மனித குலம் தோன்றிய நாளில் இருந்து சேமிப்பு பல வகைகளில் தொடங்கியது. எறும்புகூட மழை காலத்துக்காக உணவு பொருளை சேமிப்பதைப் பார்த்த மனிதன், பல வகைகளில் உணவு பொருட்களை சேமிக்க தொடங்கினான். காலப்போக்கில் பணத்தை சேமிக்க முற்பட்டபோது, அதில் சிறுசேமிப்பு முக்கிய பங்கு வகித்தது. என்னதான் வங்கிகள் பெருமளவில் தொடங்கப்பட்டாலும், கிராமப்புற மக்கள் பெரும்பாலும் தபால் ஆபீசில் உள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே பணம் போடுவதில் ஆர்வமாக இருந்தனர். தபால் ஆபீசு சேமிப்புக்கான முகவர்கள், இதில் பெரும்பாலும் பெண்களே இருப்பதால், அவர்களே வீடுகளுக்கு வந்து பெண்களிடம் சிறுசேமிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, பணம் வசூலித்து வந்தனர். போட்ட பணத்தின் வட்டியை தபால் ஆபீசில் இருந்து பெற்று தருவதிலும், முதிர்ச்சி அடைந்தவுடன் மொத்த பணத்தை எடுத்து திரும்பக்கொண்டு வருவதிலும் பெரும் பங்காற்றி வந்ததால், சிறுசேமிப்பில் தமிழ்நாடு உயர்வான இடத்தில் இருந்தது. மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழ்நாடு சிறு சேமிப்பில் முத்திரை பதித்துக்கொண்டு இருந்தது.
ஆனால் இப்போது தமிழக மக்கள் சிறு சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.24 ஆயிரம் கோடிக்கு மேல் சிறுசேமிப்பில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு பல மாநிலங்களைக் கடந்து ரூ.10 ஆயிரம் கோடி என்ற அளவிலேயே இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பொதுவாகவே நாடு முழுவதும் மக்களுக்கு சிறுசேமிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், மக்கள் நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்தால் அதை விற்கும்போது நல்ல லாபம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். அந்த லாபத்தை ஒப்பிடும்போது சிறுசேமிப்பு வட்டி விகிதம் மிகக்குறைவாகவே இருக்கிறது. தேர்தல் வருவதையொட்டி, சில சேமிப்புகளுக்கு மட்டும்
.1 சதவீதம் முதல் .2 சதவீதம் வரை வட்டி உயர்த்தினாலும், இது கிள்ளுக்கீரைதான். இப்போதும் தபால் ஆபிசுகளில் போடும் சேமிப்புத்திட்டங்களில் 4 சதவீதம் முதல் 8.8 சதவீதம் வரையே வட்டி கொடுக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு மட்டும் 5 ஆண்டுகால சேமிப்புக்கு 9.2 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. அரசின் நிதி நிறுவனங்களில் கூட குறைந்தபட்சம் 9.58 சதவீதம் முதல் 12.91 சதவீதம் வரை வட்டி கொடுக்கிறார்கள். மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகால சேமிப்புக்கு 13.73 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
இந்தகாலத்தில் இருக்கும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு போன்ற நிலையையெல்லாம் கணக்கிட்டால், சிறுசேமிப்புத்திட்ட வட்டி விகிதம் நிச்சயமாக குறைவு. மேலும் சேமித்த பணத்தை எடுக்கப்போனால் வருமான வரியும் கட்டவேண்டியது இருக்கிறது. வயதான காலத்துக்காக சேமிப்பவர்களுக்காவது வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். மேலும், தபால் ஆபீசு முகவர்களின் கமிஷன் தொகையையும் பெருமளவில் குறைத்துவிட்டதால், அவர்களும் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். முகவர்களின் சேவையும் பெருமளவில் குறைந்துவிட்டதால், இதுவரை அவர்களின் சேவையில் பழக்கப்பட்ட மக்கள் இப்போது கஷ்டப்பட்டு தபால் ஆபீசுக்குச் சென்று பணம் போடவோ, எடுக்கவோ தயாராக இல்லை.
பொதுவாக சிறுசேமிப்புத்திட்டத்தில் மக்கள் முதலீடு செய்யும் பணம், உடனடியாக மத்திய அரசாங்கத்தால் பல சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிப்பதற்காக நீண்டகால தவணையில் திருப்பிக்கொடுக்க வழங்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கும் சாலை வசதி, மருத்துவமனைகள், போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நீண்டகால கடன் வழங்கப்படுகிறது. ஆக, ஒருபக்கம் சமுதாயத்துக்கு பயன்படும் சமூக நலத்திட்டங்களுக்கான பயன், மக்களுக்கு சேமிப்புக்கான வசதி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் சிறுசேமிப்புத்திட்டங்களை ஊக்குவிக்க மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு நல்ல வட்டி வழங்கவேண்டும், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும், இந்த திட்டத்தின் செயல்பாட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி, அவர்கள் பணியை விரைவுபடுத்த வேண்டும். அடுத்து எந்த ஆட்சி வந்தாலும், இதையெல்லாம் கருத்தில்கொண்டு செயல்படவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.
தினத்தந்தி
No comments:
Post a Comment