங்காத ஓவியங்கள்


கல்லூரிக் காலத்தில் பயின்ற ஓவியத்தைத் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த சாந்தி ஜெயராம். இருபது ஆண்டுகளுக்கு முன் தபால் முறையில் ஓவியப் பயிற்சி எடுத்தவர் இவர். தபாலில் ஓவிய ஆசிரியர்கள் கற்றுத்தருகிற நுணுக்கங்களைப் பயில்வது அத்தனை சுலபமில்லை. ஆனால், அவற்றை ஆர்வத்துடன் கற்றுத் தெளிந்ததுதான், இவரை ‘பரம்பரா ஆர்ட் கேலரி’யைத் தொடங்க வைத்தது.

திருமணத்துக்குப் பிறகு வழக்கமான வேலை, குழந்தைகள் என்று நாள் முழுவதும் பொறுப்பும் கடைமையும் இருந்தாலும் ஓவியத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினார் சாந்தி. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இயங்கிவரும் இவருடைய ஓவியப் பள்ளியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றிருக்கிறார்கள்.

சாந்தியிடம் பயின்ற மாணவர்கள் இன்று சிறந்த ஓவிய ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். தன் இரு மகள்களுக்கும் ஓவியம் கற்றுத் தந்து அவர்களையும் பயிற்றுநர்களாக மாற்றியிருக்கிறார்.

ரவிவர்மாவின் பாதையில்

“ஓவியத்தின் அடிப்படை நுணுக்கங்களைத் தேர்ந்த ஆசிரியர்களிடம் கற்றுக் கொண்டது என் பலம். அடிப்படை நுணுக்கத்துடன் என் சுய சிந்தனையை இணைத்து ஓவியங்கள் வரைந்தது என் ஓவியங்களுக்கு இரட்டிப்பு மெருகைக் கொடுத்தது. கேரளாவின் சிறந்த ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். அந்த ஓவியப் பாணியைக் கற்றுக்கொண்டு பல படங்கள் வரைந்திருக்கிறேன். சிலவற்றை என் மாணவர்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறேன்” என்று சொல்லும் சாந்தி, தஞ்சாவூர் ஓவியங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது என்கிறார்.

“ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மங்காத அழகுடன் விளங்கும் தஞ்சாவூர் ஓவியங்களைத்தான் பலர் விரும்பிக் கேட்கிறார்கள். 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட தாளைக்கொண்டு செய்யப்படும் ஓவியப் படைப்புகள் மிகச் சிறந்த பரிசுப் பொருட்களாக அமைகின்றன” என்று சொல்லும் சாந்தி, தன் படைப்புகளுக்காகப் பல பரிசுகளை வென்றிருக்கிறார்.

ப்ரதிமா , தி இந்து,. 

தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்

தைரியத்துடன் செல்லுங்கள் வெற்றி நிச்சயம்!

ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர விண்ணப்பிப்பது, விண்ணப்பம் தயாரிக்கும் முறை ஆகியவை பற்றிப் பார்த்தோம். நேர்முகத் தேர்வில் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என இப்போது பார்க்கலாம்.

நேர்முகத் தேர்வு அறையின் கதவை லேசாக திறந்து, தலையை மட்டும் நீட்டி உள்ளே செல்வது முறையல்ல. லேசாக கதவைத் தட்டிவிட்டு நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையுடன் புன்னகை பூத்தபடி செல்லுங்கள்.

ஒன்றுக்கு மேற்பட்டோர் நேர்முகத் தேர்வில் இருந்தால், நீங்கள் அமரக்கூடிய நாற்காலிக்கு பின்புறமாக நின்று, அனைவருக்கும் சேர்த்து வணக்கம் தெரிவிக்கலாம். நாற்காலியில் நிமிர்ந்து அமருங்கள். குனிந்தபடியோ, கையைக் கட்டிக் கொண்டோ அமர வேண்டாம். உடன் கொண்டு செல்லும் கோப்புகளை இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வலது கையால் சான்றிதழ், ஆவணங்களை எடுத்துக் கொடுக்க வசதியாக இருக்கும்.

நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் கேட்கும் கேள்விக்கு எதிர்மறையான பதில் அளிக்க வேண்டாம். உதாரணத்துக்கு நீங்கள் படித்த கல்லூரியின் உள்கட்டமைப்பு குறித்து கேட்டால், எந்த வசதியும் இல்லை என்று குற்றம்சாட்டக் கூடாது. குறிப்பிட்ட வசதிகளை மேம்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்லலாம். 3 பேர் தனித்தனியாக கேள்வி கேட்கும்போது ஏற்கெனவே மற்றவரிடம் கூறிய பதிலையே சொல்ல வேண்டாம். பதில் அளிக்கும்போது பெரும்பாலும் ஒற்றை வார்த்தையை தவிர்க்கவும். சரளமாக, கோர்வையாக பதில் அளியுங்கள்.

மற்ற நிறுவனம் குறித்தோ, மற்றவர்கள் பற்றியோ தவறான கருத்துகளைச் சொல்ல வேண்டாம். கடினமான கேள்விகளை எதிர்கொள்ளும்போது முகத்தில் கோபம் அல்லது படபடப்பை காட்டக் கூடாது. அதுபோன்ற தருணங்களில் முடிந்தவரை தெரிந்த பதிலை அளிக்கலாம். தெரியாத விஷயங்களுக்கு, ‘தெரியவில்லை’ என்று கூறுவதைவிட ‘அதைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

நேர்முகத் தேர்வில் சுய அறிமுகத்தின்போது உங்கள் திறமைகளையும், உங்கள் படிப்பின் முக்கியத்துவத்தையும் தெளிவாகச் சொல்லுங்கள். நேர்முகத் தேர்வு முடிந்ததும் நேராக எழுந்து நின்று புன்னகையுடன் கைகுலுக்கி விடை பெற வேண்டும். இதன்மூலம் தேர்வு நடத்துபவர்களின் நன்மதிப்பைப் பெறலாம்.

சகலவிதமான படிப்புகள், மேற்படிப்புகள், அவற்றை எங்கு படிக்கலாம் என்ற விவரங்கள், அவற்றுக்கான தகுதித் தேர்வுகள், என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் ஆகியவற்றை கடந்த 100 நாட்களாகப் பார்த்தோம். பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியிருக்கும் நிலையில் தற்காலிகமாக விடைபெறுவோம். மீண்டும் சந்திப்போம். வாழ்த்துக்கள்!

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

தி இந்து 

பயத்தை உடைத்து நொறுக்குவோம்

மகாபாரதத்தில் ஒரு சுவையான கதை உண்டு. காட்டில் தண்ணீர் பிடிக்க குளத்துக்குச் சென்ற பாண்டவர்களை ஒவ்வொருவராக குளத்தில் இருந்த ஒரு யட்சன் கொன்றுவிடுகிறான். இறுதியாக தருமன் வருகிறான். தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் பாண்டவர்களை உயிர்ப்பித்துவிடுவதாகக் கூறி கேள்விகளைக் கேட்கிறான் யட்சன்.

அதில் ஒரு கேள்வி. ‘எதை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்?’

இதற்கு தருமன் சொன்ன பதில்.. ‘மன தைரியத்தை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்’.

ஆனால், தருமனே இக்காலத்தில் இருந்திருந்தால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மனம் கலங்கியிருப்பான். காரணம், தேர்வுகள். குறிப்பாக, ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கும்

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளைக் கண்டு மாணவர்கள் கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்குகிறார்கள்.

பிளஸ் 2 தேர்வு எழுதச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலரைப் பார்த்தேன். பெரும்பான்மையரின் முகம் பதற்றத்தில் இருந்தன. அவர்களில் எனக்குத் தெரிந்த சிலரிடம் பேச்சு கொடுத்தேன். கடந்த தேர்வுகளில் அவர்கள் மிகச் சிறப்பான மதிப்பெண்களையே எடுத்திருந்தார்கள். ஆனாலும், இப்போது தேர்வுக்குச் செல்லும்போது பயம். தேவையற்ற பயம்.

அதை எப்படி அகற்றுவது? மிகவும் எளிது மாணவர்களே.

பயத்தை போக்கிவிட்டாலே போதும்; உற்சாகம் பொங்கி வழியும். எப்போதோ படித்ததுகூட நினைவில் வந்து குவிந்து கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத்தரும்.

மாணவர்கள் மட்டுமா பயப்படுகிறார்கள்? பெற்றோர், உடன்பிறந்தவர்கள், ஆசிரியர்கள் என்று எல்லோரையும் தொற்றிக்கொள்கிறது, இந்த தேர்வுக் காய்ச்சல். இந்த பயத்தால் விளையும் தீமைகள் எண்ணிலடங்காதவை. ஆனால், பயப்படுவதால் எந்தப் பிரச்சினையும் தீர்வதில்லை கண்மணிகளே. ஆகவே உங்களது முதல் தேவை, பயத்தை தூக்கி எறிந்துவிட்டு, தேர்வை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதுதான்.

பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் நான்கு. அவற்றில் முதன்மையானது அப்பிரச்சினையைப் புரிந்துகொள்வது. அதாவது பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் அலசுவது. 2-வது, நம் திறனை ஆராய்தல். 3-வது அதை அடையும் வழிகளை முறையாகத் திட்டமிடல். 4-வது, திட்டமிட்டதை நடைமுறையில் சாத்தியப்படுத்த உழைத்தல். ஆக, பிரச்சினையைப் புரிந்துகொள்ளுதல், நம் திறனை ஆராய்தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஆகிய 4 நிலைகளில் வெற்றிகரமாக செயல்பட்டால் தேர்வுகளை எதிர்கொள்வது மிக மிக எளிது.

குறுகிய காலத்துக்குள் எவ்வளவு படிக்க வேண்டும்? நம்மால் எவ்வளவு வேகமாகப் படிக்க முடியும்? எப்படிப் படிக்க வேண்டும்? – என்பதை யோசித்துப் பின் செயல்படுத்தினால் தேர்வைக் கண்டு பயம்கொள்ள வேண்டியதில்லை.

வாருங்கள்.. பயத்தை உடைத்து நொறுக்குவோம். வெற்றிப் பயணத்தை இந்த நொடியில் இருந்தே ஆரம்பிப்போம்!

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

தி இந்து 

ஆயிரம் ஆண்டு ரகசியம்


பட்டு என்றவுடன் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, ராசிபுரம் போன்ற பட்டுக்குப் பெயர்போன இடங்கள் நம் நினைவுக்கு வரும். அத்துடன் பாரம்பர்யம் என்னும் ஒரு சொல்லும். அந்த அளவுக்குப் பட்டு நம் கலாசாரத்துடன் இணைந்து இருக்கிறது.

நாகரிகம் வளர வளர நம் வாழ்க்கை முறையில், நம் உணவு பழக்கவழக்கங்களில், உடைகளிலும் மாற்றம் வந்துவிட்டன. ஆனாலும் கோயில், குடும்ப விழாக்களில் பட்டாடை என்பது இன்னும் ஒரு கெளரவமான அடையாளமாக இருந்துவருகிறது. அரிதாக உபயோகித்தாலும் பட்டுக்குத் தரும் முக்கியத்துவம் வேறு ஆடைகளுக்கு இல்லை.

பட்டுக்கும் கிட்டதட்ட 5000 வருஷத்துக்கும் மேற்பட்ட பாரம்பரியம் உண்டு. ஹாங் டீங் (Huang di) என்னும் ஒரு சீன மன்னனின் மனைவிதான் சீ லீங் காய் (Si-Ling-Chi). அவர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மல்பெரி மரத்துக்கு கீழ அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தாள்.

அப்போது அந்த மரத்தின் மேல் இருந்து வெள்ளை, வெள்ளையான கூடுகள் தேநீர்க் குவளைக்குள் விழுந்து விட்டன. பயத்தில் குவளையைத் தவற விடவும் அது அவள் மீது விழுந்து, தேநீர் முழுவதும் ஆடையில் சிதறிவிட்டது. அதைத் துடைக்கக் கவனித்தபோது அந்தக் கூடு, பளபளக்கும் இழையாக மின்னியதை வியந்து கவனித்திருக்கிறார். பிறகு அது மல்பெர்ரி இலைகளில் இருக்கும் பட்டுப் புழுக்களின் கூடு என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இது நடந்தது கி.மு. 2700ஆம் ஆண்டு வாக்கில். பிறகு சீ லீங் காய், பட்டு வளர்ப்பதை ஒரு தொழிலாக மேம்படுத்தியிருக்கிறார். அந்த ராணியைச் சீனர்கள் பட்டின் கடவுளாக இன்றைக்கும் போற்றுகிறார்கள். ஒரு பெண் கண்டுபிடித்ததாலோ என்னவோ பட்டுத் தொழில் நுட்பம் பெண்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியமாக வெகு காலத்துக்கு இருந்தது.

பட்டு கண்டுபிடிக்கப்பட்ட அதே நூற்றாண்டில் சீனாவில் பட்டு உற்பத்தி பெரும் வளர்ச்சியடைந்தது. மேலை நாடுகளுக்கும் பட்டு நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் வியாபார ரீதியாக இணைக்கும் பட்டுப் பாதை (Silk Route) பட்டு விற்பனைக்காக உருவானதுதான்.

இந்தியாவில் பட்டு

பட்டு தயாரிக்கும் நுட்பம் கிட்டதட்ட 2500 வருஷமாகச் சீனர்களால் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. அண்டை நாடான ஜப்பான்தான் முதலில் பட்டின் ரகசித்தை அவிழ்த்தது. அது நடந்தது கி.மு. 3ஆம் நூற்றாண்டில். அவர்கள் சீனப் பெண்கள் சிலரை அடிமையாகக் கொண்டுபோய் இந்த நுட்பங்களைத் அறிந்துகொண்டார்கள். இன்று ஜப்பான் உலகிலேயே அதிகமாகப் பட்டு பயன்படுத்தும் நாடாக இருக்கிறது.

இந்தியாவுக்குப் பட்டுப்புழு வளர்ப்பின் நுட்பம் வந்தது ஒரு சீன இளவரசி மூலமாகத்தான். பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட இளவரசன் ஒருவன், சீன இளவரசி ஒருத்தியை மண முடித்தார். அவள் வழியாக வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான சான்று இல்ல. ஆனால் பட்டுத் தொழில்நுட்பம் கி.மு. 1ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அறிமுகமானதாகச் சொல்லப்படுகிறது.

படிப்படியாக இந்த நுட்பம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவுகிறது. இன்றும் பட்டு உற்பத்தியில் சீனாதான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா, உஸ்பெஸ்கிதான், தாய்லாந்து, ஜப்பான், கொரியா, வியட்னாம், ஈரான் என 30க்கும் மேற்பட்ட நாடுகளும் குறிப்பிடத்தகுந்த வகையில் உற்பத்திசெய்கின்றன.

பண்டைய இந்திய மன்னரான கனிஷ்கர் காலத்தில், கி.மு. 58இல், இந்தியாவில் இருந்து பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்ததாக வரலாற்றுத் தகவல் இருக்கிறது. கி.பி.16 நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள். அதனால் அப்போது சீனாவுக்கு நிகராக இந்தியாவும் பட்டு ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது.


லூயீ பாஸ்டரும் பட்டும்

இன்று இந்தியாவில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்யப்படுது. பட்டு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் கர்நாடகம். இதற்குக் காரணம் திப்பு சுல்தான். அவர்தான் 18ஆம் நூற்றாண்டிலேயே மைசூரில் பட்டுப்புழு உற்பத்தி நிலையங்களை அமைத்தார்.

கர்நாடகத்துக்கு அடுத்த நிலைகளில் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கோவை, தர்மபுரி மாவட்டங்களில் இந்தத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா, உலகப் பட்டு உற்பத்தியில் 2ஆம் இடம் வகித்தாலும் நமது உற்பத்தி எல்லாம் மீறி நாம் செலவு செய்கிறோம். இந்தியர்களின் பட்டுத் தேவை ஆண்டுக்கு 26 ஆயிரம் டன் ஆகும்.

நமது உற்பத்தியை விடக் கூடுதலாக 14 டன் நமக்குத் தேவைப்படுகிறது. தேவைப்படும் மீதப் பட்டைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம். 1857ஆம் ஆண்டு வாக்கில் ப்ரான்சின் தென்பகுதியில் இருந்த பட்டு உற்பத்திப் பண்ணைகளில் பட்டுப் புழுக்கள் எல்லாம் ஒரு வித்தியாசமான நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின.

அதனால் பட்டுத் தொழிலில் பெரிய சரிவு ஏற்பட்டது. இதைச் சரிசெய்வதற்காகப் பட்டு உற்பத்தியாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளரான லூயீ பாஸ்டரை (Louis Pasteur) அழைத்தார்கள். லூயீ பாஸ்டர், நோய்க்கான காரணம் பாக்டீரியா எனக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆதாரமாக இருந்தது.

சுவாரஸ்யமான சந்தேகம்

இந்தப் பட்டுத் தொழில்ழ் நுட்பத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஐரோப்பியர்களுக்கு பட்டு எதிலிருந்து வந்திருக்கும்? எனப் பயங்கர குழப்பமும் ஆர்வமும். அது மரத்தில் காய்க்கிறதா, ரசாயனப்பொருளா? பலவிதமான ஆராய்ச்சில் ஈடுபட்டார்கள். ஒரு புழுவில் இருந்துதான் பட்டு வருகிறது என்பது அவர்கள் யூகிக்கவே முடியாத விடையாக இருந்திருக்கும்.

பட்டுப் புழுவின் அறிவியல் பெயர் Bombyx mori. பட்டுப்புழு வளர்ப்பு முறை sericulture எனச் சொல்லப்படுது. இது ஒரு வேளாண் தொழில். ஒரு பூச்சியை (பட்டுப் புழுவை) வளர்ப்பது வேளாண் தொழிலாகப் பாவிக்கப்படுவது முரணான சுவாரஸ்யம். பட்டுப் புழு, முட்டைகள் பொரிப்பதற்கு 10 நாட்கள்வரை ஆகும். முட்டைகளில் இருந்து வெளிவரும் புழு 7cm நீளம் வரை வளரக் கூடியது.

அது மல்பெரி இலைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளக்கூடியது. நல்ல வளர்ந்த நிலையில் உள்ள பட்டுப் புழு 7.5cm இருக்கும். பட்டுப் புழு5வின் மொத்த எடையில் 25 சதவீதம் உமிழ் நீர் சுரப்பிகளால் ஆனது. உமிழ் நீர்தான் பட்டு இழையாக வரும். தன்னுடைய ஐந்தாம் பருவத்தில் புழு கூடு கட்டத் தயாராகும். உமிழ் நீரை உமிழ்ந்து கூடுகளைக் கட்டுகிறது. மூன்று நாட்கள் வரை ஓயாது கூடு கட்டும். ஒரு பட்டுக் கூடு 500ல் இருந்து 1000 மீட்டர் நீளமான பட்டு இழையைக் கொண்டது.

ஒரு பட்டுப் புடவை நெய்ய 5000 பட்டுக் கூடுகள் தேவைப்படும். இந்தக் கூட்டைச் சுடுநீரில் வேகவைத்து பட்டு இழைகைளை எளிதாகப் பிரித்து எடுக்கிறார்கள். பிறகு நூலிழைகள் வெளுக்கப்பட்டுச் சாயம் சேர்க்கப்பட்டு நெய்யப்படுது. அதன் மீது தங்கம் பூசப்பட்டு சரிகை தயாரிக்கப்படுது. ஆடைகளில் ஜரிகை சேர்க்கிறது முகாலாயர் காலகட்டத்தில் வந்தது. இன்றும் தங்கம், வெள்ளி ஜரிகையைப் பட்டில் சேர்த்து நெய்யப்படுகிறது. ஒரிஜினல் தங்கம், வெள்ளி இல்லாமல் எலக்ரோப்ளேட்டிங்கில் Imitaion Zariயும் இப்போது தயாரிக்கப்படுது.

பட்டுக்கு இவ்வளவு நீண்ட வரலாறு உண்டு. ‘பட்டுப் பாரம்பர்யம்’ எனச் சொல்வது நுற்றுக்கு நூறு சரியானதுதான் இல்லையா? 

தி இந்து