Mr. Hublot, இந்த ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. ஹூப்ளட், ஓர் எந்திர அனிமேஷன் பாத்திரம். ஆனால் அதன் மூலம் இன்றைய வாழ்வில் உள்ள நெருக்கடிகள், அதனால் அடையும் மனப் பாதிப்பை உணர்ச்சிபூர்வமாக இப்படம் விவரிக்கிறது. எந்திர நாய்க்கும் ஹூப்ளட்டுக்கும் இடையிலான வெறுப்பு, நெருக்கத்தின் மூலம் குடும்ப அமைப் பின் சாதக/பாதக அம்சங்களையும் சித்தரிக்கிறது.
அது முற்றிலும் எந்திர மயமான ஒரு எதிர்கால நகரம். அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே மனிதர்கள் ரோப் காரில் வேலைக்குச் செல்கிறார்கள். ஓட்டுனர் இல்லாத வாகனங்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள்தான். அந்த நகரத்தில் செடிகள், நாய்கள் எல்லாம் ரோபாக்கள்போல எந்திரங்கள்தான்.
அங்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்துவருகிறார் மிஸ்டர் ஹூப்ளட். அவர் ஒரு மனநோயாளி. Obsessive–compulsive disorder என அழைக்கப்படும் மனநோயால் பாதிக்கப் பட்டவர். அவருக்கு எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமாக இருந்தாலுமே துடைத்துக்கொண்டே இருப்பார். வீட்டிற்குள் தூசி வரக் கூடாது என்பதற்காக கதவுக்கு நாலைந்து தாழ்ப்பாள் வைத்திருக்கிறார். அதுபோல வரவேற்பறையில் மாட்டி யுள்ள படங்களையெல்லாம் சரிசெய்வதைத் தன் தலையாய கடமையாகக் கொண்டிருக்கிறார். அந்தப் படங்களெல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கின்றன. ஆனாலும் தினமும் அதைச் சரி செய்வார். பிறகு அறையின் விளக்கை போட்டு அணைத்து அது சரியாக இயங்குகிறாதா எனத் தினமும் சோதித்துப் பார்க்கிறார். அவர் முகமும் எப்போதும் தீவிரமான பாவனையிலேயே இருக்கிறது.
ஒருநாள் வெளியே தெருவில் ஓர் அனாதை எந்திர நாய்க் குட்டியைப் பார்க்கிறார். அது, குப்பைத் தொட்டிக்கு அருகில் கிடக்கும் ஒரு அட்டைப் பெட்டியை வசிப்பிடமாக வைத்திருக்கிறது. மழைபெய்த ஒருநாளில் நாய்க்குட்டி அட்டைப் பெட்டிக்குள்ளே முடங்கிவிடுகிறது. அப்போது குப்பை எடுக்கும் வாகனம் வருகிறது. அதனுள் போடும் குப்பைகளையெல்லாம் தூள் தூளாக்கும் எந்திரம் சுற்றிக்கொண்டிருக்கிறது. குப்பை எடுப்பவர்கள், அந்த நாய்க்குட்டியுள்ள அட்டைப் பெட்டியையும் எடுத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் மேலே இருந்து பார்க்கும் ஹூப்ளட் நாய்க் குட்டியைக் காப்பாற்றுவதற்காக வேகமாக இறங்கிவருகிறார். அதற்குள் வாகனம் சென்றுவிடுகிறது.
ஹூப்ளட் குப்பை வண்டி போன தடத்தையே வெறித்துப் பார்க் கிறார். பின்னால் இருந்து அந்த நாய்க்குட்டியின் குரைப்புச் சத்தம் கேட்கிறது. அவருக்குச் சந்தோஷம். தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் வைத்து வளர்க்கிறார்.
அந்த நாய்க்குட்டியும் அசுரத்தனமாக வீட்டின் கூரையைத் தொடுமளவுக்கு வளர்ந்துவிடுகிறது. அது லேசாகச் சாய்ந்தாலேயே வீட்டில் உள்ள பொருட்கள் விழுந்து உடைகின்றன. அவரது தனிமையான வாழ்க்கை பறிபோய்விடுகிறது. பொறுக்க முடியாமல் ஒருநாள் டிரில்லிங் மெஷின் வைத்துக்கொண்டு நாயை நெருங்குகிறார் ஹூப்ளட். அந்த நாய்க்கு என்ன ஆனது, ஹூப்ளட் தன் தனிமை வாழ்க்கையைத் திரும்பப் பெற்றாரா என்பதை இயல்பான தொனியில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் லாரன் விட்ஸ்.
தி இந்து
No comments:
Post a Comment