Sunday, March 16, 2014

அரசின் சேவை பெறுவது மக்களின் உரிமை

இந்தியா, உலகில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனநாயக நாடாகும். இங்கே மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்கள் ஆட்சிதான் மத்தியிலும், மாநிலங்களிலும் நடக்கிறது. மக்களின் விருப்பத்தை ஓட்டு மூலம் நிறைவேற்றும் ஒரு முறையை உலகுக்கே காட்டியது தமிழகம்தான். குடவோலை மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை தமிழகத்தில்தான் கி.பி.921–ம் ஆண்டு தொடங்கியது என்பது காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள வைகுண்டபெருமாள் கோவில் மதில்சுவரில் உள்ள கல்வெட்டுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இப்படி தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆட்சி நடக்கும்போது மக்களுக்கான தேவைகள், சேவைகள் அனைத்தும் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவேண்டும். அந்தவகையில்தான், தகவல் பெறும் உரிமை சட்டம் மக்களுக்குச் சிறப்பான பணிகளை ஆற்றிவருகிறது.

அரசுத் துறைகளில் உள்ள எந்தத் தகவலையும் இந்தச் சட்டத்தைப்பயன்படுத்தி சாதாரண குப்பனும், சுப்பனும் தெரிந்துகொள்ளமுடியும். இந்த சட்டத்தின் மூலம் தகவலை மட்டும்தான் கேட்டு பெறமுடியும். அவர்களுக்கான சேவையை, உரிமையாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், மத்திய அரசாங்கம், சேவைபெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இந்தச் சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கவேண்டும் என்று சட்டத்தை நிறைவேற்றிய அதேநேரத்திலேயே கேட்டுக்கொண்டது. இந்த சட்டத்தின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், சாதி சான்றிதழ், பிறப்பு–இறப்பு சான்று, திருமண சான்றிதழ் போன்ற மக்களுக்குத் தேவையான சான்றுகளை பெறுதல், மின்சார இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் மற்றும் நிலம் தொடர்பான தஸ்தாவேஜூகள் பெறுதல் போன்ற எண்ணற்ற சேவைகள் ஆகும்.

இன்றைய சூழ்நிலையில், ஒரு வங்கி கணக்கைத் தொடங்கச் சென்றால்கூட ரேஷன் கார்டை எடுத்துவாருங்கள் என்கிறார்கள். ரெயில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் நேரத்தில்கூட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற சேவைகளுக்காக, ஒவ்வொரு அலுவலகத்திலும் மக்கள் கால்கடுக்க நின்று, பரிதாபமாக கேட்பதும், தினந்தோறும் செருப்புதேய நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தகைய சேவைகள் மக்களுக்கு கிடைக்கவில்லையென்றாலோ, நிராகரிக்கப்பட்டாலோ, இதற்கான முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் நிவாரணம் கேட்கலாம். அந்த அதிகாரி, இந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, அரசு ஊழியரை உடனடியாக அந்த சேவை வழங்க உத்தரவிடலாம். அல்லது அந்த மேல்முறையீட்டை ஏற்காவிட்டால் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்கவேண்டும்.

இதற்கு மேலாக இரண்டாவது மேல்முறையீட்டை, அதுதொடர்பான அதிகாரியிடம் கொடுக்கலாம். இதற்கு முகாந்திரம் இருந்தால், உடனடியாக, அந்தச் சேவை செய்யத் தவறிய அரசு ஊழியருக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கைக்கு அவர் உத்தரவிடலாம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், நிச்சயமாக ரேஷன் கார்டு உள்பட அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் மக்களுக்குக் கிடைத்துவிடும். ஏனெனில், அபராதம் விதித்துவிடுவார்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டுவிடுவோம் என்ற பயம் நிச்சயமாக அரசு ஊழியர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுவிடும். இந்த சட்டத்தை கேரளா, குஜராத், பஞ்சாப், கர்நாடகம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.

பொதுமக்களுக்குப் பயனுள்ள இந்தச் சட்டத்தைத் தமிழக அரசும் அமல்படுத்த பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, இதை தமிழக அரசு விரைவில் பரிசீலிக்கும் என்று உத்தரவாதம் அளித்து உள்ளார். இது பொதுமக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும். மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கு நிரூபிக்கப்படும் வகையில், அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் மக்கள் சேவையில் தங்களை முழுமையாக ஆள்படுத்திக்கொள்ளவேண்டும் என்றால், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால்தான் முடியும். எல்லா சேவைகளும் மக்களுக்குத் தங்கு தடையின்றிக் கிடைக்கும். 

திநத்தந்தி, 16, மார்ச், 2014  


1 comment:

  1. Right to public service act eradicates retail corruption. common people need not wait for long time to get reply or service.

    ReplyDelete