13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடி வரும் இன்றைய சூழலில் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1. இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.
2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமுகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.
4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்வதுடன், பிறமொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாகப் பள்ளிகளின் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாதெனத் தீர்மானிக்கிறது.
5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாகவிருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது; அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமுகத்தைக் கேவலமான வார்த்தைகளால் கூறியதையும், தோழர் மு.இராகவையங்கார், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னளவுக்கு மீறிக் கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், ஹைக்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.
6. சென்னை லார்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் மதுரையில் காங்கிரஸ் மந்திரிகள் அரசாங்கத்தை நன்றாக நடத்தி வைக்கிறார்கள் என்று பேசியதைப் பார்த்தால் தங்கள் காரியம் நடந்தால் போதுமானதென்றும், பார்ப்பனரல்லாத தமிழர்கள் நிலை எப்படியானாலும் தங்களுக்குக் கவலையில்லை என்பதைக் காட்டுகின்றதாகையால் கவர்னர் அவர்களின் அவ்வபிப்பிராயத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.
7. இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மகாநாட்டிலும், கட்டாய இந்தியை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டிக்கின்றது.
8. இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும், பார்ப்பன அன்புபெற்ற தாய்மொழியறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்டமென்று கருதுகிறது.
9. இம்மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீரமிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்து பார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
10. இந்தியை எதிர்த்துச் சிறை சென்ற ஈழத்து சிவானந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.என். அண்ணாதுரை எம்.ஏ., உள்ளிட்ட பெரியார்களையும் தொண்டர்களையும் பாராட்டுகின்றது.
11. வகுப்புத்துவேஷக் குற்றம்சாட்டி 153 ஏ 505 ஸி செக்ஷன்களின் கீழ் 18 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்று சிறைசென்ற தோழர். பி.சாமிநாதனை இம்மாநாடு பாராட்டுகிறது.
12. தோழர்கள், சண்முகானந்த அடிகளும், சி.டி.நாயகமும் சிறை செல்வதை இம்மாநாடு பாராட்டுகிறது.
13. சென்னை நகர் தமிழ் நாடாதலாலும் தமிழர்கள் முக்கால் பாகத்துக்கு மேல் வாழ்ந்து வருவதாலும் இதுவரை முனிசிபாலிட்டியார் வீதிகளின் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரப் பலகைகளில் போட்டு வந்திருக்க இப்போது புதிதாக தெருக்களுக்குப் பெயர் போடுவதில் ஆங்கிலத்தில் மட்டும் போடப்பட்டு வீதிகளின் பெயர் தமிழில் போடாமலிருப்பதால் ஆங்கிலமறியாத மிகுதியான தமிழ் மக்கள் தெருப்பெயர் தெரியாமல் தொல்லைப்படுவதை நீக்க தமிழிலும் வீதிகளின் பெயர் போடவேண்டுமென, சென்னை நகரசபையாரையும் மற்ற தமிழ்நாட்டு நகர சபைகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment