Tuesday, March 4, 2014

அவசரக் ......... கோலத்தில் அள்ளித்தெளிக்கிறார்கள்

இது தேர்வு காலம். சில மாணவர்கள் தங்கள் பாடங்களை ஆண்டு முழுவதும் நன்றாகப் படித்துவிட்டு, தேர்வு நேரத்தில் அவசரப்படாமல் மனதைத் தெளிவாக வைத்துக்கொண்டு தேர்வை மகிழ்ச்சியோடு எதிர்நோக்குவார்கள். வேறு சில மாணவர்கள், ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள், பெற்றோர் எவ்வளவுதான் சொன்னாலும், படிப்பில் முழுமையாக அக்கறை செலுத்தமாட்டார்கள், தேர்வு நெருங்கும் நேரத்தில்மட்டும் அவசர, அவசரமாக படிப்பார்கள். தேர்வு எழுத அறைக்குள் செல்லும் நேரம்வரை படிப்பார்கள். 

அந்த நிலையில்தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தற்போது செயல்படுகிறது. 15–வது பாராளுமன்றம் இந்த ஆண்டு ஜூன் 1–ந் தேதியோடு முடிகிறது. அதற்கு முன்னதாகவே புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வகையில், பாராளுமன்றத் தேர்தல் நடத்தி முடித்தாகவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் எந்தநேரமும், தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவித்துவிடும்நிலை இருக்கிறது. தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டால், உடனடியாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துவிட்டால், அரசாங்கம் எந்தப் புதிய அறிவிப்புகளையும் வெளியிட முடியாது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பல விஷயங்களில் இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டு, தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில், அவசரக் கோலத்தில் அள்ளித்தெளிப்பதுபோல, பல அறிவிப்புகளை அறிவிக்க முயல்கிறார்கள். தெலுங்கானா மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதே வாக்குக்கொடுத்துவிட்டு, இவ்வளவு காலமும் விட்டுவிட்டு, இப்போது கடைசிப் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அவசரமாக நிறைவேற்றியிருக்கிறார்கள். 

இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு நிச்சயமாக தெலுங்கானாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கமுடியாது. அதற்குரிய நடைமுறைகளை தேர்தலுக்கு முன்பு முடிக்கமுடியாத நிலையில், ஒன்றுபட்ட ஆந்திராவாகத்தான் தேர்தலை நடத்தவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. கடைசி நேரத்தில் முயற்சி எடுத்து, அதையும் முழுமையாக நிறைவேற்றமுடியாத நிலையில், இரு பகுதி மக்களுக்கும் மனநிறைவு இல்லை.

இதுமட்டுமல்லாமல், தெலுங்கானாவைப் பிரித்த பிறகு, எஞ்சியுள்ள பகுதியான சீமாந்திரா பகுதிக்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அறிவித்ததால், பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்திவரும் பீகார் மாநில மக்கள் கோபம் கொண்டுள்ளனர். 

பீகார் மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலேயே சத்தியாகிரக போராட்டம் நடந்து இருக்கிறது. ஏற்கனவே, பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் மொத்தம் உள்ள 40  இடங்களில், காங்கிரசுக்கு 12 இடங்கள் தருகிறேன் என்று பேரம் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், நிதிஷ்குமார் பக்கம் போகலாம் என்றால், அவரும் பீகாருக்கு தனி அந்தஸ்து கேட்கிறார். 

மத்திய அரசாங்கத்தில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்களுக்கும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், அகவிலைப்படி உயர்வைக் கடைசி நேரத்தில் அறிவித்து, அவர்கள் ஆதரவைப் பெற முயற்சித்து இருக்கிறது. 

நியூட்டன் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்று சொன்னதுபோல, 80 லட்சம் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளித்ததால், இந்த பிரிவில் வராத மற்ற பிரிவினரும், 3 கோடியே 50 லட்சம் வருமானவரி கட்டிக்கொண்டு இருப்பவர்களும் தங்களுக்கு எதுவும் நிவாரணம் இல்லையே என்று ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஊழல் ஒழிப்பு ஒன்றையே வைத்து ‘ஆம் ஆத்மி’ கட்சி வெற்றி பெற்றதுபோல, நாமும் இந்த தேர்தலில் ஊழல் ஒழிப்பை முன்னால் வைத்து ஒரு கை பார்த்துவிடலாம் என்று நினைத்து, கடைசி பாராளுமன்றக் கூட்டத்தொடரில் 5 லஞ்ச ஒழிப்பு மசோதாக்களை நிறைவேற்றிவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், முடியவில்லை. 

சரி பரவாயில்லை தேர்தலுக்கு முன்பு அவசர சட்டங்களை பிறப்பித்துவிடலாம் என்று முயற்சி செய்தனர். ராகுல் காந்தியும் அதைத்தான் விரும்பினார். ஆனால், பழுத்த அரசியல்வாதியான ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்பது தெரிந்துவிட்டது. அடுத்துவரும் அரசாங்கத்துக்கு இது ஒரு பாடம். எதையும் காலாகாலத்தில் செய்யவேண்டும். 

ஓடும் ரெயிலில் தாவி ஏறும் முயற்சிகள்போல, கடைசி நேரத்தில் எதையும் செய்யக்கூடாது.

 தினத்தந்தி - 05-03-2014 

No comments:

Post a Comment