Friday, March 7, 2014

தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்

தைரியத்துடன் செல்லுங்கள் வெற்றி நிச்சயம்!

ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர விண்ணப்பிப்பது, விண்ணப்பம் தயாரிக்கும் முறை ஆகியவை பற்றிப் பார்த்தோம். நேர்முகத் தேர்வில் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என இப்போது பார்க்கலாம்.

நேர்முகத் தேர்வு அறையின் கதவை லேசாக திறந்து, தலையை மட்டும் நீட்டி உள்ளே செல்வது முறையல்ல. லேசாக கதவைத் தட்டிவிட்டு நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையுடன் புன்னகை பூத்தபடி செல்லுங்கள்.

ஒன்றுக்கு மேற்பட்டோர் நேர்முகத் தேர்வில் இருந்தால், நீங்கள் அமரக்கூடிய நாற்காலிக்கு பின்புறமாக நின்று, அனைவருக்கும் சேர்த்து வணக்கம் தெரிவிக்கலாம். நாற்காலியில் நிமிர்ந்து அமருங்கள். குனிந்தபடியோ, கையைக் கட்டிக் கொண்டோ அமர வேண்டாம். உடன் கொண்டு செல்லும் கோப்புகளை இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வலது கையால் சான்றிதழ், ஆவணங்களை எடுத்துக் கொடுக்க வசதியாக இருக்கும்.

நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் கேட்கும் கேள்விக்கு எதிர்மறையான பதில் அளிக்க வேண்டாம். உதாரணத்துக்கு நீங்கள் படித்த கல்லூரியின் உள்கட்டமைப்பு குறித்து கேட்டால், எந்த வசதியும் இல்லை என்று குற்றம்சாட்டக் கூடாது. குறிப்பிட்ட வசதிகளை மேம்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்லலாம். 3 பேர் தனித்தனியாக கேள்வி கேட்கும்போது ஏற்கெனவே மற்றவரிடம் கூறிய பதிலையே சொல்ல வேண்டாம். பதில் அளிக்கும்போது பெரும்பாலும் ஒற்றை வார்த்தையை தவிர்க்கவும். சரளமாக, கோர்வையாக பதில் அளியுங்கள்.

மற்ற நிறுவனம் குறித்தோ, மற்றவர்கள் பற்றியோ தவறான கருத்துகளைச் சொல்ல வேண்டாம். கடினமான கேள்விகளை எதிர்கொள்ளும்போது முகத்தில் கோபம் அல்லது படபடப்பை காட்டக் கூடாது. அதுபோன்ற தருணங்களில் முடிந்தவரை தெரிந்த பதிலை அளிக்கலாம். தெரியாத விஷயங்களுக்கு, ‘தெரியவில்லை’ என்று கூறுவதைவிட ‘அதைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

நேர்முகத் தேர்வில் சுய அறிமுகத்தின்போது உங்கள் திறமைகளையும், உங்கள் படிப்பின் முக்கியத்துவத்தையும் தெளிவாகச் சொல்லுங்கள். நேர்முகத் தேர்வு முடிந்ததும் நேராக எழுந்து நின்று புன்னகையுடன் கைகுலுக்கி விடை பெற வேண்டும். இதன்மூலம் தேர்வு நடத்துபவர்களின் நன்மதிப்பைப் பெறலாம்.

சகலவிதமான படிப்புகள், மேற்படிப்புகள், அவற்றை எங்கு படிக்கலாம் என்ற விவரங்கள், அவற்றுக்கான தகுதித் தேர்வுகள், என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் ஆகியவற்றை கடந்த 100 நாட்களாகப் பார்த்தோம். பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியிருக்கும் நிலையில் தற்காலிகமாக விடைபெறுவோம். மீண்டும் சந்திப்போம். வாழ்த்துக்கள்!

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

தி இந்து 

No comments:

Post a Comment