Wednesday, March 5, 2014

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்


இந்தியா ஒரு ஜனநாயக நாடு. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், இங்கு மாநிலத்தில் மாநில அரசுகளும், மத்தியில் மத்திய அரசாங்கமும் அரசை நடத்துகிறது. நாடு முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி, அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி மத்திய அரசாங்கத்தை அமைக்கிறது. இந்த 15–வது பாராளுமன்றத்தின் பதவிகாலம் வருகிற மே மாதம் 31–ந் தேதியோடு முடிகிறது.
எனவே, அதற்குள் 16–வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைமுறைகளை முடிக்கவேண்டிய கட்டாயம் தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது. இதற்காக நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தேர்தல் தேதியை அறிவித்தார். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 9 கட்டங்களில் இந்த தேர்தல் நடக்கும் என அறிவித்துள்ளார். ஏப்ரல் 7, 9, 10, 12, 17, 24, 30, மே 7, 12 என்று 9 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. சட்டம்–ஒழுங்கு, பாதுகாப்பு என்று பல நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என தேர்தல் கமிஷன் நிர்ணயித்தது. அந்த வகையில், பீகார், உத்தரபிரதேசத்தில் 6 நாட்களும், மேற்கு வங்காளத்தில் 5 நாட்களும், ஆந்திராவில் 2 நாட்களும் தேர்தல் நடத்த முடிவு செய்த தேர்தல் கமிஷன், தமிழ்நாட்டில், புதுச்சேரியில் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தேர்தல் பல கட்டங்களாக நடந்தாலும், அனைத்து தொகுதிகளுக்குமான ஓட்டு எண்ணிக்கை மே 16–ந்தேதி நடந்து முடியும் என அறிவித்துள்ளார். ஆக, மே மாதம் 16–ந் தேதியன்று அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளப்போவது யார்? என்று தெரிந்துவிடும். நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் தேர்தல் தேதியை அறிவித்த நொடியில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
இந்தியாவில் முதல் பாராளுமன்றத்துக்கான தேர்தல் 1952–ம் ஆண்டு நடந்தபோது 17 கோடியே 60 லட்சம் மக்கள் ஓட்டுப்போட்டனர். இப்போது 16–வது பாராளுமன்றத்துக்கு 81 கோடியே 40 லட்சம் பேர் ஓட்டுப்போடப்போகிறார்கள். கடந்த தேர்தலைவிட, ஏறத்தாழ 10 கோடி பேர் இப்போது புதிதாக ஓட்டுப்போடப்போகிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 பேர் ஓட்டுப்போடப்போகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதியன்று 18 வயது நிரம்பிய அனைவரையும் இணைத்து வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. ஓட்டுப்போடுவது நமது ஜனநாயகக் கடமை. எப்போதுமே தேர்தல் நாளன்று பலர் எனக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை இருக்கிறது, கடந்த தேர்தலில் ஓட்டுப்போட்டேன், இப்போது என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையே என்று ஆத்திரப்படுவார்கள். அதேபோல, 18 வயது நிரம்பிய பலர் தங்கள் பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்காமல் இருப்பார்கள். இப்படி யார் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் போகக்கூடாதென, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற வகையில், வருகிற 9–ந் தேதி நாடு முழுவதிலும் உள்ள 9 லட்சம் வாக்குசாவடிகளில் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலோடு இருப்பார்கள் என்றும், பொதுமக்கள் அங்கு போய் தங்கள் பெயர்கள் இருக்கிறதா? என்று பார்த்துவிட்டு, ஒருவேளை அவர்கள் பெயர்கள் இல்லையென்றால், அந்த இடத்திலேயே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டத்தகுந்த நடவடிக்கை.
மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களை ஆளப்போகும் கட்சியை தேர்ந்தெடுக்க தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இது 10–வது வகுப்பு, பிளஸ்–2 என்று தொடங்கி, பல்வேறு கல்லூரி தேர்வுகள் நடக்கும் நேரம். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்கள் படிப்பதற்கு இடையூறு இல்லாத அளவில், தங்கள் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்கள் அருகேயும், இரவு நேரங்களிலும் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் நடத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கையாகும்.
தினத்தந்தி -06-03-2014 




No comments:

Post a Comment