Thursday, March 13, 2014

புலியைப் பிடிப்பார்களா?


காட்டுக்குள் புலியை வேட்டையாட செல்லும் வேட்டைக்காரன் புலியை தேடுவதை விட்டுவிட்டு, முயல் பின்னால் ஓடும் கதையாக இருக்கிறது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள் –வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் கொள்கைகளை, தாங்கள் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்ற வாக்குறுதிகளை சொல்லிதான் ஓட்டு கேட்கவேண்டும் என்பது காலம்காலமாக ஜனநாயக நாட்டில் கடைப்பிடிக்கவேண்டிய நீதியாகும். ஆனால், சமீபகாலமாக கொள்கைகள், வாக்குறுதிகளையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டுவிட்டு, ஓட்டுக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ? அவர்களுக்குத்தான் ஓட்டு என்ற தவறான நடைமுறை பின்பற்றப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. 
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தார்ப்பரியம் தேர்தல் நேரத்தில் மறைந்து போய்விடும். ஒரு வீட்டில் ஓட்டுபோட வயது உடைய எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு ஆதாயம் என்ற நிலை உருவாகி வருகிறது. ரூபாய் கொடுத்தால்தான் ஓட்டு என்கிற நிலைமை மக்களிடையே அதிகமாக வளர்ந்து வருவதால்தான், பணம் கொடுக்கிறவர் மட்டும் வெற்றிபெற முடியும் என்று ஒரு தூய்மையற்ற நடைமுறை உருவாகிவிட்டது. இதை தடுக்க தேர்தல் கமிஷன் எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்தாலும், ஏன் ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குவதை இவர்களால் தடுக்க முடியவில்லை? என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை டீ விற்பவர் என்ற வகையில் ஏளனமாக பேசியதை தங்களுக்கு தேர்தல் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்ட பா.ஜ.க., நாடு முழுவதும் டீக்கடைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யத்தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருப்பவர்களுக்கு ‘டீ’ வழங்குவதையே தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது என்று கூறி, ஒரு ‘சிங்கிள் டீ’ கொடுப்பதையே தேர்தல் கமிஷன் தடை செய்துவிட்டது. தேர்தல் நேரத்தின்போது, எந்த பொருளையும் இலவசமாக கொடுப்பது வாக்காளர்களை அந்த கட்சிக்கு ஒட்டு போடத்தூண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுவது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இதுபோன்ற தடைகளை எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பரிசு பொருளாகவோ, பணமாகவே கொடுப்பதை முற்றிலுமாக தடுத்துவிட்டால் நிச்சயமாக தேர்தல் கமிஷனுக்கு மக்கள் ஒரு ‘ஓ’ போடுவார்கள். 
ஆனால், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பெருமளவில் பணம் எடுத்து சென்றால், அதை தடுக்க வேண்டிய கடமையில் உள்ள தேர்தல் கமிஷன், மக்கள் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு சென்றாலும், அதற்கு கணக்கு காட்டு என்று பணத்தை பறிமுதல் செய்துவிடுகிறார்கள். திருமண காலம் இது. பெண்ணை பெற்றவர்கள் 4 பவுன் தங்க நகை வாங்க சென்றாலே, ஒரு லட்சத்திற்கு மேல் பணத்தை எடுத்து செல்லவேண்டும். அவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்து, அரசாங்க கஜானாவில் சேர்த்துவிட்டு, கணக்கை காட்டிவிட்டு பணத்தை எடுத்து செல்லுங்கள் என்றால், அவர்கள் எங்கே போவார்கள்?. 
சிறு, சிறு வியாபாரிகள் அன்றாடம் தங்கள் கடைகளில் விற்பனையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு பொருட்கள் வாங்க அடுத்த நாள் மொத்த விற்பனை கடைக்கு செல்வார்கள். அந்த பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துவிட்டு கணக்கை கேட்டால் என்ன செய்வார்கள்?. கிராமத்தில் இருந்து விவசாயிகள் விளைபொருளை விற்றுவிட்டு, அதில் வரும் பணத்தை நகரத்தில் உள்ள வங்கியில் போட சென்றாலும், அவசர செலவுகளுக்கு பணம் எடுத்துக்கொண்டு சென்றால்கூட, அந்த பணத்தை பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதுமட்டுமல்லாமல், ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் பணத்தை வங்கியில் எடுத்தாலும், போட்டாலும் கண்காணிக்கப்படும் என்றால், வங்கிக்கு போய் பணம் போடவேண்டும் என்ற ஆசை நடுத்தர மக்களுக்கு எப்படி வரும்? 
ஆக, அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டு கேட்கக்கூடாது, பரிசு பொருட்களை வழங்கக்கூடாது என்ற புலியை பிடிக்கவேண்டிய தேர்தல் கமிஷன், அந்த வேலையில் முழு ஈடுபாட்டை செலுத்துவதை விட்டுவிட்டு, முயலை பிடிக்க போன கதையாய் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், வியாபாரிகள், விவசாயிகளை பாதிக்கும் நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தினால், நிறைவேற்ற எடுத்துக்கொண்ட நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. 
தினத்தந்தி - 14-03-2014



No comments:

Post a Comment