பட்டு என்றவுடன் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, ராசிபுரம் போன்ற பட்டுக்குப் பெயர்போன இடங்கள் நம் நினைவுக்கு வரும். அத்துடன் பாரம்பர்யம் என்னும் ஒரு சொல்லும். அந்த அளவுக்குப் பட்டு நம் கலாசாரத்துடன் இணைந்து இருக்கிறது.
நாகரிகம் வளர வளர நம் வாழ்க்கை முறையில், நம் உணவு பழக்கவழக்கங்களில், உடைகளிலும் மாற்றம் வந்துவிட்டன. ஆனாலும் கோயில், குடும்ப விழாக்களில் பட்டாடை என்பது இன்னும் ஒரு கெளரவமான அடையாளமாக இருந்துவருகிறது. அரிதாக உபயோகித்தாலும் பட்டுக்குத் தரும் முக்கியத்துவம் வேறு ஆடைகளுக்கு இல்லை.
பட்டுக்கும் கிட்டதட்ட 5000 வருஷத்துக்கும் மேற்பட்ட பாரம்பரியம் உண்டு. ஹாங் டீங் (Huang di) என்னும் ஒரு சீன மன்னனின் மனைவிதான் சீ லீங் காய் (Si-Ling-Chi). அவர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மல்பெரி மரத்துக்கு கீழ அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தாள்.
அப்போது அந்த மரத்தின் மேல் இருந்து வெள்ளை, வெள்ளையான கூடுகள் தேநீர்க் குவளைக்குள் விழுந்து விட்டன. பயத்தில் குவளையைத் தவற விடவும் அது அவள் மீது விழுந்து, தேநீர் முழுவதும் ஆடையில் சிதறிவிட்டது. அதைத் துடைக்கக் கவனித்தபோது அந்தக் கூடு, பளபளக்கும் இழையாக மின்னியதை வியந்து கவனித்திருக்கிறார். பிறகு அது மல்பெர்ரி இலைகளில் இருக்கும் பட்டுப் புழுக்களின் கூடு என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.
இது நடந்தது கி.மு. 2700ஆம் ஆண்டு வாக்கில். பிறகு சீ லீங் காய், பட்டு வளர்ப்பதை ஒரு தொழிலாக மேம்படுத்தியிருக்கிறார். அந்த ராணியைச் சீனர்கள் பட்டின் கடவுளாக இன்றைக்கும் போற்றுகிறார்கள். ஒரு பெண் கண்டுபிடித்ததாலோ என்னவோ பட்டுத் தொழில் நுட்பம் பெண்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியமாக வெகு காலத்துக்கு இருந்தது.
பட்டு கண்டுபிடிக்கப்பட்ட அதே நூற்றாண்டில் சீனாவில் பட்டு உற்பத்தி பெரும் வளர்ச்சியடைந்தது. மேலை நாடுகளுக்கும் பட்டு நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் வியாபார ரீதியாக இணைக்கும் பட்டுப் பாதை (Silk Route) பட்டு விற்பனைக்காக உருவானதுதான்.
இந்தியாவில் பட்டு
பட்டு தயாரிக்கும் நுட்பம் கிட்டதட்ட 2500 வருஷமாகச் சீனர்களால் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. அண்டை நாடான ஜப்பான்தான் முதலில் பட்டின் ரகசித்தை அவிழ்த்தது. அது நடந்தது கி.மு. 3ஆம் நூற்றாண்டில். அவர்கள் சீனப் பெண்கள் சிலரை அடிமையாகக் கொண்டுபோய் இந்த நுட்பங்களைத் அறிந்துகொண்டார்கள். இன்று ஜப்பான் உலகிலேயே அதிகமாகப் பட்டு பயன்படுத்தும் நாடாக இருக்கிறது.
இந்தியாவுக்குப் பட்டுப்புழு வளர்ப்பின் நுட்பம் வந்தது ஒரு சீன இளவரசி மூலமாகத்தான். பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட இளவரசன் ஒருவன், சீன இளவரசி ஒருத்தியை மண முடித்தார். அவள் வழியாக வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான சான்று இல்ல. ஆனால் பட்டுத் தொழில்நுட்பம் கி.மு. 1ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அறிமுகமானதாகச் சொல்லப்படுகிறது.
படிப்படியாக இந்த நுட்பம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவுகிறது. இன்றும் பட்டு உற்பத்தியில் சீனாதான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா, உஸ்பெஸ்கிதான், தாய்லாந்து, ஜப்பான், கொரியா, வியட்னாம், ஈரான் என 30க்கும் மேற்பட்ட நாடுகளும் குறிப்பிடத்தகுந்த வகையில் உற்பத்திசெய்கின்றன.
பண்டைய இந்திய மன்னரான கனிஷ்கர் காலத்தில், கி.மு. 58இல், இந்தியாவில் இருந்து பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்ததாக வரலாற்றுத் தகவல் இருக்கிறது. கி.பி.16 நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள். அதனால் அப்போது சீனாவுக்கு நிகராக இந்தியாவும் பட்டு ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது.
லூயீ பாஸ்டரும் பட்டும்
இன்று இந்தியாவில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்யப்படுது. பட்டு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் கர்நாடகம். இதற்குக் காரணம் திப்பு சுல்தான். அவர்தான் 18ஆம் நூற்றாண்டிலேயே மைசூரில் பட்டுப்புழு உற்பத்தி நிலையங்களை அமைத்தார்.
கர்நாடகத்துக்கு அடுத்த நிலைகளில் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கோவை, தர்மபுரி மாவட்டங்களில் இந்தத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா, உலகப் பட்டு உற்பத்தியில் 2ஆம் இடம் வகித்தாலும் நமது உற்பத்தி எல்லாம் மீறி நாம் செலவு செய்கிறோம். இந்தியர்களின் பட்டுத் தேவை ஆண்டுக்கு 26 ஆயிரம் டன் ஆகும்.
நமது உற்பத்தியை விடக் கூடுதலாக 14 டன் நமக்குத் தேவைப்படுகிறது. தேவைப்படும் மீதப் பட்டைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம். 1857ஆம் ஆண்டு வாக்கில் ப்ரான்சின் தென்பகுதியில் இருந்த பட்டு உற்பத்திப் பண்ணைகளில் பட்டுப் புழுக்கள் எல்லாம் ஒரு வித்தியாசமான நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின.
அதனால் பட்டுத் தொழிலில் பெரிய சரிவு ஏற்பட்டது. இதைச் சரிசெய்வதற்காகப் பட்டு உற்பத்தியாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளரான லூயீ பாஸ்டரை (Louis Pasteur) அழைத்தார்கள். லூயீ பாஸ்டர், நோய்க்கான காரணம் பாக்டீரியா எனக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆதாரமாக இருந்தது.
சுவாரஸ்யமான சந்தேகம்
இந்தப் பட்டுத் தொழில்ழ் நுட்பத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஐரோப்பியர்களுக்கு பட்டு எதிலிருந்து வந்திருக்கும்? எனப் பயங்கர குழப்பமும் ஆர்வமும். அது மரத்தில் காய்க்கிறதா, ரசாயனப்பொருளா? பலவிதமான ஆராய்ச்சில் ஈடுபட்டார்கள். ஒரு புழுவில் இருந்துதான் பட்டு வருகிறது என்பது அவர்கள் யூகிக்கவே முடியாத விடையாக இருந்திருக்கும்.
பட்டுப் புழுவின் அறிவியல் பெயர் Bombyx mori. பட்டுப்புழு வளர்ப்பு முறை sericulture எனச் சொல்லப்படுது. இது ஒரு வேளாண் தொழில். ஒரு பூச்சியை (பட்டுப் புழுவை) வளர்ப்பது வேளாண் தொழிலாகப் பாவிக்கப்படுவது முரணான சுவாரஸ்யம். பட்டுப் புழு, முட்டைகள் பொரிப்பதற்கு 10 நாட்கள்வரை ஆகும். முட்டைகளில் இருந்து வெளிவரும் புழு 7cm நீளம் வரை வளரக் கூடியது.
அது மல்பெரி இலைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளக்கூடியது. நல்ல வளர்ந்த நிலையில் உள்ள பட்டுப் புழு 7.5cm இருக்கும். பட்டுப் புழு5வின் மொத்த எடையில் 25 சதவீதம் உமிழ் நீர் சுரப்பிகளால் ஆனது. உமிழ் நீர்தான் பட்டு இழையாக வரும். தன்னுடைய ஐந்தாம் பருவத்தில் புழு கூடு கட்டத் தயாராகும். உமிழ் நீரை உமிழ்ந்து கூடுகளைக் கட்டுகிறது. மூன்று நாட்கள் வரை ஓயாது கூடு கட்டும். ஒரு பட்டுக் கூடு 500ல் இருந்து 1000 மீட்டர் நீளமான பட்டு இழையைக் கொண்டது.
ஒரு பட்டுப் புடவை நெய்ய 5000 பட்டுக் கூடுகள் தேவைப்படும். இந்தக் கூட்டைச் சுடுநீரில் வேகவைத்து பட்டு இழைகைளை எளிதாகப் பிரித்து எடுக்கிறார்கள். பிறகு நூலிழைகள் வெளுக்கப்பட்டுச் சாயம் சேர்க்கப்பட்டு நெய்யப்படுது. அதன் மீது தங்கம் பூசப்பட்டு சரிகை தயாரிக்கப்படுது. ஆடைகளில் ஜரிகை சேர்க்கிறது முகாலாயர் காலகட்டத்தில் வந்தது. இன்றும் தங்கம், வெள்ளி ஜரிகையைப் பட்டில் சேர்த்து நெய்யப்படுகிறது. ஒரிஜினல் தங்கம், வெள்ளி இல்லாமல் எலக்ரோப்ளேட்டிங்கில் Imitaion Zariயும் இப்போது தயாரிக்கப்படுது.
பட்டுக்கு இவ்வளவு நீண்ட வரலாறு உண்டு. ‘பட்டுப் பாரம்பர்யம்’ எனச் சொல்வது நுற்றுக்கு நூறு சரியானதுதான் இல்லையா?
தி இந்து
No comments:
Post a Comment