மகாபாரதத்தில் ஒரு சுவையான கதை உண்டு. காட்டில் தண்ணீர் பிடிக்க குளத்துக்குச் சென்ற பாண்டவர்களை ஒவ்வொருவராக குளத்தில் இருந்த ஒரு யட்சன் கொன்றுவிடுகிறான். இறுதியாக தருமன் வருகிறான். தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் பாண்டவர்களை உயிர்ப்பித்துவிடுவதாகக் கூறி கேள்விகளைக் கேட்கிறான் யட்சன்.
அதில் ஒரு கேள்வி. ‘எதை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்?’
இதற்கு தருமன் சொன்ன பதில்.. ‘மன தைரியத்தை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்’.
ஆனால், தருமனே இக்காலத்தில் இருந்திருந்தால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மனம் கலங்கியிருப்பான். காரணம், தேர்வுகள். குறிப்பாக, ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கும்
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளைக் கண்டு மாணவர்கள் கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்குகிறார்கள்.
பிளஸ் 2 தேர்வு எழுதச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலரைப் பார்த்தேன். பெரும்பான்மையரின் முகம் பதற்றத்தில் இருந்தன. அவர்களில் எனக்குத் தெரிந்த சிலரிடம் பேச்சு கொடுத்தேன். கடந்த தேர்வுகளில் அவர்கள் மிகச் சிறப்பான மதிப்பெண்களையே எடுத்திருந்தார்கள். ஆனாலும், இப்போது தேர்வுக்குச் செல்லும்போது பயம். தேவையற்ற பயம்.
அதை எப்படி அகற்றுவது? மிகவும் எளிது மாணவர்களே.
பயத்தை போக்கிவிட்டாலே போதும்; உற்சாகம் பொங்கி வழியும். எப்போதோ படித்ததுகூட நினைவில் வந்து குவிந்து கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத்தரும்.
மாணவர்கள் மட்டுமா பயப்படுகிறார்கள்? பெற்றோர், உடன்பிறந்தவர்கள், ஆசிரியர்கள் என்று எல்லோரையும் தொற்றிக்கொள்கிறது, இந்த தேர்வுக் காய்ச்சல். இந்த பயத்தால் விளையும் தீமைகள் எண்ணிலடங்காதவை. ஆனால், பயப்படுவதால் எந்தப் பிரச்சினையும் தீர்வதில்லை கண்மணிகளே. ஆகவே உங்களது முதல் தேவை, பயத்தை தூக்கி எறிந்துவிட்டு, தேர்வை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதுதான்.
பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் நான்கு. அவற்றில் முதன்மையானது அப்பிரச்சினையைப் புரிந்துகொள்வது. அதாவது பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் அலசுவது. 2-வது, நம் திறனை ஆராய்தல். 3-வது அதை அடையும் வழிகளை முறையாகத் திட்டமிடல். 4-வது, திட்டமிட்டதை நடைமுறையில் சாத்தியப்படுத்த உழைத்தல். ஆக, பிரச்சினையைப் புரிந்துகொள்ளுதல், நம் திறனை ஆராய்தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஆகிய 4 நிலைகளில் வெற்றிகரமாக செயல்பட்டால் தேர்வுகளை எதிர்கொள்வது மிக மிக எளிது.
குறுகிய காலத்துக்குள் எவ்வளவு படிக்க வேண்டும்? நம்மால் எவ்வளவு வேகமாகப் படிக்க முடியும்? எப்படிப் படிக்க வேண்டும்? – என்பதை யோசித்துப் பின் செயல்படுத்தினால் தேர்வைக் கண்டு பயம்கொள்ள வேண்டியதில்லை.
வாருங்கள்.. பயத்தை உடைத்து நொறுக்குவோம். வெற்றிப் பயணத்தை இந்த நொடியில் இருந்தே ஆரம்பிப்போம்!
மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்
தி இந்து
No comments:
Post a Comment