விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே மங்கலம் பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கோணான் குப்பம் என்கிற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்தான், கிறிஸ்தவ மதத் துறவியான வீரமாமுனிவர், முதன் முதலாகக் கட்டிய தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் மேரி மாதா, புடவையும், நகைகளும் அணிந்திருப்பார். இந்த மேரி மாதாவுக்குப் பெரியநாயகி அன்னை என்று பெயர். வீரமாமுனிவர் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில் இந்த சொரூபம் உருவாக்கப்பட்டது.
இந்த தேவாலயம் கட்டப்பட்டதன் பின்னணியில் சுவாரசியமான கதை ஒன்று உண்டு. ஆரியனூர் என்று அழைக்கப்படும் கோணான்குப்பம் முன் காலத்தில் சிறிய காடாக இருந்தது. மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது அங்குள்ளவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. அச்சமயத்தில், இந்தியா வந்திருந்த வீரமாமுனிவர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். ஒரு சமயம் ஆரியனூர் காட்டு வழியாக கால்நடையாக நடந்து போன அவர், ஒரு மரத்தடியில படுத்து ஓய்வெடுத்தார். அப்போது, அவர் வைத்திருந்த மாதா சொரூபங்களில் ஒன்று காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால், சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்.
வழியில், அந்தக் காட்டுக்குச் சொந்தக்காரான கச்சிராயர் என்ற பாளையக்கார ஜமீனை மரியாதை நிமித்தமாக வீரமாமுனிவர் சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னிட மிருந்த மாதா சொரூபங்களில் ஒன்று காணாமல் போனதை அவரிடம் கூறிவிட்டுப் புறப்பட்டுப் போகிறார்.
ஒருநாள், பாளையக்காரர் கனவில் தோன்றிய மேரி மாதா, தான் காட்டில் மறைந்திருப்பதாகச் சொல்கிறார். அடுத்த நாள், பாளையக்காரர், வேலையாட்களுடன் போய் காடு முழுக்கத் தேடி, வீரமாமுனிவரிடமிருந்து தொலைந்த மாதா சொரூபத்தைக் கண்டுபிடிக்கிறார். பின்னர், அந்தப் பகுதியிலேயே சிறியதாக ஆலயம் ஒன்றைக் கட்டி, மேரி மாதா சொரூபத்தை வைத்து வழிபடத் தொடங்குகிறார்.
அந்த நேரத்தில், நீண்ட காலம் வாரிசு இல்லாமல் இருந்து அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகிறது. இத்தகவல் அப்பகுதி முழுவதும் பரவி, பொதுமக்கள் அந்தச் சிறிய ஆலயத்துக்கு வரத் தொடங்கினார்கள்.
மற்றொரு முறை அதே வழியாக வந்த வீரமாமுனிவர், அங்கே ஒரு சிறிய ஆலயம் இருப்பதையும், அதில், தன்னிடம் தொலைந்து போன மாதாவின் திருச்சிலை இருப்பதையும் பார்த்து ஆச்சரியப்படுகிறார். பின்னர், அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் இப்போது இருக்கும் தேவாலயத்தைக் கட்டி, மேரி மாதாவின் சொரூபத்தை வைக்கிறார். மேரி மாதாவுக்குப் புடவை, நகைகள் அணிவித்து, தான் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில், மரத்தால் ஆன சிலை உருவாக்கப்பட்டு, அதற்குப் பெரியநாயகி அன்னை என்று பெயரிட்டார்.
அந்தச் சிலை இப்போதும் அங்கே காட்சி தருகிறது. போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாயத்தின் சுவர் சுமார் 3 அடி கனம் கொண்டது. ஒரே நேரத்தில், 50 பேர் மட்டுமே இங்கு அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். வீரமாமுனிவர், இந்தியாவில் சில பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டியிருந்தாலும், இது அவரால் கட்டப்பட்ட முதல் தேவாலயம் என்பதால், அதன் பழமையோடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தி இந்து
No comments:
Post a Comment