சோழவரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 சாமி சிலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கியச் சாலைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜனப்பச்சத்திரம் கூட்ரோட் பகுதியில் பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை (தேர்தல்) வட்டாட்சியர் ரூபிநளினி தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியிலிருந்து வந்த காரை சோதனை செய்தபோது, அதில் 3 அடி உயரமுள்ள கிருஷ்ணர், ராதை சிலைகள் இருந்தன.
இதையடுத்து காரில் இருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த சிதம்பரம், ராஜேஷ்கன்னா ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில், விஜயவாடாவில் உள்ள ஆலயத்தில் வைப்பதற்காக மயிலாடுதுறையில் சாமி சிலைகள் தயார் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்த சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோழவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக சோழவரம் போலீஸôர், அந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி
No comments:
Post a Comment