தமிழ்நாடு, ஆன்மிகத்தைப் போற்றுவதில் தனிப்பெருமைவாய்ந்த நாடு. ஆதிகாலத்தில் இருந்தே தமிழர்கள் இறைவழிபாட்டில் மிகத்தீவிரமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் பல உண்டு. ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்றும், ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்றும், பண்டைய காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் நடைமுறையாகக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கோவில் வழிபாடு, கோவில் விழாக்கள் என்பது தமிழர்களின் வாழ்வியலோடும், கலாசாரத்தோடும் கலந்தது மட்டுமின்றி, அவர்களின் உணர்வுகளோடும் ஒன்றி நிற்பதாகும்.
1,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் எத்தனை வகையான திருக்கோவில்கள் இருந்தன? என்பதை திருநாவுக்கரசு சுவாமிகளின் ஒரு திருத்தாண்டவம் தெளிவாக விளக்குகிறது. தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களும் ஏராளமான கோவில்களை அமைத்து வழிபட்டனர். அதேபோல, வழி, வழியாக வந்த தமிழர்கள் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட, அம்மன் கோவில்கள், விநாயகர், முருகன், சிவன்கோவில்கள் மற்றும் காவல் தெய்வங்கள் என்று எண்ணற்ற கோவில்களை வைத்துள்ளனர். அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 38,529 கோவில்கள் இருந்தாலும், கிராமங்களில் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த லட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. கோவில்கள் அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் குடியிருக்கும் தெய்வத்தை அவரவர் குலதெய்வமாக கொண்டு, இன்ப, துன்பங்கள் எல்லாவற்றுக்கும் அந்த தெய்வம்தான் துணை என்று வாழும் மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
வெளியூரில், வெளிநாடுகளில் வாழும் மக்கள்கூட, ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கொடை என்றும், திருவிழா என்றும், பிரம்மோற்சவம் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் விழாக்களில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள். சில ஊர் அம்மன்கோவில்களில் 10 நாட்கள் திருவிழா, விசேஷ பூஜைகள் தேரோட்டத்துடன் நடக்கும். கோவிலில் நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்வது மிகவும் பாக்கியம் என்று கருதுவார்கள். பழைய காலங்களில் இருந்து இவ்விழாக்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், கரக ஆட்டம், ஒயிலாட்டம், புலி ஆட்டம், சிலம்ப ஆட்டம், கணியன் ஆட்டம், வில்லுப்பாட்டு, நாதஸ்வர கச்சேரி, கும்ப ஆட்டம், நையாண்டி மேளம் என்று விதவிதமான கலைநிகழ்ச்சிகள் நடக்கும். பூஜையை முடித்துவிட்டு, விடியவிடிய நடக்கும் கலைநிகழ்ச்சிகள், மக்களுக்கு பெரிய ரசனையாக இருந்தது. இத்தகையை கலைநிகழ்ச்சிகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பல பாடங்களை கற்றுக்கொடுக்கும், வரலாற்றை கற்றுக்கொடுக்கும் இறை அம்சம் கொண்டவையாக இருக்கும்.
ஆனால், சமீபகாலமாக இத்தகைய கலைநிகழ்ச்சிகள் மங்கத்தொடங்கி, அந்த நிகழ்ச்சிகள் கோலோச்சி வந்த இடத்தில் முதலில் இன்னிசை கச்சேரி என்று நுழைந்தது. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. இப்போது எல்லா கோவில் விழாக்களிலும் நடனம் என்ற பெயரில் முதலில் நல்ல நடனமாகத்தான் இருந்தது. இப்போது ரிக்கார்டு டான்ஸ் என்ற பெயரில் ஆபாச நடனங்களும் அரங்கேறுவது, சிலருக்கு ரசனையாக இருந்தாலும், இறைபக்தி கொண்டவர்களுக்கு வேதனையாக இருந்தது. கோவில் விழாக்களில் ஆண்டவன் நிழலிலேயே இத்தகைய ஆபாச நடனங்கள் தேவையில்லையே என்று எத்தனையோ வேதனை குரல்கள் எழுந்தன.
இந்த கொடுமைக்கு யார் முடிவு கட்டுவது? என்று இறைபக்தர்கள் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில், இந்து மத கோட்பாடுகளிலும், தத்துவங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் ஆழ்ந்த அறிவாற்றல் கொண்ட நீதி அரசர் வி.ராமசுப்பிரமணியன், கோவில்களில் ஆபாச நடனங்களுக்கு தடைவிதித்து, ஒரு தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டார். கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் கோவில் திருவிழாக்களில், இத்தகைய நடனங்களை நடத்துவது நிச்சயமாக அந்த கோவிலில் குடியிருக்கும் இறைவனை திருப்திபடுத்தும் செயலாக இருக்கமுடியாது. பக்தர்கள் என்ற பெயரில் அங்கு கூடியிருக்கும் மக்களின் இச்சைகளை தூண்டும் வகையில்தான் இருக்கும். அறைகுறை ஆடையோடு பெண்கள் நடனம் ஆடுவதும், ஆபாச வசனங்களை பேசுவதும், பொதுமக்களின் எதிர்ப்பைத்தான் நிச்சயமாக சம்பாதிக்கும். எனவே, இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறி இருக்கிறார் நீதிபதி ராமசுப்பிரமணியன்.
இனி, கண்டிப்பாக இந்துசமய அறநிலையத்துறை, இதுபோன்ற கோவில் விழாக்களில், பழைய கிராமிய கலைநிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெறவேண்டும். இதுபோன்ற ஆபாச நடனங்களுக்கு இடமில்லை என்ற தெளிவான உத்தரவை பிறப்பித்தால்தான், பக்தர்களின் மனமும், அந்த கோவில்களில் குடியிருக்கும் இறைவனின் மனமும் குளிரும். அழிந்துவரும் கிராமிய கலைகளும் உயிர்பெறும்.
தினத் தந்தி - 07-03-2013
No comments:
Post a Comment